Monday, 16 August 2021

காமாசிரமம் | பால காண்டம் சர்க்கம் - 23 (22)

Kamashrama | Bala-Kanda-Sarga-23 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனும், லக்ஷ்மணனும் விஷ்வாமித்ரருடன் கங்கை சரயு சங்கமத்திற்குச் சென்றது; சிவன் மன்மதனை எரித்த இடம்...

Shiva and Kama (Manmatha)

இரவு கடந்து, பொழுது புலர்ந்ததும், அந்த மஹாமுனி {விஷ்வாமித்ரர்}, புற்படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த காகுத்ஸர்களிடம் {ராமலக்ஷ்மணர்களிடம்} பேசினார்:(1) "கௌசல்யையின் நன்மகனே, ராமா, கிழக்கில் வெள்ளந்தி[1] முளைக்கிறது. நரஷார்தூலா {மனிதர்களில் புலியே},  தேவர்களுக்கான பகல் பணிகளை {ஆராதனைகளைச்} செய்ய வேண்டும்; நீ எழுவாயாக." {என்றார்}[2].(2)

[1] இரவும் பகலும், அல்லது பகலும் இரவும் கலக்கும் வேளையே சந்தியெனப்படும். காலையில் நிகழ்வது காலையந்தியென்றும், மாலையில் நிகழ்வது மாலையந்தி யென்றும் சொல்லப்படுகின்றன. காலையந்திக்கு முன்னந்தியென்றும், வெள்ளந்தியென்றும், மாலையந்திக்குப் பின்னந்தியென்றும், செவ்வந்தியென்றும் வேறு பெயர்களுமுண்டு.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இன்றளவும் இது கொண்டாடப்படும் ஒரு சுலோகமாகும். இது வரை ராமன் தன் பெற்றோரின் பேரன்புக்குரியவன். சூரிய விடியல் தீய இருளை அகற்றுவதைப் போல ராமனை தெய்வீக மயக்கத்தில் இருந்து மனிதக் கடமைகளை ஆற்ற "எழுவாயாக" என்கிறார் விஷ்வாமித்ரர். விடியலில் நேரும் விஷ்ணுவின் இந்த "திருப்பள்ளியெழுச்சி" வைஷ்ணவ மரபில் இன்று வரை தொடரப்படும் ஒரு பொதுவான நடைமுறையாகும். இது சுப்ரபாத சேவை என்று சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. மேற்கண்ட 2ம் ஸ்லோகத்தின் மூலம் நம்மில் பலராலும் தினமும் கேட்கப்படுவதுதான். அது பின்வருமாறு, "கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்ததே, உத்திஷ்ட நரஷார்தூல கர்தவ்யம் தைவமாஹ்னிகம்".

வீரர்களான அந்த நரோத்தமர்கள் {மனிதர்களில் உத்தமர்களான ராமனும், லக்ஷ்மணனும்}, அந்த ரிஷி {விஷ்வாமித்ரர்} சொன்ன நலந்தரும் சொற்களைக் கேட்டு, ஸ்நானம் செய்து {நீராடி}, நீர்க்காணிக்கையளித்து {அர்க்கியங்கொடுத்து} பரமஜபத்தை {காயத்ரி மந்திரத்தை} ஜபித்தனர்.(3) அந்த மஹாவீரர்கள் தங்கள் கடமைகளைச் செய்த பிறகு, அதி உற்சாகமாக தவத்தையே தனமாகக் கொண்ட விஷ்வாமித்ரரை வணங்கி புறப்படுவதற்கு ஆயத்தமாகினர்.(4) அவர்கள் பிரயாணம் செய்த போது, அந்த மஹாவீரர்கள் இருவரும் மங்கலமான சரயுவின் சங்கமத்தில் மூவழிகளில் செல்லும் நதியை {கங்கையாற்றைக்}[3] கண்டனர்.(5)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "முதலில் சொர்க்கத்திலும், இரண்டாவது பூமியிலும், மூன்றாவது பாதாள உலகத்திலும் கங்கை மூவழிகளில் பாய்கிறாள். கங்கை பூமிக்கு இறங்கிய அத்யாயங்கள் பாலகாண்டத்தில் பின்னர் உரைக்கப்படும்" என்றிருக்கிறது.

அங்கே பல்லாயிரம் ஆண்டுகள் பரம தவம் பயின்றவர்களும், ஆழ்நிலை ஆத்மாக்களைக் கொண்டவர்களுமான ரிஷிகளின் புண்ணிய ஆசிரமம் இருந்தது.(6) அந்தப் புண்ணிய ஆசிரமத்தைக் கண்டு பரம மகிழ்ச்சியடைந்த ராகவர்கள் {ராமனும், லக்ஷ்மணனும்}, மஹாத்மாவான விஷ்வாமித்ரரிடம் இந்த வசனத்தைச் சொன்னார்கள்:(7) "பகவானே {விஷ்வாமித்ரரே}, இந்தப் புண்ணிய ஆசிரமம் எவருடையது? உண்மையில் இந்த ஆசிரமத்தில் வசிப்பது யார்? இதைக் கேட்க விரும்புகிறோம். இதைக் கேட்கப் பேராவல் கொண்டிருக்கிறோம்" {என்றனர்}.(8)

அந்த முனிபுங்கவரும் {விஷ்வாமித்ரரும்}, அவர்களின் வசனத்தைக் கேட்டுப் புன்னகைத்து, "பூர்வத்தில் இந்த ஆசிரமம் யாருடையது என்பதைக் கேட்பீராக.(9) உடலுடன் கூடிய கந்தர்பன் {மன்மதன்}, புத்திமான்களால் காமன் என்றழைக்கப்பட்டான். இந்த இடத்தில் நியமத்துடன் தவம் பயின்று வந்த தேவேசனான ஸ்தாணுவிடம் {சிவனிடம்} மருத்கணங்களுடன் வந்தவன் {மன்மதன்}, தன் மூடத்தனத்தால், {பார்வதியைத்} திருமணம் செய்ய அவனைத் தூண்டத் துணிந்தான். அப்போது அந்த மஹாத்மா {சிவன்} ஹுங்காரம் செய்தான்.(10,11) ரகுனந்தனா {ரகுவின் வழித்தோன்றலே, சிவனின்} கோபம் நிறைந்த கண்ணால் {மூன்றாவது கண்ணால்} எரிக்கப்பட்ட அந்தத் துர்மதியாளனின் {மன்மதனின்} உடலில் இருந்து அங்கங்கள் அனைத்தும் விழுந்தன.(12) அந்த மஹாத்மாவால் முற்றாக எரிக்கப்பட்ட அவனது உடல் அழிந்தது. தேவேஷ்வரனுடைய குரோதத்தால் அந்தக் காமன் சரீரமற்றவனாக்கப்பட்டான்.(13) அது முதல் அவன் அனங்கன் {அங்கமற்றவன்} என்று புகழ்பெற்றான். அந்த ஸ்ரீமான் {காமன்} அங்கங்களை உதிர்த்த இடமே அங்க தேசம் என்றழைக்கப்படுகிறது[4].(14) வீரா, இஃது அவனுடைய {சிவனுடைய / காமனுடைய} புண்ணிய ஆசிரமமாகும். தர்மத்திற்குக் கட்டுப்பட்டிருக்கும் இந்த முனிவர்கள், ஒரு காலத்தில் அவனுடைய {சிவனுடைய} சிஷ்யர்களாக[5] இருந்தவர்கள். இவர்கள் பாவமின்றி விளங்குகின்றனர்.(15) மங்கலத் தோற்றம் கொண்டவனே, இன்றிரவு இந்தப் புண்ணிய ஆறுகளுக்கு மத்தியில் வசித்துவிட்டு, நாளை இதைக் கடந்து செல்வோம்.(16) நரோத்தமா, நாம் அனைவரும் நீராடி, ஜபம் செய்து, காணிக்கைகளை இட்டு நெருப்பைத் தூண்டி நம்மைத் தூய்மை செய்து கொண்டு இந்தப் புண்ணிய ஆசிரமத்திற்குள் நுழைவோம். இங்கே வசிப்பது நமக்குச் சுகமளிக்கும் என்பதால் இங்கேயே வசிப்போம்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(17,18அ)

[4] மஹாபாரதம் ஆதிபர்வம் 104:47,48ல் அங்க தேசம் உண்டான கதை வேறு வகையில் சொல்லப்பட்டிருக்கிறது.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த ஆசிரமம் காமனுக்கோ, சிவனுக்கோ சொந்தமானதாகும். இந்த சர்க்கத்தின் 22ம் சுலோகத்தில் இது காமனின் ஆசிரமம் என்றே சொல்லப்படுகிறது. சிவன், காமனைக் கட்டுப்படுத்தும் காமேஷ்வரனாக இருப்பதால் இது சிவனின் ஆசிரமமுமாகிறது. இந்த ஆசிரமத்தில் தவம் பயிலும் முனிவர்கள், பழங்காலத்தில் சிவனின் சிஷ்யர்கள். அதாவது, சிவனின் நேரடி சீடர்களாக இருந்த முனிவர்களின் சீடப்பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிவனின் நேரடி சீடர்களுடைய பேரப்பிள்ளைகளாக இருப்பதால் இவர்களைப் பாவம் ஒருபோதும் அண்டாது" என்றிருக்கிறது.

அங்கே அவர்கள் {இவ்வாறு} பேசிக் கொண்டிருந்தபோது, அந்த முனிவர்கள் தங்கள் தவத்தின் தீர்க்கப் பார்வையால் இதை அறிந்து, பரம மகிழ்ச்சியுடன் அவர்களை அணுகி இன்புற்று, அர்க்கியமும் {கை கழுவுவதற்கான நீரும்}, பாத்யமும் {பாதங்கழுவுவதற்கான நீரும்} கொடுத்து, குசிகனின் மகனுக்கு {விஷ்வாமித்ரருக்கு ஆதித்யம்} விருந்தோம்பல் செய்தனர்.(18ஆ,19) அதன்பிறகு அவர்கள் {அந்த முனிவர்கள்}, ராமனுக்கும் லக்ஷ்மணனுக்கும் அதிதி பூஜை {விருந்தோம்பல்} செய்து {விஷ்வாமித்ரரின்} பாராட்டுகளைப் பெற்று, கதைகள் பேசி மனங்களிக்கச் செய்தனர்.(20) அந்த ரிஷிகள் தங்கள் நாட்டத்தால் மனங்களைக் குவித்து, சந்தியா {செவ்வந்தி வேளைக்கான} ஜபங்களைச் செய்தனர். நல்ல விரதங்களுடன் அங்கே வசிக்கும் முனிவர்களும், அங்கே வந்தவர்களும் அந்தக் காமாசிரமத்தில் சுகமாக வசித்தனர்.(21,22அ) தர்மாத்மாவும், முனிபுங்கவருமான கௌசிகர் {விஷ்வாமித்ரர்}, அங்கே மகிழ்ச்சியாக இருந்த மன்னனின் மகன்களுக்கு {தசரதனின் மகன்களான ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும்} இனிய கதைகளைச் சொல்லி திளைக்கச் செய்தார்.(22ஆ)

பாலகாண்டம் சர்க்கம் –23ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் துந்துபி தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்