The command of Agni | Yuddha-Kanda-Sarga-117 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: : எரியும் சிதையில் இருந்து சீதையின் தூய்மையை நிரூபிக்கும் வகையில் அவளைத் தன் மடியில் ஏந்தி வந்த அக்னி தேவன்; அவளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட ராமன்...
பிதாமகன் {பெரும்பாட்டனான பிரம்மன்} மொழிந்த இந்த சுப வாக்கியத்தைக் கேட்ட விபாவசு {ஒளியுடல் கொண்ட அக்னி தேவன்}, தன் அங்கத்தில் {மடியில்} வைதேஹியை ஏற்றிக் கொண்டு எழுந்து வந்தான்.(1) அப்போது ஹவ்யவாஹனன் மூர்த்திமானான உடனேயே {ஹவ்யங்களை தேவர்களிடம் எடுத்துச் செல்லும் வாகனமான அக்னி தேவன், புலப்படும் வடிவம் எடுத்த உடனேயே} அந்த சிதையை அசைத்து, ஜனகாத்மஜையான அந்த வைதேஹியை அழைத்துக் கொண்டு வெளிப்பட்டான்.(2) இளம் ஆதித்யனைப் போல் ஒளிர்பவளும், தப்த காஞ்ச பூஷணங்களுடன் கூடியவளும் {புடம்போட்ட பொன்னாலான ஆபரணங்களுடன் கூடியவளும்}, சிவந்த அம்பரங்களை {ஆடைகளைத்} தரித்தவளும், பால்யையும் {சிறுமியும்}, நீலகுஞ்சித மூர்தஜையும் {அழகிய சுருண்ட கரிய கூந்தலைக் கொண்டவளும்},{3} வாடாத புஷ்ப மாலையை ஆபரணமாகப் பூண்டவளும், {முன்பிருந்த} அதே ரூபத்துடன் கூடியவளும், அநிந்திதையுமான {நிந்திக்கத்தகாதவளுமான} வைதேஹியை விபாவசு {அக்னி}, தன் அங்கத்தில் {மடியில்} ஏற்றிக் கொண்டு வந்து ராமனிடம் கொடுத்தான்.(3,4)
பிறகு லோகசாக்ஷியான பாவகன் {உலகத்தின் சாட்சியாக விளங்குபவனும், அனைத்தையும் தூய்மையடையச் செய்பவனுமான அக்னி}, ராமனிடம் {பின்வருமாறு} கூறினான், "இதோ உன் வைதேஹி. இவள் எந்தப் பாபத்தையும் அறியமாட்டாள்.(5) சொற்களாலும் அல்ல, மனத்தாலும் அல்ல, புத்தியாலும் அல்ல, பார்வையாலும் அல்ல, நல்விருத்தத்துடன் {நன்னடத்தையுடன்} கூடிய இந்த சுபமானவள், விருத்தசௌண்டீரியனான {நடத்தையின் பலம் கொண்டவனான} உன்னை மீறியவளல்ல.(6) உன்னிடம் இருந்து பிரிக்கப்பட்டவளும், தீனமானவளும் {பரிதாபத்திற்குரியவளும்}, வசமிழந்தவளுமான இவள், வீரியத்தில் செருக்குற்றிருந்த ராக்ஷசன் ராவணனால் ஜனமில்லாத வனத்தில் இருந்து அபகரிக்கப்பட்டாள்.(7)
உன்னில் சித்தத்தை நிலைக்கச் செய்து, உன்னையே பராயணனாக {இறுதி இலக்காகக்} கொண்ட இவள், அந்தப்புரத்தில் அடைக்கப்பட்டு, மறைக்கப்பட்டு கோர புத்தி கொண்ட கோர ராக்ஷசிகளால் காவல் காக்கப்பட்டாள்.(8) உன்னில் தன் அந்தராத்மாவை வைத்திருந்த மைதிலி, விதவிதமாக ஆசை காட்டப்பட்டாலும், அச்சுறுத்தப்பட்டாலும் அந்த ராக்ஷசனைக் குறித்துச் சிந்தித்தாளில்லை {ராவணனைப் புறக்கணித்தாள்}.(9) மைதிலி, சுத்த பாவம் {தூய உள்ளம்} கொண்டவள்; பாபமற்றவள். மறுமொழி ஏதும் சொல்லாமல் திரும்பப் பெற்றுக் கொள்வாயாக. நான் உனக்கு ஆணையிடுகிறேன்" {என்றான் அக்னி}[1].(10)
[1] பெய்யுமே மழை புவி பிளப்பது அன்றியேசெய்யுமே பொறை அறம் நெறியில் செல்லுமேஉய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால்வய்யுமேல் மலர்மிசை அயனும் மாயுமே (10046)பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்றுஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழசூடு உறும் மேனிய அலரி தோகையைமாடு உறக் கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான் (10047)- கம்பராமாயணம் 10046, 10047ம் பாடல்கள், யுத்த காண்டம், மீட்சிப் படலம்பொருள்: "இவள் {சீதை} உணர்வு சீறினால், மழை பெய்யுமா? புவி பிளப்பது மட்டுமல்லாமல் பொருளைத் தாங்கக்கூடுமா? அறம் நேரான வழியில் நடக்குமா? உலகு உய்யுமா? {சீதை} சபித்தால் மலர் மேல் வீற்றிருக்கும் அயனும் {பிரம்மனும்} மாய்ந்து விடுவான்".(10046) வெந்த உடம்பினைக் கொண்ட அலரி {அக்னிதேவன்}, பெருமை பொருந்திய இத்தகைய பல சொற்களை மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டு, ஆடிக் கொண்டிருக்கும் தேவர்களோடு, உலகமும் ஆரவாரித்து உடன் வர, மயில் போன்றவளை {சீதையை ராமனின்} அருகில் கொண்டு வந்தான். அப்போது வள்ளல் {ராமன்} சொன்னான்...(10047)
அப்போது பேசுபவர்களில் சிறந்தவனும், தர்மாத்மாவுமான ராமன், இதைக் கேட்டு மனத்தில் பிரீதியடைந்து, கண்கள் நிறைந்த கண்ணீருடன் ஒரு முஹூர்த்தம் தியானித்திருந்தான் {சிந்தித்துக் கொண்டிருந்தான்}.(11) இவ்வாறு சொல்லப்பட்டதும், திடமானவனும், திட விக்ரமனும், தர்மத்தை ஆதரிப்பவர்களில் சிறந்தவனுமான ராமன், திரிதச சிரேஷ்டனிடம் {பிரம்மனிடம், பின்வருமாறு} சொன்னான்:(12) "சீதை அவசியம் மூன்று உலகங்களின் கண்களில் தூய்மைக்குத் தகுந்தவளே. சுபமான இவள் ராவண அந்தப்புரத்தில் நீண்ட காலம் வசித்திருந்தாள்.(13) "சீ, தசரதாத்மஜனான ராமன், காமாத்மாவுடன் கூடிய பாலனைப் போல {ஆசையில் மூழ்கிய சிறுபிள்ளையைப் போல} ஜானகியை சோதிக்காமல் ஏற்றுக் கொண்டான்" என்று உலகத்தார் சொல்வார்கள்.(14)
ஜனகாத்மஜையான மைதிலி, என்னை விட்டு விலகாத, குவிந்த ஹிருதயத்துடன், என் சித்தப்படியே செயல்படும் பக்தி கொண்டவள் என்பதை நானும் அறிவேன்.(15) வேலத்தை மஹோததி போல {கரையைக் கடக்க முடியாத பெருங்கடல் போல}, சொந்த தேஜஸ்ஸால் ரக்ஷிக்கப்படும் இந்த விசாலாக்ஷியை {நீள்விழியாளான சீதையை} ராவணனால் மீற முடியாது.(16) சத்தியத்தைப் பின்பற்றுபவனான நான், மூன்று உலகங்களையும் நம்பச் செய்யும் அர்த்தத்திற்காக ஹுதாசனத்திற்குள் {ஆகுதிகளை உண்ணும் நெருப்பிற்குள்} பிரவேசித்த வைதேஹியை {தடுக்காமல்} பார்த்துக் கொண்டிருந்தேன்.(17) அக்னி சிகையைப் போல ஒளிர்பவளும், அடைதற்கரியவளுமான மைதிலியை அந்த துஷ்டாத்மா மனத்தாலும் தீண்ட வல்லவன் அல்லன்.(18)
இந்த சுபமானவள், ராவண அந்தப்புரத்தின் ஐஷ்வர்யத்திற்குத் தகாதவள். பாஸ்கரனுடன் பிரபை {சூரியனுடன் ஒளி} எப்படியோ, அப்படியே என்னிடம் இருந்து சீதை அன்னியமில்லாதவள்.(19) ஜனகாத்மஜையான மைதிலி, மூன்று உலகங்களிலும் சுத்தமானவள். ஆத்மவானால் கீர்த்தியை எப்படியோ {தன்னை உணர்ந்தவனால் துறக்க முடியாத புகழ் எப்படியோ}, அப்படியே என்னால் துறக்கப்பட முடியாதவள்.(20) இவ்வாறு சினேகத்துடன் பேசும் லோகநாதர்களான உங்கள் அனைவரின் ஹிதமான சொற்கள், அவசியம் என்னால் காரியமாக்கப்பட வேண்டும் {உங்கள் சொற்களின்படி நிச்சயம் நான் நடப்பேன்" {என்றான் ராமன்}.(21)
இதை இவ்வாறு சொல்லிவிட்டு, விஜயீயும் {வெற்றி பெற்றவனும்}, மஹாபலவானும், தான் செய்த கர்மங்களால் போற்றப்படுபவனும், பெரும்புகழ் கொண்டவனும், சுகத்திற்குத் தகுந்தவனுமான ராகவ ராமன், தன் பிரியையை {காதலியான சீதையைச்} சந்தித்து சுகத்தை அனுபவித்தான்.(22)
யுத்த காண்டம் சர்க்கம் – 118ல் உள்ள சுலோகங்கள்: 22
| Previous | | Sanskrit | | English | | Next |
