Karthikeya | Bala-Kanda-Sarga-37 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கார்த்திகேயனைப் பெற்ற கங்கை; ஸ்கந்தனுக்குப் பால் கொடுத்த கிருத்திகை நட்சத்திரங்கள்; தேவர்களின் படைத்தலைவனாக நியமிக்கப்பட்ட சண்முகன்...
{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "தேவன் {சிவன் அவ்வாறு} தவம் செய்து கொண்டிருந்தபோது, இந்திரனுடன் கூடியவர்கள் {தேவர்கள்} ஒரு சேனாபதியை {ஒரு படைத்தலைவனை} விரும்பியவர்களாக அக்னியை முன்னிட்டுக் கொண்டு பிதாமஹனை {பிரம்மனை} அடைந்தனர்.(1) இராமா, இந்திரனுடன் கூடியவர்களும், அக்னியை முன்னிட்டு வந்தவர்களுமான தேவர்கள் அனைவரும் பகவானான பிதாமஹனை வணங்கி இவ்வாறு பேசினார்கள்:(2) "தேவா, சேனாபதியாக முன்பிருந்த பகவான் {சிவன்} உமையுடன் பரம தவத்தில் மூழ்கி தவத்தில் லயித்திருக்கிறான்[1].(3) விதங்களை {நடைமுறைகளை} அறிந்தவனே, உலக நன்மைக்காக அடுத்துச் செய்ய வேண்டிய காரியத்தைத் தெளிவாகச் சொல்வாயாக. நீயே எங்கள் பரம கதியாக இருக்கிறாய்" {என்று பிரம்மனிடம் சொன்னார்கள் தேவர்கள்}.(4)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "முந்தைய சர்க்கத்தில் சொல்லப்பட்டவாறு சிவனிடம் இருந்து வெளிப்பட்டதும், பூமியில் விடப்பட்டதுமான வீரியம் இன்னும் கார்த்திகேயனாக உருப்பெறவில்லை" என்றிருக்கிறது.
உலகங்கள் அனைத்தின் பிதாமஹன் {பிரம்மன்}, தேவர்களின் வசனத்தைக் கேட்டு, திரிதசர்களை {தேவர்களை} சாந்தியடையச் செய்யும் வகையில் இவ்வாறான மதுரமான வாக்கியத்தைச் சொன்னான்:(5) "சைலபுத்திரி {மலைமகளான உமை}, ’உங்கள் பத்தினிகளிடம் பிரஜைகள் உண்டாகார்’ என்று சொன்ன வசனம், பொய்யில்லா சத்தியம் மட்டுமல்ல; தெளிவானதுங்கூட.(6) அரிந்தமனான {பகைவரை அழிப்பவனான} தேவசேனாபதியை எவளிடம் ஹுதாசனன் {அக்னி} பெறுவானோ, அந்த ஆகாசகங்கை இதோ இருக்கிறாள்.(7) சைலேந்திரனின் மூத்த மகள் {கங்கை} அந்தச் சுதனை {மகனை} மனதார வரவேற்பது உமைக்கும் பலவழிகளில் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் ஐயமில்லை" {என்று தேவர்களிடம் சொன்னான் பிரம்மன்}.(8)
இரகுநந்தனா {ராமா}, தேவர்கள் அனைவரும் அவனது {பிரம்மனின்} இந்த வசனத்தைக் கேட்டு நிறைவடைந்தவர்களாகப் பிதாமஹனை {பிரம்மனைப்} பணிந்து பூஜித்தனர்.(9) இராமா, தேவர்கள் அனைவரும் தாதுக்கள் குவிந்திருக்கும் பரம கைலாசத்திற்குச் சென்று புத்திரார்த்தத்திற்காக அக்னியை நியமித்து,(10) "ஹுதாசன தேவா {ஹவியை உண்ணும் அக்னியே}, இந்தத் தேவ காரியத்தை நீ ஒருங்கிணைப்பாயாக. மஹாதேஜஸ்வியே, அந்தத் தேஜஸ்ஸை {சிவனின் ரேதஸ்ஸை} சைலபுத்திரியான கங்கையிடம் விடுவாயாக" {என்றனர் தேவர்கள்}.(11)
பாவகன் {பாவங்களை அழிப்பவனான அக்னி, சிறப்பாகச் செயல்படுவேனென} தேவர்களிடம் பிரதிஜ்ஞை செய்து, கங்கையை அணுகி, "தேவி, தேவர்களுக்குப் பிரியமானதை {சிவனின் ரேதஸ்ஸை} உன் கர்ப்பத்தில் தரிப்பாயாக" {என்றான் அக்னி}.(12)
{அக்னியின்} இந்த வசனத்தைக் கேட்டு, திவ்ய ரூபத்தை ஏற்றவளின் {கங்கையின்} மஹிமையைக் கண்டவன் {அக்னி, சிவனின் ரேதஸ்} அனைத்தையும் பொழிந்தான்.(13) இரகுநந்தனா {ராமா}, அப்போது பாவகன் {அக்னி} கங்கா தேவியின் ஸ்ரோதங்கள் {உறுப்புகள்} அனைத்தையும் {சிவனின் ரேதஸ்ஸால்} நிறைத்தான்.(14) பிறகு கங்கை, தேவர்கள் அனைவருக்கும் முன்னணியில் இருந்தவனிடம் {அக்னியிடம்} பேசினாள், "தேவா, பொங்கியெழும் உன் தேஜஸ்ஸை {சிவனின் ரேதஸ்ஸைத்} தரிப்பதற்கான சக்தி என்னிடமில்லை. நான் உமது அக்னியால் தகித்துப் பெரிதும் பீடிக்கப்படுகிறேன்" {என்றாள் கங்கை}.(15,16அ)
தேவர்கள் அனைவரின் ஹவியை உண்பவன் {அக்னி} இதைக்கண்டு "கங்கையின் கர்ப்பம் ஹைமவத {இமைய மலை} சாரல்களை அடையட்டும்" என்றான் {அக்னி}.(16ஆ,17அ)
மஹாதேஜஸ்வியே, அநகனே {பாவமற்ற ராமா}, அக்னியின் வசனத்தைக் கேட்ட கங்கை அவ்வாறே பெரும்பிரகாசம் கொண்ட அந்தக் கர்ப்பத்தை தன் ஸ்ரோதங்களில் {உறுப்புகளில்} இருந்து வெளியேற்றினாள்.(17ஆ,18அ) அதுவும் ஹிரண்யத்தில் வரும் ஒப்பற்ற காஞ்சனத்தை {தங்கத்தைப்} போல அவளிடமிருந்து புடம்போட்ட தங்கமென வெளிப்பட்டு தரணியை {பூமியை} அடைந்தது(18ஆ,19அ) அந்த தகனத்தில் இருந்து தாமிரம் {செம்பு}, கார்ஷ்ணாயஸம் {இரும்பு} ஆகியவையும் உண்டாகின. அதன்{சிவனின் ரேதஸ்ஸின்} மலமாகத் திரபுவும் {தகரமும்}, ஸீஸகமும் {ஈயமும்} இருந்தன. அது {சிவனின் ரேதஸ்} தரணியை அடைந்து பலவிதமான தாதுக்களானது.(19ஆ,20) அந்தக் கர்ப்பம் விடப்பட்ட உடனேயே அந்த வனத்தில் உள்ள {நாணல்கள்} அனைத்தும் பிரகாசமடைந்து தங்கமயமாகின.(21) புருஷவியாகரா {மனிதர்களில் புலியே}, ராகவா, ஹுதாசனனுக்கு இணையான பிரகாசம் கொண்ட சுவர்ணம் {தங்கம்} ஜாதரூபம் {பிறப்பில் இருந்தே இவ்வடிவம் கொண்டது} என்ற பெயரில் புகழ்பெற்றது. அங்கிருந்த புல், மரம், கொடி, புதர் முதலியவை அனைத்தும் காஞ்சனமயமாகின {தங்கமயமாகின}[2].(22)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிறக்கும்போது இருந்த வடிவம் என்ற பொருள் கொண்ட ஜாதரூபம் என்ற பெயரே தங்கத்தின் பிறப்பியல் பெயராகும். கங்கை தன் கர்ப்பத்தை விட்ட உடனேயே பொன்னைப்போன்ற காட்டுத்தீ தோன்றியது. நெருப்பு போல ஒளிர்வது தங்கம் என ராமாயணத்தின் பல இடங்களில் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.
இந்திரனுடன் கூடிய மருத்கணங்கள், அப்போது பிறந்த குமாரனுக்குப் பால் கொடுத்து ஊட்டமளிக்கக் கிருத்திகையரை ஏற்பாடு செய்தனர்.(23) அவர்களும் {கார்த்திகைப் பெண்களும்} "இவன் நம் அனைவருக்கும் புத்திரனாகட்டும்" என்று தங்களுக்குள் நிச்சயித்து அப்போது பிறந்தவனுக்குப் பால் கொடுத்தனர்.(24) பிறகு தேவர்கள் அனைவரும், "இந்தப் புத்திரன் கார்த்திகேயன் என்று மூவுலகங்களிலும் புகழ் பெறுவான் என்பதில் ஐயமில்லை" என்றனர்.(25)
அந்த வசனத்தைக் கேட்ட அவர்கள் {கிருத்திகை நட்சத்திரங்கள்}, கர்ப்ப நீருடன் விழுந்து கிடப்பவனும், அனலம் {நெருப்பைப்} போல மங்கலமான பிரகாசத்துடன் ஒளிர்பவனுமான அவனைக் குளிப்பாட்டினர்.(26) காகுத்ஸ்தா, ஜுவாலைக்கு ஒப்பானவனும், பெருந்தோள்களைக் கொண்டவனும், கர்ப்ப நீரில் விழுந்தவனுமான கார்த்திகேயனை தேவர்கள் ஸ்கந்தன் என்றழைத்தனர்[3].(27) அப்போது கிருத்திகையரிடம் ஒப்பற்ற பால் பெருகிற்று. அந்த அறுவரின் ஸ்தனங்களில் அவன் ஆறுமுகம் கொண்டு பால் அருந்தினான்[4].(28) அவ்வாறு பால் அருந்த இயன்றவன், ஒரே நாளில் சுகுமாரனைப் போன்ற உடலை அடைந்து தன் வீரியத்தினால் தைத்திய சைனியங்களை வீழ்த்தினான்.(29) அமரர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அக்னியை முன்னிட்டுக் கொண்டு அந்தப் பேரொளி படைத்தவனை ஸுரஸேனா கணங்களின் பதியாக {தேவர்களின் படைத்தலைவனாக} அபிஷேகஞ்செய்தனர்.(30)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "கங்கையின் வயிற்றில் நிலை பெறாமல் கீழே விழுகையேயென்று கொண்டு ஸ்கந்தனென்று பேரிட்டனர்ரென்றுணர்க" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில், "இக்கரு முற்றும் ஓரிடத்திலும் நிலைபெறாமல் ஸ்கலிதமானபடியால் இப்பிள்ளைக்குத் தேவர்கள் ஸ்கந்தனென்றும் பெயரிட்டனர்கள்" என்றிருக்கிறது.
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "முதலில் ஆறு கிருத்திகை நட்சத்திரங்களும் இந்தப் பிள்ளைக்குப் பால் கொடுக்க முன் வந்தது சொல்லப்படுகிறது. தனக்கு ஊட்டமளிக்கும் அவர்களின் ஆவலைக் கண்டு அவன் ஆறுமுகம் கொண்டு அந்த ஆறு நட்சத்திரங்களின் பாலை அருந்தி ஒரே நாளில் இளைஞனாக வளர்ந்தான். அவன் ஆறுமுகங்களைக் கொண்டதால் ஆறுமுகக் கடவுளான சண்முகனாக அவன் அழைக்கப்பட்டான். அந்தப் பிள்ளை ஆறு தாய்மார்களிடம் ஒரே முகத்துடன் பால் அருந்திய வேகம், அவன் ஆறு முகம் கொண்டு பால் அருந்துபவனாக தேவர்களுக்குக் காட்டிற்று. இந்த வேகத்தின் காரணமாகவே தேவர்கள் அவனைத் தங்கள் படையின் சேனாபதியாக நியமித்தனர்" என்றிருக்கிறது.
இராமா, நான் உன்னிடம் கங்கையைக் குறித்து இவ்வாறு விஸ்தாரமாகச் சொன்னேன். குமாரசம்பவமும் {குமரின் பிறப்பும்} அதே போன்ற தன்யமும் {நற்பேறும்}, புண்ணியமும் கொண்டதாக அறியப்படுகிறது.(31) காகுத்ஸ்தா, புவியில் எந்த மானவன் {மனிதன்} கார்த்திகேயனின் பக்தனாக இருப்பானோ, அவன் ஆயுஷ்மானாகவும், புத்திர பௌத்திரர்களுடன் கூடியவனாகவும் ஸ்கந்த லோகத்தை அடைந்து அவனாகவே ஆவான் {முக்தியடைவான்}" {என்றார் விஷ்வாமித்ரர்}.(32)
பாலகாண்டம் சர்க்கம் – 37ல் உள்ள சுலோகங்கள் : 32
Previous | | Sanskrit | | English | | Next |