Saturday, 16 October 2021

பஹ்லவர்கள், யவனர்கள், சகர்கள் | பால காண்டம் சர்க்கம் - 54 (23)

Pahlavas, Yavanas and Shakas | Bala-Kanda-Sarga-54 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சபளையை அபகரிக்க முயன்ற விஷ்வாமித்ரர்; படைவீரர்களை உண்டாக்கிய காமதேனு; விஷ்வாமித்ரரின் படை அழிந்தது...

Kamadhenu Shabala

{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "இராமா, வசிஷ்ட முனிவர் காமதேனுவைக் கொடுக்காதபோது, விஷ்வாமித்ரர் அந்தச் சபளையைப் பிடித்து இழுத்தார்.(1) இராமா, மஹாத்மாவான அந்த ராஜா {விஷ்வாமித்ரர்} சபளையை இழுத்துச் சென்ற போது துக்கமடைந்து, சோகத்தால் பீடிக்கப்பட்டு அழுதவாறே அவள் இவ்வாறு சிந்தித்தாள்:(2) "தீனமாகவும், பெருந்துக்கம் கொண்டவளாகவும் இருக்கும் என்னை இந்த ராஜனின் பணியாட்கள் அபகரித்துச் செல்கின்றனர். மஹாத்மாவான வசிஷ்டர் என்னைக் கைவிட்டுவிட்டாரா என்ன?(3) அந்தத் தார்மீகரிடம் பக்திமிக்கவளாகவும், {அவரால்} பேணி பாதுகாக்கப்படுபவளாகவும் இருந்தேன். புண்ணிய ஆத்மாவான அந்த மஹரிஷி கைவிடும் அளவுக்கு நான் செய்த குற்றமென்ன?" {என்று சிந்தித்தாள்}.(4)

சத்ருசூதனா {பகைவரை அழிப்பவனான ராமா}, இவ்வாறு சிந்தித்து மீண்டும் மீண்டும் ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டாள். பிறகு நூற்றுக்கணக்கான அந்தப் பணியாட்களை உதறித் தள்ளிவிட்டு, காற்றின் வேகத்துடன் கூடியவளாகப் பேராற்றல் வாய்ந்த வசிஷ்டரை நோக்கிச் சென்றாள். விரைவாக அந்த மஹாத்மாவிடம் சென்று அவரது பாதத்தை அடைந்தாள்.(5,6) அந்தச் சபளை உரக்க கதறியபடியே வசிஷ்டரின் முன்பு நின்று மேகதுந்துபியைப் போன்ற முழக்கத்துடன் இதைப் பேசினாள்:(7) "பிரம்மனின் மகனே, பகவானே, உம்மால் நான் ஏன் கைவிடப்பட்டேன். இந்த ராஜனின் பணியாட்கள் உம்மிடமிருந்து என்னை எங்கே கொண்டு செல்கின்றனர்?" {என்று கேட்டாள்}.(8)

இவ்வாறு சொல்லப்பட்டதும் அந்தப் பிரம்மரிஷி, இதயத்தில் சோகம் கொண்டவராகத் துக்கித்துத் தமது தங்கையிடம் பேசுவதைப் போல இந்த வசனத்தைச் சொன்னார்:(9) "சபளையே, நான் உன்னைக் கொடுக்கவில்லை. நீயும் எனக்கு எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை. மஹாபலவானான இந்த ராஜா {விஷ்வாமித்திரன்} என்னிடம் இருந்து உன்னை பலவந்தமாக இழுத்துச் செல்கிறான்.(10) என் பலம் இவனுக்கு இணையானதல்ல. மேலும் இவன் ராஜாவாக இருக்கிறான். ஒரு ராஜா பலம்பொருந்திய க்ஷத்திரியனாகவும், இந்தப் பிருத்வியின் பதியாகவும் {பூமியின் தலைவனாகவும்} இருக்கிறான்.(11) கஜவாஜிரதாகுலங்களுடன் {ஏராளமான யானைகள், குதிரைகள், தேர்களுடன்} கூடியதும், யானைக் கொடிகளால் நிறைந்ததுமான இந்த முழு அக்ஷௌஹிணி என்னைவிடப் பெரும் வலிமைமிக்கதாகும்" {என்றார் வசிஷ்டர்}.(12)

வசிஷ்டரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், வசனங்களை அறிந்து கொள்பவளான அவள் {சபளை} ஒப்பற்ற பிரகாசம் கொண்ட அந்தப் பிரம்மரிஷியின் வசனத்திற்குப் பணிந்து இந்த மறுமொழியைச் சொன்னாள்:(13) "பிராமணரே, க்ஷத்திரிய பலத்தைக் குறித்துச் சொல்வதற்கொன்றும் இல்லை. பிராமணப் பலமோ க்ஷத்திரிய பலத்தைவிட வலிமைமிக்கது. பிரம்மபலமே திவ்யமானதும் பலமிக்கதுமாகும்.(14) வேறு பலமேதும் உமக்கு இணையானதல்ல. மஹாவீரியனான விஷ்வாமித்ரன் உம்மைவிடப் பலமிக்கவனல்ல. உமது தேஜஸ் ஒப்பற்றதாகும்.(15) மஹாதேஜஸ்வியே, உம்முடைய பிரம்ம பலத்தால் எனக்கு ஆணையிடுவீராக. துராத்மாவான இவனது பலத்தை {செருக்கையும், படைகளையும்} நான் அழிப்பேன்" {என்றாள் சபளை}.(16)

இராமா, அவள் இவ்வாறு பேசியதும், பெரும் மகிமைமிக்க வசிஷ்டர், "பரபலத்தை {எதிரியின் படைகளை} அழிக்கும் பலத்தை {படைகளை} உண்டாக்குவாயாக" என்று சொன்னார்.(17)

இந்த வசனத்தைக் கேட்ட அந்தச் சுரபி அதை உண்டாக்கினாள். நிருபா {மன்னா, ராமா}, அவளிடம் இருந்து வெளிப்பட்ட {ஹும்பா என்ற} ஹுங்காரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பஹ்லவர்கள்* உண்டாகி, விஷ்வாமித்ரர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரது படைகளை அழித்தனர்.(18,19அ) பெருஞ்சீற்றமடைந்த அந்த மன்னர் {விஷ்வாமித்ரர்}, குரோதத்தால் விழிகள் விரிய பலவகைச் சஸ்திரங்களைக் கொண்டு அந்தப் பஹ்லவர்களை அழிக்கத் தொடங்கினார்.(19ஆ,20அ) நூற்றுக்கணக்கான பஹ்லவர்களும் விஷ்வாமித்ரரால் ஒடுக்கப்படுவதைக் கண்டு யவனர்களையும், கோரமான சகர்களையும் அவள் உண்டாக்கினாள்.(20ஆ,21அ) செயலை நிறைவேற்றுபவர்களும், மஹாவீர்யம் கொண்டவர்களும், பொன்மயமானவர்களுமான யவனர்களாலும், சகர்களாலும் பூமி நிறைந்திருந்தது.(21ஆ,22அ) கத்தி, பட்டிசங்களைத் தரித்தவர்களும், பொன்மயமான ஆடைகளை அணிந்திருந்தவர்களுமான அவர்கள் பாவகனை {அக்னியைப்} போல ஒளிர்ந்து கொண்டே {விஷ்வாமித்ரரின்} மொத்த படைகளையும் எரித்தனர்.(22ஆ,23அ) மஹாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர், தம்முடைய அஸ்திரங்களை ஏவி யவன, காம்போஜ, பர்பரர்களை[1] சிதறடித்தார்" {என்றார் சதாநந்தர்}.(23ஆ,இ)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "முன்னே பஹ்லவர்கள் என்று சொல்லப்பட்டவர்களே இங்கே பர்பரர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள். காட்டுமிராண்டிகள் என்பதற்கு இது புராதனச் சொல்லாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது. 

பாலகாண்டம் சர்க்கம் – 54ல் உள்ள சுலோகங்கள் : 23

பஹ்லவர்கள்*
Bahlikas or Bactria
Bahlikas were located as a close neighbor to the Tusharas, Sakas, Yavanas and the Kambojas etc. Since the Kambojas were located in Badakshan and Pamirs, the Tusharas on the north of Pamirs and the Sakas on the river Jaxartes and beyond, the Bahlikas or Bahlams, as neighbors to these people should be placed in Bactria.
The Brahmanda Purana attests that river Chaksu (Oxus or Amu Darya) flowed through the land of Bahlavas (Bahlikas).

காஷ்மீர நாட்டின் தெற்கில், பஞ்சாப் சமவெளியின் மத்திர நாட்டு மன்னர் சல்லியனை பாக்லீகர்களின் முன்னோடி என மகாபாரதம் வர்ணிக்கிறது.

பாக்லீகர்களின் குலத்தில் பிறந்த மத்திர நாட்டு இளவரசி மாத்திரி ஆவாள். குரு நாட்டின் இளவரசன் பாண்டுவை மணந்தவள் மாத்திரி. மாத்திரி பாண்டவர்களில் இரட்டையரான நகுல - சகாதேவர்களின் தாயாவாள்.


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை