Brahmatva | Bala-Kanda-Sarga-56 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விஷ்வாமித்ரர் ஏவிய அஸ்திரங்களைத் தமது பிரம்மதண்டத்தால் அழித்த வசிஷ்டர்; பிராமணத்தன்மையை அடைவதற்காக தவம் செய்த விஷ்வாமித்ரர்...
{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "வசிஷ்டர் இவ்வாறு சொன்னதும், மஹாபலம்வாய்ந்த விஷ்வாமித்ரர் ஆக்னேயாஸ்திரத்தை எடுத்து, "{இதைத்} தாக்குப் பிடிப்பீராக. தாக்குப்பிடிப்பீராக" என்று சொன்னார்.(1) பகவானான வசிஷ்டர், காலதண்டத்தைப் போன்ற தமது பிரம்மதண்டத்தை உயர்த்தியபடியே குரோதத்துடன் இந்த வசனத்தைச் சொன்னார்:(2) "க்ஷத்ரபந்தா {க்ஷத்திரியர்களில் இழிந்தவனே}, இதோ நான் நிற்கிறேன். உன் பலத்தை வெளிப்படுத்துவாயாக. காதிஜா {காதிக்குப் பிறந்தவனே}, உன் கொழுப்பையும், உன்னுடைய அஸ்திரங்களையும் நான் நாசம் செய்வேன்.(3) க்ஷத்ரியபாம்ஸனா {க்ஷத்திரியர்களின் பெருமையைக் கெடுக்க வந்தவனே}, உன் க்ஷத்திரிய பலம் எங்கே? மாபிரம்ம பலம் எங்கே? என் பிரம்ம பலத்தைக் காண்பாயாக" {என்றார் வசிஷ்டர்}.(4)
ஒப்பற்றதும், கோரமானதும், காதி புத்திரரால் ஏவப்பட்டதுமான ஆக்நேயாஸ்திரமானது நீர் பட்டு அணையும் நெருப்பின் வேகத்தில் {வசிஷ்டரின்} பிரம்மதண்டத்தால் அடங்கியது.(5) பெரும் வெறுப்படைந்த காதிநந்தனர் {விசுவாமித்ரர்}, வாருணம், ரௌத்திரம், ஐந்திரம், பாசுபதம், ஐஷீகம் ஆகியவற்றை {ஆகிய அஸ்திரங்களை} சரமாரியாக ஏவினார்.(6) மானவம், மோஹனம் {மயங்கச் செய்யும் ஆயுதம்}, காந்தர்வம், ஸ்வாபனம் {உறங்கச் செய்யும் ஆயுதம்}, ஜிரும்பணம் {கொட்டாவி விடச்செய்யும் ஆயுதம்}, மாதனம் {வெறி கொள்ளச் செய்யும் ஆயுதம்}, ஸந்தாபனம் {ஈரப்பதமூட்டும் ஆயுதம்}, விலாபனம் {அழச்செய்யும் ஆயுதம்},(7) சோஷணம் {வடியச் செய்யும் ஆயுதம்}, தாரணம் {பிளக்கும் ஆயுதம்}, வஜ்ரம் {இடி}, பிரஹ்மபாசம், காலபாசம், வாருணபாசம்,(8) பைநாகம், தயிதம் {கலங்கடிக்கும் ஆயுதம்}, சுஷ்காசனி {நெருப்பிடி}, ஆர்த்ராசனி {நீரிடி}, தண்டம், பைசாசம், கிரௌஞ்சம்,(9) தர்மசக்ரம், காலசக்ரம், விஷ்ணுசக்ரம், வாயவ்யம், மதனம், ஹயசிரம் ஆகியவற்றையும்,(10) இரண்டு சக்திகளையும் {விஷ்ணு சக்தி, ருத்ர சக்தி}, கங்காளம், முஸலம், வித்யாதரம், மஹாஸ்திரம், காலாஸ்திரம், தாருணம்(11) ஆகிய அஸ்திரங்கள் அனைத்தையும், ரகுநந்தனா {இராமா}, கோரமான திரிசூலாஸ்திரம், காபாலம், கங்கணம் ஆகியவற்றையும் ஜபசிரேஷ்டரான வசிஷ்டரின் மீது ஏவினார். அஃது அற்புதமாகத் தெரிந்தது.(12,13அ)
பிரம்மசுதரின் {பிரமனின் மகனான வசிஷ்டரின்} தண்டத்தால் எரிக்கப்பட்ட அவை அனைத்தும் அமைதியடைந்தன. அப்போது காதிநந்தனர் பிரம்மாஸ்திரத்தைத் தீண்டினார்.(13ஆ,14அ) அக்னி முதலிய தேவர்களும், தேவரிஷிகளும், மஹா உரகர்களும், கந்தர்வர்களும் அந்த அஸ்திரம் உயர்த்தப்படுவதைக் கண்டு பெருங்குழப்பமடைந்தனர். அந்த பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டபோது மூவுலகங்களும் பெரிதும் கலக்கமடைந்தன.(14ஆ,15)
இராகவா, பிராமணத் தேஜஸுடன் கூடிய வசிஷ்டரின் பிரம்மதண்டம், மஹாகோரமான அந்த பிரம்மாஸ்திரத்தையே முழுமையாக எரித்தது.(16) பிரம்மாஸ்திரத்தைத் தணித்த மஹாத்மாவான வசிஷ்டரின் ரூபம், மூவுலகங்களையும் பேரச்சத்தில் மதிமயக்கும் வகையிலும், கல்போல் உறையச் செய்யும் வகையிலும் இருந்தது.(17) மஹாத்மாவான வசிஷ்டரின் மயிர்க்கால்கள் {தோல்துளைகள்} அனைத்திலும் புகையுடன் கூடிய தீப்பொறிகள் தெறிப்பது போலத் தோன்றியது.(18) வசிஷ்டரின் கரத்தில் உயர்த்தப்பட்ட பிரம்மதண்டமும் புகையின்றி விளங்கும் காலாக்னியைப் போலவும், மற்றொரு யமதண்டம் போலவும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(19)
அப்போது முனிகணங்கள், ஜபவரரான வசிஷ்டரிடம், "பிராமணரே, உமது பலம் அமோகமானது. உமது தேஜஸால் இந்த {பிரம்மாஸ்திரத்தின்} தேஜஸை அடக்குவீராக. பிராமணரே, மஹாதபஸ்வியான விஷ்வாமித்ரர் தடுக்கப்பட்டார். ஜபசிரேஷ்டரே, அருள்கூர்ந்து கோபத்தைத் தணித்துக் கொண்டு உலகங்களின் துன்பம் நீங்கி {அவற்றை} நீடிக்கச் செய்வீராக" என்றனர்.(20,21)
இவ்வாறு சொல்லப்பட்டதும் மஹாதேஜஸ்வியான அந்த மஹாதபஸ்வி {வசிஷ்டர்} கோபம் தணிந்தார். மனத்தாங்கல் கொண்ட விஷ்வாமித்ரர் பெருமூச்சுவிட்டபடியே தமக்குள்,(22) "க்ஷத்திரிய பலமும் ஒரு பலமா? பிரம்மதேஜஸின் பலமே பலம். வெறும் பிரம்மதண்டத்தால் என் அஸ்திரங்கள் அனைத்தும் வீழ்ந்தன.(23) எனவே, இவை யாவற்றையும் ஆய்வு செய்து, என் இந்திரியங்களையும், புலன்களையும் அடக்கி, பிரஹ்மத்வ[1] காரணத்துக்காக {பிராமணத் தன்மையை அடையும் காரணத்துக்காக} நான் மஹாதவம் செய்யப் போகிறேன்" {என்று நினைத்தார் விசுவாமித்ரர்" என்றார் சதாநந்தர்}.(24)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பின் தொடக்கத்தில், "பிறப்பால் வந்த பிராமணருக்கும், குணத்தால் வந்த பிராமணருக்கும் வேறுபாடு உண்டு. பிறப்பால் ஒருவர் பிராமணரானாலும், எண்ணற்ற கடுஞ்சோதனைகளைத் தாண்டினால்தான் அவர் பிரம்ம தன்மையை அடைவார்" என்றும், அந்த அடிக்குறிப்பின் இறுதியில், "இங்கே வசிஷ்டர் அர்த்தமற்ற சாபங்களையோ, அச்சுறுத்தும் ஆயுதங்களையோ, பழிவாங்குவதையோ நாடாமல் கோபம்நிறைந்த ஒரு மன்னனின் கோபத்தைத் தணித்தார். இதுவே {பிரம்மத்வம், அல்லது} பிராமணத்துவம்" என்றுமிருக்கிறது. முழு அடிக்குறிப்பையும் ஆங்கிலத்தில் காண https://valmikiramayan.net/utf8/baala/sarga56/bala_56_frame.htm என்ற சுட்டிக்குச் செல்லவும்.
பாலகாண்டம் சர்க்கம் – 56ல் உள்ள சுலோகங்கள் : 24
Previous | | Sanskrit | | English | | Next |