Lament of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-109 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விபீஷணனின் புலம்பல்; விபீஷணனுக்கு ஆறுதல் கூறி ராவணனுக்குரிய ஈமக் காரியங்களைச் செய்யும்படி கேட்டுக் கொண்ட ராமன்...
விபீஷணன், ரணத்தில் வீழ்த்தப்பட்டு கொல்லப்பட்டு சயனிக்கும் தன் பிராதாவை {தன்னுடன் பிறந்த ராவணனைக்} கண்டு, சோகவேகத்தில் பரிதவிக்கும் ஆத்மாவுடன் {பின்வருமாறு} புலம்பினான்:(1) "வீரரே, விக்ராந்தரே {துணிச்சல்மிக்கவரே}, பெரும்புகழ்வாய்ந்தவரே, பிரவீணரே {திறன்மிக்கவரே}, நயகோவிதரே {ராஜநீதியில் பண்டிதரே}, விலையுயர்ந்த படுக்கையில் படுக்கத் தகுந்தவரே, நீர் கொல்லப்பட்டு பூமியில் கிடப்பதேன்?(2) அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டு விரிந்து நீண்ட கைகள் அசைவற்றும், பாஸ்கரனின் ஒளியுடன் கூடிய மகுடம் நழுவியும் கிடக்கின்றன.(3) வீரரே, எது பூர்வத்தில் என்னால் சொல்லப்பட்டதோ[1], அது காம, மோகத்தால் வெல்லப்பட்டவரான உமக்கு ருசிக்கவில்லை. அதுவே இதோ உமக்கு வாய்த்திருக்கிறது.(4) எந்த செருக்கினால் பிரஹஸ்தரோ, இந்திரஜித்தோ, வேறு ஜனங்களோ, கும்பகர்ணரோ, அதிரதனான அதிகாயனோ, நராந்தகனோ,{5} நீரோ {என் ஆலோசனைகளை} மனத்திற் கொள்ளவில்லையோ அதன் விளைவே இப்படி வாய்த்திருக்கிறது.(5,6அ)
[1] அன்று எரியில் விழு வேதவதி இவள்காண்உலகுக்கு ஓர் அன்னை என்றுகுன்று அனைய நெடுந்தோளாய் கூறினேன்அது மனத்துள் கொள்ளாதே போய்உன்தனது குலம் அடங்க உருத்து அமரில்படக் கண்டும் உறவு ஆகாதேபொன்றினையே இராகவன்தன் புயவலியைஇன்று அறிந்து போயினாயோ- கம்பராமாயணம் 9923ம் பாடல், யுத்த காண்டம், இராவணன் வதைப் படலம்பொருள்: "ஒருகாலத்தில் {உன்னைச் சபித்துத்} தீயில் விழுந்த வேதவதியாக, உலகத்துக்கெல்லாம் ஒப்பற்ற தாயாகிய இவளை {இந்த சீதையைக்} காண்பாயாக" என்று, மலை போல் திண்மையான தோள் கொண்டவனே, நான் கூறினேன். அதை மனத்துள் கொள்ளாமல் போய், உன் குலம் முழுவதும் அழிய, போரில் சினந்து இறந்து, மடிதலைக் கண்டும், உறவாகக் கொள்ளாமல் பகை கொண்டு அழிந்தாயே. இராமரின் தோள் வலிமையை {நான் சொல்லும்போது அறியாமல்} இன்று {சாகும்போது} அறிந்து போனாயோ?
ஸுநீதர்களின் சேது போய்விட்டது {நல்லவர்களின் கரை அழிந்தது}; தர்மத்தின் விக்ரஹம் போய்விட்டது {அறத்தின் வடிவம் அழிந்தது};{6ஆ} வலிமையின் உருவகம் போய்விட்டது; துதிப்பவர்களின் கதியும் போய்விட்டது; ஆதித்யன் பூமியில் விழுந்துவிட்டான்; சந்திரன் இருளில் மூழ்கிவிட்டான்;[2](6ஆ,7அ,ஆ) சித்ரபானு {அக்னி} தன் சுடரை அணைத்துக் கொண்டான்; வியவஸாயம் {முயற்சி} வீண்போனது. சஸ்திரங்கள் {ஆயுதங்கள்} தரித்தவர்களில் சிறந்தவரான இந்த வீரரும் பூமியில் விழுந்து விட்டார்.(8) இரணத்தின் புழுதியில் ராக்ஷச சார்தூலர் {போர்க்களப் புழுதியில் ராக்ஷசர்களில் புலியான ராவணர்} மீளாத் துயில் கொண்டார். வலிமை போன இந்த உலகத்தில் இப்போது என்ன எஞ்சியிருக்கிறது?(9)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் மொழிபெயர்ப்பில் இங்கிருந்தே சுலோக எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது. ஆனால், அந்த மொழிபெயர்ப்புக்கு மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மூலம் எண்ணிக்கையில் மாறவில்லை. அதாவது, மேலே கொடுக்கப்பட்டிருக்கும் சுலோகம் ஒன்றாக இருக்க, பதம் பிரித்த பொருளும், மொழிபெயர்ப்பும் அதற்கடுத்த சுலோகங்களுக்கு உரியவையாக இருக்கின்றன. இந்த வேற்றுமை இந்த சர்க்கத்தின் 24ம் சுலோகம் வரை அங்கே நீடிக்கிறது.
உறுதியைத் தளிர்களாகவும், பொறுமையை புஷ்பங்களாகவும் {மலர்களாகவும்}, தபத்தை பலமாகவும், சௌரியத்தை உறுதியான மூலமாகவும் {வலிமையை உறுதியான வேராகவும்} கொண்ட மஹா ராக்ஷச ராஜ விருக்ஷத்தை {ராக்ஷச மன்னன் என்ற பெரும் மரத்தை} ரணத்தில் ராகவர் எனும் மாருதம் {பெருங்காற்று} முறித்துவிட்டது.(10) தேஜஸ்ஸை தந்தங்களாகவும், குலவம்சத்தை முதுகுத்தண்டாகவும், கோபத்தை முதுகாகவும், அருளைத் துதிக்கையாகவும் கொண்ட ராவணகந்தஹஸ்தியின் {ராவணரெனும் மத யானையின்} தேகம், இக்ஷ்வாகு {ராமர்} எனும் சிங்கத்தால் பற்றப்பட்டுத் தரையில் வீழ்ந்து கிடக்கிறது.(11) பராக்கிரமம், உற்சாகம் ஆகியவற்றை தீப்பிழம்பாகவும், பெருமூச்சை தூமமாகவும் {புகையாகவும்}, சொந்த பலத்தை வெம்மையாகவும் கொண்ட பிரதாபமிக்க ராக்ஷசாக்னி, போர்க்களத்தில் ராமரெனும் மேகத்தால் அணைக்கப்பட்டது.(12) இராக்ஷசர்களை வாலாகவும், திமிலாகவும், கொம்பாகவும், சபலத்தை காதுளாகவும், கண்களாகவும் கொண்டதும், மதங்கொண்ட யானையைப் போன்று செருக்குடன் பகைவரை வெல்வதுமான ராக்ஷசரிஷபம், க்ஷிதீஷ்வர வியாக்ரத்தால் {பூமியின் தலைவரான ராமர் எனும் புலியால்} கொல்லப்பட்டு வீழ்ந்தது" {என்று புலம்பினான் விபீஷணன்}.(13)
இவ்வாறு சோகத்தில் மூழ்கி விண்ணப்பித்துக் கொண்டிருந்த விபீஷணனிடம், நிச்சயமான தீர்மானத்துடன் கூடிய ராமன், ஹேதுவான இந்த வாக்கியத்தைச் சொன்னான்[3]:(14) "இவன் சமரேதும் செய்யாமல் அழியவில்லை. முயற்சியுடன் கூடிய மஹா உற்சாகத்தையும், முழுமையான நம்பிக்கையையும் கொண்ட சண்ட விக்ரமனாகவே {பேராற்றல் வாய்ந்தவனாகவே} இவன் விழுந்தான்.(15) எவன் க்ஷத்திரிய தர்மத்துடன் தன் விருத்திக்காக {வளர்ச்சிக்காக} அச்சமில்லாமல் முயற்சித்துப் போர்க்களத்தில் வீழ்ந்தானோ, அவனது இழப்புக்காக வருந்துதல் கூடாது.(16) யுத்தத்தில் மதிமிக்கவனான எவனால், இந்திரனுடன் கூடிய திரிலோகங்களும் அச்சமடைந்தனவோ, அவனுக்கென விதிக்கப்பட்ட {மரண} காலம், வருந்துவதற்கான காலமில்லை.(17) அதுமட்டுமல்லாமல், யுத்தத்தில் இதற்கு முன்பு ஏகாந்த விஜயம் விளைந்ததில்லை {வெற்றி மட்டுமே விளையும் என்பது கிடையாது}. ஒரு வீரன் போரில் மற்றவரைக் கொல்வான், அல்லது மற்றவரால் கொல்லப்படுவான்.(18) இதுவே க்ஷத்திரியர்களுக்கு சம்மதமான கதியாக {பாதையாகப்} பூர்வர்களால் {முன்னோர்களால்} எடுத்துக்காட்டப்படுகிறது. போரில் கொல்லப்பட்ட ஒரு க்ஷத்திரியன், சோகிக்கத் தகுந்தவனல்லன். இது நிச்சயம்.(19) எனவே, இந்த நிச்சயத்தைக் கண்டு, தத்துவத்தை {உண்மையை} ஏற்றுக் கொண்டு, கவலையில் இருந்து விடுபட்டு, இதற்கடுத்து என்ன காரியம் செய்யத்தகுந்ததோ, அதைக் குறித்துச் சிந்திப்பாயாக" {என்றான் ராமன்}.(20)
[3] தர்மாலயப் பதிப்பில், "ஸ்ரீராமர் நற்பொருள் நிறைந்ததும் காரணங்கள் வாய்ந்ததுமான சொல்லை சொல்லிக் கொண்டிருப்பவரும், சோகம் மேலிட்டவருமான விபீஷணரைப் பார்த்துப் பின்கண்டவாறு உரைத்தார்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அங்ஙனம் சோகாவேசத்தினால் யுக்திகளமைந்த வசனங்களை மொழிந்து கொண்டு பொருளின்னதென்று ஆலோசித்து நிச்சயத்தறிந்தவனாகிய விபீஷணனைப் பார்த்து ராமன் இங்ஙனம் கூறினான்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "இவ்வாறு பொருள் நிறைந்ததும், காரணத்தோடு கூடியதுமான சொற்களைக் கூறி, சோகம் மேலிட்டவனாகப் புலம்பிக் கொண்டிருந்த வீடணனைப் பார்த்து, இராமன் பின்வருமாறு கூறினார்" என்றிருக்கிறது.
விக்ராந்தனான அந்த ராஜபுத்திரன் பொருத்தமாக வாக்கியத்தைச் சொன்ன பிறகு, சோகத்தில் மூழ்கியிருந்த விபீஷணன் தன் பிராதாவுக்கு ஹிதமானதை {தன்னுடன் பிறந்தவனுக்கு அடுத்துச் செய்ய வேண்டிய நன்மையைக் குறித்துப் பின்வருமாறு} சொன்னான்[4]:(21) "எவர் போர்க்களத்தில் ஸுரர்களுடன் கூடிய வாசவனாலும் {இந்திரனாலும்} பூர்வத்தில் பங்கம் அடைந்ததில்லையோ {முறியடிக்கப்பட்டதில்லையோ}, அத்தகையவர் போரில் வேலத்தை {கரையை} அடைந்த சமுத்திரம் எப்படியோ, அப்படியே ரணத்தில் உம்மை அடைந்து பங்கம் அடைந்தார்.(22) இவரால் வனீபகர்களுக்கு {இரவலர்களுக்கு} தத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன {தானமளிக்கப்பட்டிருக்கின்றன}; போகங்கள் அனுபவிக்கப்பட்டிருக்கின்றன; சார்ந்திருந்தவர்கள் ஆதரிக்கப்பட்டிருக்கின்றனர்; மித்ரர்களிடம் தனங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன {நண்பர்களிடம் செல்வங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன}; அமித்ரர்களிடம் வைரங்கள் தீர்க்கப்பட்டிருக்கின்றன {பகைவரிடம் பழிகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன}.(23) இவர் அக்னிக்கு ஹிதம் செய்தவர்; மஹாதபங்களைச் செய்தவர்; வேதாந்தகர் {வேதங்களின் கரைகண்டவர்}; கர்மங்கள் செய்வதிலும் முதன்மையான சூரர்; பிரேத கதியடைந்த இவருக்கான காரியங்களைச் செய்ய உமது அனுமதியைப் பெற விரும்புகிறேன்" {என்றான் விபீஷணன்}.(24)
[4] இந்த சுலோகம் தேசிராஜு ஹனுமந்தராவ்-கேம்எகே மூர்த்தி பதிப்பில் விடுபட்டிருக்கிறது. அது வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வாணி பதிப்பில் இருந்து இங்கே எடுத்தாளப் பட்டிருக்கிறது. அதே போல, இங்கே எண்ணிக்கையில் 25வதாக அமைந்திருக்கும் சுலோகம் வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வாணி பதிப்பில் இல்லை. ஆக தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில் இங்குள்ள 21ம் சுலோகமும், விவி.சுப்பாராவ்-பி.கீர்வாணி பதிப்பில் இங்குள்ள 25ம் சுலோகமும் விடுபட்டுள்ளன. எனவே அவ்விரண்டு பதிப்புகளிலும் 25 சுலோகங்கள் கொண்டதாக இருக்கும் இந்த சர்க்கம், இங்கே 26 சுலோகங்களைக் கொண்டதாக இருக்கிறது.
விபீஷணனின் கருணைக்குரிய அந்த வாக்கியத்தால் நெகிழ்ச்சியடைந்த மஹாத்மாவான அந்த நரேந்திரனும் {மனிதர்களின் தலைவனானராமன்}, சுவர்க்கத்தை அளிக்கும் ஆதானங்களைச் செய்ய {பிரேத காரியங்களைச் செய்யப் பின்வருமாறு} ஆணையிட்டான்:(25) "மரணத்திற்குப் பிறகு வைரங்களால் {பழி உணர்ச்சிகளால்} எந்தப் பிரயோஜனமும் இல்லை. இவன் உனக்கு எப்படியோ, அப்படியே எனக்கும் {உறவினனே}. இவனுக்குரிய சம்ஸ்காரங்கள் {களங்கமகற்றும் மறுமைச் சடங்குகள்} செய்யப்படட்டும்" {என்றான் ராமன்}.(26)
யுத்த காண்டம் சர்க்கம் – 109ல் உள்ள சுலோகங்கள்: 26
Previous | | Sanskrit | | English | | Next |