The return of the chariot | Yuddha-Kanda-Sarga-104 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சாரதியைக் கண்டித்த ராவணன்; இராவணனை நிறைவடையச் செய்து மீண்டும் போர்க்களத்திற்குத் தேரைச் செலுத்திய சாரதி...
கிருதாந்த பலத்தால் {வினைப்பயனின் / விதியின் சக்தியால் தூண்டப்பட்ட} அந்த ராவணன், குரோதத்தால் நயனங்கள் {கண்கள்} சிவந்து, மோஹத்தால் சூதனிடம் {அறியாமையால் தேரோட்டியிடம் பின்வருமாறு} கூறினான்:(1) "பௌருஷமற்று {ஆண்மையற்று}, சக்தியற்று, வீரியம் குறைந்து, தேஜஸ்ஸை இழந்து, பயந்த லகுவானவனை {எளிமையானவனைப்} போலவும்,{2} மாயை கைக்கூடாமல், அஸ்திரங்களுக்கு விலக்கானவனைப் போலவும் என்னைப் புறக்கணித்துவிட்டு, துர்புத்தியைக் கொண்டவனே, உன் சொந்த புத்திக்கிணங்க நீ செயல்படுகிறாய்.(2,3) என் விருப்பத்தைப் புறக்கணித்து, சத்ருக்களின் முன் என்னை அவமதித்து, என்னுடைய இந்த ரதத்தை என்ன அர்த்தத்திற்காக அப்புறம் கொண்டு வந்தாய்?(4) அநாரியா {இழிந்தவனே}, நீண்ட காலமாக நான் ஈட்டிய புகழ், தேஜஸ் {வலிமை}, நம்பிக்கை ஆகியவை இதோ உன்னால் அழிக்கப்பட்டன.(5)
சிறப்புமிக்க வீரியத்துடன் கூடிய சத்ரு, தன் விக்ரமத்தால் பிறர் விரும்பத்தக்கவனாக இருக்கையில், யுத்த லுப்தனான நான், உன்னால் காபுருஷனாக்கப்பட்டேன் {போரில் பேராவல் கொண்டவனான நான், உன்னால் கோழையாக்கப்பட்டேன்}.(6) துர்மதியைக் கொண்டவனே, எத்தகைய மோஹத்தால் நீ இந்த ரதத்தைச் செலுத்தாமல் இருக்கிறாயோ, அத்தகையவனான நீ பகைவனால் ஏற்பாடு செய்யப்பட்டவன் என்ற என் எதிர்வாதம் சத்தியமானது.(7) உன்னால் எது அனுஷ்டிக்கப்படுகிறதோ, அது ரிபுக்களுக்கு {பகைவருக்குத்} தகுந்தது. என் ஹிதத்தை விரும்பும் {நலத்தை நாடும்} நண்பனின் கர்மம் இதுவல்ல.(8) நீ என்னுடன் வெகு காலமாக இருப்பதும், {வெகுமதி கொடுத்த} என் குணங்களும் உன் நினைவில் இருந்தால், என் ரிபு {பகைவன்} திரும்பிச் செல்வதற்கு முன், சீக்கிரமாக ரதத்தைத் திருப்பிச் செலுத்துவாயாக" {என்றான் ராவணன்}.(9)
இவ்வாறு புத்தியற்றவனால் கடுமையாகச் சொல்லப்பட்டதும், ஹித புத்தி கொண்டவனான சூதன், ராவணனிடம் {பின்வரும்} நயமிக்க சொற்களை நட்புடன் கூறினான்:(10) "நான் பீதியடைந்தவனல்ல. நான் மூடனல்ல. நான் சத்ருக்களால் வெல்லப்பட்டவனல்ல. நான் பிரமத்தனோ {அலட்சியம் செய்பவனோ / பைத்தியக்காரனோ}, சினேகமற்றவனோ, உமது சத்கிரியைகளை {செய்த நன்மைகளையோ} மறந்தவனோவல்ல.(11) ஹிதத்தை {நன்மையை} விரும்புகிறவனும், புகழைப் பாதுகாக்கிறவனும், சினேகம் நிறைந்த மனம் கொண்டவனுமான என்னால், ஹிதத்திற்காகவே {உமது நன்மைக்காகவே உமக்குப்} பிரியமற்றது செய்யப்பட்டது.(12) மஹாராஜாவே, ஏதோவொரு லகுவான அனாரியனைப் போல, உமது பிரியத்தையும், நன்மையையும் விரும்பும் என்னிடம் இந்த அர்த்தத்தில் தோஷங்காண்பது உமக்குத் தகாது.(13) நீர்ப்பெருக்கால் {மேட்டை அடைந்து திரும்பும்} நதி வேகத்தைப் போலப் போரில் இருந்து எதன் நிமித்தம் ரதம் திருப்பிக் கொண்டுவரப்பட்டது என்பதற்கான என் மறுமொழியைக் கேட்பீராக.(14)
மஹத்தான ரணகர்மத்தில் உமது சிரமத்தை {பெரும் போர் செய்ததில் நீர் சோர்ந்திருப்பதை} நான் புரிந்து கொண்டேன். சூரரே, உமது முகத்தில் வீரியத்தையும் {உற்சாகத்தையும்}, தெளிவையும் நான் காணவில்லை.(15) என் ரதத்தின் வாஜிகள் {குதிரைகள்}, ரதத்தை இழுப்பதில் வருத்தமுற்று பங்கமடைந்தன. வெப்பத்தால் சோர்வடைந்து, மழையால் பீடிக்கப்பட்ட பசுக்களைப் போல, தீனமடைந்து முற்றிலும் களைத்தன.(16)
நமக்குத் தோன்றும் ஏராளமான நிமித்தங்களை ஆராய்ந்ததில், ஒவ்வொன்றிலும் அபிரதக்ஷிணத்தையே {மங்கலமின்மையையே} கவனிக்கிறேன்.(17) தேச, காலங்களும் {தகுந்த இடமும், காலமும்}, லக்ஷணங்களும் {சகுனங்களும்}, இங்கிதங்களும் {தெளிவு, கலக்கம் உள்ளிட்ட அறிகுறிகளும்}, இன்பதுன்பங்களும், ரதிகரின் {தேர்வீரரின்} களைப்பும், பலாபலமும் {சாரதியால்} புரிந்து கொள்ளப்பட வேண்டும்.(18) பூமியின் ஸ்தலநிம்னங்களும் {மேடுபள்ளங்களும்}, சமம், சமமில்லாத இடங்களும், யுத்தத்திற்குத் தகுந்த காலங்களும், மாற்றானின் அந்தரதர்சனமும் {பகைவனுடைய உள் பலவீனமும், சாரதியால்} புரிந்து கொள்ளப்பட வேண்டும்.(19) உபயான, அபயானங்களும் {அணுகுதலும், பின்வாங்குதலும் / கிட்டுவதும், எட்டுவதும்}, ஸ்தானத்தில் இருத்தலும், விலகுதலும், ரதத்தை நிறுத்தலும், செலுத்தலும் என இவை யாவும் ரதஸ்தனால் {தேரோட்டியால்} அறியப்பட வேண்டும்.(20)
நீர் சிரமத்தில் இருந்து விடுபடுவதற்கு ஹேதுவாகவும், அதேபோல, இந்த ரதவாஜிகளின் ரௌத்திரமான களைப்பைப் போக்கவும், என்னால் இந்த க்ஷமம் {பொறுக்கத்தகுந்த / மன்னிக்கத்தகுந்த செயல்} செய்யப்பட்டது.(21) வீரரே, பிரபோ, இந்த ரதம் ஸ்வேச்சையாக {தன்னிச்சையாக} என்னால் ஓட்டிவரப்படவில்லை. என்னால் எது செய்யப்பட்டதோ, அது தலைவர் மீது கொண்ட சினேகத்தால் செய்யப்பட்டது.(22) அரிசூதனரே {பகைவரை அழிப்பவரே}, வீரரே, ஆணையிடுவீராக. எப்படி நீர் சொல்கிறீரோ, அப்படியே கடமையுணர்வுமிக்க உள்ளத்துடன் நான் செயல்படுவேன்" {என்றான் சாரதி}.(23)
அந்த சாரதியின் அந்த வாக்கியத்தால் மகிழ்ச்சியடைந்த ராவணன், {அவனைப்} பலவாறு புகழ்ந்து, யுத்தலுப்தத்துடன் {போரில் பேராவலுடன்} இதைக் கூறினான்:(24) "சூதா, இந்த ரதத்தை சீக்கிரம் ராகவனை நோக்கிச் செலுத்துவாயாக. இராவணன், சமரில் சத்ருவை வதைக்காமல் திரும்ப மாட்டான்" {என்றான் ராவணன்}.(25)
இராக்ஷசேஷ்வரனான ராவணன் இதைச் சொல்லிவிட்டு மகிழ்ச்சியடைந்தான். அவனுக்கு சுபமான, உத்தமமான ஹஸ்தாபரணத்தை {அழகிற்சிறந்த கைவளையைக்} கொடுத்தான்.{26} அந்த சாரதி, ராவணனின் வாக்கியத்தைக் கேட்டுத் திரும்பினான்.(26,27அ) அந்த சாரதி, ராவணனின் வாக்கியத்தால் தூண்டப்பட்டபோது, ஹயங்களை {குதிரைகளைத்} தூண்டி விரைந்து செலுத்தினான். பிறகு, ராக்ஷசேந்திரனுக்குரிய அந்த மஹாரதம், ஒரு க்ஷணத்தில் ராமனுடைய ரதத்தின் முன் நின்றது.(27ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 104ல் உள்ள சுலோகங்கள்: 27
Previous | | Sanskrit | | English | | Next |