Lamentation of Rama | Yuddha-Kanda-Sarga-049 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: நனவு மீண்ட ராமன், லக்ஷ்மணனைக் கண்டு அழுது புலம்புவது...
கோரமான சரபந்தனத்தில் கட்டப்பட்ட தசரதாத்மஜர்கள் {தசரதனின் மகன்களான ராமலக்ஷ்மணர்கள்}, நாகங்களைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, உதிரத்தில் நனைந்தபடியே சயனித்திருந்தனர்.{1} மஹாபலவானான சுக்ரீவனும், அந்த வானர சிரேஷ்டர்கள் அனைவரும், அந்த மஹாத்மாக்களை {ராமலக்ஷ்மணர்களைச்} சூழ்ந்து கொண்டு சோகத்தில் மூழ்கியிருந்தனர்.(1,2) அதேவேளையில், வீரியவானான ராமன், சரங்களால் கட்டப்பட்டிருந்தாலும், சத்வ யோகத்தில் {வலிமையைத் திரட்டுவதில்} கொண்ட தன் ஸ்திரத்தன்மையினால் நனவுமீண்டான் {மயக்கம் தெளிந்தான்}.(3)
அப்போது, கடும் தாக்குதலுக்கு உள்ளாகி, உதிரம் பெருக்கிக் கொண்டிருக்கும் தன்னுடன் பிறந்தானின் {தன் தம்பியான லக்ஷ்மணனின்} தீனவதனத்தைக் கண்டு, {பின்வருமாறு} வேதனையில் அழுது புலம்பினான்:(4) “யுத்தத்தில் வீழ்ந்து சயனிக்கும் என்னுடன் பிறந்தானைப் பார்க்கிறேன். இனி எனக்கு சீதையால் என்ன காரியம்? {சீதையால் ஆகப்போவது என்ன?} ஜீவிதத்தால் என்ன காரியம்? {நான் உயிர்த்தரித்திருப்பதால் ஆகப் போவது என்ன?}(5) மர்த்யலோகத்தில் {மரிக்கப் போகிறவர்களின் உலகமான பூமியில்} தேடினால் சீதைக்கு சமமான நாரீ {பெண்} கிடைப்பது சாத்தியமே. ஆனால், ஆலோசனை தருபவனும், பகைவருக்கு எதிரான போரில் தோழனுமான லக்ஷ்மணனைப் போன்ற உடன்பிறந்தான் கிடைப்பது சாத்தியமில்லை.(6) சுமித்ரானந்த வர்த்தனன் பஞ்சத்வம் {சுமித்திரையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான லக்ஷ்மணன் மரணம்} அடைந்தால், வானரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே என் பிராணனை விடுவேன்.(7)
மாதா கௌசல்யையிடம் நான் என்ன சொல்வேன்? கைகேயியிடம் என்ன சொல்வேன்? புத்திரனை தரிசிக்கும் ஆவலுடன் இருக்கும், அம்பா {அம்மா} சுமித்திரையிடம் எப்படிப் பேசுவேன்?(8) இவன் இல்லாமல் நான் {அயோத்திக்குத்} திரும்பினால், மகனை இழந்த குரரியை {பெண்பறவையைப்} போலத் துடித்துக் கதறி அழுபவளை {அழும் சுமித்திரையை} எப்படி நான் ஆசுவாசப்படுத்துவேன்?(9) என்னுடன் வனத்திற்கு வந்தவன் இல்லாமல் நான் திரும்பிச்சென்றால், சத்ருக்னனிடமும், பெரும் புகழ்பெற்ற பரதனிடமும் மீண்டும் எப்படிப் பேசுவேன்?(10) ஐயோ, சுமித்ரையின் உபாலம்பத்தை {நிந்தனையுடன் கூடிய புறக்கணிப்பை} என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இங்கேயே என் தேஹத்தைக் கைவிடுவேன். ஜீவிப்பதில் எனக்கு விருப்பமில்லை.(11) செய்யக்கூடாத கர்மங்களைச் செய்த அநாரியனான எனக்கு ஐயோ! என் செய்கையால் இந்த லக்ஷ்மணன் வீழ்ந்து, உயிரற்றவனாக சரதல்பத்தில் {கணைப்படுக்கையில்} கிடக்கிறான். என்னை எரித்துவிடுங்கள்.(12)
இலக்ஷ்மணா, துயரடையும்போதெல்லாம், நித்யம் நீ என்னை ஆசுவாசப்படுத்தினாய். துயரடைந்திருக்கும் என்னிடம் பேசவும் இயலாதவனாக மரணம் அடைந்துவிட்டாய்.(13) இன்று, எத்தகையவனாக யுத்தத்தில் எண்ணற்ற ராக்ஷசர்களைத் தரையில் வீழ்த்தினாயோ, அத்தகைய சூரனான நீ, அதே களத்தில் சரங்களால் துளைக்கப்பட்டவனாக வீழ்ந்திருக்கிறாய்.(14) சரஜாலத்தால் {கணை வலையால்} தைக்கப்பட்டு, சோணிதத்தில் {குருதியில்} நனைந்து, இந்த சரதல்பத்தில் சயனிக்கும் இவன், அஸ்தத்தில் மறையும் பாஸ்கரனைப் போலத் தெரிகிறான்.(15) பாணங்களால் மர்மங்கள் பிளக்கப்பட்டு, பேச இயலாமல் பேசவில்லை எனினும், இவனது பார்வையே வேதனையை வெளிப்படுத்துகிறது.(16)
வனத்திற்கு நான் வந்தபோது, எப்படி இந்தப் பேரொளிமிக்கவன் என்னைப் பின்தொடர்ந்து வந்தானோ, அப்படியே யமக்ஷயத்திற்கு {யமனின் வசிப்பிடத்திற்கு} இவனைப் பின்தொடர்ந்து நான் செல்லப்போகிறேன்.(17) பந்து ஜனங்களின் {உற்றார் உறவினரின்} இஷ்டத்திற்குரியவனும், நித்யம் என்னையே பின்பற்றுபவனுமான இவன், அநாரியனான எனது துர்நயங்களால் {நயமில்லாத செயல்களால்} இந்த அவஸ்தையை அடைந்திருக்கிறான்.(18) எவ்வளவு கோபத்தில் இருந்தாலும், வீரனான லக்ஷ்மணனிடம் இருந்து, கடுமையான, பிரியமற்ற சொற்களைக் கேட்டதாக எனக்கு நினைவில்லை.(19) எவன் ஐநூறு பாணங்களை ஏக வேகத்தில் ஏவுவானோ, அத்தகைய கார்த்தவீரியனை {கார்த்தவீரிய அர்ஜுனனை} விடவும் லக்ஷ்மணன் இஷ்வஸ்திரங்களில் {கணை ஏவும் கலையில்} மேம்பட்டவன்.(20) எவன், மஹாத்மாவான சக்ரனின் {இந்திரனின்} அஸ்திரங்களையே தன் அஸ்திரங்களால் அழிக்கவும், {இந்திரனின்} விலையுயர்ந்த படுக்கையில் சயனிக்கவும் தகுந்தவனோ, அத்தகைய இவன் தரையில் கிடக்கிறான்.(21)
நான் விபீஷணனை ராக்ஷசர்களின் ராஜாவாக்கவில்லை. எனவே அந்தப் பொய்யே என்னை எரித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.(22) சுக்ரீவா, இந்த முஹூர்த்தமே இங்கிருந்து நீ {கிஷ்கிந்தைக்குத்} திரும்பிச் செல்வாயாக. இராஜனே, நானில்லாமல் நீ இருப்பதை அறிந்தால், பலவானான ராவணன் உன்னைத் தாக்குவான்.(23) சுக்ரீவா, அங்கதனை முன்னிட்டுக் கொண்டு, உன்னைப் பின்தொடர்பவர்களான நீலன், நளன் ஆகியோருடனும், சைனியத்துடனும் சமுத்திரத்தைத் தாண்டுவாயாக.(24) இரணத்தில் {போரில்} எவரும் செய்வதற்கரிய காரியத்தை செய்த ஹனுமதனிடமும், மஹத்தான கர்மங்களைச் செய்த ரிக்ஷராஜன் {ஜாம்பவான்}, கோலாங்கூலாதிபன் ஆகியோரிடமும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.(25) அங்கதன், மைந்தன், துவிவிதன் ஆகியோரால் மஹத்தான கர்மம் செய்யப்பட்டது. போர்க்களத்தில் கேசரியும், சம்பாதியும் கோரமாக யுத்தம் செய்தனர்.(26) எனக்காக ஜீவிதத்தையும் பொருட்படுத்தாத கவயன், கவாக்ஷன், சரபன், கஜன் ஆகியோராலும், பிற ஹரிக்களாலும் {குரங்குகளாலும்} யுத்தம் நடத்தப்பட்டது.(27) சுக்ரீவா, மானுஷர்கள் தைவத்தை {விதியை} மீறுவது சாத்தியமில்லை. பரந்தபா {பகைவரை எரிப்பவனே}, சுக்ரீவா, நல்ல நண்பனான நீ, தர்மத்திற்கு அஞ்சி, உனக்கு சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டாய்[1].(28,29அ) வானர ரிஷபர்களே, உங்களால் இந்த மித்ர காரியம் செய்யப்பட்டது {நிறைவேறியது}. எங்கே இஷ்டமோ அங்கே செல்ல அனைவரையும் அனுமதிக்கிறேன்” {என்றான் ராமன்}.(29ஆ,30அ)
[1] இது ராமன் செய்யும் வஞ்சப்புகழ்ச்சி என்பது போல மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பு சித்தரிக்கிறது.
அவனது புலம்பலைக் கேட்டவர்களும், கரிய விழிகளைக் கொண்டவர்களுமான சர்வ வானரர்களும், கண்களில் இருந்து முகத்தில் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தனர்.(30ஆ,31அ) கதாபாணியான {உள்ளங்கையில் கதாயுதத்துடன் கூடிய} விபீஷணன், சர்வ அனீகங்களையும் ஸ்தாபித்த பிறகு {படைகள் அனைத்தையும் தடுத்து நிலைநிறுத்திய பிறகு}, ராமன் எங்கே இருந்தானோ, அங்கே வந்தான்.(31ஆ,32அ) நீல அஞ்சன அசலத்திற்கு ஒப்பான அவன் {விபீஷணன்}, துரிதமாக வருவதைக் கண்டு, ராவணி என நினைத்து, சர்வ வானரர்களும் தப்பி ஓடினர் {கரிய மையாலான மலைக்கு ஒப்பான விபீஷணன், கையில் கதாயுதத்துடன் வேகமாக வருவதைக் கண்டு, ராவணனின் மகனான இந்திரஜித் என நினைத்து, வானரர்கள் அனைவரும் தப்பி ஓடினர்}.(32ஆ,33)
யுத்த காண்டம் சர்க்கம் – 049ல் உள்ள சுலோகங்கள்: 33
Previous | | Sanskrit | | English | | Next |