Makaraksha killed | Yuddha-Kanda-Sarga-079 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மகராக்ஷனின் கணைகளால் அச்சமடைந்த வானரர்கள்; மகராக்ஷனின் தேரை நொறுக்கி, குதிரைகளைக் கொன்று, அவனையும் கொன்ற ராமன்...
மகராக்ஷன் வருவதைக் கண்ட அந்த சர்வ வானரபுங்கவர்களும் {வானரர்களில் முதன்மையானோர் அனைவரும்}, யுத்த ஆவலுடன் தாவிச் சென்று, தங்கள் நிலைகளை அடைந்து ஆயத்தமாக இருந்தனர்.(1) அப்போது, தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் {நடந்ததைப்} போல, ரோமஹர்ஷணத்தை {மயிர்ச்சிலிர்ப்பை} ஏற்படுத்தும் வகையில், பிலவங்கமர்களுக்கும், நிசாசரர்களுக்கும் {தாவிச் செல்பவர்களான வானரர்களுக்கும், இரவுலாவிகளான ராக்ஷசர்களுக்கும்} இடையில் மஹத்தான யுத்தம் நேர்ந்தது.(2) பிறகு, கபிநிசாசரர்கள் {குரங்குகளும், இரவுலாவிகளும்} விருக்ஷங்கள், சூலங்களை ஏவியும், கதைகள், பரிகங்களை ஏவியும் அன்யோன்யம் {ஒருவரையொருவர்} துன்புறுத்தினர்.(3) அந்த நிசாசரர்கள், சக்தி, கட்கம் {வேல், வாள்}, கதை, குந்தம், தோமரங்களாலும், பட்டிசங்கள் {பட்டாக்கத்திகள்}, பிந்திபாலங்களாலும் தாக்கினர்.{4} வேறு சில ரஜனீசரர்கள் {இரவுலாவிகள்}, பாசங்கள் {பாசக்கயிறுகள்}, முத்கரங்கள், தண்டங்கள் {தடிகள்}, மண்வெட்டிகள் ஆகியவற்றாலும் கபிசிம்மங்களை {குரங்குகளில் சிங்கங்களை} அழித்தனர்.(4,5)
கரபுத்ரனின் {கரனின் மைந்தனான மகராக்ஷனின்} பாண ஓகங்களால் {கணைவெள்ளத்தால்} வேதனையடைந்த சர்வ வானரர்களும், மனங்குழம்பி, பயத்தால் பீடிக்கப்பட்டவர்களாக ஓடிச் சென்றனர்.(6) அந்த வனௌகசர்கள் {வனத்தில் வசிப்பவர்களான வானரர்கள்} ஓடிச் செல்வதைக் கண்ட சர்வ ராக்ஷசர்களும், செருக்குடன் கூடிய சிம்ஹங்களைப்போல, வெற்றிக் களிப்பில் நாதம் செய்தனர் {ஆர்ப்பரித்தனர்}.(7) அந்த வானரர்கள் எங்கும் ஓடிக்கொண்டிருந்தபோது, ராமன் தன் சரவர்ஷத்தால் {கணைமழையால்} அந்த ராக்ஷசர்களைத் தடுத்தான்.(8)
இராக்ஷசர்கள் தடுக்கப்பட்டதைக் கண்ட நிசாசரன் மகராக்ஷன், கோபானலனால் {கோபமெனும் தீயால்} தூண்டப்பட்டவனாக இந்த வசனத்தைக் கூறினான்:(9) "இராமா, நிற்பாயாக. என்னுடனான துவந்தயுத்தம் இருக்கிறது. என் தனுர்முகத்தில் {என் வில்லின் நாணிலிருந்து} இருந்து ஏவப்படும் கூரிய சரங்களால், உன் பிராணன்களைப் போக்க விரும்புகிறேன்.(10) எதற்காக தண்டகாரண்யதில் என் பிதாவை {என் தந்தை கரரைக்} கொன்றாயோ, அதற்காக என் முன் சொந்த கர்மத்தை {ராக்ஷசர்களைக் கொல்லும் உன் தொழிலைச்} செய்து கொண்டிருக்கும் உன்னைக் கண்டதும் ரோஷம் அபிவிருத்தி அடைகிறது {ஆத்திரம் பொங்குகிறது}.(11) துராத்மாவே, ராகவா, அந்தக் காலத்தில் மஹாவனத்தில் {தண்டகாரண்யத்தில்} நான் உன்னைக் காணாததால் என் அங்கங்கள் பெரிதும் தஹித்துக் கொண்டிருக்கின்றன {எரிகின்றன}.(12)
அதிர்ஷ்டவசமாக நீ இங்கே என் பார்வைக்குள் வந்திருக்கிறாய். இராமா, பசியுள்ள சிம்ஹத்தால் {விரும்பப்படும்} இதர மிருகத்தைப் போல, நீயும் {என்னால்} விரும்பப்படுகிறாய்.(13) இதோ, என் பாண வேகத்தினால், பிரேதங்களின் ராஜாவினுடைய {யமனின்} வசிப்பிடத்திற்குச் சென்று, {முன்பு} உன்னால் கொல்லப்பட்டவர்கள் எவரோ, அந்த சூரர்கள் சஹிதனாக வசித்திருப்பாய்.(14) இராமா, இது குறித்து அதிகம் பேசி {ஆகப்போவது} என்ன? என் சொற்களைக் கேட்பாயாக. சகல லோகங்களும் போர்முனையில் உன்னையும், என்னையும் பார்க்கட்டும்.(15) இராமா, போர்முனையில் அஸ்திரங்களாலோ, கதையினாலோ, இரு கைகளாலோ, அல்லது {உனக்கு} பழக்கப்பட்டது எதுவோ, அதைக் கொண்டு போர் நடைபெறட்டும்" {என்றான் மகராக்ஷன்}.(16)
தசரதாத்மஜனான ராமன், மகராக்ஷனின் சொற்களைக் கேட்டுச் சிரித்து, {இடையறாமல்} மேலும் மேலும் வாதம் செய்து கொண்டிருந்தவனிடம் {மகராக்ஷனிடம் பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(17) "இராக்ஷசா, {உனக்குப்} பொருந்தாத சொற்கள் பலவற்றால் வீணாக ஏன் பிதற்றுகிறாய்? இரணத்தில் {போர்க்களத்தில்} நீ யுத்தம் செய்யாமல், வாக்கு பலத்தால் வெற்றி பெறுவது சாத்தியமில்லை.(18) பதினான்காயிரம் ராக்ஷசர்களும், உன் பிதா எவனோ அவனும் {அந்தக் கரனும்}, திரிசிரன், தூஷணன் ஆகியோரும் தண்டகத்தில் {தண்டகாரண்யத்தில்} என்னால் கொல்லப்பட்டனர்.(19) பாபியே, கூரிய மூக்குகளையும், நகநுனிகளையும் கொண்ட கிருத்ரகோமாயுவாயஸங்கள் {கழுகுகளும், நரிகளும், காகங்களும்} உன் மாமிசத்தால் இதோ நிறைவடையப் போகின்றன" {என்றான்}.(20)
இராகவன் இவ்வாறு சொன்னதும், மஹாபலவானான மகராக்ஷன் போர்முனையில் அந்த ராகவன் மீது பாண ஓகங்களை {கணை வெள்ளத்தை} ஏவினான்.(21) இராமன், தன் சரவர்ஷத்தால் {கணைமழையால்} அந்த சரங்களை பலவாறாக வெட்டினான். உருக்மபுங்கங்களுடன் {பொற்பிடியுடன்} கூடிய அவை, ஆயிரக்கணக்கில் வெட்டப்பட்டு புவியில் விழுந்தன.(22) கரராக்ஷசபுத்ரனும், தசரதன் மகனும் அன்யோன்யம் {கரனின் மகனான மகராக்ஷனும், தசரதன் மகனான ராமனும் ஒருவரையொருவர்} சந்தித்துக் கொண்ட போது, அங்கே ஓஜஸ்ஸுடன் கூடிய {சீற்றத்துடன் கூடிய பயங்கரமான} யுத்தம் நடந்தது.(23) அப்போது போர்முனையில், நாணும், உள்ளங்கையும் உறைவதால் தனுசுகளில் இருந்து வெளிப்பட்ட சப்தம், ஆகாசத்தில் இரண்டு மேகங்களின் முழக்கத்தைப் போலப் பேரொலியுடன் கேட்டது.(24)
அந்த அற்புதத்தைக் காண விரும்பிய சர்வ தேவ, தானவ, கந்தர்வர்களும், கின்னரர்களும், மஹா உரகர்களும் அந்தரிக்ஷத்தை அடைந்தனர் {வானத்தில் வந்து நின்றனர்}.(25) அன்யோன்யம் காத்திரங்களை {உடல் உறுப்புகளைத்} துளைப்பதன் மூலம் அவர்களின் பலம் இரு மடங்காக வளர்ந்தது. அவ்விருவரும் போர்முனையில் அன்யோன்யம் பதிலடி கொடுப்பதில் மாறாமல் யுத்தம் செய்து கொண்டிருந்தனர்.(26) இரணத்தில் ராமனால் ஏவப்பட்ட பாண ஓகங்களை {கணை வெள்ளத்தை} ராக்ஷசன் துண்டித்தான். இராக்ஷசனால் ஏவப்பட்ட சரங்களை ராமனும் பல துண்டுகளாகத் துண்டித்தான்.(27) சர்வ திசைகளும், அதே போல, உபதிசைகளும் பாண ஓகங்களால் {கணை வெள்ளத்தால்} சூழப்பட்டிருந்தன. வசுதையும் {பூமியும்} எங்கும் மறைக்கப்பட்டவளாகப் புலப்படாதவளானாள்.(28)
பிறகு, மஹாபாஹுவான ராகவன் {பெருந்தோள்களைக் கொண்ட ராமன்}, குரோதமடைந்து, போரில் அவனது {மகராக்ஷனின்} தனுவை வெட்டினான். பிறகு, எட்டு நாராசங்களால் சூதனை {தேரோட்டியைத்} தாக்கினான்.(29) இராமன், தன் சரங்களால் அவனது ரதத்தை {தேரை} முறித்து, அஷ்வங்களை {குதிரைகளைக்} கொன்று, விழச் செய்ததும், நிசாசரனான அந்த மகராக்ஷன், ரதமின்றி வசுதையில் {பூமியில்} நின்றான்.(30) வசுதையில் நின்ற அந்த ராக்ஷசன், யுகாந்த அக்னிக்கு சமமான பிரபையுடன் {யுகமுடிவில் வெளிப்படும் நெருப்புக்கு நிகரான பிரகாசத்துடன்} கூடியதும், சர்வ பூதங்களுக்கு {உயிரினங்கள் அனைத்திற்கும்} அச்சத்தை ஊட்டுவதுமான ஒரு சூலத்தைத் தன் கைகளில் எடுத்தான்.(31)
அடைதற்கரியதும், ருத்ரனால் தத்தம் செய்யப்பட்டதுமான அந்த மஹத்தான சூலம், மற்றொரு சம்ஹாராஸ்திரத்தை {அழிவாயுதத்தைப்}[1] போல, ஆகாசத்தில் பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தது. எதைக் கண்டதும் சர்வ தேவதைகளும் பயத்தால் பீடிக்கப்பட்டு திசையெங்கும் ஓடுவார்களோ,(32,33அ) அத்தகையதும், எரிந்து கொண்டிருந்ததுமான அந்த மஹத்தான சூலத்தைச் சுழற்றிய அந்த நிசாசரன், மஹாத்மாவான அந்த ராகவனின் மீது குரோதத்துடன் அதை ஏவினான்.(33ஆ,34அ), இராகவன், கரபுத்திரனின் கரத்தில் இருந்து விடுபட்டு ஆகாசத்தில் ஜுவலித்தபடியே தன்னை நோக்கி விரையும் அந்த சூலத்தை நான்கு பாணங்களால்[2] துண்டித்தான்.(34ஆ,35அ) திவ்யஹாடக மண்டிதமான {தெய்வீக / அழகிய பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்த} அந்த சூலம், ராமபாணத்தால் தாக்கப்பட்டு பலதுண்டுகளாக வெட்டப்பட்டு, மஹா உல்கத்தை {பெரும் எரிகொள்ளியைப்} போல, புவியில் சிதறி விழுந்தது.(35ஆ,36அ)
[1] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இஃது அழிவுக்காக சிவனால் பயன்படுத்தப்படும் ஆயுதமாகும். இந்து தொன்மவியலின்படி சிவனே சம்ஹார தேவனாக இருக்கிறான்" என்றிருக்கிறது.
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், மூலத்திலும், மொழிபெயர்ப்பிலும், "நான்கு பாணங்கள்" என்றிருக்கிறது. பிற ஆங்கிலப் பதிப்புகளிலும், தமிழ்ப்பதிப்புகளிலும் மூன்று பாணங்கள் என்றிருக்கிறது.
களைப்பின்றி செயல்புரியும் ராமனால் தாக்கப்பட்ட அந்த சூலத்தைக் கண்டு, நபத்தில் இருந்த பூதங்கள் {வானத்தில் இருந்த உயிரினங்கள்}, "சாது {நன்று}, சாது {நல்லது}" என்று கூச்சலிட்டன.(36ஆ,37அ) அந்த சூலம் தாக்கப்பட்டதைக் கண்ட நிசாசரன் மகராக்ஷன், தன் முஷ்டியை உயர்த்தி, "நில், நிற்பாயாக" என்று காகுத்ஸ்தனிடம் {காகுத்ஸ்தனின் வழி வந்த ராமனிடம்} கூறினான்.(37ஆ,38அ)
அப்போது, ரகுநந்தனனான அந்த ராமன், தன்னை நோக்கி விரைந்து வருபவனை {விரைந்து வரும் மகராக்ஷனைக்} கண்டு, சிரித்தபடியே பாவகாஸ்திரத்தை[3] தன் சராசனத்தில் {அக்னி அஸ்திரத்தைத் தன் வில்லின் நாண்கயிற்றில்} பொருத்தினான்.(38ஆ,39அ) காகுத்ஸ்தனின் அஸ்திரத்தால் அந்த ராக்ஷசன் {மகராக்ஷன்} தாக்கப்பட்டபோது, அங்கே ரணத்தில் {போர்க்களத்தில்} ஹிருதயம் பிளக்கப்பட்டு, மரணமடைந்து கீழேவிழுந்தான்.(39ஆ,40அ)
[3] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது நெருப்பு தேவன், பாவகனின் பெயரால் அழைக்கப்படும் தெய்வீக ஆயுதமாகும். எனவே, பாவகாஸ்திரம் என்பது, ஆக்னேயாஸ்திரம் என்பதற்கான, {ஒரே பொருளைக் கொண்ட} மற்றொரு சொல்லாகும் {Synonym}" என்றிருக்கிறது.
மகராக்ஷன் விழுவதைக் கண்ட அந்த ராக்ஷசர்கள் அனைவரும், ராமபாணத்தின் மீது கொண்ட பயத்தால் பீடிக்கப்பட்டவர்களாக லங்கைக்கே ஓடிச் சென்றனர்.(40ஆ,41அ) தேவர்கள், வஜ்ரத்தால் தாக்கப்பட்ட கிரியை {மலையைப்} போல, தசரத நிருபனின் மகனுடைய {தசரதமன்னனின் மகனான ராமனின்} பாண வேகத்தால், ரஜனீசரனான அந்த கராத்மஜன் {இரவுலாவியும், கரனின் மகனுமான மகராக்ஷன்} அழிக்கப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.(41ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 079ல் உள்ள சுலோகங்கள்: 41
Previous | | Sanskrit | | English | | Next |