Monday, 28 July 2025

உத்திஷ்ட நரசார்தூலா | யுத்த காண்டம் சர்க்கம் - 083 (44)

Arise, O Tiger among men | Yuddha-Kanda-Sarga-083 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதை கொல்லப்பட்டாள் என்ற செய்தியை ஹனுமான் சொல்லக் கேட்டு மயக்கமடைந்த ராமன்; இந்திரஜித்துடன் போரிட ஆயத்தமான லக்ஷ்மணன்...

Rama faints as Hanuman say Sita is killed

இராக்ஷச வனௌகசர்களுக்கு இடையிலான அந்தப் பெரும்போரின் ஆரவாரத்தைக் கேட்ட ராகவன், ஜாம்பவந்தனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(1) "சௌம்யா, எப்படி மகத்தான, பயங்கரமான ஆயுத ஸ்வனம் கேட்கிறதோ அத்தகைய அடைதற்கரிய கர்மத்தை ஹனுமதன் செய்து கொண்டிருக்கிறான். இது நிச்சயம்.(2) எனவே, ரிக்ஷபதே {கரடிகளின் தலைவா}, உன் பலத்துடன் {படையுடன்} சீக்கிரம் சென்று, யுத்தத்தில் ஈடுபட்டுவரும் அந்த கபிசிரேஷ்டனுக்கு சஹாயம் {உதவி} செய்வாயாக" {என்றான் ராமன்}.(3)

இவ்வாறு சொல்லப்பட்ட ரிக்ஷபதி {கரடிகளின் தலைவனான ஜாம்பவான்}, தன் அனீகத்தால் {படையால்} சூழப்பட்டவனாக, எங்கே வானரன் ஹனூமான் இருந்தானோ அந்த பஷ்சிம துவாரத்தை {மேற்கு வாயிலை} அடைந்தான்.(4) அப்போது ரிக்ஷபதி, போரிட்டுப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு வானரர்கள் சூழ வந்து கொண்டிருக்கும் ஹனூமந்தனைக் கண்டான்.(5) ஹனூமானும், நீல மேகத்திற்கு ஒப்பான அந்த பயங்கர ரிக்ஷபலம் {கரடிப் படை} பாதையில் தயாராக வருவதைக் கண்டு, தடுத்துத் திரும்பச் செய்தான்.(6)

பெரும் புகழ் படைத்தவனான அவன் {ஹனுமான்}, அந்த சைனியத்துடன் சீக்கிரமாக ராமனின் முன்னிலையை அடைந்து, துக்கத்துடன் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(7) "இராவணாத்மஜனான இந்திரஜித், சமரில் யுத்தம் செய்து கொண்டிருக்கும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எங்கள் முன்னிலையிலேயே அழுது கொண்டிருந்த சீதையைக் கொன்றான்.(8) அரிந்தமரே, அவளைக் கண்டு விசனமடைந்த நான் சித்தம் கலங்கியவனானேன். நடந்ததை உம்மிடம் தெரிவிக்கவே நான் வந்தேன்" {என்றான் ஹனுமான்}[1].(9)

[1] வீழ்ந்தவன்தன்னை வீரன் 
விளைந்தது விளம்புக என்னா
தாழ்ந்து இரு தடக்கை பற்றி
எடுக்கவும் தரிக்கிலாதான்
ஆழ்ந்து எழு துன்பத்தாளை
அரக்கன் இன்று அயில் கொள்வாளால்
போழ்ந்தனன் என்னக் கூறி
புரண்டனன் பொருமுகின்றான்

- கம்பராமாயணம் 8894ம் பாடல், யுத்த காண்டம், மாயா சீதைப் படலம்

பொருள்: தன் முன் விழுந்தவனை {ஹனுமானை}, "நடந்ததைக் கூறுவாயாக" என்றவாறு, குனிந்து அவனுடைய பெரிய கைகளைப் பற்றித் தூக்கவும், தூக்கப்பட முடியாதவனாக {ஹனுமான்}, "ஆழ்ந்து பதிந்து எழுகின்ற துன்பத்துடன் கூடியவளை {சீதையை} அரக்கன் {இந்திரஜித்}, இன்று கூர்மையான வாளால் பிளந்துவிட்டான்" என்று கூறி புரண்டு விம்மி அழுதான்.

இராகவன், அவனது அந்த வசனத்தைக் கேட்டு, சோகத்தில் மூர்ச்சித்து, மூலம்  வெட்டப்பட்ட {வேரறுக்கப்பட்ட} மரத்தைப் போல அப்போது பூமியில் விழுந்தான்.(10) தேவனுக்கு ஒப்பான அந்த ராமன் பூமியில் விழுந்ததைக் கண்ட கபிசத்தமர்கள் {குரங்குகளில் சிறந்தவர்கள்} எங்குமிருந்து தாவி அவனிடம் வந்தனர்.(11) உடனே உதித்து அணுகுதற்கரிய வகையில் எரியும் அக்னியைப் போன்ற அவன்[2] மீது, பத்மம், உத்பலம் {தாமரை, நெய்தல்} ஆகியவற்றின் கந்தத்துடன் கூடிய நீரைத் தெளித்தனர்[3].(12)

[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "சீதைக்கான துயரால் எரியும் நெருப்பாக இருந்தான் ராமன் என்பது உரையாசிரியரின் விளக்கம்" என்றிருக்கிறது.

[3] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பத்³மோத்பலஸுக³ந்தி⁴பி⁴꞉ - தாமரை மற்றும் குவளை மலர்களைக் கொண்டு நறுமணமூட்டப்பட்ட நீர்" என்றிருக்கிறது.

அப்போது, துக்கத்துடன் கூடிய லக்ஷ்மணன், நலமிழந்த அந்த ராமனை அணைத்துப் பிடித்தவாறே, நலம்பயக்கும் அர்த்தம் பொதிந்த {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(13) "ஆரியரே, நல்வழியில் நிலைப்பவரும், இந்திரியங்களை வென்றவருமான உம்மை அனர்த்தங்களில் {தீமைகளில்} இருந்து காக்க முடியாத தர்மம் நிரர்த்தகமானது {அர்த்தமற்றது / பயனற்றது}[4].(14) எப்படி தாவரங்களும், ஜங்கமங்களும், பூதங்களும் {அசையாதனவும், அசைவனவும், உயிரினங்களும்} புலப்பட்டு இருக்கின்றனவோ, அப்படி இல்லாததால், தர்மம் இல்லாத ஒன்றாகும் என்பது என் மதி {எண்ணம்}.(15) எப்படி தாவரங்களும், ஜங்கமங்களும் வெளிப்படுகின்றனவோ, அந்த விதத்தில் இதன் {தர்மத்தின்} அர்த்தம் பொருந்துவதில்லை. {அப்படி இருந்தால்} உம் விதமானவர்கள் கலக்கமடைய மாட்டார்கள்.(16) 

[4] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "செல்வமின்மை என்பது வெளிப்படையாக அறத்தின் மற்றொரு பெயராக இருந்தாலும், அஃது உண்மையில் இந்த வாக்கியத்தின் முன்னறிவிப்பாக இருக்கிறது. அதாவது, "உன்னை விடுவிக்க இயலாத தர்மம், அர்த்தமற்றது" என்ற பொருளைக் கொண்டதாகும்" என்றிருக்கிறது.

அதர்மத்தால் ராவணன் நரகத்தை அடைந்திருக்க வேண்டும். தர்ம சம்யுக்தரான நீர் இத்தகைய விசனத்தை அடைந்திருக்கக்கூடாது.(17) அவனுக்கு விசனம் ஏற்படவில்லை. உமக்கே விசனம் ஏற்பட்டிருக்கிறது. தர்மத்தின் பலனை அதர்மமும், அதர்மத்திற்குரியதை தர்மமும் தந்திருக்கின்றன.(18) தர்மத்தின் பலனால் தர்மத்தையும், அதர்மத்தின் பலனால் அதர்மத்தையும் அடையலாம். இப்படியிருக்கையில், எவரிடம் அதர்மம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறதோ {குடிகொண்டிருக்கிறதோ}, அவர்கள் தர்மத்தை அடையவே மாட்டார்கள் {தீய பலனையே பெறுவர்}.{19} தர்ம ருசியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜனங்கள், அதர்மத்தை அடையாமல் தர்மத்தையும் {நன்மையையும்}, அதர்ம ருசியில் பிரதிஷ்டை செய்யப்பட்டோர் அதர்மத்தையும் {தீமையையும்} அடைவர். எவர் தர்மத்தை ஒழுகுவாரோ, அவர்கள் தம் தர்மத்தால் தர்ம பலனையே {நன்மையையே} அடைவர்.(19,20) 

எனவே, எவரின் அர்த்தம் அதர்மத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறதோ, அவர்கள் வளர்வது, தர்மசீலர்கள் {அறமொழுகுபவர்கள்} துன்புறுவது என்ற இவ்விரண்டும் நிரர்த்தகமானவை {பயனற்றவையாகும்}.(21) இராகவரே, பாப கர்மம் செய்பவர்கள் அதர்மத்தால் வதைக்கப்பட்டால், வத கர்ம ஹதம் செய்யப்பட்ட அந்த அதர்மம் ஹதம் அடைகிறது {அந்த அதர்மம், கொலைச் செயலின் வினை அழிந்ததால் அழிவடைகிறது}. {ஆனால்} அழிந்தது யார்?(22) விதிக்கப்பட்டபடி தானே கொல்லப்பட்டாலோ, மற்றொருவனைக் கொன்றாலோ, அந்த விதிதான் கர்மத்தின்படியான பாப கர்மத்தால் களங்கமடைகிறதேயன்றி, கர்த்தா {வினை செய்தவன் களங்கமடைவது} இல்லை.(23) அரிவிகர்ஷனரே {பகைவரை அழிப்பவரே}, பிரதிகாரம் {எதிர்வினையான வினைப்பயன்} புலப்படவில்லை எனும்போது, நன்மை, தீமையைப் புரிந்து கொள்வது எப்படி? தர்மத்தால் பரம பிராப்தம் அடைவது {சிறந்த பயனை அடைவது} எப்படி சாத்தியம்?(24) 

நல்லோரில் முக்கியரே, சத் {நன்மை} உண்மையில் இருக்கிறதென்றால், எந்த அசத்தும் {தீமையும்} உமக்கு நேர்வது பொருத்தமானதல்ல. எதனால் இந்தத் தீமையை நீர் அடைந்தீரோ, அதனாலேயே சத் {நன்மை} இல்லை என்றாகிறது[5].(25) தர்மம், பலத்திற்கு அடிபணிந்து கோழைத்தனத்துடன் துர்பலமடைந்தால் {பலவீனமடைந்தால்}, மரியாதை இல்லாத துர்பலத்தை சேவிக்க வேண்டியதில்லை என்பது என் மதி {எண்ணம்}.(26) தர்மம், பலத்தின் குணபூதமாக {தர்மம், பலத்திற்கு அடிபணிந்து} இருந்தால், தர்ம பராக்கிரமத்தை {தர்மத்தின் ஆதிக்கத்தைக்} கைவிடுவீராக. எப்படி தர்மத்தையோ {எப்படி அறம் சார்ந்திருக்கிறீரோ} அப்படியே பலத்தை சார்ந்திருப்பீராக.(27) அல்லது, பரந்தபரே {பகைவரை அழிப்பவரே}, சத்திய வசனம்தான் {உண்மை பேசுவதே} தர்மமென்றால், அநிருதரும் {சொல்தவறியவரும்}, கருணையற்றவருமான பிதாவுக்கு {நம் தந்தை தசரதருக்கு} நீர் ஏன் கட்டுப்பட்டீர்?[6](28)

[5] தேசிராஜு ஹனுமந்தராவ்-கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமன் வேதனைப்படுவதைக் கண்ட துக்கத்தில் லக்ஷ்மணன் இத்தகைய பொருத்தமற்ற சொற்களைச் சொல்வது அன்பினால் அவனுக்குள் எழுந்த போராட்டத்தைக் காட்டுகிறது. துக்கம் தணிந்த பின்னர், சுலோகம் 44ல் ராமனின் துக்கத்தைத் தணித்து, அவனைச் செயல்படத் தூண்டவே இவ்வாறு பேசியதாக லக்ஷ்மணனே கூறுகிறான்" என்றிருக்கிறது.  ஆனால் அப்படிச் சொல்வதாகத் தெரியவில்லை.

[6] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "உரையாசிரியர், "மன்னன் தசரதன், உம்மை ராஜ்ஜியத்தில் நிறுவுகிறேன் என்ற தன் சொல்லில் இருந்து தவறியதால் அவர் தன் உயிரை இழந்தார். நீரும் அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்தானே?"என்று விளக்குகிறார்" என்றிருக்கிறது.

பரந்தபரே, தர்மமோ, அதர்மமோ பின்பற்றத்தகுந்தவையாக இருந்தால், வஜ்ரியான சதக்ரது {வஜ்ராயுதம் தரித்தவனும், நூறு வேள்விகளைச் செய்தவனுமான இந்திரன்}, முனியை {திரிசிர முனிவனைக்} கொன்றுவிட்டு, யஜ்ஞத்தையும் செய்திருக்க மாட்டான்[7].(29) இராகவரே, தர்மம் அதர்மத்தை ஆசரித்தால் அழிவைத் தருகிறது. காகுத்ஸ்தரே, நரன், தனக்கு எவை விருப்பமோ, அவை அனைத்தையும் செய்கிறான்.(30) இத்தகைய இந்த தர்மமே என்னுடைய தீர்மானம். தாதா {ஐயா / அண்ணா}, இராகவரே, எப்போது ராஜ்ஜியத்தைத் துறந்தீரோ, அப்போதே தர்மத்தின் மூலம் {ஆணிவேர்} உம்மால் வெட்டப்பட்டது.(31) பர்வதங்களில் இருந்து பாயும் ஆபகங்களை {ஆறுகளைப்} போல, எங்கிருந்தோ, எப்படியோ திரட்டிக் குவிக்கப்படும் அர்த்தத்தாலேயே சர்வ கிரியைகளும் {செல்வத்தாலேயே காரியங்கள் அனைத்தும்} நிறைவேறுகின்றன.(32)

[7] நரசிம்மாசாரியர் பதிப்பில், "பரந்தபனே! தர்மமும் அதர்மமும் வாஸ்தவமாக உள்ளவையேயாயினும் தர்மத்தையே அனுஷ்டிக்க வேண்டுமென்றாவது, அதர்மத்தையே அனுஷ்டிக்க வேண்டுமென்றாவது நியதியில்லை. அவ்வப்பொழுதைக்குத் தகுந்தபடி இரண்டையும் அனுஷ்டிக்கலாகும். எப்படியென்னில், கேவலம் தர்மத்தையே அனுஷ்டிக்க வேண்டுமென்று ஏற்படுமாயின், அப்பொழுது வஜ்ரந்தரித்த சதக்ரதுவான (நூறு யாகங்கள் செய்த} இந்த்ரன், விஷ்வரூபனென்னும் முனிவனைக் கொன்று, யாகஞ்செய்யத்தகாது; கொல்லாமலே யாகத்தை மாத்ரமே செய்திருப்பான். கேவலம் அதர்மத்தையே அனுஷ்டிக்கக்கூடுமாயின் அப்பொழுது நூறு யாகங்கள் செய்த இந்த்ரன் வஜ்ரந்தரித்து முனிவனைக் கொன்று யாகஞ்செய்ய வேண்டியதில்லை. முனிவனைக் கொல்வது மாத்ரமே செய்திருக்க வேண்டும். இங்ஙனம் க்ஷத்ரிய தர்மத்தில் நிலைநின்ற இந்த்ரன் தர்ம அதர்மங்களிரண்டையும் அனுஷ்டிக்கையால், அரசன் காலத்திற்குத் தகுந்தபடி இரண்டையும் செய்ய வேண்டுமென்று ஏற்படுகின்றது" என்றிருக்கிறது. திரிசிரனே இங்கே விஷ்வரூபனாகச் சொல்லப்படுகிறான். மஹாபாரதத்தில், உத்யோக பர்வம் 9ம் அத்தியாயத்தில் இந்தக் கதையை சல்லியன் யுதிஷ்டிரனுக்குச் சொல்கிறான். https://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section9.html மேலும், "இது ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டம், ஒன்பதாம் அத்தியாயத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது" என்று தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அற்ப புத்தி கொண்டவனும், அர்த்தம் {செல்வம்} தொலைந்தவனுமான புருஷனின் சர்வ கிரியைகளும் {காரியங்கள் அனைத்தும்}, கோடை காலத்தின் சிற்றாறுகளைப் போல {நிறைவேறாமல்} நின்றுவிடும்.(33) சுகத்தில் வளர்ந்த இத்தகையவன், அர்த்தத்தை {செல்வத்தைக்} கைவிட்டு, காமத்தை {இன்பத்தை} நாடும்போது, பாபச் செயல்களைச் செய்ய ஆரம்பிக்கிறான். பிறகு, தோஷம் {தீமை} விளையும்.(34) எவன் அர்த்தமுடையவனோ {செல்வம் கொண்டவனோ}, அவனுக்கே மித்ரர்கள் {நண்பர்கள்} இருப்பார்கள். எவன் அர்த்தமுடையவனோ {செல்வம் கொண்டவனோ}, அவனுக்கே பந்துக்களும் {உறவினர்கள்} இருப்பார்கள். எவன் அர்த்தமுடையவனோ, அவனே சிறந்த மனிதன்; எவன் அர்த்தமுடையவனோ, அவனே பண்டிதன்.(35) எவன் அர்த்தமுடையவனோ, அவனே விக்ராந்தன் {வெற்றியாளன்}; எவன் அர்த்தமுடையவனோ, அவனே புத்திமான்; எவன் அர்த்தமுடையவனோ, அவனே பெரும் நற்பேறுபெற்றவன்; எவன் அர்த்தமுடையவனோ {செல்வம் கொண்டவனோ}, அவனே மஹாகுணவான்.(36)

தீரரே, எந்த புத்தியை அமைத்துக் கொண்டு {எந்தத் தீர்மானத்தை அடைந்து} ராஜ்ஜியத்தை நீர் கைவிட்டீர்? அர்த்தத்தை {ராஜ்ஜியம் எனும் அந்தச் செல்வத்தைக்} கைவிடுவதாலேயே இந்த தோஷங்கள் {தீமைகள்} விளைகின்றன என்று நான் சொல்கிறேன்.(37) எவன் அர்த்தமுடையவனோ {செல்வம் கொண்டவனோ}, அவனே தர்மம், காமம், அர்த்தம் {அறம், இன்பம், பொருள்} ஆகியவற்றை அடைவான். சர்வமும் பிரதக்ஷிணமாகும் {அவனையே அனைத்தும் வலம் வரும் / அனைத்தும் அனுகூலமாகும்}. தனமில்லாதவன், அர்த்தத்தை விரும்பித் தேடினாலும், அர்த்தம் சாத்தியமாகாது.(38) நராதிபரே {மனிதர்களின் தலைவரே}, மகிழ்ச்சி, காமம் {இன்பம்}, தர்பம் {செருக்கு}, தர்மம், குரோதம், ஷமம் {அமைதி}, தமம் {புலனடக்கம்} இவை அனைத்தும் அர்த்தத்திலிருந்தே {செல்வத்தில் இருந்தே} விளைகின்றன.(39) தர்மசாரிகள், எவற்றை இந்த லோகத்தில் இழப்பார்களோ, அந்த அர்த்தங்கள், துர்தின கிரஹங்களைப் போல {மேகங்கள் நிறைந்த நாட்களில் கோள்கள் தென்படாததைப் போல} உம்மில் தென்படவில்லை.(40)

வீரரே, குரு வசனத்திற்கு {தந்தையின் சொல்லுக்குக்} கீழ்ப்படிந்து, நீர் நாடு கடந்து வந்தீர். பிராணன்களைக் காட்டிலும் பிரியத்திற்குரிய உமது பாரியை ராக்ஷசனால் {உமது மனைவியான சீதை ராக்ஷசன் ராவணனால்} அபகரிக்கப்பட்டாள்.(41) வீரரே, இந்திரஜித்தால் உண்டான அந்தப் பெரும் துக்கத்தை, இதோ என் கர்மங்களால் {செயல்களால்} அகற்றப் போகிறேன். எனவே, ராகவரே, எழுவீராக.(42) நரசார்தூலரே {மனிதர்களில் புலியே}, எழுவீராக. தீர்க்கபாஹுவே {நெடுந்தோள்களைக் கொண்டவரே}, திட விரதரே,  மஹாத்மா என்றும், கிருதாத்மா {செயல்களை நிறைவேற்றுபவர்} என்றும் ஏன் உம்மை உணராமல் இருக்கிறீர்?(43) அநகரே {பாவமற்றவரே}, ஜனகனின் மகளுடைய {சீதையின்} அழிவைக் கண்டு கோபமடைந்திருக்கும் நான், உமது பிரிய அர்த்தத்திற்காக, ராக்ஷசேந்திரனுடனும், ரத, கஜ, ஹயங்களுடனும் கூடிய {தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றுடன் கூடிய} லங்கையை என் கணைகளால் முற்றாக அழிக்கப் போகிறேன்" {என்றான் லக்ஷ்மணன்}.(44) 

யுத்த காண்டம் சர்க்கம் – 083ல் உள்ள சுலோகங்கள்: 44

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை