Lament of the wives of Ravana | Yuddha-Kanda-Sarga-110 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனின் சடலத்தைக் கண்டு அழுது புலம்பிய அவனது மனைவியர்...
மஹாத்மாவான ராகவனால் ராவணன் கொல்லப்பட்டதைக் கண்ட ராக்ஷசிகள் சோகத்தால் வேதனையடைந்து அந்தப்புரத்தில் இருந்து வெளியே வந்தனர்[1].(1) அடிக்கடி அவர்கள் தடுக்கப்பட்டும், பூமியின் புழுதியில் புரண்டு, கேசம் அவிழ்ந்து, கன்றிழந்த பசுக்களைப் போல சோகத்தில் தவித்தனர்.(2) உத்தர துவாரத்தில் {வடக்கு வாயிலில்} ராக்ஷசர்களுடன் வெளிப்பட்டு, கோரமான போர்க்களத்திற்குள் பிரவேசித்து கொல்லப்பட்ட தங்கள் பதியை {கணவனை} அழுது கொண்டே தேடினர்.{3} "ஆரியபுத்திரரே", "ஹா, நாதரே" என்று புலம்பிக் கொண்டு, சோணிதச் சேற்றுடன் கூடியதும், கபந்தங்களால் நிறைந்ததுமான மஹீயெங்கும் {தலையற்ற உடல்களால் நிறைந்ததுமான பூமியெங்கும்} அவர்கள் திரிந்தனர்.(3,4) கண்ணீர் நிறைந்த கண்களுடன், பர்த்தாவை {கணவனைக்} குறித்த சோகத்தில் மூழ்கிய அவர்கள், யூதபன் {கூட்டத்தலைவன்} கொல்லப்பட்ட கரேணுக்களை {பெண் யாணைகளைப்} போல உரக்கக் கதறினர்.(5)
[1] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அங்கே ராவணனின் மனைவியரும் இருந்தனர், பிற ராக்ஷசர்களின் மனைவியரும் இருந்தனர்" என்றிருக்கிறது. ஆனால் ராவணனின் மனைவியரை மட்டுமே குறிப்பிடப்படுவதாகவே இந்த சர்க்கம் முழுவதுமுள்ள வர்ணனைகளில் தெரிகிறது.
அவர்கள், மஹாகாயனும் {பேருடல் படைத்தவனும்}, மஹாவீரியனும், பேரொளி கொண்டவனுமான ராவணன், நீல அஞ்சனக் குவியலுக்கு {கரிய மைக்குவியலுக்கு} ஒப்பாக, பூமியில் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டனர்.(6) அவர்கள், போர்க்களத்தில் கிடக்கும் தங்கள் பதியைக் கண்ட உடனேயே, வெட்டப்பட்ட வனலதைகளை {காட்டுக் கொடிகளைப்} போல அவனது காத்திரங்களில் {உடல்மீது} விழுந்தனர்.(7) ஒருத்தி, பஹுமானத்துடன் {பெரும் மதிப்புடன்} அவனைத் தழுவிக் கொண்டு அழுதாள். ஒருத்தி, அவனது சரணங்களை {கால்களைப்} பற்றிக் கொண்டாள். ஒருத்தி, கண்டத்தை {கழுத்தைப்} பிடித்துக் கொண்டாள்.(8) ஒருத்தி, புஜங்களை மேலே வீசி, பூமியில் புரண்டாள். ஒருத்தி, கொல்லப்பட்டவனின் வதனத்தைக் கண்டு மயக்கமடைந்தாள்[2].(9) ஒருத்தி, தன் அங்கத்தில் சிரத்தை {மடியில் அவனது தலையை} வைத்துக் கொண்டு, முகத்தைப் பார்த்து அழுது, பனியில் {நீராடும்} பங்கஜத்தைப் போல கண்ணீரால் அந்த முகத்தை நீராட்டினாள்.(10)
[2] தலைமிசைத் தாங்கிய கரத்தர் தாரை நீர்முலைமிசைத் தூங்கிய முகத்தர் மொய்த்து வந்துஅலைமிசைக் கடலின் வீழ் அன்னம் போல் அவன்மலைமிசைத் தோள்கள் மேல் வீழ்ந்து மாழ்கினார்.(9933)தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும்எழு உயர் புயங்களும் மார்பும் எங்கணும்குழுவினர் முறை முறை கூறு கூறு கொண்டுஅழுதனர் அயர்த்தனர் அரக்கிமார்களே.(9934)- கம்பராமாயணம் 9933, 9934ம் பாடல்கள், யுத்த காண்டம், இராவணன் வதைப் படலம்பொருள்: தலைமேல் வைத்த கைகளைக் கொண்டவர்களும், கண்ணீர்த்தாரைகள் முலைகளில் விழுமாறு தொங்கிய முகங்களுடன் கூடியவர்களும் நெருங்கி வந்து கடலின் அலைகளின் மேல் விழும் அன்னம் போல, அவனது மலை போன்ற தோள்களின் மேல் நிலைகலங்கி சோர்ந்து விழுந்தனர்.(9933) இராக்ஷசிகளின் குழுவினர் தலையும், கால்களும், ஓங்கி வளர்ந்த தோள்களும், மார்பும் என எங்கும் முறை முறையாகப் பகுத்துக் கொண்டு பலமுறை தழுவினர், அழுது மயங்கினர்.(9934)
புவியில் கொல்லப்பட்டுக் கிடக்கும் பதியான ராவணனை மீண்டும் மீண்டும் கண்டு, இவ்வாறு துன்புற்ற அவர்கள், பலவாறாகக் கதறி அழுது, {பின்வருமாறு} புலம்பினார்கள்:(11) "எவரால் சக்ரன் {இந்திரன்} அச்சமடைந்தானோ, எவரால் யமன் அச்சமடைந்தானோ, எவரால் ராஜா வைஷ்ரவணர் புஷ்பகத்தை {மன்னர் குபேரர் புஷ்பக விமானத்தை} இழந்தாரோ,{12} எவரால் கந்தர்வர்களுக்கும், ரிஷிகளுக்கும், மஹாத்மாக்களான ஸுரர்களுக்கும் ரணத்தில் பயம் தத்தம் செய்யப்பட்டதோ {தேவர்களுக்கும் போரில் பயம் தானமாக வழங்கப்பட்டதோ}, அத்தகைய இவர் ரணத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்.(12,13) எவரால் அஸுரர்களிடமிருந்தோ, ஸுரர்களிடமிருந்தோ, அதேபோல பன்னகர்களிடமிருந்தோ கூட எந்த பயமும் அறியப்படாமல் இருந்ததோ, அத்தகைய இவருக்கு மானுஷனிடம் இந்த பயம் {மனிதனால் இந்த ஆபத்து} விளைந்திருக்கிறது.(14) தேவதைகளாலும் {தேவர்களாலும்}, தானவ, ராக்ஷசர்களாலும் எவரை வதைக்க முடியாதோ, அத்தகைய இவர் பதாதியான {காலாட்படையைச் சேர்ந்த / கால்நடையாக வந்த} மானுஷனால் கொல்லப்பட்டு ரணத்தில் கிடக்கிறார்.(15) ஸுரர்களும், யக்ஷர்களும், அதே போல அஸுரர்களும் எவரைக் கொல்லும் சக்தியற்றிருந்தனரோ, அத்தகைய இவர் வலிமையிழந்த ஒருவனைப் போல, ஒரு மர்த்யனால் மிருத்யுவை அடைந்திருக்கிறார் {இறக்கக்கூடியவனான ஒரு மனிதனால் மரணத்தை அடைந்திருக்கிறார்" என்று சொல்லி அழுது புலம்பினர்}.(16)
அவனைக் குறித்த துக்கத்தை இவ்வாறு சொல்லி அழுத அந்த ஸ்திரீகள், மீண்டும் மீண்டும் துக்கத்தால் பீடிக்கப்பட்டவர்களாகக் கதறி அழுதனர்:(17) "சதா ஹிதவாதிகளான நண்பர்களை {எப்போதும் உமக்கான நன்மையைச் சொல்லும் நண்பர்கள் சொல்வதைக்} கேட்காமல், மரணமேயான {உமக்கு மரணத்தைக் கொண்டு வருபவளான} சீதை கொண்டு வரப்பட்டாள். இராக்ஷசர்கள் வீழ்த்தப்பட்டனர்.{18} இதோ உமக்கு சமமாக நாங்களும் வீழ்ந்து கிடக்கிறோம்.(18,19அ) இஷ்ட பிராதாவான {உடன் பிறந்தவர்களில் அன்புக்குரியவரான} விபீஷணர், ஹிதமான வாக்கியத்தைக் கூறினாலும், மோகத்தால் தம் வதத்தை விரும்பியவரான உம்மால் கடுஞ்சொல் மொழியப்பட்டது.(19ஆ,20அ) மைதிலியான சீதையை ராமனிடம் நீர் திருப்பி அனுப்பியிருந்திருந்தால், மஹத்தானதும், கோரமானதும், மூலத்தையே {வேரையே} அழிப்பதுமான இந்த விசனம் {துன்பம்} நமக்கு ஏற்பட்டிருக்காது.(20ஆ,21அ) பிராதாவின் {உம்முடன் பிறந்த விபீஷணரின்} விருப்பம் நிறைவேறியிருந்தால், ராமனும் மித்ரகுலத்தைச் சேர்ந்து {நண்பர் கூட்டத்தில் ஒருவனாக} இருப்பான்; நாங்கள் அனைவரும் விதவைகள் ஆகி இருக்க மாட்டோம்; சத்ருக்களின் விருப்பமும் நிறைவேறியிருக்காது.(21ஆ,22அ)
அதற்கு மேலும், கொடூர நோக்கத்துடன் சீதையை பலவந்தமாக அடக்கிய உம்மால், ராக்ஷசர்களும், நாங்களும், உமது ஆத்மாவும் {நீரும்} என மூவரும் துல்லியமாக {ஒரே மாதிரியாக} வீழ்த்தப்பட்டோம்.(22ஆ,23அ) இராக்ஷசபுங்கவரே, இஃது உமது காமத்தால் விளைந்த காமகாரமல்ல {உமது ஆசையால் விரும்பிச் செய்யப்பட்ட செயலல்ல}. அனைத்தையும் தைவமே {விதியே} செய்ய வைக்கிறது. தைவத்தால் அழிக்கப்படுவதே அழிவடைகிறது {விதியால் கொல்லப்பட்டவனே இங்கே பகைவனால் கொல்லப்படுவான்}.(23ஆ,இ) மஹாபாஹோ, ரணத்தில் உமக்கும், உமது ராக்ஷசர்களுக்கும், வானரர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் இந்த விநாசம் {அழிவு} தைவயோகத்தாலேயே {விதியின் செயலாலேயே} வந்தடைந்தது.(24) விடாமுயற்சியுடன் உழைத்தாலும் உலகத்தில் தைவகதியைத் திருப்புவது {விதியை மாற்றியமைப்பது} சாத்தியம் அல்ல; அர்த்தத்தாலும் அல்ல; காமத்தாலும் அல்ல; விக்ரமத்தாலும் அல்ல; ஆணையாலும் அல்ல {செல்வத்தாலும், ஆசையாலும், துணிவினாலும், ஆணையினாலும் விதியை வெல்வது சாத்தியமல்ல" என்று ராவணனின் மனைவியர் அழுது புலம்பினர்}.(25)
அந்த ராக்ஷசாதிப யோசிதைகள் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனின் மகளிர் / மனைவிமார்} தீனமாக, துக்கத்தால் பீடிக்கப்பட்டு, கண்கள் நிறைந்த கண்ணீருடன் குரரிகளை {அன்றில் பறவைகளைப்} போல இவ்வாறு அழுது புலம்பினர்.(26)
யுத்த காண்டம் சர்க்கம் – 110ல் உள்ள சுலோகங்கள்: 26
Previous | | Sanskrit | | English | | Next |