Sunday, 6 July 2025

நிகும்ப வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 077 (24)

Nikumbha killed | Yuddha-Kanda-Sarga-077 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நிகும்பனைத் தாக்கிய ஹனுமான்; ஹனுமானால் கொல்லப்பட்ட நிகும்பன்...

Hanuman killing Nikumbha

நிகும்பன், தன் பிராதா {தன்னுடன் பிறந்த கும்பன்} சுக்ரீவனால் வீழ்த்தப்பட்டதைக் கண்டு, கோபத்தில் வானரேந்திரனை {சுக்ரீவனை} எரித்து விடுபவனைப் போலப் பார்த்தான்.(1) பிறகு அந்த தீரன் {நிகும்பன்}, மஹேந்திர சிகரத்திற்கு {மகேந்திரமலைச் சிகரத்திற்கு} ஒப்பானதும், சுபமானதும், மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், ஐந்து விரல்களின் முத்திரையைக் கொண்டதுமான பரிகத்தை எடுத்துக் கொண்டான்.(2) ஹேமப்பட்டங்கள் {பொற்பட்டைகள்} பதிக்கப்பெற்றும், வஜ்ரம், மாணிக்கத்தால் அலங்கரிக்கப்பட்டும், யமதண்டத்திற்கு ஒப்பானதாகவும் இருந்த அது {அந்தப் பரிகம்}, பயங்கர ராக்ஷசர்களின் பயத்திற்கு நாசத்தை ஏற்படுத்தியது {ராட்சரர்களை பயத்தில் இருந்து விடுவித்தது}.(3) அளவில் சக்ரதுவஜத்திற்கு {இந்திரனின் கொடிக்கம்பத்திற்கு} ஒப்பான அதை {பரிகத்தை} ஏந்திக் கொண்டவனும், பீம விக்ரமனுமான {பயங்கர ஆற்றல்படைத்தவனுமான} நிகும்பன், தன் வாயை விரித்து உரக்க நாதம் செய்தான்.(4) 

மார்பில் நிஷ்கத்தாலும் {பொன் பதக்கத்தாலும்}, புஜங்களில் அங்கதங்களாலும் {தோள்களில் தோள்வளைகளாலும்}, சித்திரமான குண்டலங்களாலும் {காதுகளில் அழகிய குண்டலங்களாலும்}, சித்திரமான மாலையாலும்,{5} பூஷணங்களாலும் {ஆபரணங்களாலும்}, தன் பரிகத்தாலும் {உழல்தடியாலும்} அந்த நிகும்பன், இடி, மின்னலுடன் கூடிய மேகம் இந்திரதனுஸ்ஸால் எப்படியோ, அப்படி ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(5,6) அந்த மஹாத்மாவுடைய பரிகத்தின் சுழற்சியால் வாதக்ரந்தி {ஏழு வகை காற்றுகள் அடங்கிய வாயுமண்டலம்} வெடித்தது. அந்த கோஷத்துடன், விதூம பாவகனை போல அது {அவ்வாறு வெடித்த ஒலியுடன், புகையில்லா நெருப்பைப் போல அந்தப் பரிகம்} ஜொலித்துக் கொண்டிருந்தது[1].(7) 

[1] தர்மாலயப் பதிப்பில், "ஆற்றல்மிக்கவனாகிய இவனது உழலைமுனையால் வாயுமண்டலம் பிளவுண்டது. ஓசையோடுகூடிய அது (உழலைத் தடியானது) புகையற்ற அக்னி போன்றதாய் ஜ்வலித்தது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "மஹாபலமுடைய நிகும்பன் பரிகத்தைச் சுழற்றுகையில், அதனாலுண்டான காற்றின் வேகத்தினால் ஆவஹம் முதலிய ஸப்த வாயுக்களின் மண்டலம் பிளவுண்டது. மற்றும் அது மஹாத்வனியுடையாதகிப் புகையில்லாத அக்னி போல் ஜ்வலித்தது" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "பேருடல் கொண்ட அரக்கனின் உழக்கைத் தடியின் சுழற்சியினால், வாயு மண்டலம் சிதறிப் போயிற்று; பேரொலியுடன் சுழன்ற அது, புகையில்லாத அக்னியைப் போல் ஜொலித்தது" என்றிருக்கிறது.

கந்தர்வர்களின் உத்தம பவனங்களால் நிறைந்த விடபாவதி நகரும் {கந்தர்வர்களின் ஆடம்பர மாளிகைகள் நிறைந்த அளகாபுரியும்}, தாராகிரஹநக்ஷத்திரங்களும் {அஸ்வினி முதலிய நக்ஷத்திரங்களும், புதன் முதலிய சிறு கோள்களும்}, சந்திரனும், மஹாகிரஹங்களும் {குரு முதலிய பெருங்கோள்களும்},{8} நபஸ்தலமும் {ஆகாயமும்} நிகும்பனுடைய பரிகத்தின் சுழற்சியால் சுழல்வதைப் போலத் தெரிந்தன.(8,9அ) பரிகம், ஆபரணங்கள் ஆகியவற்றை பிரபையாகவும், குரோதத்தையே முகமாகவும் கொண்ட நிகும்பாக்னி, உதிக்கும் யுகாந்த {யுக முடிவில் தோன்றும்} அக்னியைப் போல {வானரர்களுக்கு} அணுகுதற்கரியதானது.(9ஆ,10அ) இராக்ஷசர்களும், வானரர்களும் பயத்தால் அசைய இயலாதவர்களாக இருந்தனர். பலவானான ஹனுமானோ, விரிந்த மார்புடன் முன்னனியில் நின்றான்.(10ஆ,11அ) 

பரிகத்திற்கு ஒப்பான கைகளைக் கொண்டிருந்த பலவான் {நிகும்பன்}, பாஸ்கரப் பிரபையுடன் {சூரிய ஒளியுடன்} கூடிய பரிகத்தை அந்த பலவானின் {ஹனுமானின்} மார்பில் வீசினான்.(11ஆ,12அ) பாறையைப் போன்றதும், அகன்றதுமான அவனது மார்பில் விழுந்த உடனேயே, அம்பரத்தில் சிதறும் நூற்றுக்கணக்கான உல்கங்களை {எரிகொள்ளிகளைப்} போல அந்தப் பரிகம் நூறு துண்டுகளானது.(12ஆ,13அ) பரிகத்தின் அந்த வீச்சால் தாக்கப்பட்ட அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, பூமி நடுக்கத்தில் அசலத்தைப் போல {நிலநடுக்கத்திலும் அசையாத மலையைப் போல} அசையாதிருந்தான்.(13ஆ,14அ) 

பிலவகோத்தமனும், மஹாபலவானுமான {தாவிச் செல்பவர்களில் உயர்ந்தவனும், பெரும் வலிமைமிக்கவனுமான} அந்த ஹனுமான், இவ்வாறு அவனால் {நிகும்பனால்} தாக்கப்பட்டதும், தன் முஷ்டியை பலமாக இறுக்கினான்.(14ஆ,15அ) மஹாதேஜஸ்வியும், வீரியவானும், வேகவானுமான வாயுவிக்ரமன் {வாயு தேவனின் ஆற்றலைக் கொண்டவனான ஹனுமான்}, அதை {தன் முஷ்டியை} உயர்த்தி நிகும்பனின் மார்பில் வேகமாகத் தாக்கினான்.(15ஆ,16அ) அப்போது, மின்னலால் திடீரெனத் தாக்கப்பட்ட மேகத்தைப் போல, அந்த முஷ்டியால் அவனது வர்மம் பிளந்து[2], சோணிதம் பெருகியது {கவசம் பிளந்து, மழை போல், ரத்தம் பொழிந்தது}. (16ஆ,இ) அந்தத் தாக்குதலால் அந்த நிகும்பன் சலசலக்கவில்லை {அசைந்தானில்லை}, அதிலிருந்து மீண்டவன் மஹாபலம் பொருந்திய ஹனூமந்தனை இறுகப் பற்றினான்.(17) 

[2] மன்மதநாததத்தர் பதிப்பில், "சில பதிப்புகளில் வர்மம் (கவசம்) என்பதற்குப் பதில் சர்மம் {தோல்} என்றிருக்கிறது. அதாவது தோல் பிளக்கப்பட்டது என்பது. இதுவும் ஹனுமானின் வலிமையையே குறிப்பிடுகிறது" என்றிருக்கிறது.

Hanuman killing Nikumbha

அப்போது, போரில் மஹாபலம் பொருந்திய ஹனூமந்தன் நிகும்பனால் தூக்கப்படுவதைக் கண்ட லங்காவாசிகள் {மகிழ்ச்சியில்} பயங்கரக் கூச்சலிட்டனர்.(18) அநிலசுதனான ஹனுமான், அந்த ராக்ஷசனால் இவ்வாறு தூக்கப்பட்டாலும், வஜ்ரத்திற்கு ஒப்பான தன் முஷ்டியால் அவனை {நிகும்பனைத்} தாக்கினான்.(19) பிறகு, மாருதாத்மஜனான {வாயுமைந்தனான} ஹனுமான், தன்னை விடுவித்துக் கொண்டு, பூமியில் குதித்த உடனேயே நிகும்பனைத் தாக்கினான்.(20) பரம ஆயத்தத்துடன் கூடிய அந்த வேகவான் {வேகம் நிறைந்த ஹனுமான்}, நிகும்பனைக் கீழே வீழ்த்தி, வேகமாக தாவிக் குதித்து அவனது மார்பில் அமர்ந்து தாக்கினான்.(21) தன்னிரு கைகளாலும் சிரோதரத்தை {அவனது கழுத்தைப்} பற்றித் திருகி, பைரவநாதம் செய்தவனின் {பயங்கரமாக ஓலமிட்ட நிகும்பனின்} மஹத்தான சிரத்தை {பெருந்தலையைப்} பிடுங்கினான்.(22) 

கதறும் நிகும்பன், ரணத்தில் பவன சுதனால் {போரில் வாயுமைந்தன் ஹனுமானால்} கொல்லப்பட்டபோது, கோபமடைந்த ராக்ஷசேந்திரன் மகனுக்கும் {கரனின் மகனான மகராக்ஷனுக்கும்}, தசரதசுதனுக்கும் {தசரதனின் மைந்தனான ராமனுக்கும்} இடையில் மிகப் பயங்கரமான யுத்தம் நடந்தது.(23) நிகும்பனின் ஜீவன் போனதும், பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான வானரர்கள்} மகிழ்ச்சி நாதம் செய்தனர். திசைகள் முழங்கின; உர்வி {பூமி} அசைந்தது. தியு {வானம்} விழுவது போல் தெரிந்தது; இராக்ஷசர்களின் பலம் {படை} பயத்தால் பீடிக்கப்பட்டது.(24) 

யுத்த காண்டம் சர்க்கம் – 077ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை