Malyavan | Yuddha-Kanda-Sarga-035 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தீய சகுனங்களைக் கண்ட மால்யவான்; ராமனுடன் சமாதானம் செய்து கொள்ளுமாறு ராவணனிடம் சொன்னது...
மஹாபாஹுவும், பரபுரஞ்ஜயனும், ராகவனுமான ராமன், சங்கின் ஒலியுடன் கலந்த பேரிகைகளின் சப்தத்துடன் அணிவகுத்து வந்தான்.(1) அப்போது, ராக்ஷசேஷ்வரனான ராவணன் அந்த நாதத்தைக் கேட்டு, ஒரு முஹூர்த்தம் தியானித்து, ஆலோசித்துவிட்டு, அமைச்சர்களைப் பார்த்தான்.(2)
பிறகு, மஹாபலவானும், ஜகத்தை பரிதபிக்கச் செய்பவனும், குரூரனுமான ராக்ஷசேஷ்வரன் ராவணன், அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து, சபை முழுமையும் எதிரொலிக்கும் வகையில் பேசி நிந்தித்துவிட்டு, இதைச் சொன்னான்:(3,4அ) "இராமன் அந்த சாகரத்தைக் கடந்ததையும், அவனது விக்ரமத்தையும், படையின் ஆற்றலையும் குறித்து நீங்கள் என்ன சொன்னீர்களோ, அதை நான் கேட்டேன்.(4ஆ,5அ) யுத்தத்தில் சத்தியபராக்கிரமர்களாக இருந்தும், ராமனின் விக்ரமத்தை அறிந்து வாயடைத்து அன்யோன்யம் {ஒருவரையொருவர்} பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன்" {என்றான் ராவணன்}.(5ஆ,6அ)
அப்போது மஹாபிராஜ்ஞனும் {அனைத்தையும் அறிந்தவனும்}, மாதுபைதாமஹனுமான {மாதாமஹனுமான / தாய்வழி தாத்தனுமான}[1] மால்யவான் என்ற பெயரைக் கொண்ட ராக்ஷசன், ராவணனின் சொற்களைக் கேட்டு {பின்வருமாறு} சொன்னான்:(6ஆ,7அ) "இராஜனே, எந்த ராஜன், {பதினான்கு} வித்யைகளில் நல்ல பயிற்சியுடன், நயமாக {நீதியுடன் நியாயமாக} நடந்து கொள்கிறானோ, அவனே நீண்ட காலம் ஐஷ்வர்யத்தை {ராஜ அதிகாரத்தை} அனுபவித்து, தன் பகைவரையும் வசப்படுத்துகிறான்[2].(7ஆ,8அ) தகுந்த பகைவருடன் சமாதானத்திலோ, போரிலோ ஈடுபடுபவன், தன் தரப்பை பலப்படுத்திக் கொண்டு, மஹத்தான ஐஷ்வர்யத்தை அடைகிறான்.(8ஆ,9அ) பலம் குறைந்த ராஜன், தனக்கு சமமானவர்களுடன் சந்தி செய்துகொண்டு {சமாதானம் செய்து கூட்டணியாகச் சேர்ந்து கொண்டு}, சத்ருவை அவமதிக்காமல், பலவானிடம் பகைமையைக் கைவிட வேண்டும்.(9ஆ,10அ) இராவணா, அந்த ராமனுடன் சந்தி செய்து {சேர்ந்து} கொள்வதே நமக்கு ஏற்புடையது. எவளுக்காக பகை கொண்டு தாக்குதலுக்கு உள்ளாகிறாயோ, அந்த சீதையை அவனிடமே {ராமனிடமே} திருப்பிக் கொடுப்பாயாக.(10ஆ,11அ) சர்வ தேவர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும் தங்கள் ஜயத்தையே {வெற்றியையே} நாடுகின்றனர். எனவே, நீ விரோதம் பாராட்டாமல் சந்தி செய்து {சேர்ந்து} கொள்வதே ஏற்புடையது.(11ஆ,12அ)
[1] தர்மாலயப் பதிப்பில், "தாயாருக்கு சிற்றப்பனுமான மால்யவானெனும் அரக்கன்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ராவணனுடைய மாதாமஹனோடு கூடப்பிறந்தவனும், மிகுதியும் ப்ராஜ்ஞனுமாகிய மால்யவானென்னும் ராக்ஷஸன்" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "இராவணனுடைய தாய்வழிப் பாட்டனும், மகாபுத்திசாலியுமான மால்யவான் என்னும் அரக்கன்" என்றிருக்கிறது.
[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பதினான்கு வகை கல்விகள் இருக்கின்றன என்று உரையாசிரியர் சொல்கிறார். ஆனால் கெடுவாய்ப்பாக அவற்றை அவர் பட்டியலிடவில்லை" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ்-கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், புராணங்கள், மீமாம்சை, நியாய சாஸ்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள் ஆகியனவே அந்தப் பதினான்கு அறிவியல்கள்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "எந்த அரசன் வித்தைகளில் நன்கு சிக்ஷிக்கப்பெற்றவனாய் நியாயத்தை அனுசரிக்கிறவனாக இருக்கிறானோ, அவன் வெகுகாலம் ராஜ அதிகாரத்தைச் செலுத்துகிறான். சத்துருக்களையும் தன் வசப்படுத்துகிறான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "எந்த மன்னவன் ஆன்வீக்ஷகி த்ரயி வார்த்தை தண்டநீதி என்கிற நான்கு வித்யைகளில் நன்கு பயிற்சியுடையவனாகி நீதி சாஸ்த்ரத்தை அனுஸரித்து நடப்பானோ, அவனே வெகுகாலம் ராஜ்யத்தைப் பரிபாலனஞ் செய்து வருவான். அவனே சத்ருக்களையெல்லாம் அடக்கி வசப்படுத்திக் கொண்டு மேன்மையுற்றிருப்பான்" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "எந்த அரசன் எல்லா கலைகளையும் நன்றாகப் பயின்று நியாயப்படி நடக்கிறானோ, அவன் வெகு நீண்ட காலம் நல்லாட்சி செலுத்துகிறான். எதிரிகளையும் தன் கட்டுப்பாட்டில் (தனக்கு அடங்கியவர்களாக) வைத்துக் கொள்கிறான்" என்றிருக்கிறது.
பகவான் பிதாமஹன் {பிரம்மன்}, ஸுரர்கள், அஸுரர்கள் ஆகிய இரு தரப்புகளுக்கும் உரிய தர்மாதர்மங்களை {தர்மம், அதர்மங்களை} சிருஷ்டித்தான்.(12ஆ,13அ) இராக்ஷசா, தர்மமானது மஹாத்மாக்களான ஸுரர்கள் தரப்பிலும், அதர்மமானது ராக்ஷசர்கள், அஸுரர்கள் தரப்பிலும் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம்.(13ஆ,14அ) எப்போது தர்மம், அதர்மத்தை விழுங்குமோ, அது கிருத யுகமாகிறது. அதர்மம், தர்மத்தை விழுங்கும்போது முடிவு தொடங்குகிறது {கலி யுகமாகிறது}.(14ஆ,15அ) நீ உலகங்களில் திரிந்து கொண்டிருந்தபோது, மஹத்தான தர்மத்தை அழித்து[3], அதர்மத்தைத் தழுவிக் கொண்டாய். எனவே, பகைவர்கள் நம்மைவிட பலவானாகிவிட்டார்கள்.(15ஆ,16அ) உன் அலட்சியத்தால் வளர்ந்த அந்த அதர்மமே, நம்மை விழுங்கவும், ஸுரபாவம் கொண்ட ஸுரர்களின் {தர்மத்தையே இயல்பாகக் கொண்ட தேவர்களின்} தரப்பை பலமடையவும் செய்கிறது.(16ஆ,17அ)
[3] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "படையெடுத்து மூவுலகங்களிலும் நீ திரிந்து கொண்டிருக்கும்போது, வேள்விகளுக்கு இடையூறு முதலியவற்றைச் செய்து தர்மத்திற்குத் தீங்கிழைத்தாய்" என்றிருக்கிறது.
விஷயங்களில் {சிற்றின்பங்களில்} அதிகம் பற்று கொண்டு எதையெல்லாம் செய்தாயோ, அதன் காரணத்தால் அக்னி கல்பமாக எரியும் மஹத்தான ரிஷிகளிடம் பெரும் கவலை உண்டானது.(17ஆ,18அ) அவர்களின் பிரபாவம் {செல்வாக்கு}, எரியும் பாவகனை {அக்னியைப்} போல வெல்வதற்கு அரியதாகும். தபத்தால் தூய ஆத்மாக்களான அவர்கள், நித்யம் தர்மத்தின் அனுக்கிரகத்தில் {தர்மத்தை வளர்ப்பதில்} ஈடுபடுகிறார்கள்.{18ஆ,19அ} அந்த துவிஜர்கள் {இருபிறப்பாளர்கள்}, பல்வேறு முக்கிய யஜ்ஞங்களை நித்யம் செய்து, {தேவர்களை ஆராதித்து}, விதிப்படி அக்னிகளில் ஆகுதிகளை ஊற்றி வழிபடுகிறார்கள். வேதங்களையும் உரத்த குரலில் ஓதுகிறார்கள்.{19ஆ,20அ} இராக்ஷசர்களை அவமதித்து, பிரம்மகோஷங்களை ஓதி, நம் அனைவரையும் வெயிற்கால மேகம் போல திசைகள் அனைத்திலும் மறைந்து விட்டார்கள்.(18ஆ-21அ) அக்னிக்கு ஒப்பான ரிஷிகளுடைய அக்னி ஹோத்திரங்களில் உண்டாகும் தூமம் {புகை}, பத்துத் திசைகளிலும் பரவி, ராக்ஷசர்களின் தேஜஸ்ஸைக் கவர்கிறது.(21ஆ,22அ) அந்தந்த தேசங்களின் புண்ணியத் தலங்களில், திட விரதத்துடன் அவர்கள் செய்யும் தீவிர தபம், ராக்ஷசர்களைக் கடுமையாகத் துன்புறுத்துகிறது.(22ஆ,23அ) தேவர்கள், தானவர்கள், யக்ஷர்கள் ஆகியோருக்கான வரத்தை {ஆகியோரால் மரணமேற்படாது என்ற வரத்தை} நீ அடைந்திருக்கிறாய்.{23ஆ} பலம்பொருந்திய திடவிக்ரமர்களும், மஹாபலவான்களுமான மனுஷ்யர்கள், வானரர்கள், ரிக்ஷங்கள் {கரடிகள்}, கோலாங்கூலங்கள் {முசுக்கள் / கருங்குரங்குகள்} ஆகியோர், இதோ இங்கே வந்து கர்ஜிக்கின்றனர்.(23ஆ,24)
விதவிதமாக எழும் உத்பாதங்களையும், அதேபோல பல்வேறு கோரங்களையும் பார்ப்பதால், சர்வ ராக்ஷசர்களின் நாசத்தை ஊகிக்கிறேன்.(25) கோரமான, பயங்கரமான மேகங்கள், இடி முழக்கத்துடன் லங்கை முழுவதும் உஷ்ணமான சோணித மழையை {ரத்த மழையைப்} பொழிகின்றன.(26) முன்பு போல் பிரகாசிக்காமல் வர்ணமிழந்து, புழுதிபடிந்த {யானைகள், குதிரைகள் முதலிய} வாஹனங்கள், கண்ணீர் சிந்தி அழுகின்றன.(27) கொடிய நரிகளும், படுபயங்கரக் கழுகுகளும் லங்கையில் பிரவேசித்து கதறியபடியே, கூட்டமாகக் கூடுகின்றன.(28) ஸ்வப்னங்களில் கரிய ஸ்திரீகள், எதிர்த்துப் பேசி, கிருஹங்களில் {வீடுகளில்} கொள்ளையடித்து, வெண்பற்களைக் காட்டிச் சிரிக்கின்றனர்.(29) கிருஹங்களில் பலிகர்மங்களுக்கு உரிய {வீடுகளில் புனிதமான காணிக்கைக்குரிய} பொருட்களை நாய்கள் உண்கின்றன. கோக்களிடம் {பசுக்களிடம்} கழுதைகளும், நகுலங்களிடம் மூஷகங்களும் {கீரிப்பிள்ளைகளிடம் எலிகளும்} உண்டாகின்றன.(30) பூனைகள் புலிகளுடனும், பன்றிகள் நாய்களுடனும் சேர்கின்றன {புணர்கின்றன}. கின்னரர்கள் ராக்ஷசர்களுடனும், மனிதர்களுடனும் சேர்கின்றனர்.(31) வெண்மையானவையும், சிவந்த பாதங்களைக் கொண்டவையுமான கபோதகப் பறவைகளும் {புறாக்களும்}, காலனால் தூண்டப்பட்டவையாக ராக்ஷசர்களின் அழிவுக்காகத் திரிகின்றன.(32) வேஷ்மங்களில் {வீடுகளில்} இருக்கும் சாரிகங்கள் {மைனாக்கள்}, பிற பறவைகளுடன் கலகம் செய்து விழுந்து, வீசி, கூசியென்று கூவுகின்றன[4].(33) பக்ஷிகளும், சர்வ மிருகங்களும் ஆதித்யனை {சூரியனை} நோக்கி அழுகின்றன. பயங்கரமானவனும், விகடனும், முண்டனும், கொடூரனும், கிருஷ்ணபிங்களனுமான {கருப்பும், மஞ்சளும் கலந்த நிறம் கொண்டவனுமான}{34} காலன், நம் அனைவரின் கிருஹங்களில் {வீடுகளிலும்}, காலையும், மாலையும் தன் பார்வையைச் செலுத்துகிறான். இவையும், இன்னும் பிற துஷ்ட நிமித்தங்களும் தோன்றுகின்றன.(34,35)
[4] ஆங்கிலப்பதிப்புகளில், "மைனாக்கள்" என்றும், தமிழ் பதிப்புகளில், "நாகணவாய்ப் பறவைகள்" என்றும் இருக்கிறது.
விஷ்ணுவே மானுஷ தேஹத்துடன் ராமனாக அவதரித்திருக்கிறான் என்ற நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். திடவிக்கிரமனான ராகவன் மானுஷன் மாத்திரமல்ல.{36} எவன் சமுத்திரத்தில் சேது பந்தனம் செய்தானோ, அவன் பரம அற்புதனாவான் {ராமன் மனிதன் மட்டுமல்ல பரம அற்புதன்}. இராவணா, நரராஜனான ராமனுடன் சந்தி செய்து {சமாதானத்துடன் சேர்ந்து} கொள்வாயாக.{37} {அவனது} கர்மங்களை அறிந்து கொண்டு, வருங்காலத்திற்கான நன்மையைப் பொறுமையுடன் ஆலோசித்துவிட்டுச் செயல்படுவாயாக" {என்றான் மால்யவான்}.(36-38அ)
இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, பலவானும், உத்தமர்களில் உத்தம புருஷனுமான மால்யவான், ராக்ஷசாதிபதியின் மனத்தை பரீக்ஷிக்கும் வகையில், மீண்டும் அவனைப் பார்த்து அமைதியடைந்தான்.(38ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 035ல் உள்ள சுலோகங்கள்: 38
Previous | | Sanskrit | | English | | Next |