Consolation of Trijata | Yuddha-Kanda-Sarga-048 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சோகத்தில் மூழ்கிய சீதை; அவளுக்கு நம்பிக்கை அளித்து மீண்டும் அசோக வனிகைக்கு இட்டுச் சென்ற திரிஜடை...
சீதை, தன் பர்த்தாவையும், மஹாபலவானான லக்ஷ்மணனையும் கொல்லப்பட்டவர்களாகக் கண்டு சோகத்தில் மூழ்கி கருணைக்குரிய வகையில் {பின்வருமாறு} அழுது புலம்பினாள்[1]:(1) “எந்த லக்ஷணிகர்கள் {லக்ஷணம் தெரிந்தவர்கள்}, என்னை புத்ரிணீ என்றும், அவிதவேதி என்றும் {புத்திர பாக்கியமுள்ளவள் என்றும், விதவையாகாத நித்யசுமங்கலி என்றும்} சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும், ராமர் கொல்லப்பட்டதால் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(2) யாவர் என்னை யஜ்ஞங்கள் செய்பவரின் மஹிஷி {பட்டத்து ராணி} என்றும், சாஸ்திரங்களை அறிந்தவரின் பத்தினி {மனைவி} என்றும் சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும் ராமர் கொல்லப்பட்டதால் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(3) யாவர் என்னை பர்த்தாவால் {கணவனால்} பூஜிக்கப்படுபவள் என்றும், வீர பார்த்திபனின் பத்தினி என்றும் சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(4) கார்தாந்திகர்களான எந்த துவிஜர்கள் {சோதிடர்களான இருபிறப்பாளர்கள் யாவர்} என்னை சுபமானவள் என்று உறுதியாகச் சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும் ராமர் கொல்லப்பட்டதால் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(5)
[1] விழுந்தாள் புரண்டாள் உடல் முழுதும்வியர்த்தாள் அயர்த்தாள் வெதும்பினாள்எழுந்தாள் இருந்தாள் தளிர்க் கரத்தைநெரித்தாள் சிரித்தாள் ஏங்கினாள்கொழுந்தா என்றாள் அயோத்தியர்தம்கோவே என்றாள் எவ்வுலகும்தொழும் தாள் அரசேயோ என்றாள்சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள்- கம்பராமாயாணம் 8679ம் பாடல், யுத்த காண்டம், சீதை களம் காண் படலம்பொருள்: விழுந்தாள், புரண்டாள், உடல் முழுவதும் வியர்த்தாள், பெருமூச்சுவிட்டாள், மனம் வெதும்பினாள், எழுந்தாள், அமர்ந்தாள், தன் கைகளை நெரித்துச் சிரித்தாள், ஏங்கினாள், “கொழுந்த” என்றாள், “அயோத்தியின் அரசே” என்றாள், எவ்வுலகத்தவரும் வந்து தொழுவதற்குரிய அரசே” என்றாள், சோர்ந்தாள், பின்பு அரற்றத் தொடங்கினாள்.
குலஸ்திரீகள் எவற்றால் நரேந்திரனான பதியை {மனிதர்களின் தலைவனான கணவனை} அடைந்து, அதிராஜ்ஜியத்தில் அபிஷேகிக்கப்படுவார்களோ, அத்தகைய பத்ம {தாமரை} ரேகைகள் இதோ என் பாதங்களில் இருக்கின்றன.(6) பாக்கியம் துர்லபமான நாரியைகளுக்கு எது வைதவ்யத்தை {பெண்களுக்கு எது விதவைத் தன்மையை} அளிக்குமோ, அந்த அலக்ஷணங்களை என்னிடம் பார்க்கவில்லை. என் லக்ஷணங்கள் அனைத்தும் வீணாகிப் போனதையே நான் பார்க்கிறேன்.(7) ஸ்திரீகளிடம் பத்ம லக்ஷணம் சத்தியமாக நற்பலன்களை அளிக்கும் என்று சொல்லப்படுகிறது. என்னிடமுள்ள அத்தகையவை ராமர் கொல்லப்பட்டதால் பயனற்றவை ஆகின.(8) என் கேசம், சூக்ஷ்மமாகவும், நீலமாகவும் {தலைமுடி மென்மையாகவும், கருப்பாகவும்}, புருவங்கள், சமமாகவும், ஒன்று சேராமலும் இருக்கின்றன. என் கெண்டைக்கால்கள் உருண்டவையாகவும், ரோமமற்றவையாகவும் {முடிகளற்றவையாகவும்} இருக்கின்றன. பற்கள் இடைவெளியின்றி இருக்கின்றன.(9) என் கன்னங்களும், நேத்ரங்களும் {கண்களும்}, கரங்களும், பாதங்களும், கணுக்கால்களும், தொடைகளும் சமமாகவும், சதைப்பற்றுடனும் இருக்கின்றன. விரல்கள் வட்டமான நகங்களுடன், மென்மையாகவும், சமமாகவும் இருக்கின்றன.(10) என் ஸ்தனங்கள் இடைவெளியின்றி இணைந்தும், பருத்தும், உள்ளடங்கிய காம்புகளுடனும், நாபி {உந்தி} உள்ளடங்கியும், விலாப்புறங்களுடன் கூடிய மார்பின் மேற்புறம் சதைப்பற்றுடனும் இருக்கின்றன.(11)
என் வர்ணம் மணிக்கு {ரத்தினங்களுக்கு} ஒப்பானதாகவும், என் தோலின் மயிர் மிருதுவானதாகவும் இருக்கின்றன. என்னுடைய பத்து விரல்களும், இரண்டு உள்ளங்கால்களும் நிலத்தில் படிந்தால் சுபலக்ஷணத்தை வெளிப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.(12) “சிவந்தவையும், யவரேகையுடன் {நெற்கதிர் போன்ற ரேகையுடன்} கூடியவையுமான உள்ளங்கைகளும், பாதங்களும் இடையில் இடைவெளியின்றி இருக்கின்றன. கன்யாலக்ஷணிகர்கள் {பெண்களின் லக்ஷணங்களை அறிந்தவர்கள்}, “மந்தஸ்மிதை {மென்புன்னகையுடைவள்}” என்று என்னைக் குறித்து சொன்னார்கள்.(13) கிருதாந்த குசலர்களான {குறி சொல்பவர்களான / சோதிடர்களான} பிராமணர்கள், “ஆதி ராஜ்ஜியத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட பதியுடன் கூடியவள்” என்று என்னைக் குறித்துச் சொன்ன யாவும் வீணானது.(14) உடன்பிறந்தோர் இருவரும், ஜனஸ்தானமெங்கும் தேடி, நடந்தவற்றை அறிந்து, {என்னை} அடைவதற்காக, கலங்கடிக்க முடியாத {கடப்பதற்கரிய} சாகரத்தைக் கடந்து, கோஷ்பதத்தில் {மாட்டுக் குளம்படி நீர் போன்ற இந்திரஜித்தின் மாயையில்} மாண்டனர்.(15) இராகவர்கள் இருவரும், வாருணம், ஆக்னேயம், ஐந்த்ரம், வாயவ்யம், பிரஹ்மசிரம் உள்ளிட்ட அஸ்திரங்களைப் பயன்படுத்த நன்கு அறிந்தவர்களாயிற்றே {அவற்றை ஏன் பயன்படுத்தவில்லை?}(16)
அநாதையான எனக்கு நாதர்களும், வாசவனுக்கு {வீரத்தில் இந்திரனுக்கு} ஒப்பானவர்களுமான ராமலக்ஷ்மணர்கள் இருவரும் ரணத்தில் {போரில்} மாயையைப் பயன்படுத்தி புலப்படாதிருந்தவனால் {இந்திரஜித்தால்} கொல்லப்பட்டனர்.(17) பகைவன் மனோவேகம் கொண்டவனாக இருந்தாலும், ரணத்தில் புலப்படுபவனாக, ராகவரின் திருஷ்டிபதத்தில் {பார்வை படும் இடத்தில்} இருந்தால், ஜீவனுடன் திரும்பிப் போக மாட்டான்.(18) உடன்பிறந்தவரோடு ராமர் யுத்தத்தில் வீழ்த்தப்பட்டுக் கிடக்கிறார். காலனுக்கு அதிபாரமானது {மிகச் சுமையானது} யாதொன்றும் இல்லை. கிருதாந்தம் துர்ஜயம் {வினைப்பயன் / விதி வெல்வதற்கரியது}.(19) தபஸ்வினியான மாமியாரை {பரிதாபத்திற்குரிய என் மாமியார் கௌசல்யையைக்} குறித்து எப்படியோ, அப்படி ராமரையோ, மஹாரதரான லக்ஷ்மணரையோ, என்னையோ, என் ஜனனீயையோ {என் தாயாரையோ} குறித்தும் நான் வருந்தவில்லை.(20) அவள் {கௌசல்யை}, “விரதத்தை நிறைவேற்றித் திரும்பும் ராகவனையும், லக்ஷ்மணனையும், சீதையையும் எப்போது நான் பார்க்கப் போகிறேன்?” என்றே நித்யம் சிந்தித்துக் கொண்டிருப்பாள்[2]” {என்றாள் சீதை}.(21)
[2] உய்யாள், உயர் கோசலை தன் உயிரோடுஐயா இளையோர் அவர் வாழ்கிலரால்மெய்யே வினை எண்ணி விடுத்த கொடுங்கைகேசி கருத்து இதுவோ களிறே- கம்பராமாயணம் 8685ம் பாடல், யுத்த காண்டம், சீதை களம் காண் படலம்பொருள்: ஆண்யானையே, தலைவா, உயர்ந்த பண்புகளைக் கொண்ட கோசலை தன் உயிர் தரித்திருக்க மாட்டாள். இளையவர்கள் {பரதன், சத்ருக்னன் ஆகியோர்} வாழ்ந்திருக்க மாட்டார்கள். வினை நினைத்து {காட்டிற்கு} அனுப்பிய கொடுந்தன்மை கொண்ட கைகேயியின் கருத்து உண்மையில் இதுதானோ?
இப்படி பரிதவித்துக் கொண்டிருந்தவளிடம் {சீதையிடம்}, ராக்ஷசி திரிஜடை {பின்வருமாறு} சொன்னாள், “தேவி, கவலைப்படாதே. உன் பர்த்தாவான {கணவனான} இவன் ஜீவித்திருக்கிறான்.(22) தேவி, உடன்பிறந்தோரான இந்த ராமலக்ஷ்மணர்கள் எப்படி ஜீவித்திருக்கிறார்கள் என்பதற்கான மஹத்தான, பொருத்தமான காரணங்களை நான் சொல்கிறேன்.(23) பதி {தலைவன்} கொல்லப்பட்டால், யுத்தத்தில் போர்வீரர்களின் முகங்கள் கோபத்தால் பீடிக்கப்பட்டனவாகவோ, மகிழ்ச்சியில் தெளிவுற்றனவாகவோ இருக்காது[3].(24) வைதேஹி, உண்மையில் இவ்விருவரும் ஜீவிதம் இழந்திருந்தால் திவ்யமானதும், நாமத்தால் {பெயரால்} புஷ்பகம் என்று அழைக்கப்படுவதும் இந்த விமானம் உன்னைத் தரித்திருக்காது.(25) பிரதான வீரன் கொல்லப்பட்ட சேனை, உற்சாகம் இழந்து, செயலற்று, ஜலத்தில் கர்ணதாரன் இல்லாத நாவத்தை {படகோட்டி இல்லாத படகைப்} போல, போர்க்களத்தில் இலக்கின்றி திரியும்.(26) மேலும் இந்த சேனை குழப்பமோ, கலக்கமோ அடையாமல் காகுத்ஸ்தர்களை {ராமலக்ஷ்மணர்களை} ரக்ஷிக்கிறது. தபங்களைச் செய்பவளான சீதே, இதை உன் மீது கொண்ட பிரீதியால் சொல்கிறேன்.(27)
[3] விவேக் தேவ்ராய் {பிபேக் தேப்ராய்} பதிப்பின் அடிக்குறிப்பில், “இந்த வாக்கியம் தெளிவானதாக இல்லை. ஒருவேளை போர்வீரர்கள் பலர் சுற்றிலும் நிற்காமல், வேறேதோ செய்து கொண்டிருக்கின்றனர் என்ற பொருளில் சொல்லப்பட்டிருக்கலாம்” என்றிருக்கிறது.
சுகத்தை உதயமாக்கும் இந்த அனுமானங்களால் நீ நிம்மதி அடைவாயாக. கொல்லப்படாதிருக்கும் காகுத்ஸ்தர்களைப் பார். உன் மீது கொண்ட சினேகத்தால் இதைச் சொல்கிறேன்.(28) மைதிலி, நான் இதுவரை பொய் சொன்னதில்லை. இனியும் சொல்ல மாட்டேன். சாரித்ர சுக சீலத்வத்தால் {நன்னடத்தையாலும், நல்ல ஒழுக்கத்தாலும்} நீ என் மனத்திற்குள் பிரவேசித்திருக்கிறாய்.(29) இந்திரன் உள்ளிட்ட ஸுராஸுரர்களாலும் ரணத்தில் இவ்விருவரையும் வெல்ல இயலாது. இத்தகைய அடையாளங்களை தரிசனமாகக் கண்டு நான் உனக்குச் சொல்கிறேன்.(30) மைதிலி, இந்த மஹத்தான ஆச்சரியத்தை {அடையாளத்தைப்} பார். அவ்விருவரும் சரங்கள் விழுந்து நனவற்றவர்களாக இருப்பினும், லக்ஷ்மீ {செழித்த முகக்களை} அவர்களை விட்டுப் பிரியவில்லை.(31) பொதுவாக, ஆயுசு தீர்ந்து, உயிர் இழந்த புருஷர்களின் முகங்களைப் பார்க்கும்போது {விகாரமான} பெரும் மாற்றம் தெரியும்.(32) ஜனகாத்மஜே {ஜனகனின் மகளே}, ராமலக்ஷ்மணர்களுக்கான சோகம், மோஹம் இரண்டையும் கைவிடுவாயாக. அஜீவிதம் சாத்தியமில்லை {உயிரில்லாமல் போவது சாத்தியமில்லை}” {என்றாள் திரிஜடை}.(33)
ஸுரர்களின் மகளுக்கு ஒப்பானவளும், மைதிலியுமான சீதை, அவளது {திரிஜடையின்} வசனத்தைக் கேட்டுக் கைகளைக் கூப்பி, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னாள்.(34) திரிஜடை மனோவேகத்துடன் கூடிய புஷ்பக விமானத்தை அங்கிருந்து திருப்பி, தீனமாக இருந்த சீதையுடன் மீண்டும் லங்கைக்குள் பிரவேசித்தாள்.(35) அதன்பிறகு, திரிஜடையுடன் கூடியவள் {சீதை}, புஷ்பகத்தைவிட்டுக் கீழே இறங்கி அசோகவனிகைக்குள் பிரவேசித்தாள்.(36) சீதை, பல விருக்ஷங்கள் அடர்ந்த ராக்ஷசேந்திரனின் அந்த விஹார பூமிக்குள் பிரவேசித்து, உற்று கவனித்தபடியே ராஜபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரையும் நினைத்துப் பெரும் துயரத்தை அடைந்தாள்.(37)
யுத்த காண்டம் சர்க்கம் – 048ல் உள்ள சுலோகங்கள்: 37
Previous | | Sanskrit | | English | | Next |