Yajna Horse | Bala-Kanda-Sarga-39 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இந்திரனால் அபகரிக்கப்பட்ட வேள்விக்குதிரை; பூமியைத் தோண்டித் தேடி அதைக் கண்டுபிடிக்குமாறு அறுபதாயிரம் மகன்களிடம் ஆணையிட்ட ஸகரன்; தோண்டப்பட்ட தரணி...
இரகுநந்தனன் {ராமன்}, விஷ்வாமித்ரர் சொன்னதைக் கேட்டு பரமபிரீதியடைந்தான். அவன், கதையின் முடிவில் அநலம் {நெருப்பு} போல் ஒளிர்ந்து கொண்டிருந்த முனியிடம் {விசுவாமித்ரரிடம்} பேசினான்:(1) "பிராமணரே, நான் இந்தக் கதையை விஸ்தாரமாகக் கேட்க விரும்புகிறேன். மங்கலமாக இருப்பீராக. என் மூதாதை உண்மையில் எவ்வாறு அந்த யஜ்ஞத்தை நிறைவேற்றினார்" {என்று கேட்டான் ராமன்}.(2)
குதூகலத்துடன் கூடிய அவனது வசனத்தைக் கேட்ட விஷ்வாமித்ரர், புன்னகைத்தவாறே அந்தக் காகுத்ஸ்தனிடம் சொன்னார்: "இராமா, மஹாத்மாவான ஸகரனைக் குறித்து விஸ்தாரமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(3,4அ) ஹிமவான் என்ற பெயரில் நன்கறியப்படும் சங்கரனின் மாமனும் {இமயமலையானவனும்}, விந்திய பர்வதமும் கண் இமைக்காமல் பரஸ்பரம் பார்த்திருந்தனர்.(4ஆ,5அ) புருஷோத்தமா, அந்த யஜ்ஞம் அவை இரண்டுக்கும் {அந்த மலைகள் இரண்டிற்கும்} மத்தியில் தொடங்கியது. நரவியாகரா {மனிதர்களில் புலியே}, அது யஜ்ஞ கர்மங்களுக்காகப் பிரசித்திப் பெற்ற தேசமாகும் {இடமாகும்}[1].(5ஆ,6அ) ஐயா, காகுத்ஸ்தா, திடமான தனுவை {வில்லைக்} கொண்டவனும், மஹாரதனுமான {பெருந்தேர்வீரனுமான} அம்சுமான், ஸகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரனாக அஷ்வத்தை {குதிரையைக்} காக்க பின்தொடர்ந்து சென்றான்.(6ஆ,7அ)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆர்யாவர்த்த: புண்யபூமிர் மத்யம் விந்தியஹிமாலயோ: என்று சொல்லப்பட்டது" என்றிருக்கிறது. அதாவது, விந்தியத்திற்கும், ஹிமாலயத்திற்கும் இடைப்பட்ட புண்ணிய பூமியான ஆரியவர்த்தமே யஜ்ஞ கர்மங்களுக்குப் பிரசித்தி பெற்ற இடமாகும்.
மங்கல நேரத்தில் {உக்த்யம் நடைபெறும் நாளில்}, ராக்ஷச வடிவை ஏற்ற வாசவன் {இந்திரன்}, யஜ்ஞத்தின் யஜமானனுடைய யஜ்ஞீயாஷ்வத்தை {வேள்வியின் தலைவனான ஸகரனின் வேள்விக்குதிரையை} அபகரித்தான்.(7ஆ,8அ) காகுத்ஸ்தா, அந்த மஹாத்மாவின் அஷ்வம் களவாடப்பட்டதும் உபாத்யாயர்கள் {புரோஹிதர்கள்} அனைவரும் யஜமானனிடம் {ஸகரனிடம்} பேசினார்கள்:(8ஆ,9அ) "காகுத்ஸ்தா {ஸகரா}, மங்கலநாளில் யஜ்ஞீயாஷ்வம் வேகமாகக் களவாடப்பட்டது. கள்வரை நீ கொல்வாயாக. ஹயத்தையும் {குதிரையையும்} மீட்டு வருவாயாக.(9ஆ,10அ) யஜ்ஞத்திற்கு நேர்ந்த இந்த இடையூறு நம் யாவருக்கும் மங்கலமானதல்ல. இராஜா, இந்த யஜ்ஞத்திற்குக் கேடேற்படாத வகையில் நீ செயல்படுவாயாக" {என்றனர்}.(10ஆ,11அ)
அந்தப் பார்த்திபன் {ஸகரன்}, உபாத்யாயர்கள் சொன்னதைக் கேட்டு அந்த சபையில் தன் புத்திரர்களான அறுபதாயிரம் பேரிடம் இந்த வாக்கியத்தைப் பேசினான்:(11ஆ,12அ) "புருஷ ரிஷபர்களே {மனிதர்களில் காளைகளே}, புத்திரர்களே, ராக்ஷசர்களின் கதியை {ராக்ஷசர்கள் எங்குச் சென்றார்களோ} நான் அறியவில்லை. இந்த மகத்தான சடங்கு மந்திரங்களாலும், புனிதர்களாலும் புனிதப்படுத்தப்பட்டதாகவும், அவ்வாறே தலைமைதாங்கப்பட்டதாகவும் இருக்கிறது. அல்லவா? (12ஆ,13அ) எனவே, புத்திரர்களே, {குதிரையையும், கள்வனையும்} தேடிச் செல்வீராக. உங்களுக்கு மங்கலம் உண்டாகட்டும். சமுத்திரத்தை மாலையாகக் கொண்ட மொத்த பிருத்வியிலும் {பூமியிலும்} திரிந்து தேடுவீராக.(13ஆ,14அ) புத்திரர்களே, என் ஆணையால் ஒருவன் {நீங்கள் ஒவ்வொருவரும்} ஒரு யோஜனை விஸ்தாரத்தை அடைந்து, குதிரைக் கள்வன் சென்ற மார்க்கத்தைத் தேடுவீராக. குதிரை தோன்றும்வரை மேதினியைத் தோண்டுங்கள்.(14ஆ,15) தீக்ஷை பெற்ற நான், குதிரை காணப்படும் வரை உபாத்யாய கணங்களுடன் {புரோகிதக் கூட்டத்தாருடன்} பௌத்திர சகிதனாக {அம்சுமான் முதலிய பேரர்களுடன் கூடியவனாக} இங்கேயே இருப்பேன். உங்களுக்கு மங்கலம் உண்டாகட்டும்" {என்றான் ஸகரன்}.(16)
இராமா, மஹாபலர்களான அந்த ராஜபுத்திரர்கள் அனைவரும், மனமகிழ்ச்சியடைந்தும், பிதாவின் வசனத்தால் தூண்டப்பட்டும் மஹீயின் {பூமியின்} பரப்புக்குச் சென்றனர்.(17) புருஷவியாகரா {மனிதர்களில் புலியே}, அந்த மஹாபலர்கள் மொத்த பிருத்வியிலும் திரிந்தாலும் அதை {குதிரையைக்} காணவில்லை. ஒவ்வொருவனும் வஜ்ரம் போன்ற தங்கள் நகங்களால் ஒவ்வொரு யோஜனை அகலத்திற்கு தரணியின் பரப்பைத் தோண்டினர்.(18) இரகுநந்தனா, வஜ்ரங்களைப் போன்ற சூலங்களாலும், மிகப்பயங்கரமான கலப்பைகளாலும் பிளந்ததால் வசுமதி {பூமி} ஓலமிட்டாள்.(19) இராகவா, கொல்லப்பட்ட நாகங்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள் ஆகியோரிடம் இருந்தும், பிற உயிரினங்களிடம் இருந்தும் பொறுத்துக்கொள்ளமுடியாத கூச்சல் வெளிப்பட்டது.(20) இரகுநந்தனா, ராமா, அறுபதாயிரம் யோஜனைகள் தரணியைத் தோண்டியதும் ஒப்பற்ற ரஸாதலம் வெளிப்பட்டது.(21) நிருபசார்தூலா {மன்னர்களில் புலியே}, அந்த நிருபாத்மஜர்கள் {மன்னனின் மகன்கள்}, பர்வதங்கள் நெருங்கிய ஜம்பூத்வீபத்தை[2] இவ்வாறு தோண்டியபடியே எங்கும் திரிந்து கொண்டிருந்தனர்.(22)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்து தொன்மவியலின்படி ஜம்பூத்வீபம் என்பது உலகின் ஏழு கண்டங்களில் ஒன்றாகும். "ஜம்பூ³ப்லக்ஷாக்²யத்³வீபௌ ஷா²ல்மலி꞉ ச அபரோ த்³விஜ | குஷ²꞉ க்ரௌந்ச꞉ ததா² ஷ²க꞉ புஷ்கர꞉ ச ஏவ ச ஸப்தம꞉" என்று சொல்லப்படுவதில், ஜம்பூ, பிலக்ஷம், ஷால்மலி, குஷம், கிரௌஞ்சம், ஷகம், புஷ்கரம் என்பன ஏழு கண்டங்களாகும். அவற்றில் ஒன்று ஜம்பூத்வீபமாகும்" என்றிருக்கிறது.
அப்போது கந்தர்வர்கள், அஸுரர்கள், பன்னகர்கள் ஆகியோருடன் கூடிய தேவர்கள் அனைவரும் {பூமியின் அவல நிலையைக் கண்டு} மனத்தில் துன்பமடைந்து பிதாமஹனை {பிரம்மனை} அணுகினர்.(23) பேரச்சம் கொண்டிருந்த அவர்கள், முகத்தில் வருத்தத்துடன் மஹாத்மாவான பிதாமஹனின் அருளைப் பெற்று, இந்த வசனத்தைச் சொன்னார்கள்:(24) "பகவானே, ஸகராத்மஜர்களால் {ஸகரனின் மகன்களால்} மொத்த பிருத்வியும் தோண்டப்படுகிறது. ஜலசாரிகளும் {நீரில் திரிபவர்களான தலவாசிகளும், ரஸாதலவாசிகளும்}, பல மஹாத்மாக்களும் அழிவடைகின்றனர்.(25) அந்த ஸகராத்மஜர்கள், "இவனே நம் யாகத்தைக் கெடுத்தவன். இவனால் நம் அஷ்வம் அபகரிக்கப்பட்டது" என்று நினைத்துக் கொண்டு சர்வ பூதங்களையும் {உயிரினங்கள் அனைத்தையும்} இம்சிக்கின்றனர்" {என்றனர்}.(26)
பாலகாண்டம் சர்க்கம் – 39ல் உள்ள சுலோகங்கள் : 26
Previous | | Sanskrit | | English | | Next |