Wednesday, 20 November 2024

தூம்ராக்ஷன் | யுத்த காண்டம் சர்க்கம் - 051 (36)

Dhumraksha | Yuddha-Kanda-Sarga-051 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமலக்ஷ்மணர்கள் கட்டில் இருந்து விடுபட்டதை அறிந்த ராவணன் ஏமாற்றமடைந்து தூம்ராக்ஷனை போருக்கு அனுப்பி வைத்தது...

Ravana commanding

அப்போது பேரொலி எழுப்புகிறவர்களும், வேகம் கொண்டவர்களான அந்த வானரர்களின் ஆரவார சப்தத்தை ராக்ஷசர்களுடன் கூடிய ராவணன் கேட்டான்.(1)  அவன் {ராவணன்}, மென்மையாகவும் கம்பீரமாகவும் கோஷிக்கும் அந்தப் பெரும் நாதத்தைக் கேட்டு, அந்த ஆலோசகர்களின் {அமைச்சர்களின்} மத்தியில் {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(2) “பெரும் மகிழ்ச்சியில் மூழ்கித் திரண்டிருக்கும் பல வானரர்களின் இந்த மஹத்தான நாதம், மேகங்களின் கர்ஜனை எப்படியோ, அப்படியே எழுகிறது.{3} அவர்களின் பிரீதி மஹத்தானது என்பது வெளிப்படையானது. இதில் சந்தேகமில்லை. இந்தப் பெரும் சப்தத்தால் வருணாலயமும் {பெருங்கடலும்} கலங்குகிறது.(3,4) உடன்பிறந்தோரான அந்த ராமலக்ஷ்மணர்கள், கூரிய சரங்களால் கட்டப்பட்டுக் கிடக்கின்றனர். இந்த மஹத்தான நாதம் என்னில் சந்தேகத்தை ஜனிக்கச் செய்கிறது” {என்றான் ராவணன்}.(5)

இவ்வாறான வசனத்தை தன் மந்திரிகளிடம் பேசிய ராக்ஷசேஷ்வரன், அங்கே சமீபத்தில் இருந்த நைர்ருதர்களிடம் {ராக்ஷசர்களிடம், பின்வருமாறு} சொன்னான்:(6) “இந்த வனசாரிகள் அனைவரிடமும், சோக காலத்தில் எழும் மகிழ்ச்சி எதற்காக என்பதை உடனே அறிவீராக” {என்றான் ராவணன்}.(7)

அவன் இவ்வாறு சொன்னதும், பரபரப்புடன் பிராகாரத்தில் {மதிற்சுவரில்} ஏறிய அவர்கள், மஹாத்மாவான சுக்ரீவனால் பாலிதம் செய்யப்படும் சேனையைக் கண்டனர்.{8} மஹாபாக்கியவான்களான அந்த ராகவர்கள் இருவரும் கோரமான சரபந்தனத்தில் இருந்து விடுபட்டு எழுவதைக் கண்டு ராக்ஷசர்கள் மனம் தளர்ந்தனர்.(8,9) கோரர்களான அவர்கள் அனைவரும் அச்சமடைந்த ஹிருதயத்துடன் பிராகாரத்தில் இருந்து இறங்கி வந்து, வெளிறிய வதனங்களுடன் ராக்ஷசேந்திரனை அணுகினர்.(10) 

வாக்கிய கோவிதர்களான நிசாசரர்கள் {பேச்சில் வல்லவர்களான அந்த இரவுலாவிகள்}, தீன வதனங்களுடன் பிரியமற்ற அனைத்தையும் உள்ளபடியே ராவணனிடம் {பின்வருமாறு} தெரிவித்தனர்:(11) “உடன்பிறந்தோரான யாவர் யுத்தத்தில் இந்திரஜித்தால் சரபந்தனம் செய்து கட்டப்பட்டு, கைகளை அசைக்க முடியாதபடி செய்யப்பட்டனரோ, அந்த ராமலக்ஷ்மணர்கள் இருவரும்,{12} பாசங்களை {கயிறுகளை} அறுத்த கஜங்களை {யானைகள்} இரண்டைப் போல விடுபட்டு, கஜேந்திரனுக்கு {தலைமை யானைக்கு} சமமான விக்ரமத்துடன் போர்க்களத்தில் காணப்படுகின்றனர்” {என்றனர்}.(12,13) 

அவர்களின் அந்த வசனத்தைக் கேட்ட மஹாபலவானான ராக்ஷசேந்திரன், கோபமும், கவலையும் மேலிட்ட சிந்தனையுடனும், வர்ணமிழந்த முகத்துடனும் {பின்வருமாறு} சொன்னான்:(14) “கோரமானவையும், வரத்தால் பெறப்பட்டவையும், விஷமிக்க பாம்புகளுக்கு ஒப்பானவையும், அமோகமானவையும் {வீண் போகாதவையும்}, சூரியனின் பிரகாசத்தைக் கொண்டவையுமான சரங்களைக் கொண்டு யுத்தத்தில் இந்திரஜித்தால் கட்டப்பட்டும்,{15} அந்த அஸ்திர பந்தத்தில் இருந்து என் ரிபுக்கள் {பகைவர்} விடுபடுகிறார்கள் என்றால், என்னுடைய இந்த சர்வ பலத்தின்  நிலை குறித்து சந்தேகமடைகிறேன் {மொத்த படையும் என்ன ஆகப்போகிறதோ என்று நினைத்து சந்தேகமடைகிறேன்}[1].(15,16) வாசுகியின் தேஜஸ்ஸுடன் கூடிய எவை, என் பகைவருக்கு எதிரான போரில் அவர்களின் ஜீவிதத்தை பறித்தனவோ, அந்தச் சரங்கள் வீணாகிவிட்டன” {என்றான் ராவணன்}.(17)

[1] தர்மாலயப் பதிப்பில், “எனது சத்ருக்களிருவரும் அப்பேர்ப்பட்ட அஸ்திரக்கட்டை அடைந்து தப்பித்துக் கொண்டுவிட்டார்கள் என்றால் இந்த சக்தி எல்லாவற்றையும் நம்பிக்கையற்றதாக நான் நினைக்கிறேன்” என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், “என் பகைவராகிய அவ்விருவரும் அப்படிப்பட்ட பாணங்களால் கட்டுண்டும் விடுபடுவார்களாயின், இனி இந்த ராக்ஷஸ ஸைன்யத்திற்கெல்லாம் ப்ராண ஸந்தேஹம் உண்டானாற்போலவே எனக்குத் தோன்றுகின்றது” என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், “போர்க்களத்தில் இந்திரஜித் எவர்களைக் கட்டிப் போட்டிருந்தானோ, அவ்விரு பகைவர்களும் அந்த அம்புக்கட்டிலிருந்து விடுபட்டு வெளியே வந்துவிட்டார்கள் என்றால், என்னிடமுள்ள சிறந்த ஆற்றல்கள் எல்லாவற்றையும் சந்தேகத்தோடு பார்க்கிறேன். (இவைகளும் சில சமயங்களில் நம்மை ஏமாற்றிவிடும் என்ற சந்தேகம்)” என்றிருக்கிறது.

இவ்வாறு சொன்னவன், குரோதத்துடன் உரகத்தை {பாம்பைப்} போல பெருமூச்சுவிட்டுக் கொண்டே, ராக்ஷசர்களுக்கு மத்தியில் இருந்த தூம்ராக்ஷன் என்றழைக்கப்படும் ராக்ஷசனிடம்[2] {பின்வருமாறு} கூறினான்:(18) “பீமவிக்கிரமம் கொண்டவனான நீ, வானரர்களுடன் கூடிய ராமனை வதம் செய்வதற்காக, ராக்ஷசர்களுடன் கூடிய மஹத்தான பலத்துடன் {படையுடன்} புறப்படுவீராக” {என்றான்}.(19)
 
[2] புகைநிறக் கண்ணன் என்ற பொருளுடன் கூடிய பெயரைக் கொண்ட இந்த தூம்ராக்ஷன் ராவணனின் தாய்மாமன் ஆவான்.

மதிமிக்க ராக்ஷசேந்திரனால் இவ்வாறு சொல்லப்பட்ட தூம்ராக்ஷன், வணங்கி, விடைபெற்று சீக்கிரமே நிருபாலயத்தை {மன்னனின் வசிப்பிடத்தை} விட்டு வெளியேறினான்.(20) அந்த துவாரத்தை {வாயிலைக்} கடந்ததும் பலாதியக்ஷனிடம் {படைத்தலைவனிடம்}, “விரைவாயாக. சீக்கிரமே பலத்தை {படையை} ஆயத்தப்படுத்துவாயாக. என்ன தாமதம்?" {என்றான்}.(21)

பலத்தால் {படையால்} பின்தொடரப்படும் பலாதியக்ஷன் {படைத்தலைவன்}, தூம்ராக்ஷனின் வசனத்தைக் கேட்டும், ராவணனின் ஆணைப்படியும் விரைவாக பலத்தை {படையை} ஆயத்தம் செய்தான்.(22) பலவான்களும், கோர ரூபம் கொண்டவர்களுமான அந்த நிசாசரர்கள் {இரவுலாவிகள்}, மணிகளைக் கட்டி ஒலித்தபடியே மகிழ்ச்சியாக தூம்ராக்ஷனைச் சூழ்ந்தனர்.(23) அவர்கள் தங்கள் கைகளில் விதவிதமான ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். சூலங்கள், முத்கரங்கள், கதைகள், பட்டிசங்கள், தண்டங்கள், ஆயசங்கள், முசலங்கள்,{24} பரிகங்கள், பிண்டிபாலங்கள், பல்லங்கள், பாசங்கள், பரஷ்வதங்கள் {கோடரிகள்} ஆகியவற்றைக் கைகளில் கொண்டிருந்த கோர ராக்ஷசர்கள், மேகங்களைப் போல் முழங்கியபடியே வெளியே வந்தனர்.(24,25) கவசங்கள் அணிந்து கொண்டு, துவஜங்களாலும், ஸ்வர்ண ஜாலங்களாலும் {தங்கச் சாளரங்களாலும்} அலங்கரிக்கப்பட்டவையும், விதவிதமான முகங்களைக் கொண்ட கோவேறுகழுதைகள் பூட்டப்பட்ட ரதங்களிலும்,{26} பரம சீக்கிரமாகச் செல்லக்கூடிய ஹயங்களிலும் {குதிரைகளிலும்}, மதங்கொண்ட கஜேந்திரங்களிலும் {தலைமை யானைகளிலும்} ஏறிக் கொண்ட நைர்ருதவியாகரர்கள் {ராக்ஷசப்புலிகள்}, வெல்வதற்கரிய புலிகளைப் போல வெளியே வந்தனர்.(26,27) 

Hanuman seeing Dhumraksha

கழுதையின் ஸ்வனம் கொண்ட தூம்ராக்ஷன், மான், சிங்கம் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவையும், கனகத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்டவையுமான கழுதைகள் பூட்டப்பட்ட திவ்யமான ரதத்தில் ஏறினான்.(28) இராக்ஷசர்களால் சூழப்பட்ட மஹாவீரியனான அந்த தூம்ராக்ஷன், யூதபனான ஹனுமான் எங்கிருந்தானோ அந்த பஷ்சிம துவாரத்தில் {மேற்கு வாயிலில்} இருந்து சிரித்துக் கொண்டே வெளியே வந்தான்.(29)

கழுதையின் ஸ்வனம் கொண்டவனும், கழுதைகள் பூட்டப்பட்ட சிறந்த ரதத்தில் ஏறியவனும், மஹாகோரனும், பீம தரிசனம் தருபவனுமான அந்த ராக்ஷசன், அவ்வாறு சென்ற போது, அந்தரிக்ஷத்தில் {வானத்தில்} கோரமான பறவைகள் குறுக்கிட்டன.(30,31அ) மஹாபயங்கரமான கிருத்ரம் {கழுகு} ரதத்தின் உச்சியில் இறங்கியது. குசபாசனங்கள் {பிணந்தின்னிக் கழுகுகள்} வரிசையாக துவஜத்தின் உச்சியில் வந்தமர்ந்தன.(31ஆ,32அ) உதிரம் பெருக்கிக் கொண்டிருந்த மஹா கபந்தம் {தலையற்ற உடல்} கேட்பதற்கரிய நாதத்தை வெளியிட்டபடியே தூம்ராக்ஷனின் சமீபத்தில் புவியில் விழுந்தது. {மழைக்குரிய} தேவன் உதிரத்தைப் பொழிந்தான். மேதினி நடுங்கினாள்.(32ஆ,33) இடிக்கு ஒப்பான ஒலியுடன் கூடிய வாயு எதிராக வீசியது. அப்போது திசைகள் பிரகாசிக்காமல் இருளில் மூழ்கி புலப்படாதவையாக இருந்தன.(34)

அப்போது, முன்னே சென்று கொண்டிருந்த தூம்ராக்ஷன், சர்வ ராக்ஷசர்களுக்கும் பயத்தைத் தரும் வகையில் தோன்றும் கோரமான உத்பாதங்களைக் கண்டு கலக்கமடைந்தான்.(35,36அ) பிறகு, பயங்கரமானவனும், பலவானும், ஏராளமான நிசாசரர்களால் {இரவுலாவிகளால்} சூழப்பட்டவனுமான அவன் {தூம்ராக்ஷன்}[3], போரில் கொண்ட உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்று, ஏராளமான வானரர்களைக் கொண்டதும், பெரும் வெள்ளத்திற்கு {கடலுக்கு} ஒப்பானதும், ராமனின் கைகளால் பாலிக்கப்படுவதுமான அந்த சம்முவை {படையைக்} கண்டான்.(36ஆ,இ)
 
[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராமலக்ஷ்மணர்கள் நாகபாசக் கட்டுண்ட ராத்ரி ப்ரதமை என்பர்கள். மற்றை நாள் த்விதீயையினன்று தூம்ராக்ஷன் யுத்தத்திற்கு வந்தானென்று தெரிகிறது" என்றிருக்கிறது.

யுத்த காண்டம் சர்க்கம் – 051ல் உள்ள சுலோகங்கள்: 36

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை