The glory of Uma | Bala-Kanda-Sarga-36 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: நீலகண்டனின் காதல்; தேவர்களின் கோரிக்கை; உமையின் சினம் ...
{விஷ்வாமித்ர} முனிவர் இவ்வாறு சொன்னதும், ராகவன் {ராமன்}, லக்ஷ்மணன் எனும் வீரர்கள் இருவரும் அந்தக் கதையைப் புகழ்ந்து அந்த முனிபுங்கவரிடம் பேசினார்கள்:(1) "பிராமணரே, நீர் சொன்ன இந்தக் கதை பரம தர்மம் பொருந்தியதாக இருக்கிறது. சைலராஜனின் ஜேஷ்ட மகளை {மலைகளின் மன்னனான இமயத்தின் மூத்த மகளான கங்கையைக்} குறித்து திவ்ய மானுஷ சம்பவங்களுடன் {தெய்வீக, மானிட நிகழ்வுகளுடன்} விஸ்தாரமாகச் சொல்வீராக. நீர் இவை அனைத்தையும் அறிந்தவர்.(2) லோகபாவனீயான {உலகத்தின் பாவங்களைப் போக்குபவளான} அவள் மூன்று பாதைகளில் பாய்வதற்கான காரணமென்ன? தர்மத்தை அறிந்தவரே, எந்தக் கர்மங்களின் தொடர்பினால் திரிபதகையான கங்கை மூவுலகங்களில் உத்தம நதியாகப் புகழ்பெற்றாள்?" {என்று ராமனும் லக்ஷ்மணனும் விசுவாமித்ரரைக் கேட்டனர்}.(3,4அ)
அந்தக் காகுத்ஸ்தர்கள் இவ்வாறு சொன்னதும் தபோதனரான விஷ்வாமித்ரர், கதைகள் அனைத்தையும் முழுமையாக ரிஷிகள் மத்தியில் தெரிவித்தார்.(4ஆ,5அ) {விஷ்வாமித்ரர்}, "இராமா, பூர்வத்தில் மஹாதபஸ்வியான ஷிதிகண்டன் {நீலகண்டன் உமையை} விவாகம் செய்தான். தன் தேவியைக் கண்ட பகவான் மைதுனத்தை {புணர்ச்சியைத்} தொடங்கினான்.(5ஆ,6அ) பரந்தபா {எதிரியை எரிப்பவனே}, ராமா, மஹாமதிமிக்க தேவன் ஷிதிகண்டன் {இவ்வாறு} சங்கிரீடை செய்து {காதல் விளையாடிக்} கொண்டிருந்தபோது நூறு தேவ வருடங்கள்[1] கடந்து சென்றாலும் அவளிடம் தனயன் {உமையிடம் மகன்} உண்டாகவில்லை[2].(6ஆ,இ,7அ)
[1] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "நூறு தேவ வருடங்கள் 36000 மானுட வருடங்களாகச் சொல்லப்படுகின்றன. கிருதம், திரேதம், துவாபரம், கலி என்ற நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு சதுர் யுகம் என்றும், அவ்வாறான இரண்டாயிரம் சதுர்யுகங்கள் ஒரு பிரம்ம தினம் என்றும் இந்திய யுகக் கணக்கீட்டின் அடிப்படையில் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.
[2] இங்கே, "நூறு தேவ வருடங்களும் உறவு நிறைவடையாமல் தொடர்ந்து நீடித்ததால் தனயன் உண்டாகவில்லை" என்று பொருள் கொள்கின்றனர். அடுத்தடுத்து வரும் சுலோகங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
பிதாமஹனின் தலைமையிலான தேவர்கள் அனைவரும், "இவளிடம் எந்தப் பூதம் {மகன்} வெளிப்பட்டாலும் அதை {அவனை} எவனாலும் சகித்துக் கொள்ள முடியாது" என்று நினைத்தனர்.(7ஆ,8அ) ஸுரர்கள் அனைவரும் {சிவனிடம்} சென்று பணிந்து வணங்கி, "தேவதேவா, உலக நன்மையில் விருப்பம் கொண்டவனே, மஹாதேவா, ஸுரர்களான நாங்கள் உன்னைப் பணிவதைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு அருள் புரிவாயாக[3].(8ஆ,9) ஸுரோத்தமா {தேவர்களில் உத்தமனே}, உன்னுடைய தேஜஸ்ஸை {உன் பிரகாசத்தில் பிறக்கும் குழந்தையை} உலகங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. பிராஹ்மணங்களில் சொல்லப்பட்டுள்ள தவத்தில் ஐக்கியமடைந்து {உமா} தேவியுடன் தவம் பயின்று, மூவுலகங்களின் நன்மையை விரும்பி உன் தேஜஸ்ஸை தேஜஸ்ஸிலேயே தாங்கிக் கொண்டு இந்த உலகங்கள் அனைத்தையும் காப்பாயாக[4]. உலகங்களை அழிப்பது உனக்குத் தகாது" {என்றனர்}.(10,11)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த நீடித்த புணர்ச்சி நிலை மஹாமைதுன யோகம் என்றழைக்கப்படுகிறது. மத்யம் {மது}, மாம்ஸம் {இறைச்சி}, மத்ஸ்யம் {மீன்}, முத்ரம் {தோரணை / யோகமுத்ரை / இருக்கும் நிலை}, மைதுனம் {புணர்ச்சி} என்ற பஞ்சமாகாரங்களைப் பயிலும் சாக்த தாந்திரீகர்கள் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பயிற்சிகளில் யோகிகள் கலவி புரியும் வேளையிலும் யோகத்தில் பயன்படுத்தப்படும் முத்ரை நிலைகளைப் பயன்படுத்தி நீடித்த உறவு கொள்கின்றனர். இதுவே அவர்களது பஞ்சபூதக் கோட்பாடாகும்" என்றிருக்கிறது.
[4] நரசிம்மாசாரியர் பதிப்பில், "மூவுலகங்கட்கும் நன்மையுண்டாகும்பொருட்டு உமது வீரியத்தை உமது தேஜோமயமான சரீரத்திலேயே அடக்கிக் கொள்ள வேண்டும்; வெளியிட வேண்டாம். இவ்வுலகங்களனைத்தையும் காப்பீராக" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தேஜஸ் என்ற சொல்லுக்கு பிரகாசம் என்பதைத் தவிர விந்து, வாரிசு என்ற பொருள்களும் உண்டு. தேஜஸ் பராக்ரமே ப்ராணே வர்சஸ் அர்சிஷி ரேதஸி என்று ரத்நமாலாவில் சொல்லப்பட்டிருக்கிறது. குமரன் /ஸ்கந்தன் சிவனுடைய தேஜஸ்ஸுடனும், தன்னுடைய சொந்த தேஜஸ்ஸுடன் பிறப்பான் என்பதால் உயிர்நீர் வெளிப்படுவதன் மூலம் உண்டாகும் வாரிசு இங்கு பிரச்சனையாகச் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.
உலகங்கள் அனைத்தின் மஹேஷ்வரன், தேவர்களின் வசனத்தைக் கேட்டு "அவ்வாறே ஆகட்டும்" என்று அவர்களிடம் சொல்லிவிட்டு மேலும் அனைவரிடமும் இதைச் சொன்னான்:(12) "உமையும் நானும் தேஜஸ்ஸை தேஜஸ்ஸில் தாங்கிக் கொள்கிறோம். திரிதசர்களே {தேவர்களே}, பிருதிவி {பூமி} பேரானந்தத்தை அடையட்டும்.(13) {ஏற்கனவே} ஸ்தானத்தில் இருந்து நகர்ந்த ஒப்பற்ற என் தேஜஸ்ஸை தரிக்கப் போவது யார்? ஸுரசத்தமர்களே {தேவர்களில் உயர்ந்தவர்களே} அதைக் குறித்து எனக்குச் சொல்வீராக" {என்று தேவர்களிடம் சொன்னான் சிவன்[5].(14)
[5] நரசிம்மாசாரியர் பதிப்பில், "எனது வீர்யத்தை நான் எனது சரீரத்திலேயே அடக்கிக் கொள்கின்றனன். பார்வதியும் அப்படியே தனது சோணிதத்தைத் தன் சரீரத்திலேயே நிறுத்திக் கொள்கின்றனள். தேவதைகளே, உலகங்களெல்லாம் ஸுகத்துடன் வாழ்க. வானவர்களே, நான் என்னுடையே ரேதஸ்ஸை உள்ளேயே அடக்கிக் கொள்வேன். ஆனால் அதில் சிறிது பாகம் ஸ்தாந்ததினின்றுஞ் சலித்து வெளிநோக்கிவிட்டது. ஆகையால் அங்ஙனம் நழுவின பாகத்தை மாத்திரம் விட்டுவிட வேண்டியதாயிருக்கின்றது. இப்பொழுது எனது ரேதஸ்ஸில் யாதொரு பாகம் ஸ்தாநத்தினின்றும் நழுவியிருக்கின்றதோ, அது மிகவும் தேஜோமயமாகையால் யாவராலும் பரிக்க முடியாதது. சிறப்புற்ற தேவர்களே, அப்படிப்பட்ட எனது ரேதஸ்ஸைப் பரிக்கவல்லவன் யாவன்? அதை எனக்குச் சொல்ல வேண்டும்" என்றிருக்கிறது.
இவ்வாறு சொல்லப்பட்டபோது தேவர்கள் அந்த ரிஷபத்வஜனிடம் {காளைக் கொடியோனான சிவனிடம்} மறுமொழியாக, "எந்த தேஜஸ் நகர்ந்ததோ அந்தப் பகுதியை இப்போது தாரணி {பூமி} தாங்குவாள்"(15) என்று சொன்னார்கள்.
மஹாபலத்துடன் வெளிப்பட்ட ஸுரபதியின் தேஜஸ் கிரிகளுடனும், கானகங்களுடனும் கூடிய பிருதிவியில் {மலை, காடுகளுடன் கூடிய பூமியில்} வியாபித்தது.(16) அப்போது தேவர்கள் பதிலுக்கு ஹுதாசனனிடம் {அக்னி தேவனிடம்} இதைச் சொன்னார்கள்: "வாயுவுடன் கூடிய நீ ருத்ரனின் மஹாதேஜஸில் நுழைவாயாக" {என்றனர்}.(17)
அக்னியால் வியாபிக்கப்பட்ட அது மேலும் ஸ்வேத பர்வதமாகி {வெண்மலையாகி / வெள்ளிமலையாகி} பாவகன் {அக்னி}, ஆதித்யன் {சூரியன்} ஆகியோருக்கு இணையாக ஒளிரும் திவ்யமான ஷரவனமுமானது {தெய்வீகமான நாணற்காடாகவும் ஆனது}. அந்த மஹாதேஜஸ்ஸிலிருந்தே அக்னிசம்பவனான கார்த்திகேயன் தோன்றினான்[6].(18,19அ)
[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "குமரன், அல்லது ஸ்கந்தன் சிவனின் வீரியத்தில் இருந்து அக்னியின் மூலம் பிறந்ததால் அவன் நெருப்பில் பிறந்தவன் என்று அழைக்கப்படுகிறான். கிருத்திகை {கார்த்திகை} நட்சத்திரங்களின் முலையுண்டதால் அவன் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறான். கார்த்திகேயனின் பிறப்பும், புராணக் கதையும் கங்கை தொடர்பான அடுத்த சர்க்கத்தில் விளக்கப்படுகிறது" என்றிருக்கிறது.
நடந்தவற்றால் மனத்தில் மகிழ்ச்சி அடைந்த ரிஷிகணங்களும், தேவர்களும் அப்போது உமையையும், சிவனையும் பெரிதும் பூஜித்தனர்.(19ஆ,20அ) இராமா, அப்போது கடுஞ்சினமடைந்த சைலசுதை {மலைமகளான உமை}, குரோதத்தால் கண்கள் சிவந்தவளாக திரிதசர்கள் {தேவர்கள்} அனைவரையும் சபிக்கும் வகையில் இதைச் சொன்னாள்:(20ஆ,21அ) "புத்திரனை விரும்பிய நான் இணைப்பில் இருந்து விலக்கப்பட்டதால் உங்கள் தாரங்களிடம் சந்ததி உற்பத்தியாகாது.(21ஆ,22அ) இப்போதிருந்து உங்கள் பத்தினிகள் பிரஜைகளற்றவர்களாக {மக்களற்றவர்களாக} நீடிப்பார்கள்" என்றிவ்வாறு தேவர்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு பிருதிவீயையும் {பூமியையும்} சபித்தாள்[7].(22ஆ,23அ) "அவனியே {பூமியே}, நீ ஒரே ரூபத்தில் இருக்க மாட்டாய், நீ பலரின் பாரியை {மனைவி} ஆவாய். துர்மதியாளே, புத்திரனை அடையும் விருப்பம் நிறைவேறாத என் குரோதம் உன்னைக் கலங்கடிக்கும். புத்திரனால் உண்டாகும் நிறைவான மகிழ்ச்சியை நீ ஒருபோதும் அடையமாட்டாய்" {என்று பூமியைச் சபித்தாள் உமை}[8].(23ஆ,24)
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவ்வாறே தேவர்களுக்கு நேரடி சந்ததிகள் இல்லாமல் போனது. அவர்கள் மனிதர்களின் மூலமோ, வேறு உயிரினங்களின் மூலமோ தங்கள் சந்ததியை உண்டாக்குகின்றனர்" என்றிருக்கிறது.
[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சிவனின் வீரியத்தைத் தன் பரப்பில் ஏற்றுக் கொண்டதால் உமா தேவியின் சாபத்தைத் தாங்குப் பாவம் பூமிக்கு ஏற்பட்டது. பூமியின் தோற்றம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. பூமியில் இருக்கும் காடுகள், வனங்கள், கடல்கள், எரிமலைகள், மலைகள், பனி, ஈரப்பதம் என எதுவும் எங்கும் ஒரே மாதிரியாக இருக்காது. மேலும் பூமியானவள் எண்ணற்ற மன்னர்களின் அதிகாரப்பூர்வமான மனைவியாகக் கொள்ளப்படுகிறாள். பிள்ளைகளால் மகிழ்வேற்படாது என்ற சாபத்தையும் பூமாதேவி பெறுகிறாள். நரகாசுரனும், சீதையும் பூமியின் பிள்ளைகளே ஆவர். அவ்விருவரும் உயிர்நீரின் தொடர்பால் பிறக்கவில்லை என்றாலும் அவர்கள் அவளது பிள்ளைகளாகவே சொல்லப்படுகின்றனர். அவ்விருவரும் இந்தப் பூமியில் சொல்ல முடியாத அவல நிலைகளை அடைந்தனர். சீதை தன் வாழ்வில் சந்தித்த பேரிடர்கள் அனைத்திற்கும் பிறகு, தன் தாயான பூமாதேவியிடம், தன்னை மீண்டும் அவளது கருவறைக்குள்ளேயே ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறாள்" என்றிருக்கிறது.
ஸுரபதி {தேவர்களின் தலைவனான சிவன்} அப்போது வெட்கமடைந்து நின்ற தேவர்கள் அனைவரையும் கண்டு வருணனால் பாலிக்கப்படும் {ஆளப்படும் மேற்கு} திசைக்குச் செல்லத் தொடங்கினான்.(25) மஹேஷ்வரன் அங்கே சென்று அந்த மலையின் வடக்குப் பக்கத்தில் இமயபிரபவ சிகரத்திற்குச்[9] சென்று தேவியுடன் {தன் மனைவியான உமையுடன்} தவம் பயின்று இருந்தான்.(26) இராமா, சைலபுத்ரி {உமை} தொடர்பான இதை உனக்கு விரிவாக விளக்கிச் சொன்னேன். இனி நீ லக்ஷ்மணனுடன் சேர்ந்து கங்கையின் தோற்றம் குறித்தும் என்னிடம் கேட்பாயாக" {என்றார் விசுவாமித்ரர்}.(27)
[9] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கைலாச மலை, கஞ்சஞ்சுங்கா மலை முதலியவற்றைப் போலச் சிவன் அமர்ந்த இமயத்தின் முழுப் பெயர் இமயபிரபவம் என்பதாகவும் இருக்கலாம் என்று சிலர் சொல்கின்றனர்" என்றிருக்கிறது.
பாலகாண்டம் சர்க்கம் – 36ல் உள்ள சுலோகங்கள் : 27
Previous | | Sanskrit | | English | | Next |