Resurrection of the dead | Yuddha-Kanda-Sarga-120 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஒரு வரம் வேண்டுமாறு ராமனிடம் கேட்ட இந்திரன்; போரில் உயிரிழந்த வானரர்கள், கரடிகளின் உயிரை மீட்க விரும்பிய ராமன்; அவர்களை உயிர்ப்பித்த இந்திரன்...
காகுத்ஸ்தன் {தசரதன்} திரும்பிச் சென்றதும், பரம பிரீதியடைந்தவனும், பாகசாசனனுமான மஹேந்திரன் {பாகன் என்ற அசுரனைக் கொன்றவனுமான பெரும் இந்திரன்}, கைகளைக் கூப்பி நின்று கொண்டிருந்த ராகவனிடம் {பின்வருமாறு} கூறினான்:(1) "இராமா, நரரிஷபா {மனிதர்களில் காளையே}, உனக்கு எங்கள் தரிசனம் அமோகமானதாக {வீண்போகாததாக} இருக்க வேண்டும். நாங்கள் பிரீதியடைந்தோம். எனவே, உன் மனத்தால் எதை விரும்புகிறாயோ அதை நீ சொல்வாயாக" {என்று கேட்டான் இந்திரன்}.(2)
மஹாத்மாவான மஹேந்திரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மகிழ்ச்சியடைந்த ராகவன், அமைதியான அந்தராத்மாவுடனும், மகிழ்ச்சியுடனும் {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(3) "பேசுபவர்களில் சிறந்தவனே, விபுதேஷ்வரா {தேவர்களின் தலைவா}, என்னிடம் நீ பிரீதியடைந்தாயெனில், நான் உன்னிடம் சொல்லப்போகும் இந்த வசனத்தை சத்தியமாக்குவாயாக.(4) எனக்கு ஹேதுவாக பராக்கிரமத்தை வெளிப்படுத்தி யம சாதனத்தை {யமனின் வசிப்பிடத்தை} அடைந்தவர்கள் எவரோ, அந்த சர்வ வானரர்களும் ஜீவிதத்தை அடைந்து {உயிர்பிழைத்து} எழும்பட்டும்.(5) மானதா {மதிப்பை அளிப்பவனே}, எனக்காக தங்கள் தாரங்களையும், புத்திரர்களையும் விட்டுப் பிரிந்து வந்தவர்கள் எவரோ, அந்த சர்வ வானரர்களையும் பிரீதியடைந்த மனத்துடன் கூடியவர்களாக நான் பார்க்க விரும்புகிறேன்.(6)
புரந்தரா, விக்ராந்தர்களும், மிருத்யுவை கணப்படுத்தாதவர்களும் {மரணத்தை துச்சமாக மதித்தவர்களும்}, யத்னம் செய்து அழிந்தவர்களுமான அந்த சூரர்கள் அனைவரும் ஜீவனுள்ளவர்களாகட்டும்.(7) மிருத்யுவை கணப்படுத்தாமல், எனக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பியவர்கள் எவரோ, அவர்கள் உன் அருளால் {உற்றார் உறவினருடன்} ஒன்று சேரட்டும். நான் இந்த வரத்தைக் கேட்கிறேன்.(8) மானதா {மதிப்பை அளிப்பவனே}, கோலாங்கூலர்களையும் {பசுவைப் போன்ற வால்களைக் கொண்ட குரங்குகளையும்}, அதேபோல, ரிக்ஷர்களையும் {கரடிகளையும்}, வலியில் இருந்து விடுபட்டவர்களாகவும், காயங்களில் இருந்தும் விடுபட்டவர்களாகவும், பலம், பௌருஷமும் நிறைந்தவர்களாகவும் நான் காண விரும்புகிறேன்.(9) எங்கே வானரர்கள் இருக்கிறார்களோ அங்கே அகாலத்திலும் கூட, விமலமான {களங்கமில்லாத} நதிகளும், புஷ்பங்களும், மூலங்களும் {கிழங்குகளும்}, பழங்களும் இருக்கட்டும்" {என்றான் ராமன்}[1].(10)
[1] கோட்டு வார் சிலைக் குரிசிலை அமரர்தம் குழாங்கள்மீட்டும் நோக்குறா வீர நீ வேண்டுவ வரங்கள்கேட்டியால் என அரக்கர்கள் கிளர் பெருஞ்செருவில்வீட்ட மாண்டுள குரங்கு எலாம் எழுக என விளம்பி (10084)பின்னும் ஓர் வரம் வானரப் பெருங் கடல் பெயர்ந்துமன்னு பல்வனம் மால் வரைக் குலங்கள் மற்று இன்னதுன் இடங்கள் காய் கனி கிழகோடு தேன் துற்றஇன் உண் நீர் உளவாக என இயம்பிடுக என்றான். (10085)- கம்பராமாயணம் 10084, 10085ம் பாடல்கள், யுத்த காண்டம், மீட்சிப் படலம்பொருள்: வளைந்த, நீண்ட வில்லேந்தியவனை {ராமனை} அமரர்கள் கூட்டங்கள் திரும்பவும் பார்த்து, "வீரா, நீ வேண்டும் வரங்கள் கேட்பாயாக" என்று கூற, {ராமன்}, "அரக்கர்கள் எழுந்த பெரும்போரிலே கொல்லப்பட்டு வீழ்ந்த குரங்குகள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று எழுக" என்று கேட்டு,(10084) "பின்னும் ஒரு வரமாக, வானர சேனை இடம் மாறிச் சென்று நிலைக்கின்ற பல வனங்களும், பெரிய மலைக்கூட்டங்களும் இது போன்ற இடங்களும் எல்லாம், காய், கனி, கிழங்கு, தேன் ஆகியவை நிறைந்து, பருகுவதற்குரிய குடிநீரும் நிரம்பப் பெற வேண்டும் என்று சொல்வீராக {வரமருள்வீராக}" என்றான் {ராமன்}.(10085)
மஹாத்மாவான அந்த ராகவனின் வசனத்தைக் கேட்ட மஹேந்திரன், பிரீதி அடைந்தவனாக இந்த வசனத்தை பதிலாகச் சொன்னான்:(11) "தாதா {ஐயா / குழந்தாய்}, ரகோத்தமா, உன்னால் எது கேட்கப்பட்டதோ அந்த வரம் மஹத்தானது. பூர்வத்தில் இரண்டாவது {ஒன்றைக் கேட்டு மற்றொன்று} என்னால் சொல்லப்பட்டது இல்லை. எனவே, இஃது அவ்வாறே ஆகட்டும்.(12) யுத்தத்தில் ராக்ஷசர்களால் கொல்லப்பட்டவர்களும், முகங்களும், கைகளும் அறுக்கப்பட்டவர்களுமான ரிக்ஷர்களும் {கரடிகளும்}, கோபுசர்களும் {பசு வால் கொண்ட குரங்குகளும்} எவரோ, அவர்கள் அனைவரும் எழும்பட்டும்.(13)
வலியின்றி, காயமின்றி, பலத்துடனும், பௌருஷத்துடனும் கூடியவர்களாக, உறங்கியவர்கள் நித்திரையின் முடிவில் விழித்தெழுவதைப் போல ஹரயர்கள் எழுவார்கள்.(14) அவர்கள் அனைவரும் பரம மகிழ்ச்சியுடன் கூடியவர்களாக நண்பர்கள், பந்துக்கள், ஞாதிகள் ஆகியோருடனும், சொந்த ஜனங்களுடனும் சேர்வார்கள்.(15) மஹேஷ்வாசா {பெரும் வில்லை ஏந்தியவனே}, அகாலங்களிலும் மரங்கள் எப்போதும் மலர்ந்த புஷ்பங்களுடனும், பழங்களுடனும் இருக்கும், நதிகளும் நீரால் நிறைந்தவையாக இருக்கும்" {என்றான் இந்திரன்}.(16)
சர்வ ஹரியூதபர்களும், முதலில் காயங்களுடன் கூடியதும், இப்போது காயங்களற்றதுமான சமமான காத்திரங்களுடன் {சீரான உடலுறுப்புகளுடன்} உறக்கத்தில் இருந்து {விழித்தெழுவது} போல எழுந்தனர்.{17} சர்வ வானரர்களும், "இஃது என்ன?" என்று ஆச்சரியமடைந்தனர்.(17,18அ)
அர்த்தம் பரிபூர்ணமடைந்த காகுத்ஸ்தனை {ராமனைக்} கண்ட சர்வ ஸுரோத்தமன் {தேவர்களில் உயர்ந்தவனான இந்திரன்}, பரமபிரீதியடைந்தவனாக, லக்ஷ்மணனுடன் கூடிய ராமனைத் துதிக்கும் வகையில் {பின்வருமாறு} பேசினான்:(18ஆ,19அ) "இராஜனே, வானரர்களுக்கு விடைகொடுத்தனுப்பி, இங்கிருந்து அயோத்யைக்குச் செல்வாயாக. உன்னிடம் விருப்பம் கொண்டவளும், புகழ்பெற்றவளுமான இந்த மைதிலியை ஆசுவாசப்படுத்துவாயாக.(19ஆ,20அ) உன்னால் விளைந்த சோகத்துடன் விரதத்தைக் கடைப்பிடிக்கும் உன் பிராதா {உன்னுடன் பிறந்தவனான} பரதனைப் பார்ப்பாயாக.{20ஆ} உன்னை அபிஷேகித்துக் கொண்டு, பரந்தபா {பகைவரை அழிப்பவனே}, மஹாத்மாவான சத்ருக்னனையும், மாதாக்கள் அனைவரையும், புரவாசிகளையும் {அயோத்திவாசிகளையும்} மகிழ்ச்சி அடையச் செய்வாயாக" {என்றான்}. (20ஆ,21அ,ஆ)
இலக்ஷ்மணன் சகிதனான ராமனிடம் இவ்வாறு கூறிய சஹஸ்ராக்ஷன் {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரன்}, மகிழ்ச்சியடைந்தவனாக, சூரியனைப் போன்ற ஒளியுடன் கூடிய விமானங்களில் ஸுரர்கள் {தேவர்கள்} சகிதனாக {தேவலோகத்திற்குத்} திரும்பிச் சென்றான்.(22) அப்போது, பிராதாவான லக்ஷ்மணனுடன் கூடிய காகுத்ஸ்தன், சர்வ திரிதசோத்தமர்களையும் {தேவர்களில் மேன்மையானோரை} வணங்கி, {வானரர்கள்} அனைவரையும் {தங்கள் தங்கள்} வசிப்பிடங்களுக்குச் செல்ல ஆணையிட்டான்.(23) பிறகு, லக்ஷ்மணராமர்களால் பாலிதம் செய்யப்பட்டு {பாதுகாக்கப்பட்டு}, மகிழ்ச்சியுடன் கூடிய ஜனங்களால் அனைத்துப் பக்கங்களிலும் ஒளியுடன் ஜுவலித்துக் கொண்டிருந்ததுமான மஹாசம்மு, {சந்திரனின்} குளிர்ந்த கதிர்களால் செழிப்பில் ஒளிரும் நிசியைப் போல எங்கும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(24)
யுத்த காண்டம் சர்க்கம் – 120ல் உள்ள சுலோகங்கள்: 24
| Previous | | Sanskrit | | English | | Next |
