Enter Dasharatha | Yuddha-Kanda-Sarga-119 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோரிடம் தசரதனை அழைத்து வந்த மஹேஷ்வரன்; மூவரையும் ஆசீர்வதித்து, அயோத்திக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்ட தசரதன்...
மஹேஷ்வரன் {சிவன்}, ராகவனால் சொல்லப்பட்ட இந்த சுபமான வாக்கியங்களைக் கேட்டபோது, மேலும் சுபமான {பின்வரும்} வாக்கியத்தை மொழிந்தான்:(1) "புஷ்கராக்ஷா {தாமரைக் கண்களைக் கொண்டவனே}, மஹாபாஹோ {பெருந்தோள்களைக் கொண்டவனே}, மஹாவக்ஷா {அகன்ற மார்பை உடையவனே}, பரந்தபா {எதிரிகளை அழிப்பவனே}, தர்மத்தை ஆதரிப்பவர்களில் சிறந்தவனே, நற்பேற்றால் இந்தக் கர்மம் {செயல்} உன்னால் நிறைவேற்றப்பட்டது.(2) சர்வ லோகங்களிலும் கடும் இருளை அதிகரித்ததும், ராவணனிடம் பிறந்ததுமான பயம் {ஆபத்து}, நற்பேற்றால் உன்னால் போரில் நீக்கப்பட்டது.(3)
தீனனான {பரிதாபத்திற்குரிய} பரதனையும், புகழ்மிக்க கௌசல்யையையும் ஆசுவாசப்படுத்தி, கைகேயியையும், லக்ஷ்மணனின் மாதாவான சுமித்ரையையும் கண்டு,{4} அயோத்தியையின் ராஜ்ஜியத்தை அடைந்து, நண்பர்களுக்கு ஆனந்தத்தை அளித்து, மஹாபலவானான நீ, இக்ஷ்வாகுக்களின் குல வம்சத்தை ஸ்தாபித்து,{5} பிராமணர்களுக்கு தனங்களை தத்தம் செய்து, துரக மேதத்தை {அஷ்வமேதமெனும் குதிரை வேள்வியைச்} செய்து, உத்தம புகழை ஈட்டி, திரிதிவம் {தேவலோகம்} செல்லத் தகுந்தவனாக இருக்கிறாய்.(4-6) காகுத்ஸ்தா, மானுஷ்ய லோகத்தில் உனது குருவும், உனது பிதாவும், புகழ்பெற்றவனுமான தசரத ராஜா, இதோ விமானத்தில் இருக்கிறான்.(7) புத்திரனான உன்னால் விடுவிக்கப்பட்ட ஸ்ரீமான் இந்திரலோகத்தை அடைந்தான். பிராதாவான {உன்னுடன் பிறந்தவனான} லக்ஷ்மணன் சகிதனாக நீ இவனை வணங்குவாயாக" {என்றான் மஹேஷ்வரன்}.(8)
மஹாதேவனின் சொற்களைக் கேட்டு, பிராதாவான {உடன் பிறந்தவனான} லக்ஷ்மணன் சகிதனான ராகவன், விமானத்தின் சிகரத்தில் அமர்ந்திருந்த தன் பிதாவை {தந்தையை} வணங்கினான்.(9) பிராதாவனான {தன்னுடன் பிறந்தவனான} லக்ஷ்மணனுடன் கூடிய பிரபு {ராமன்}, சுய ஒளியால் ஒளிர்பவனும், களங்கமற்ற அம்பரங்களை {ஆடைகளைத்} தரித்தவனுமான தங்கள் பிதாவைக் கண்டான்.(10)
அப்போது, விமானத்தில் வீற்றிருப்பவனும், மஹீபதியுமான தசரதன், பிராணனைவிடப் பிரியத்திற்குரிய புத்திரனை {மகன் ராமனைக்} கண்டு, மஹத்தான மகிழ்ச்சியை அடைந்து,{11} மஹாபாஹுவான அந்தப் பிரபுவை {ராமனைச்} சிறந்த ஆசனமான தன் அங்கத்தில் {மடியில்} ஏற்றி, அமரச் செய்து, கைகள் இரண்டால் தழுவிக் கொண்டு, இந்த வாக்கியத்தைச் சொல்லத் தொடங்கினான்:(11,12) "இராமா, உன்னை விட்டுப் பிரிந்திருக்கும் எனக்கு சொர்க்கத்தில் விருப்பம் இல்லை; ஸுரர்கள் {தேவர்கள்}, ரிஷிகளால் மதிக்கப்படுவதிலும் {விருப்பம்} இல்லை. இதை உனக்கு சத்தியமாகச் சொல்கிறேன்.(13) அமித்ரர்கள் {பகைவர்கள்} கொல்லப்பட்டு, வனவாசத்தைக் கடந்து, சம்பூர்ணமனத்துடன் {மனநிறைவுடன்} கூடிய உன்னைக் கண்டு இன்று நான் பரம பிரீதி அடைகிறேன்.(14) பேசுபவர்களில் சிறந்தவனே, உன்னை நாடு கடத்தும் அர்த்தத்திற்காக கைகேயியால் சொல்லப்பட்ட அந்த வாக்கியங்கள் இன்னும் என் ஹிருதயத்தில் இருக்கின்றன.(15) உன்னையும், லக்ஷ்மணனையும் குசலிகளாக {நலமுடன் இருப்பவர்களாகக்} கண்டு தழுவி, பாஸ்கரன் {ஒளியை உண்டாக்குபவனான சூரியன்} மூடுபனியிலிருந்து விடுபட்டதைப் போல, இன்று நான் துக்கத்தில் இருந்து விடுபட்டேன்.(16) புத்திரா, அஷ்டவக்ரனால் தர்மாத்மாவான கஹோலர் {கஹோடர்} என்ற பிராமணரைப் போல[1], மஹாத்மாவும், நல்ல புத்திரனுமான உன்னால் நான் காப்பாற்றப்பட்டேன்.(17)
[1] அஷ்டவக்கிரர் கருவில் இருக்கும் போதே தம் தந்தை கஹோடர் சரியாக வாசிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். இதனால் கோபமடைந்த தந்தை, "உடலில் எட்டுக் கோணல்களுடன் பிறப்பாய்" என்று அஷ்டவக்கிரருக்கு சாபமிடுகிறார். கஹோடர், செல்வத்தை ஈட்டுவதற்காக மன்னன் ஜனகன் நடத்திய வேள்விக்குச் செல்கிறார். அங்கே நடக்கும் வாதப் போரில் வந்தின் என்ற அறிஞரிடம் தோற்று நீரில் மூழ்கடிக்கப்படுகிறார் {அல்லது நீரில் மூழ்கச் செய்து வந்தினால் அடிமையாக்கிக் கொள்ளப்படுகிறார்}. அஷ்டவக்கிரர் வளர்ந்த பிறகு, மன்னன் ஜனகனிடம் செல்கிறார். அங்கே அவரது ஞானம் சோதிக்கப்படுகிறது. பிறகு, வேள்விக்களத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார். அஷ்டவக்கிரருக்கும், வந்தினுக்கும் இடையில் வாதப் போர் நடைபெறுகிறது. அதில் அஷ்டவக்கிரர் வெல்கிறார். வந்தின் அஷ்டவக்கிரரின் தந்தை கஹோடரை வரவழைத்துக் கொடுக்கிறார். கஹோடர் தம் மகன் அஷ்டவக்கிரரை நதியில் மூழ்கச் செய்து, எட்டுக் கோணல்களுடன் கூடிய அவரது உடலை நிமிரச் செய்கிறார். இந்தக் கதையைத்தான் இங்கே தசரதன் ராமனுக்கு நினைவூட்டுகிறான். இந்தச் சம்பவம் சீதையின் தந்தையான ஜனகன் நடத்திய வேள்விக்களத்தில் நடைபெற்றது. மஹாபாரதம் வனபர்வம் 132 முதல் 134ம் பகுதி வரை அஷ்டவக்கிரர் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கதையை லோமச முனிவர் யுதிஷ்டிரனுக்குச் சொல்கிறார்.
சௌம்யா, புருஷோத்தமா, இங்கே ராவணனுடைய வதத்தின் அர்த்தத்திற்காக, ஸுரேஷ்வரர்களால் {தேவ தலைவர்களால்} இவ்விதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை இப்போது அறிகிறேன்.(18) இராமா, சத்ருசூதனா {பகைவரை அழித்தவனே}, வனத்தில் இருந்து திரும்பி, கிருஹத்தை {வீட்டை} அடையும் உன்னைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைபவள் எவளோ, அந்தக் கௌசல்யையே உண்மையில் சித்தார்த்தை {காரியம் நிறைவேறியவள்}.(19) {அயோத்தியா}புரீக்குத் திரும்பி, வசுதாதிபனாக ராஜ்ஜியத்தில் அபிஷேகிக்கப்படும் உன்னைக் காண்பவர்கள் எவரோ, அந்த நரர்களே {மனிதர்களே} உண்மையில் சித்தார்த்தர்கள் {காரியம் நிறைவேறியவர்கள்}.(20) தர்மசாரியும், தூய்மையானவனும், பலவானும், உன்னிடம் அன்பு கொண்டவனுமான பரதனுடன் சேர்ந்திருப்பவனாக உன்னைக் காண நான் விரும்புகிறேன்.(21) சௌம்யா, சீதையுடனும், மதிமிக்கவனான லக்ஷ்மணனுடனும் வனத்தில் வசித்த உன்னால் பதினான்கு வருடங்கள் கடக்கப்பட்டன.(22) வனவாசம் உன்னால் கடக்கப்பட்டது. உன் பிரதிஜ்ஞை {உறுதிமொழி} நிறைவேற்றப்பட்டது. இரணத்தில் ராவணனைக் கொன்றதில் தேவர்களும் நிறைவடைந்திருக்கின்றனர்.(23) சத்ருசூதனா {பகைவரை அழித்தவனே}, உன்னால் சிலாக்கிய கர்மம் {போற்றத்தக்க செயல்} செய்யப்பட்டது. புகழ் அடையப்பட்டது. பிராதாக்களுடன் {உடன்பிறந்தவர்களுடன்} ராஜ்ஜியத்தை அடைந்து, தீர்க்க ஆயுளைப் பெற்றிருப்பாயாக" {என்றான் தசரதன்}.(24)
இராஜா {தசரதன்} இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, கூப்பிய கைகளுடன் கூடிய ராமன் {பின்வருமாறு} கூறினான், "கைகேயியிடமும், தர்மஜ்ஞனான {தர்மத்தை அறிந்தவனான} பரதனிடமும் அருள்கூர்வீராக.(25) பிரபோ, "உன்னையும், உன் புத்திரனையும் கைவிடுகிறேன்" என்று உம்மால் கூறப்பட்ட அந்த கோரமான சாபம், கைகேயியையும், அவளது புத்திரனையும் ஸ்பரிசிக்கக் கூடாது {தீண்டக்கூடாது", என்றான் ராமன்}[2].(26)
[2] ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று உரை என அழகன்தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்தாயும் தம்பியும் ஆம் வரம் தருக எனத் தாழ்ந்தான்வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம் வழுத்தி- கம்பராமாயணம் 10079ம் பாடல், யுத்த காண்டம், மீட்சிப் படலம்பொருள்: "ஆனாலும் உனக்குப் பொருந்திய ஒன்றைக் கேட்பாயாக" என {தசரதன்} சொல்ல, அழகன் {ராமன்}, "நீர் தீயவள் என்று துறக்கப்பட்ட என் தெய்வமும் {கைகேயியும்}, மகனும் {பரதனும்} என் தாயும், தம்பியும் என்ற வரத்தைத் தருவீராக" என வணங்கிக் கேட்டான். அப்போது உயிரினங்கள் அனைத்தும் அவனை வணங்கி எழுந்து வாய்த்திறந்து மகிழ்ச்சிப் பேரொலி செய்தன.
கைகளைக் கூப்பி நின்ற ராமனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன மஹாராஜா {தசரதன்}, லக்ஷ்மணனைத் தழுவிக் கொண்டு, மீண்டும் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(27) "இராமனுக்கும், வைதேஹியான சீதைக்கும் பக்தியுடன் தொண்டு செய்ததன் மூலம் எனக்கு மஹாபிரீதியை அளித்திருக்கிறாய், தர்மத்தின் பலனையும் நீ ஈட்டியிருக்கிறாய்.(28) தர்மஜ்ஞா, ராமனின் அருளால் தர்மத்தின் பலனையும், புவியில் பெரும் புகழையும், ஸ்வர்க்கத்தையும், உத்தம மகிமையையும் நீ அடைவாய்.(29) உனக்கு பத்ரம் {மங்கலம் உண்டாகட்டும்}. சௌமித்ரானந்தவர்தனா {சுமித்திரையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனே}, ராமனுக்குத் தொண்டாற்றுவாயாக. இராமன் சதா சர்வலோக ஹிதத்தையே நோக்கமாகக் கொண்டிருப்பான்.(30) இந்திரன், உள்ளிட்ட இந்த மூன்று உலகத்தாரும், சித்தர்களும், பரமரிஷிகளும் மஹாத்மாவான புருஷோத்தமனை {ராமனை} அணுகி வணங்குகிறார்கள்.(31) சௌம்யா, பரந்தபா {பகைவரை அழிப்பவனே}, அவ்யக்தமானதும் {வெளிப்படாததும்}, அக்ஷரமானதும் {அழிவற்றதும்}, பிரம்மனால் நிர்மிதம் செய்யப்பட்டதும், தேவர்களின் ஹிருதயமும், குஹ்யமும் {ரகசியமும்}, இந்த ராமனே. இதுவே சொல்லப்படுகிறது.(32)வைதேஹியான சீதையுடன் சேர்ந்து, பக்தியுடன் இவ்வாறாகத் தொண்டாற்றிய நீ, தர்மத்தின் பாதையில் நடந்து பெரும் புகழை ஈட்டியிருக்கிறாய்" {என்றான் தசரதன்}.(33)
இலக்ஷ்மணனிடம் இதைச் சொன்ன ராஜா {தசரதன்}, கைகளைக் கூப்பி நின்று கொண்டிருந்த தன் மருமகளை {சீதையை}, "புத்ரி" என்று அழைத்து, மெதுவாகவும், மதுரமாகவும் {இனிமையாகவும்} அவளிடம் இதைச் சொன்னான்:(34) "வைதேஹி, இவ்வாறு தியாகம் செய்யப்பட்டதற்காக {கைவிடப்பட்டதற்காகக்} கோபம் கொள்வது தகாது. உன் ஹிதம் {நலம்} விரும்பி, சுத்தியின் அர்த்தத்திற்காகவே {உன் தூய்மைக்காகவே} ராமனால் இது செய்யப்பட்டது.(35) புத்ரி, செயற்கரிய எதைச் செய்தாயோ, அதுவே உன் சாரித்ரலக்ஷணம் {நடத்தைக்கான அடையாளம் ஆகும்}. இஃது அந்நிய நாரீகளின் {வேறு பெண்களின்} புகழை மூழ்கடிக்கும்.(36) அழகிய புருவங்களைக் கொண்டவளே, பதிக்கு {கணவனுக்குத்} தொண்டாற்றுவது குறித்து உனக்கு அறிவுறுத்த வேண்டியதில்லை. ஆனால் இஃது அவசியம் என்னால் சொல்லப்பட வேண்டும். அவனே உன் பரம தைவதம் {உயர்ந்த தெய்வம்}" {என்றான் தசரதன்}.(37)
தசரதன், தன் புத்திரர்கள் இருவருக்கும், சீதைக்கும் இவ்வாறு அறிவுரை கூறிவிட்டு, ஒளிரும் தன் விமானத்தில் இந்திரலோகத்திற்குச் சென்றான்.(38) மஹானுபாவனும், செழித்தவனுமான நிருபோத்தமன் {மன்னர்களில் உயர்ந்த தசரதன்}, பெரும் நிறைவுடன் சீதையிடமும், தன் புத்திரர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு, விமானத்தில் அமர்ந்து, தேவர்களில் சிறந்தவனின் உலகத்திற்கு {இந்திரலோகத்திற்குச்} சென்றான்.(39)
யுத்த காண்டம் சர்க்கம் – 119ல் உள்ள சுலோகங்கள்: 39
| Previous | | Sanskrit | | English | | Next |
