Trishanku | Bala-Kanda-Sarga-57 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: உடலுடன் சுவர்க்கம் செல்ல வேள்வி செய்யத் தீர்மானித்த திரிசங்கு; வசிஷ்டர் மறுத்தது; வசிஷ்டரின் மகன்களை நாடிய திரிசங்கு...
{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "இராகவா {ராமா}, அந்த மஹாத்மாவுடன் {வசிஷ்டருடன்} வைரம் {பகை} ஏற்படுத்திக் கொண்டவரும், மஹாதபஸ்வியுமான விஷ்வாமித்ரர், கொதிக்கும் இதயத்துடன் தமது ஆத்மாவை {மனத்தை} அடக்கிக் கொண்டு, பெருமூச்சுவிட்டுக் கொண்டே தமது மனைவியுடன் தக்ஷிண தேசத்திற்குச் சென்று {தென்னாடு சென்று}, பரம கோரமான மஹாதவம் செய்தார். அவர், பழங்களும், கிழங்குகளும் உண்டு தற்கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து பெருந்தவத்தைச் செய்துகொண்டிருந்தார்.(1-3அ) அப்போது அவருக்கு சத்தியத்திலும், தர்மத்திலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் ஹவிஷ்பந்தன் {ஹவிஷ்யந்தன்}, மதுஷ்யந்தன், துருடநேத்ரன், மஹாரதன் முதலிய புத்திரர்கள் பிறந்தனர்.(3ஆ,4அ)
ஆயிரம் வருடங்கள் பூரணமடைந்ததும், லோகபிதாமஹனான {உலகின் பெரும்பாட்டனான} பிரம்மன், தபோதனரான {தவத்தையே செல்வமாகக் கொண்டவரான} விஷ்வாமித்ரரிடம் இந்த மதுரமான வாக்கியத்தைச் சொன்னான்: "குசிகாத்மஜா {குசிகனின் மகனே}, உன் தவத்தால் நீ ராஜிரிஷிலோகங்களை வென்றாய். (4ஆ,5) இந்த தவத்தால் நீ ராஜரிஷி ஆகிவிட்டாய்." {என்றான் பிரம்மன்}. அந்த மஹாதேஜஸ்வியும், லோகங்களின் பரமேஷ்வரனுமான {உலகங்களின் மேலான ஆட்சியாளனுமான பிரம்மன்} இவ்வாறு சொல்லிவிட்டுத் தேவர்கள் சஹிதனாகவும், திரிவிஷ்டப {சுவர்க்கத்தின்} வழியாகவும் பிரம்மலோகத்திற்குச் சென்றான்.(6,7அ)
விஷ்வாமித்ரர் இதைக் கேட்டு வெட்கத்தால் தலைகுனிந்து, மஹாதுக்கத்தை அடைந்து, ஆவேசத்துடன் இவ்வாறு பேசினார்:(7ஆ,8அ) "மிகப் பெருந்தவத்தைச் செய்திருந்தாலும், ரிஷிகணங்களும், தேவர்கள் அனைவரும் என்னை ராஜரிஷி என்றே கொள்கின்றனர். என் தவத்திற்கான கனி கிட்டவில்லை என்றே நினைக்கிறேன்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(8ஆ,9அ) காகுத்ஸ்தா {காகுத்ஸ்தனின் வழித்தோன்றலான ராமா}, மஹாதபஸ்வியான அந்தப் பரமாத்மவான் {விஷ்வாமித்ரர்}, இவ்வாறு தம் மனத்தில் தீர்மானித்து, மீண்டும் பரம தவம் செய்வதில் ஈடுபட்டார்.(9ஆ,10அ)
அதே காலத்தில், சத்யவாதியும், ஜிதேந்திரியனும் {புலன்களை வென்றவனும்}, இக்ஷ்வாகு குலவர்தனனுமான {இக்ஷ்வாகு குலத்தைச் செழிக்கச் செய்பவனுமான} திரிசங்கு என்றொருவன் இருந்தன்.(10ஆ,11அ) இராகவா, "சொந்த சரீரத்துடன் {உடலுடன்} தேவர்களின் பரம கதியில் {சுவர்கத்திற்குச்} செல்ல நான் ஒரு யஜ்ஞம் {வேள்வி} செய்வேன்" எனப் புத்தியில் தீர்மானித்த அவன் {திரிசங்கு}, வசிஷ்டரை அழைத்துத் தன் சிந்தனையைச் சொன்னான்.(11ஆ,12)
மஹாத்மாவான வசிஷ்டர், "இது சாத்தியமில்லை" என்றார். வசிஷ்டரால் நிராகரிக்கப்பட்ட அவன் {திரிசங்கு}, தக்ஷிண திசைக்கு {தென் திசைக்கு}ச் சென்றான். தன் காரியத்தை உணர்ந்த அந்த நிருபன் {மன்னன் திரிசங்கு} அவரது {வசிஷ்டரின்} புத்திரர்களிடம் சென்றான்.(13,14அ) தீர்க்க தவம் செய்து வந்தவர்களும், மஹாதேஜஸ்விகளும், வாசிஷ்டர்களும் {வசிஷ்டரின் மகன்களும்}, பேரொளி கொண்டவர்களும், தீவிர தவத்தில் இருந்த உன்னதர்களுமான அந்த வசிஷ்ட புத்திரர்களிடம் அந்தத் திரிசங்கு சென்றான்.(14ஆ,15)
பாலகாண்டம் சர்க்கம் – 57ல் உள்ள சுலோகங்கள் : 22
Previous | | Sanskrit | | English | | Next |