Vaasishtas curse | Bala-Kanda-Sarga-58 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வசிஷ்டரின் மகன்களால் சபிக்கப்பட்ட திரிசங்கு விஷ்வாமித்ரரைச் சரணடைவது...
{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "இராமா, திரிசங்குவின் வசனத்தைக் கேட்ட ரிஷிபுத்திரர்கள் {வசிஷ்டரின் மகன்கள்} நூறு பேரும் குரோதமடைந்து அந்த ராஜனிடம் இவ்வாறு சொன்னார்கள்:(1) "துர்புத்தி கொண்டவனே, சத்தியவாதியான குருவால் {வசிஷ்டரால்} நிராகரிக்கப்பட்டாய். அவரை மீறி {வசிஷ்டரெனும் அந்த மரத்தின்} மற்றொரு கிளையை நீ நாடுவது எவ்வாறு?(2) இக்ஷ்வாகுக்கள் அனைவருக்கும் புரோஹிதரே பரமகதியாவார். அந்தச் சத்தியவாதியின் வசனத்தை மீறுவது சாத்தியமில்லை.(3) பகவானான வசிஷ்ட ரிஷி, "சாத்தியமில்லை" என்று சொன்னால் எவ்வழியில் அதை நிறைவேற்ற இயலும்?(4) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, பாலனாகவே இருக்கும் நீ மீண்டும் உன் நகரத்துக்குச் செல்வாயாக. பார்த்திபா, அந்த பகவானே மூவுலகங்களிலும் எந்த யஜ்ஞத்தையும் நடத்தவல்லவர். எங்களால் எவ்வாறு அவருக்கு அவமானத்தை ஏற்படுத்த இயலும்?" {என்றனர்}.(5)
அந்த ராஜன் {திரிசங்கு} குரோதத்துடன் கூடிய அவர்களின் வசனத்தைக் கேட்டு, மேலும் அவர்களிடமே இந்த வசனத்தைச் சொன்னான்:(6,7அ) "தபோதனர்களே, நான் அந்த பகவானாலும், குரு புத்திரர்களாலும் நிராகரிக்கப்பட்டேன். உண்மையில் நான் அந்நிய கதியை {வேறு வழியைத்} தேட விரும்புகிறேன். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும்" {என்றான்}.(7ஆ,8அ)
அந்த ரிஷிபுத்திரர்கள் பேரழிவுக்கு வழிவகுக்கும் அந்த வாக்கியத்தைக் கேட்டுப் பரமகுரோதமடைந்து, "நீ சண்டாளனாவாயாக" என்று சபித்தனர்.(8ஆ,9அ)
அந்த மஹாத்மாக்கள் இவ்வாறு சொல்லிவிட்டுத் தங்கள் தங்கள் ஆசிரமங்களுக்குச் சென்றனர். இராத்திரி கடந்ததும் அந்த ராஜா {திரிசங்கு} சண்டாளத் தன்மையை அடைந்தான்.(9ஆ,10அ) அவன் நீல {கரிய} வஸ்திரங்களைத் தரித்த நீல {கரிய} புருஷனானான். அவனுடைய தலைமுடி குறுகிப் பருத்து செம்மயிரானது. அவன் சுடலையில் உள்ள சாம்பல் பூசப்பட்ட மாலையையும், இரும்பு ஆபரணங்களையும் அணிந்திருந்தான்.(10ஆ,11அ)
இராமா, சண்டாள ரூபத்தில் அவனைக் கண்ட மந்திரிகளும், நகரவாசிகளும், பணியாட்களும் கூட்டங்கூட்டமாக அவனை விட்டுப் பிரிந்து ஓடினர்.(11ஆ,12அ) காகுத்ஸ்தா, பரமாத்மவானான அந்த ராஜா {திரிசங்கு} ஒரு பகலும், இரவும் பரிதவித்திருந்து, தபோதனரான விஷ்வாமித்ரரிடம் சென்றான்.(12ஆ,13அ) இராமா, பயன் கிடைக்காமல் தடுக்கப்பட்டவனும், சண்டாள ரூபத்தை அடைந்தவனுமான அந்த ராஜனைக் கண்டு விஷ்வாமித்ர முனிவர் கருணை கொண்டார்.(13ஆ,14அ)
மஹாதேஜஸ்வியும், பரமதார்மிகருமான அவர் {விஷ்வாமித்ரர்}, கோர வடிவம் கொண்ட அந்த ராஜனிடம் காருண்யத்துடன், "நீ மங்கலமாக இருப்பாயாக" என்ற வாக்கியத்தைச் சொன்னார்.(14ஆ,15அ) பிறகு, "மஹாபலம்வாய்ந்த ராஜபுத்திரா, நீ வந்த காரியமென்ன? அயோத்யாபதியே, வீரனே, சாபத்தால் நீ இந்த சண்டாளக் கதியை அடைந்தாயா?" என்று கேட்டார்.(15ஆ,16அ)
சண்டாள கதியை அடைந்தவனும், வாக்கியங்களின் கருத்தை அறிந்தவனுமான அந்த ராஜா {திரிசங்கு}, அந்த வாக்கியத்தைக் கேட்டுக் கைகளைக் கூப்பி வணங்கி இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(16ஆ,17அ) "குருவாலும், குருபுத்திரர்களாலும் நான் நிராகரிக்கப்பட்டேன். என் ஆசையும் நிறைவேறவில்லை. இந்த விபரீத பிராப்தமும் எனக்கு ஏற்பட்டது.(17ஆ,18அ) சௌம்யரே {விஷ்வாமித்ரரே}, சரீரத்துடன் திவம் {சுவர்கம்} செல்லவேண்டும் என்பது என் கருத்து. நான் நூறு வேள்விகளைச் செய்திருந்தாலும் அந்தப் பலனை அடைந்தேனில்லை.(18ஆ,19அ) சௌம்யரே, நான் ஒருபோதும் பொய் சொன்னதில்லை[1]. ஆபத்துக் காலத்திலும் நான் பொய்யுரைக்கமாட்டேன். க்ஷத்திரிய தர்மத்தின் மீது ஆணையாகச் சொல்கிறேன்.(19ஆ,20அ)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், ""யஜ்ஞோ அந்ருதே ந ரக்ஷதி" என்று "யாகம் பொய் சொல்லுவதால் க்ஷயித்துப் போகும்" என்கிற வசனத்தை இவ்விடத்தில் கண்டு கொள்வது" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "யாகம் பொய்யர்களைக் காக்காது. ஒரு பொய்யன் நரகத்திற்குக் கட்டுப்பட்டவனேயன்றி வேறு வழியில்லை" என்றிருக்கிறது.
பாலகாண்டம் சர்க்கம் – 58ல் உள்ள சுலோகங்கள் : 24
Previous | | Sanskrit | | English | | Next |