Thursday, 9 October 2025

மந்தோதரியின் புலம்பலும், இறுதிச் சடங்கும் | யுத்த காண்டம் சர்க்கம் – 111 (128)

Lament of Mandodari and the funeral rite | Yuddha-Kanda-Sarga-111 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணன் இறப்புக்காக அழுது புலம்பிய மந்தோதரி; இராமனின் வேண்டுகோளுக்கிணங்க ராவணனுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்த விபீஷணன்...

The lament of Mandodari

இராக்ஷசயோசிதைகளான {ராக்ஷச மகளிரான} அவர்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்தபோது, பிரியையான ஜேஷ்டபத்னி தீனமாகப் பர்த்தாவை உற்று நோக்கினாள் {ராவணனின் அன்புக்குரிய மூத்த மனைவி மண்டோதரி பரிதாபத்திற்குரியவளாகத் தன் கணவனைப் பார்த்தாள்}.(1) மந்தோதரி, சிந்தனைக்கப்பாற்பட்ட கர்மங்களைச் செய்பவனான ராமனால் கொல்லப்பட்ட தன் பதியான தசக்ரீவனை {பத்துக் கழுத்துகளைக் கொண்ட தன் கணவன் ராவணனைக்} கண்டு, அங்கே கிருபைக்குரிய வகையில் {பின்வருமாறு} பரிதபித்தாள்[1]:(2) "மஹோபாஹோ, வைஷ்ரவணானுஜரே {குபேரனின் தம்பியே}, புரந்தரனும் கூட குரோதம் கொண்ட உமது முன்னால் நிற்க நிச்சயம் அஞ்சுவானே.(3) உமது உத்வேகத்தால் {உம்மிடம் கொண்ட அச்சத்தால்} மஹான்களான ரிஷிகளும், புகழ்பெற்ற கந்தர்வர்களும், சாரணர்களும் திசைகளெங்கும் ஓடினார்களே.(4) 

[1] தரங்க நீர் வேலையில் தடித்து வீழ்ந்தென
உரம் கிளர் மதுகையான் உருவின் உற்றனள்
மரங்களும் மலைகளும் உருக வாய் திறந்து
இரங்கினள் மயன் மகள் இனைய பன்னினாள்

- கம்பராமாயணம் 9938ம் பாடல், யுத்த காண்டம், இராவணன் வதைப் படலம்

பொருள்: அலையெறியும் நீருடைய கடலின் மேல் மின்னல் வீழ்வதைப் போல, மனத் திண்மை வாய்ந்த வலியவனுடைய {ராவணனுடைய} உடலின் மேல் விழுந்தவளாக, மரங்களும், மலைகளும் உருக வாய்திறந்து அழுத மயனின் மகள் {மண்டோதரி} இத்தகையற்றைக் கூறினாள்.

நீர் மானுஷன் மாத்ரமேயான ராமனால் யுத்தத்தில் வீழ்த்தப்பட்டீர். இராஜரே, ராக்ஷச ரிஷபரே, இதற்கு நீர் வெட்கப்படாததேன்?(5)  மூவுலகங்களையும் ஆக்கிரமித்து, செழிப்புடனும், பொறுத்தற்கரிய வீரியத்துடனும் விளங்கிய உம்மை வனகோசரனான மானுஷன் {வனத்தில் திரியும் சாதாரண மனிதன்} கொன்றது எப்படி?(6) மானுஷர்களுக்கு அப்பாற்பட்டு {அணுகமுடியா இடத்தில்} காமரூபியாக {விரும்பிய வடிவை ஏற்கும் வல்லமையுடன்} திரிந்து வந்த உமக்கு, போரில் ராமனால் விநாசம் {அழிவு} என்பது பொருந்தவில்லையே.(7) எப்போதும் முழுமையான ஆயத்தத்துடன் இருக்கும் உம்மை, சம்மு முகத்தில் {போர்முனையில்} தாக்கும் இத்தகைய கர்மம் {செயல்} ராமனுடையது என்ற நம்பிக்கை எனக்கில்லை.(8) 

ஜனஸ்தானத்தில் பல ராக்ஷசர்களால் சூழப்பட்டவனான உமது பிராதா {உம்முடன் பிறந்த} கரன் எப்போது கொல்லப்பட்டானோ, அப்போதே இவன் மானுஷனல்லன் {என்று தெரிந்தது}.(9) ஸுரர்களும் பிரவேசிக்க முடியாத லங்காம்நகரீக்குள், ஹனுமான் வீரியத்துடன் எப்போது பிரவேசித்தானோ, அப்போதே நாங்கள் வேதனையடைந்தோம்.(10) கோர வானரர்களால் மஹார்ணவத்தில் {பெருங்கடலில்} எப்போது சேது கட்டப்பட்டதோ, அப்போதே ராமன் அமானுஷன் {மனிதனல்ல} என்று என் ஹிருதயத்தில் சந்தேகித்தேன்.(11) அல்லது கிருதாந்தனே {யமனே / விதியே} உமது விநாசத்திற்காக {அழிவுக்காக}, நினைத்தற்கரிய மாயையை உண்டாக்கி ராமனின் ரூபத்தில் ஸ்வயமாக {தாமே} வந்திருக்கலாம்.(12) அல்லது, மஹாபலவானே, வாசவனால் {இந்திரனால்} நீர் தாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் போரில் உம்மைக் காணவும் வாசவனிடம் சக்தி உண்டா என்ன?(13)

தெளிவாகத் தெரிகிறது. இவன் மஹாயோகி; பரமாத்மா {சுயத்தின் உயர்நிலை}, சநாதனன் {என்றும் நிலைத்திருப்பவன்}; ஆதியும், மத்தியும், அந்தமும் இல்லாத மஹத்தானவன்; பரம மஹான்.{14} இருளுக்கு அப்பாற்பட்டவனும்; தாதாவும் {அனைத்தையும் தாங்கி நிலைநிறுத்துபவனும்}; சங்கு, சக்கர, கதை தரித்தவனும், மார்பில் ஸ்ரீவத்சம் கொண்டவனும், நித்யஸ்ரீயும் {என்றும் செழிப்பானவனும்}, அஜயனும் {வெல்வதற்கரியவனும்}, சாஷ்வதனும் {என்றும் இருப்பவனும்}, துருவனும் {நிலையானவனும்},{15} சத்தியபராக்கிரமனுமான விஷ்ணு, வானரத்வத்தை {வானர வாழ்வை} ஏற்றுக் கொண்ட சர்வ தேவர்கள் சூழ, மானுஷ ரூபம் எடுத்து வந்திருக்கிறான்.{16} உலகங்களுக்கு ஹிதம் செய்ய விருப்பத்துடன் கூடிய ஸ்ரீமான் ஸர்வலோகேஷ்வரன், பேரொளியுடன் கூடிய உம்மையும், ராக்ஷசபரிவாரத்தையும் கொன்றுவிட்டான்.(14-17)

பூர்வத்தில் இந்திரியங்களை வென்ற உம்மால் திரிபுவனங்களும் வெல்லப்பட்டன. அந்த வைரத்தை {பகையை} நினைவில் வைத்திருந்த அதே இந்திரியங்களாலேயே நீர் வீழ்ந்திருக்கிறீர்.(18) ஜனஸ்தானத்தில் பல ராக்ஷசர்களால் சூழப்பட்டவனான உமது பிராதா {உம்முடன் பிறந்த} கரன் எப்போது கொல்லப்பட்டானோ, அப்போதே இவன் மானுஷனல்லன் {என்று தெரிந்தது}.(19) ஸுரர்களும் பிரவேசிக்க முடியாத லங்காம்நகரீக்குள், ஹனுமான் வீரியத்துடன் எப்போது பிரவேசித்தானோ, அப்போதே நாங்கள் வேதனையடைந்தோம்[2].(20)

[2] 9, 10ம் சுலோகங்களாக வந்த அதே சுலோகங்கள் மீண்டும் இங்கே 19, 20ம் சுலோகங்களாக வருகின்றன.

இராகவனிடம் அவிரோதம் கொள்ளப்படட்டும் {எந்த விரோதமும் கொள்ள வேண்டாம்} என்று நான் சொன்னதை நீர் ஏற்றுக் கொள்ளாததால் இந்த வியுஷ்டி {விளைவு} வந்தது.(21) இராக்ஷசபுங்கவரே, ஐஷ்வர்யத்திற்கும், தேஹத்திற்கும், சொந்த ஜனத்திற்குமான விநாசத்திற்காகவே {அழிவிற்காகவே} திடீரென சீதையிடம் ஆசை கொண்டீர்.(22) துர்மதியுடன் கூடியவரே, அருந்ததி, ரோஹிணி ஆகியோரைக் காட்டிலும் சிறப்பாக மதிக்கப்பட வேண்டிய சீதையை செருக்கால் {சிறையில் வைத்து} அவமதித்து  தகாததைச் செய்தீர்.(23)

வசுதைக்கே வசுதையும் {அனைவரையும் தாங்கும் பூமியைவிட தாங்கும் சக்தி கொண்டவளும்}, ஸ்ரீக்கே ஸ்ரீயும் {செல்வத்திற்கே செழிப்பைக் கொடுப்பவளும்}, பர்த்ருவத்சலையும் {கணவனிடம் அன்பு கொண்டவளும்}, அனைத்து அங்கங்களிலும் களங்கமற்றவளும், சுபமானவளுமான அந்த சீதையை ஜனங்களற்ற அரண்யத்திலிருந்து{24} கபடமாகக் கொண்டு வந்து, தனக்கும் தன் சொந்தங்களுக்கும் {தன் சொந்த மனைவிமாருக்கும்} கேடு விளைவித்துக் கொண்டு, மைதிலியுடனான சங்கமத்திற்கான அந்த காமமும் நிறைவேறாமல்,{25} என் பிரபோ, பதிவிரதையின் தபத்தாலேயே நிச்சயம் நீர் எரிக்கப்பட்டீர்.(24-26அ)

அக்னியை முன்னிட்ட இந்திரனுடன் கூடிய தேவர்களும் உம்மிடம் அச்சம் கொண்டவர்கள். அதனாலேயே, நீர் அந்த நுண்ணிடையாளை {சீதையைக்} கவர்ந்த போதே உம்மை எரிக்கவில்லை.(26ஆ,27அ) பாப கர்மத்தின் கோர பலனை அதன் கர்த்தா {அந்த பாபத்தைச் செய்தவன்} உரிய காலம் வரும்போது அவசியம் பெறுவான். இதில் சந்தேகமில்லை.(27ஆ,இ) சுபச்செயல் செய்தவனுக்கு சுபம் கிடைக்கும், பாபச் செயல் செய்தவனுக்கு பாபமே கிடைக்கும். விபீஷணருக்கு சுகம் வாய்த்திருக்கிறது. உமக்கு இத்தகைய பாபமே வாய்த்திருக்கிறது.(28) உமக்கு அவளைவிட ரூபத்தில் மிகச் சிறந்த வேறு பிரமதைகள் {மகளிர்} இருக்கின்றனர். எனினும் அனங்கனின் {காமதேவனின்} வசத்திலிருந்த நீர், அதை மோகத்தால் புத்தியில் கொள்ளவில்லை[3].(29) 

[3] தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில் உள்ள இந்த 28, 29ம் சுலோகங்கள் வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வாணி பதிப்பில் இல்லை. செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில் இந்த சர்க்கத்திலுள்ள பல சுலோகங்கள் இடம்பெறவில்லை. மற்ற பதிப்புகள் அனைத்திலும் இவை இரண்டும் இருக்கின்றன. 

குலம், ரூபம், தாக்ஷிண்யம் {இரக்கக் கண்ணோட்டம்} ஆகியவற்றில் மைதிலி எனக்குத் துல்லியமானவளோ {சமமானவளோ}, மேம்பட்டவளோவல்ல. மோகத்தால் இதை நீர் புத்தியில் கொள்ளவில்லை.(30) சர்வபூதங்களுக்கும் {உயிரினங்கள் அனைத்திற்கும்} எப்போதும் அலக்ஷண மிருத்யு {காரணமில்லாத மரணம்} ஏற்படுவதில்லை. உமக்கு இந்த மைதிலியே லக்ஷணமாக {காரணமாக} விளைந்தாள்.(31) சீதையின் நிமித்தம் பிறந்த மிருத்யு வெகுதூரத்தில் இருந்த உம்மால் கொண்டுவரப்பட்டது. சோகத்தில் இருந்து விடுபட்ட மைதிலி, ராமனுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பாள்.(32) அல்ப புண்ணியம் கொண்ட நானோ, கோரமான சோக சாகரத்தில் மூழ்கிவிட்டேன். கைலாசம், மந்தரம், மேரு, அதேபோல சைத்ரரத வனம்,{33} தேவ உத்யானங்கள் {தேவர்களின் தோட்டங்கள்} எங்கும் உம்முடன் சேர்ந்து இன்புற்றிருந்தேன். ஒப்பற்ற செல்வத்திற்கு ஏற்ற விமானத்தில் ஏறி,{34} வண்ணமயமான அழகிய மாலைகளும், ஆடைகளும் சூடிக் கொண்டு விதவிதமான தேசங்களை பார்த்துக் கொண்டே ஆங்காங்கே சென்று வந்தேன். அத்தகைய நான், வீரரே, உமது மரணத்தால் காமபோகங்களில் இருந்து விலக்கப்பட்டேன்.(33-35) 

அத்தகைய நான் வேறொருத்தியாகிவிட்டேன். இராஜர்களின் நிலையற்ற செல்வங்களுக்கு ஐயோ. ஹா, ராஜரே, மென்மையானதும், அழகிய புருவங்களையும்,  பளபளக்கும் தோலையும், உயர்ந்த நாசியையும் கொண்டதும்,{36} இந்து {சந்திரன்}, பத்ம {தாமரை}, திவாகர {சூரியனின்} காந்திக்குத் துல்லியமாக ஒளிர்வதும், கூடத்துக்கு {சிகரத்திற்கு} ஒப்பான கிரீடத்துடன் விளங்குவதும், தாமிரம்போன்ற உதடுகளைக் கொண்டதும், ஒளிரும் குண்டலங்களைக் கொண்டதும்,{37} பானபூமிகளில் மதத்தால் {மது பருகும் இடங்களில் வெறியால்} கலங்கி, உருளும் கண்களைக் கொண்டதும், விதவிதமான மாலைகளைச் சூடியதும், அழகிய புன்சிரிப்புடன் இனிமையாகப் பேசுவதும், சுபமானதுமான{38} அத்தகைய இந்த உமது முகம், பிரபோ, இதோ ராமனின் சாயகங்களால் பிளக்கப்பட்டு, உதிரம் வழிந்து,{39} தசையும், கொழுப்பும் சிதறி, சியந்தனங்களின் புழுதியால் மாசடைந்து ஒளிராதிருக்கிறது.(36-40அ) 

ஹா, எதை மந்தையான {மூடப்பெண்ணான} நான் ஒருபோதும் உணரவில்லையோ, அந்த வைதவ்யத்தைக் கொடுக்கும் பஷ்சிம தசை {விதவைத் தன்மையைக் கொடுக்கும் இறுதிக் காலம்} எனக்கு வாய்த்திருக்கிறது.(40ஆ,41அ) "என் பிதா {தந்தை மயாசுரர்} தானவராஜா, என் பர்த்தா {கணவர் ராவணன்} ராக்ஷசேஷ்வரர், என் புத்திரன் சக்ரனை {மகன் இந்திரஜித் இந்திரனை} வென்றவன்" என்று நான் கர்வித்திருந்தேன்.(41ஆ,42அ) "என் நாதர்கள் செருக்குடன் கூடிய பகைவரை அழிக்கவல்லவர்கள்; பலத்திற்கும், பௌருஷத்திற்கும் {ஆண்மைக்கும்} புகழ்பெற்ற சூரர்கள். அவர்களுக்கு எங்கிருந்தும் பயம் சித்திக்காது {ஆபத்து நேராது}" என்ற திடமான மதி {உறுதியான எண்ணம்} எனக்கு இருந்தது.(42ஆ,43அ) இராக்ஷசரிஷபரே, அத்தகைய நீரும், இத்தகைய பிரபாவமிக்கவர்களும் இருக்கையில், சம்பந்தமில்லாத இந்த பயம் {ஆபத்து} மானுஷனிடம் இருந்து எப்படி வந்தது?(43ஆ,44அ)

கொழுத்த இந்திர நீலத்தைப் போன்றதும், ஓர் உயரமான சைலத்திற்கு ஒப்பானதும், மஹத்தானதும்,{44ஆ} கேயூரங்களாலும், அங்கதங்களாலும், வைடூரிய, முத்து ஹாரங்களாலும் ஒளிர்வதும், விளையாட்டுகளில் அதிக காந்தத்துடன் {கவர்ச்சியுடன்} விளங்குவதும், சங்கிராமபூமிகளில் {போர்க்களங்களில்} ஒளிர்வதும்,{45} மின்னல்கீற்றுகளுடன் கூடிய மேகத்தைப் போல ஆபரணங்களுடன் கூடிய அத்தகைய உமது சரீரம், கூரிய பல சரங்களால் துளைக்கப்பட்டிருக்கிறது.{46} முள் நிறைந்த முள்ளம்பன்றியைப் போல இடைவெளியின்றி பதிந்திருக்கும் பாணங்களால் உம்மை ஸ்பரிசிப்பதற்கும், தழுவுவதற்கும் சாத்தியப்படவில்லை.{47} மர்மங்களில் கணைகளால் சிதைக்கப்பட்ட தசைகள், ராஜரே, பிணைப்புகள் அறுபட்டு, உதிரத்தால் கறுத்து தரையில் விழுகின்றன.{48} வஜ்ரத்தால் தாக்கப்பட்ட பர்வதம் போல் சிதறுண்டு கிடக்கிறீர்.(44ஆ-49அ) ஹா, இது ஸ்வப்னமா {கனவா}? சத்தியமா {நிஜமா}? இராமனால் நீர் எப்படிக் கொல்லப்பட்டீர்? மிருத்யுவுக்கே மிருத்யுவாக இருந்தீரே. எப்படி நீர் மிருத்யு வசம் அடைந்தீர்?(49ஆ,50அ) 

The lament of Mandodari

மூன்று உலகங்களின் வசுவை {செல்வத்தைப்} பெரிதும் அனுபவித்தவரும், திரிலோகங்களுக்கும் மஹத்தான உத்வேகத்தை {பதற்றத்தை} அளித்தவரும்,{50ஆ} லோகபாலர்களை வென்றவரும், சங்கரனையே தூக்கியவரும்,(50ஆ,51அ) செருக்குற்றவர்களைக் கட்டுப்படுத்தியவரும், பராக்கிரமத்தை வெளிப்படுத்தியவரும்,{51ஆ} உலகத்தை உலுக்கியவரும், பூதங்களைத் தன் நாதத்தால் ராவணஞ்செய்ய வைத்தவரும் {உயிரினங்களைக் கதற வைத்தவரும்},(51ஆ,52அ) ஓஜஸ்ஸால் செருக்குற்ற வாக்கியங்களைப் பேசுபவரும்,{52ஆ} தன் யூதபத்தையும் {கூட்டத்தையும்}, பணியாட்களையும் பாதுகாப்பவரும், பீமகர்மங்களைச் செய்பவர்களைக் கொல்பவரும்,(52ஆ,53அ) ஆயிரக்கணக்கான தானவேந்திரர்களையும், யக்ஷர்களையும் கொன்றவரும்,{53ஆ} போர்களில் நிவாதகவசர்களை அடக்கியவரும்,(53ஆ,54அ) பல யஜ்ஞங்களை {வேள்விகளை} அழித்தவரும், தன் ஜனங்களை மீட்பவரும்,{54ஆ} தர்ம வியவஸ்தைகளை {அறநெறிகளை வரம்புகளை} அறுத்தவரும், போரில் மாயைகளை உருவாக்குபவரும்,(54ஆ,55அ) தேவ, அசுர, நர கன்னிகைகளை ஆங்காங்கே இருந்து அபகரித்து வந்தவரும்,{55ஆ} சத்ருக்களின் ஸ்திரீகளுக்கு சோகத்தை அளிப்பவரும், தன் ஜனங்களுக்குத் தலைவராக இருப்பவரும்,(55ஆ,56அ) இலங்கா த்வீபத்தைப் பாதுகாப்பவரும், பீமகர்மங்களை {பயங்கரச் செயல்களைச்} செய்பவரும்,{56ஆ} எங்களுக்குக் காம போகங்களை அளித்தவரும், ரதிகர்களில் {தேர்வீரர்களில்} சிறந்தவருமான,(56ஆ,57அ) இத்தகைய பிரபாவம் கொண்ட பர்த்தா {கணவர் ராவணர்}, ராமனால் வீழ்த்தப்பட்டதைக் கண்டும்,{57ஆ} ஹதப்ரியையான {கொல்லப்பட்டவரின் காதலியான} நான் இன்னும் இந்த தேஹத்தைத் தரித்துக் கொண்டு ஸ்திரமாக இருக்கிறேன்.(57ஆ,58அ)

இராக்ஷசேஷ்வரரே, விலையுயர்ந்த சயனங்களில் சயனித்துவிட்டு, ஏன் தரணியில் பிறந்த புழுதியில் மறைந்து இங்கே உறங்குகிறீர்?(58ஆ,59அ) எப்போது உம் தனயன் {மகன்} யுத்தத்தில் லக்ஷ்மணனால் கொல்லப்பட்டானோ, அப்போதே {துக்கத்தால்} தீவிரமாகத் தாக்கப்பட்டேன். இன்று நான் விழுந்துவிட்டேன்.(59ஆ,60அ) பந்துஜனங்களை இழந்து, நாதரான உம்மையும் இழந்து, காமபோகங்களை இழந்த அத்தகைய நான் இன்னும் பல ஆண்டுகள் துன்புறுவேன்.(60ஆ,61அ) இராஜரே, கடப்பதற்கரிய நீண்ட பாதையைக் கடந்த நீர் துக்கத்தில் உழலும் என்னையும் அழைத்துச் செல்வீராக. நீர் இல்லாமல் நான் பிழைத்திருக்கமாட்டேன்.(61ஆ,62அ) கிருபைக்குரியவளான என்னை இங்கே விட்டுச் செல்ல நீர் விரும்புவது ஏன்? புலம்பி தீனமடையும் {சோர்வடையும்} மந்தையான {மூடப் பெண்ணான} என்னிடம் ஏன் பேசாதிருக்கிறீர்?(62ஆ,63அ) 

பிரபோ, இவ்வாறு திரை விலகியவளாக {முக்காடிடாமல்}, நகர துவாரத்தில் வெளிப்பட்டு, பாத நடையாக இங்கே வெளிப்பட்டிருக்கும் என்னைக் கண்டு நீர் குரோதமடையவில்லையா?(63ஆ,64அ) இஷ்டதாரரே {மனைவியரிடம் அன்புமிக்கவரே}, லஜ்ஜை இழந்து, திரை விலகி {முக்காடிடாமல்} வெளிப்பட்டிருக்கும் உமது சர்வ தாரங்களையும் பார்ப்பீராக.(64ஆ,65அ) இதைக் கண்டும் கோபமடையாதது ஏன்? உம்முடன் கிரீடையில் சஹாயர்களாக {விளையாட்டில் உதவியாக} இருந்த இந்த ஜனங்கள் {உமது மனைவியரான இவர்கள்}, அநாதைகளாக அழுது கொண்டிருக்கின்றனர். நீர் இவர்களை ஆசுவாசப்படுத்தாமல், வெகுமதிக்காமல் இருப்பதேன்?(65ஆ,66அ) 

இராஜரே, அனேக குலஸ்திரீகள் உம்மால் விதவையாக்கப் பட்டனர்.{66ஆ} பதிவிரதைகளும், தர்மரதர்களும் {தர்மத்தை விரும்புகிறவர்களும்}, பெரியோருக்குத் தொண்டாற்றுவதை விரும்புகிறவர்களும், சோகத்தால் பரிதபிக்கிறவர்களுமான அவர்களின் சாபத்தால் நீர் பிறர் {பகைவரின்} வசத்தை அடைந்தீர்.{67} அப்போது உம்மால் தீங்கிழைக்கப்பட்டவர்களின் அந்த சாபமே இப்போது வந்திருக்கிறது.(66ஆ-68அ) நிருபரே {மன்னரே}, "பதிவிரதைகளின் கண்ணீர் அகஸ்மாத்தாக {வீணாக} பூதலத்தில் விழுவதில்லை" என்ற உம்மைப் பற்றிய இந்தப் பிரவாதம் கிட்டத்தட்ட சத்யமே {இந்த வதந்தி கிட்டத்தட்ட உண்மேயே}.(68ஆ,69அ) 

இராஜரே, தேஜஸ்ஸால் லோகங்களை ஆக்கிரமித்து, வீரியச் செருக்குற்றிருந்த உம்மால் இந்த இழிந்த நாரீசௌர்யம் {பெண்களைக் களவாடும் இந்த இழிசெயல்} எப்படிச் செய்யப்பட்டது?(69ஆ,70அ) மிருகம் {மான்} என்ற கபடத்தில் ஆசிரமத்திலிருந்து ராமனைக் கவர்ந்திழுத்து, ஆசிரமத்திலிருந்த அந்த ராமபத்தினி உம்மால் கொண்டுவரப்பட்டது உமது காதர்ய லக்ஷணமானது {அச்சப்படுந்தன்மைக்கு அடையாளமானது}.(70ஆ,71அ) யுத்தத்தில் உமது காதர்யம் {அச்சத்தன்மை} ஒருபோதும் என் நினைவில் இல்லை. எனினும் பாக்கியம் தலைகீழாக மாறியதால் அது உமது பக்குவத்தின் லக்ஷணமானது.(71ஆ,72அ) 

நிகழ்ந்ததையும், நிகழப்போவதையும் அறிந்தவரும், நிகழ்வதை அறிவதில் திறன்வாய்ந்தவரும்,{72ஆ} சத்தியவானும், மஹாபாஹுவுமான என் தேவரர் {மைத்துனர்}, மைதிலி கொண்டுவரப்பட்டதைக் கண்டு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டபடியே தியானித்து எதைக் கூறினாரோ,{73} "இந்த ராக்ஷச முக்கியர்களுக்கு விநாசம் {அழிவு} விளையப் போகிறது" என்ற அந்தக் காமக்ரோதத்தினால் விளையும் விசனம், அவர் சொன்னதுபோலவே நடந்தது.(72ஆ-74) மூலத்தை {வேரையே} அறுக்கும் அத்தகைய இந்த மஹா அனர்த்தம் உம் நிமித்தமாகவே நிகழ்ந்தது. இந்த சர்வ ராக்ஷசகுலமும் உம்மால் நாதனற்றதாகச் செய்யப்பட்டது.(75) 

பிரசித்தி பெற்ற பலத்தையும், பௌருஷத்தையும் {ஆண்மையையும்} கொண்ட நீர், என்னால் துக்கிக்கப்பட வேண்டியவரல்லர். ஆனால் ஸ்திரீ ஸ்வபாவத்தால் என் புத்தி காருண்யத்தில் {இரக்கத்தில்} தடுமாறுகிறது.(76) நற்செயலையும், தீச்செயலையும் {புண்ணியத்தையும், பாபத்தையும்} எடுத்துக் கொண்டு உமது சொந்த கதியை அடைந்துவிட்டீர். உமது விநாசத்தால் அழிவால் துயருற்றிருக்கும் நான் என்னைக் குறித்து துக்கிக்கிறேன்.(77) தசானனரே {பத்து முகங்களைக் கொண்டவரே}, ஹிதம் விரும்பிய நண்பர்களின் வசனமும், உமது பிராதாக்கள் {உம்முடன் பிறந்தவர்கள்} சொன்ன ஹிதமும் உம்மால் முற்றாகக் கேட்கப்படவில்லை.(78) அர்த்தம் பொதிந்து, முறை தவறாமால், விதிக்கு பொருந்தி, நன்மையை விளைவிக்கும் வகையில் விபீஷணர் சொன்னதை நீர் செயல்படுத்தவில்லை.(79) மாரீசரும், கும்பகர்ணரும் சொன்னதும், அதேபோல என் பிதாவின் வாக்கியமும் வீரியமத்தரான {வீரத்தில் செருக்குற்றிருந்த} உம்மால் கேட்கப்படவில்லை. அதன் பலனாக இத்தகையது ஏற்பட்டிருக்கிறது.(80)

நீல மேகத்திற்கு ஒப்பானவரே, பீதாம்பரமும் {மஞ்சள் பட்டாடையும்}, சுப அங்கதங்களும் அணிந்தவரே, உதிரத்தில் மூழ்கி காத்திரங்களைப் பரப்பி  ஏன் கிடக்கிறீர்?(81) துக்கத்தில் இருக்கும் எனக்கு உறங்குபவரைப் போல ஏன் மறுமொழி கூறாதிருக்கிறீர்? போரில் பின்வாங்காதவரும், மஹாவீரியரும், திறமைமிக்கவருமான யாதுதானரின் தௌஹித்திரியான எனக்கு {ஸுமாலியின் பேத்தியான இந்த மந்தோதரிக்கு} ஏன் மறுமொழி கூறாதிருக்கிறீர்?(82,83அ) எழுவீராக. எழுவீராக. புதிய அவமானத்தை அடைந்தும் ஏன் படுத்துக்கிடக்கிறீர்? இன்று சூரியக் கதிர்கள், நிர்பயமாக {பயமின்றி} லங்கைக்குள் பிரவேசித்தன.(83ஆ,84அ) சூரிய ஒளியுடன் கூடிய எதைக் கொண்டு சமரில் சத்ருக்களைக் கொன்றீரோ,{84ஆ} வஜ்ரதரனின் {இந்திரனின்} வஜ்ரத்தைப் போன்றதும், சதா உம்மால் அர்சிக்கப்பட்டதும், சமரில் ஏராளமானோரைத் தாக்கியதும், ஹேமஜாலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான{85} அந்தப் பரிகம், பாணங்களால் ஆயிரந்துண்டுகளாகப் பிளக்கப்பட்டு சிதறிக் கிடக்கிறது.(84ஆ-86அ) பிரியையை {காதலியைப்} போல ரணமேதினியைத் தழுவிக் கொண்டு ஏன் கிடக்கிறீர்? அபிரியையைப் போல என்னிடம் ஏன் மறுமொழி கூற விரும்பாதிருக்கிறீர்?(86ஆ,87அ) நீர் பஞ்சத்வத்தை {மரணத்தை} அடைந்ததில் சோகத்தால் பீடிக்கப்பட்டும் எத்தகையவளான என்னுடைய இந்த ஹிருதயம் ஆயிரந்துண்டுகளாகப் பிளக்காதிருக்கிறதோ, அத்தகைய எனக்கு ஐயோ" {என்று புலம்பினாள் மண்டோதரி}.(87ஆ,88அ)

அவள், கண்ணீர் நிறைந்த கண்களுடனும், சினேகம் நிறைந்த ஹிருதயத்துடனும் இவ்வாறு அழுது புலம்பியபோது மோஹத்தை அடைந்தாள் {மயக்கமடைந்தாள்}.(88ஆ,89அ). இராவணனின் மார்பில் நனவின்றி திகைத்து விழுந்தவள், சந்தியையால் சிவந்த மேகத்தில் ஒளிரும் மின்னலைப் போல ஒளிர்ந்தாள்.(89ஆ,90அ) பெருந்துயரத்தில் வீழ்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த சகபத்தினிகள் உரக்க அழுது அந்த கதியை அடைந்தவளை தூக்கி நிலைநிறுத்தி,(90ஆ,91அ) "தேவி, ராஜாக்களின் செழிப்பு நிலையற்றது என்பதையும், {பால்யம், கௌமாரம், யௌவனம், வார்த்தகம், மரணம் முதலிய} தசா பாகங்களின் மாற்றத்தில் உலகங்களின் நிலை நிச்சயமற்றது என்பதையும் நீ அறியமாட்டாயா?" {என்றனர்}.(91ஆ,92அ) இவ்வாறு சொல்லப்பட்டபோது, நிர்மலமான தன் முகத்தையும், ஸ்தனங்களையும் கண்ணீரால் நீராட்டியவள் சப்தமிட்டு அழுதாள்.(92ஆ,93அ)

இதற்கிடையில் ராமன், விபீஷணனிடம், "பிராதாவின் சம்ஸ்காரங்கள் {உன்னுடன் பிறந்தோனான ராவணனின் இறுதிச் சடங்குகள்} செய்யப்படட்டும். ஸ்திரீ கணங்களைத் தடுத்து நிறுத்துவாயாக" என்று சொன்னான்.(93ஆ,94அ)

அப்போது, மதிமிக்கவனும், தர்மஜ்ஞனுமான {தர்மத்தை அறிந்தவனுமான} விபீஷணன், புத்தியால் சிந்தித்து, தர்ம, அர்த்தத்திற்கு இணக்கமானதும், ஹிதமானதுமான இந்தச் சொற்களைச் சொன்னான்:(94ஆ,95அ) "தர்ம விரதங்களைக் கைவிட்டவரும், குரூரரும், நிருசம்சரும் {நரர்களைக் கொன்றவரும்}, பொய்யரும், அதே போல பரதாரங்களை {பிறன் மனைவியரைத்} தீண்டியவருமான இவருக்கான சம்ஸ்காரம் {புனிதப்படுத்தும் இறுதிச் சடங்குகளைச்} செய்ய நான் தகுந்தவனல்லன்.(95ஆ,96அ) குரு கௌரவத்துடன் {பெரியோருக்கான மதிப்புடன்} பூஜிக்கப்படத்தகுந்தவர் என்றாலும் பிராதாவின் ரூபத்தில் இருந்த என் சத்ருவும், சர்வாஹிதரதருமான {அனைவருக்கும் தீமை செய்ய விரும்பியவருமான} இந்த ராவணர் பூஜிக்கப்படத்தகாதவரே.(96ஆ,97அ) இராமரே, "நிருசம்சமன் {மனிதர்களைக் கொல்பவன்}" என்று புவியில் என்னைக் குறித்து மானுஜர்கள் பேசுவார்கள். ஆனால், இவரது குணங்களைக் கேட்கும் அனைவரும் இதை நற்செயல் என்றே சொல்வார்கள்" {என்றான் விபீஷணன்}.(97ஆ,98அ)

தர்மத்தைத் தாங்குபவர்களில் சிறந்தவனும், வாக்கிய கோவிதனுமான {வாக்கியத்தை அமைப்பதில் திறன்பெற்றவனுமான} ராமன் இதைக் கேட்டுப் பரம பிரீதியடைந்து, வாக்கியஜ்ஞனான {வாக்கியங்களை அறிந்தவனான} விபீஷணனிடம் இதைச் சொன்னான்:(98ஆ,99அ) "இராக்ஷசேஷ்வரா, என்னாலும் உனக்குப் பிரிய காரியம் செய்யப்பட வேண்டும். உன் பிரபாவத்தால் நான் வென்றேன். அவசியம் என்னால் தகுந்த ஆலோசனை சொல்லப்பட வேண்டும்.(99ஆ,100அ) இந்த நிசாசரன் {இரவுலாவியான ராவணன்}, அதர்மனும், பொய்யனுமாக இருந்தாலும் தேஜஸ்வியாகவும், பலவானாகவும், போர்களில் நித்திய சூரனாகவும் இருந்தான்.(100ஆ,101அ) பலம் நிறைந்தவனும், லோகராவணனுமான {உலகத்தைக் கதறச் செய்தவனுமான} மஹாத்மா ராவணன், சதக்ரதுவை முன்னிட்ட வீரர்களால் வீழ்த்தப்பட்டதாகக் கேட்கப்படவில்லை.(101ஆ,102அ) வைரங்கள் {பகைகள்} மரணத்தை அந்தமாகக் கொண்டவை. நமக்கான பிரயோஜனம் நிறைவேறியது. இவனும் என்னையும், உன்னையும் போன்றவனே. இவனுக்கு சம்ஸ்காரம் செய்யப்படட்டும்.(102ஆ,103அ) விதிப் பூர்வகமான தர்மத்தால் சாக்ஷாத் உன்னிடம் இருந்து சம்ஸ்காரம் பெறுவதற்கு தசக்ரீவன் தகுந்தவனே. நீ புகழுக்குத் தகுந்தவனாவாய்" {என்றான் ராமன்}.(103ஆ,104அ)

இராகவனின் சொற்களைக் கேட்ட விபீஷணன், கொல்லப்பட்ட தன் பிராதா ராவணனுக்கான சம்ஸ்கார காரியங்களைத் துரிதமாக ஆரம்பித்தான்.(104ஆ,105அ) இராக்ஷசேந்திரனான அந்த விபீஷணன் லங்காம்புரீக்குள் பிரவேசித்து, ராவணனுக்கான அக்னி ஹோத்ரத்தை விரைவாக நிறைவேற்றினான்.(105ஆ,106அ) சிறந்த ரூபங்களிலான சகடங்களில் {வண்டிகளில், ராவணனால் பராமரிக்கப்பட்ட} அக்னி, அதே போல யாஜகர்கள் {புரோகிதர்கள்},{106ஆ} அதே போல சந்தனக் கட்டைகள், விதவிதமான விறகுகள், சுகந்தமான அகருக்கள் {அகில்}, சந்தனம், அதே போல இனிய நறுமணமிக்க பொருள்கள்,{107} மணி, முத்து, பவளங்கள் ஆகியவற்றை ராக்ஷசன் அனுப்பி வைத்தான்.(106ஆ-108அ) 

அவன் {விபீஷணன்}, ஒரு முஹூர்த்தத்திற்குப் பிறகு ராக்ஷசர்கள் சூழ, {தன் தாய் வழி பாட்டன்} மால்யவதனுடன் {மால்யவானுடன்} திரும்பி வந்து கிரியையை {இறுதிச் சடங்கைத்} தொடங்கினான்.(108ஆ,109அ) பட்டுத்துணியால் போர்த்தப்பட்டதும், சௌவர்ணத்தாலானதும் {தங்கத்தாலானதும்}, திவ்யமானதுமான சிவிகையில் அவனை {ராவணனை} ஏற்றி,{109ஆ} கண்ணீர் நிறைந்த முகங்களுடன் சர்வ த்விஜர்களும் சேர்ந்து, விதவிதமான தூர்யகோஷங்களுடன் ராக்ஷசாதிபதி ராவணனின் புகழைப் போற்றி,{110} சித்திர பதாகைகளுடனும் {கொடிகளுடனும்}, அழகிய சித்திரங்களுடனும் கூடிய அந்த சிவிகையில் நீர் தெளித்து, விபீஷணனை முன்னிட்டுக் கொண்டு,{111} கட்டைகளை {விறகுகளை} எடுத்துக் கொண்டு, அனைவரும் தெற்கு நோக்கிய முகங்களுடன் சென்றனர்.(109ஆ-112அ) 

பிறகு அத்வர்யுக்கள் நெருப்பை உண்டாக்கினர். அந்த அக்னி ஒளிரத் தொடங்கியதும், அதை மண்பானையில் இட்டு, அவனுக்கு {ராவணனின் சடலத்துக்கு} முன்னால் சென்றனர்.(112ஆ,113அ) அந்தப்புரத்தைச் சேர்ந்த {பெண்கள்} அனைவரும் அழுது கொண்டே, அனைத்துப் பக்கங்களிலும் தடுமாறியபடியே வேகமாக ஓடி {அவர்களைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(113ஆ,114அ) முன்சென்றவர்கள், ராவணனை புனிதப்படுத்தப்பட்ட ஒரு தேசத்தில் {இடத்தில்} வைத்தனர்.{114ஆ} துக்கத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டவனும் {விபீஷணனும்}, பிறரும், பத்மகம், கோஷிரங்களால் {நறுமண திரவியங்களால்} நனைக்கப்பட்டதும், விலாமிச்சை வேர்களால் பரப்பப்பெற்றதும், கருப்பு மான் தோலால் மறைக்கப்பட்டதும், சந்தனக்கட்டைகளால் ஆனதுமான ஒரு சிதையை உண்டாக்கினர்.{115} ராஜனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வேத ஹிதமான பஷ்சிமக்ரதுவை {வேத சடங்குகளின்படி பிரேத காரியங்களை / இறுதிச் சடங்குகளைச்} செய்யத் தொடங்கினர்[4].(114ஆ-116அ) 

[4] 106ஆ முதல் 114ஆ சுலோகங்கள் வரையுள்ள செய்தி தமிழ்ப்பதிப்புகளில் இடம்பெறவில்லை.

இராக்ஷசேஷ்வரனுக்கு {ராவணனுக்கு} உத்தமமான பித்ருமேதத்தைச் செய்தனர். தென்கிழக்கில் வேதியை அமைத்து, உரிய ஸ்தானத்தில் பாவகனை {நெருப்பை} வைத்தனர்.(116ஆ,117அ) தயிருடன் கலந்த நெய்யை சம்பூர்ணமாகக் கரண்டிகளில் எடுத்து அவனது ஸ்கந்தத்தில் {தோள்பட்டைகளில்} ஊற்றி, பாதங்களில் சகடத்தையும் {வண்டியையும்} தொடைகளில் உலூகத்தையும் {மரத்தாலான உரலையும்} வைத்தனர்.(117ஆ,118அ) மரப் பாத்திரங்கள் அனைத்தையும், அரணியையும், உத்தர அரணியையும், முஸலத்தையும் {உலக்கையையும்} அதனதன் ஸ்தானங்களுக்குரிய இடங்களில் சுற்றிலும் வைத்தனர்.(118ஆ,119அ) 

Funeral rites for Ravana இராவணனுக்கான ஈமச் சடங்குகள்

மஹரிஷிகள் விதித்த சாஸ்திரங்களில் கண்டபடி அங்கே மேத்யபசுவை {வேள்விக்குகந்த விலங்கான ஆட்டைக்} கொன்ற ராக்ஷசர்கள், நெய்யால் நனைக்கப்பட்ட அதன் தோலை ராக்ஷசேந்திர ராஜன் {ராவணன்} மீது போர்த்தினர்.(119ஆ,120அ,ஆ) தீனமான மனத்தைக் கொண்ட அவர்கள், ராவணனுக்கு கந்தங்களிட்டு, மாலைகள் சூடி,{121} விதவிதமான வஸ்திரங்களால் அலங்கரித்தனர். விபீஷணனை சகாயனாகக் கொண்டு, கண்ணீர் நிறைந்த முகங்களுடன் பொரிகளை அவன் மீது தூவினர்.(121,122)

அந்த விபீஷணன், அவனுக்கு விதிப்படி பாவகனை தத்தம் செய்தான் {ராவணனுக்கு விதிப்படி அக்னியைக் கொடுத்தான் / ராவணனின் சிதைக்கு நெருப்பு மூட்டினான்}. பிறகு, ஸ்நானம் செய்துவிட்டு {நீராடி}, ஈர வஸ்திரத்துடன், எள்ளை, தர்பையுடன் {அருகம்புல்லுடன்} கலந்து,{123}, நீருடனும் கலந்து அவனுக்குக் கொடுத்து, விதிப் பூர்வகமாக உதகக்கிரியையை {நீர்க்கடனைச்} செய்துவிட்டு, அவனைத் தலைவணங்கி நமஸ்கரித்துவிட்டு,{124} {அங்கே நின்றிருந்த} அந்த ஸ்திரீகளிடம், "நாம் போகலாம்" என்று மீண்டும் மீண்டும் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினான். அவர்கள் யாவரும் நகரத்துக்குச் சென்றனர்.(123-125) 

சர்வ ராக்ஷசிகளும் {நகருக்குள்} உள்ளே பிரவேசித்த பிறகு, விபீஷணன், ராமனின் அருகில் திரும்பி வந்து பணிந்து நின்றான்.(126) விருத்திரனை {அழித்த} வஜ்ரதரன் {இந்திரன்} போல, ரிபுவை {பகைவனைக்} கொன்ற ராமனும், சுக்ரீவனுடனும், லக்ஷ்மணனுடனும், சைனியத்துடனும் சேர்ந்து மகிழ்ச்சியடைந்தான்.(127) பிறகு, பகைவரைக் கொல்பவனான ராமன், சரங்களுடன் கூடிய சராசனத்தையும் {கணைகளுடன் கூடிய வில்லையும்}, மஹேந்திரனால் தத்தம் செய்யப்பட்ட மஹத்தான அந்தக் கவசத்தையும் களைந்துவிட்டு, ரிபுவின் நிக்ரகத்தால் ரோஷத்தை {பகைவன் அழிந்ததால் கோபத்தைக்} கைவிட்டு சௌமியத்வத்தை அடைந்தான் {மென்மையால் உண்டாகும் அமைதியை அடைந்தான்}.(128)

யுத்த காண்டம் சர்க்கம் – 111ல் உள்ள சுலோகங்கள்: 128

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை