Friday, 18 October 2024

முதல் மோதல் | யுத்த காண்டம் சர்க்கம் - 042 (48)

First encounter | Yuddha-Kanda-Sarga-042 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலங்கையின் வடக்கு வாயிலில் நிலை கொண்ட ராமலக்ஷ்மணர்கள்; தன் படையைத் திரட்டிய ராவணன்; இராட்ச வானரப் படைகளுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதல்...

War between Rakshasas and Vanaras

பிறகு, ராவணமந்திரத்திற்கு {ராவணனின் ஆலோசனை மண்டபத்திற்குச்} சென்ற அந்த ராக்ஷசர்கள், புரீயை {தங்கள் நகரத்தை} ராமனும், வானரர்களும் முற்றுகையிட்டிருப்பதைத் தெரிவித்தனர்.(1) நகரம் முற்றுகையிடப்பட்டதைக் கேட்டுப் பெருங்கோபமடைந்த நிசாசரன் {இரவுலாவியான ராவணன்}, பாதுகாப்பை இரண்டு மடங்காக்கிவிட்டு பிராசாதத்தின் {மதிலின்} மேல் ஏறி நின்றான்.(2) அவன், யுத்தத்தை விரும்புகிறவர்களும், எண்ணற்றவர்களுமான ஹரிகணங்களால் {குரங்குக் கூட்டத்தினரால்} சைலங்கள், வனங்கள் நிறைந்த லங்கை முழுவதும் முற்றுகையிடப்பட்டிருப்பதைக் கண்டான்.(3) அவன், வசுதை எங்கும் வானரர்கள் நிறைந்திருப்பதைக் கண்டு, அவர்களை எப்படி அழிப்பது என்ற எண்ணத்துடன் சிந்திக்கத் தொடங்கினான்.(4) நீண்ட நேரம் சிந்தித்த அந்த ராவணன், தைரியத்தைத் திரட்டிக் கொண்டு, ஆலோசனையை வெளிப்படுத்தும் கண்களுடன் ராகவனையும், ஹரியூதபர்களையும் {குரங்குக் குழுத் தலைவர்களையும்} கண்டான்.(5)

இராகவன், சைனியத்துடன் சேர்ந்து {வடக்கு வாயிலை} மகிழ்ச்சியாக நெருங்கி, எங்கும் ராக்ஷசர்களால் சூழப்பட்டுக் காக்கப்படும் லங்கையைக் கண்டான்.(6) தாசரதி {தசரதனின் மகனான ராமன்}, சித்திர துவஜ, பதாகைகளுடன் {கொடிமரங்கள், கொடிகள் ஆகியவற்றால்} அலங்கரிக்கப்பட்ட லங்கையைக் கண்டவுடனேயே பதைக்கும் மனத்துடன் சீதையைக் குறித்து {பின்வருமாறு} சிந்தித்தான்:(7) "இங்கே மான்விழியாளான அந்த ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை}, என் காரணமாக சோகத்தில் மூழ்கி, மெலிந்து, வெறுந்தரையையே படுக்கையாகக் கொண்டு துன்புறுகிறாள்" {என்று நினைத்தான் ராமன்}.(8) அந்த தர்மாத்மா {ராமன்}, வைதேஹியைக் குறித்த சிந்தித்தனையால் அதிகம் பீடிக்கப்பட்டு, பகைவரை வதைக்குமாறு வானரர்களிடம் சீக்கிரமே ஆணையிட்டான்.(9) களைப்பில்லாமல் கர்மங்களை ஆற்றக்கூடியவன் {ராமன்}, இவ்வாறு ஆணையிட்டதும், அவனது வசனத்தைக் கேட்ட பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்} போருக்கான ஆயத்தத்துடன் சிம்ம நாதம் செய்தனர்.(10)

ஹரியூதபர்கள் {குரங்குக் குழுத் தலைவர்கள்} அனைவரும், "இந்த லங்கையைச் சிகரங்களைக் கொண்டோ, முஷ்டிகளாலோ சிதறடிப்போம்"  என்று மனத்திற்குள் நினைத்தனர்.(11) அந்த ஹரியூதபர்கள், கிரிசிருங்கங்களையும் {மலைச் சிகரங்களையும்}, பெரும் பாறைகளையும், விதவிதமான மரங்களையும் வேருடன் பிடுங்கி {தாக்குதலுக்குத்} தயாராக நின்றனர்.(12) பிறகு, பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த அந்தப் படையினர் ராக்ஷசேந்திரன் {ராவணன்} நின்று பார்த்துக் கொண்டிருந்தபோதே, ராமனின் பிரியத்திற்குரிய விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு லங்கையின் மீது தாவினர்.(13) 

தாமிர முகமும் {சிவந்த முகமும்}, ஹேமவண்ணமும் {தங்க நிறமும்} கொண்டவர்களான அவர்கள், ராமனுக்காகத் தங்கள் ஜீவிதத்தையும் கைவிடக்கூடியவர்களாக சால, தாலங்களையும் {ஆச்சா மரம், பனை மரம் ஆகியவற்றையும்}, பாறைகளையும் ஆயுதங்களாகக் கொண்டு லங்கைக்குச் சென்றனர்.(14) அந்தப் பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்}, மரங்களையும், பர்வத உச்சிகளையும், தங்கள் முஷ்டிகளையும் கொண்டு எண்ணற்ற பிராகாரங்களையும், தோரணங்களையும் நொறுக்கினர்.(15) மண்கட்டிகள், பர்வத உச்சிகள், புற்கள், கட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு தெளிந்த நீர் கொண்ட அகழியை வானரர்கள் தூர்த்தனர்[1].(16)

[1] தடங்கொள் குன்றும் மரங்களும் தாங்கியே
மடங்கல் அன்ன அவ்வானர மாப்படை
இடங்கர் மா இரிய புனல் ஏறிட
தொடங்கி வேலை அகழியைத் தூர்த்ததால்

- கம்பராமாயணம் 7020ம் பாடல், யுத்த காண்டம், முதற் போர் புரி படலம்

பொருள்: பெரிய மலைகளையும், மரங்களையும் ஏந்தி வந்தவர்களும் சிங்கத்தைப் போன்றவர்களுமான அந்த வானரப்படையினர், முதலை போன்ற நீர்வாழ் உயிர்கள் நிலை கெட்டோட, நீர் தளும்பி வழியச் செய்யும் வகையில் பணியைத் தொடங்கி, கடல் போன்ற அகழியைத் தூர்த்தனர்.

பிறகு யூதபர்கள், ஆயிரக்கணக்கானவர்களுடன் கூடிய யூதத்துடனும், கோடி கணக்கானவர்களுடன் கூடிய யூதத்துடனும், நூறு கோடி கணக்கானவர்களுடன் கூடிய யூதத்துடனும் லங்கையில் நுழைந்தனர்.(17) அந்தப் பிலவங்கமர்கள் காஞ்சனத் தோரணங்களை {பொன்வளை வாயில்களை} நொறுக்கியபடியும், கைலாச சிகரத்திற்கு ஒப்பான கோபுரங்களைத் தகர்த்தபடியும் சென்றனர்.(18) மஹாவாரணங்களுக்கு {பெரும் யானைகளுக்கு} ஒப்பான பிலவங்கமர்கள், குதித்தபடியும், தாவியபடியும், கர்ஜித்துக் கொண்டே அந்த லங்கையை நோக்கி விரைந்தனர்.(19) "அதிபலவானான ராமருக்கும், மஹாபலவானான லக்ஷ்மணருக்கும் ஜயம் உண்டாகட்டும். இராகவரால் பாதுகாக்கப்படும் ராஜா சுக்ரீவருக்கும் ஜயம் உண்டாகட்டும்",{20} இவ்வாறு காமரூபிகளான பிலவங்கமர்கள் {விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவர்களும், தாவிச் செல்பவர்களுமான வானரர்கள்}, கோஷம் எழுப்பி கர்ஜித்தபடியே லங்கையின் பிராகாரத்தை {கோட்டை மதிற்சுவரை} நோக்கி விரைந்து சென்றனர்.(20,21)

வனகோசரர்களான {வனத்தில் திரிபவர்களான} வீரபாஹு, சுபாஹு, நளன் முதலிய ஹரியூதபர்கள் {குரங்குக்குழுத் தலைவர்கள்}, பிராகாரத்தைப் பீடித்து, உட்புகுந்து அந்த இடைவெளியில் படையின் ஒரு பிரிவை  நிலைநிறுத்தினர்.(22,23அ) பலவானான குமுதன், வெற்றியடைந்தவர்களைப் போல நடந்து கொள்ளும் பத்துக் கோடி ஹரிக்கள் {குரங்குகள்} சூழ, பூர்வ துவாரத்தை {கிழக்கு வாயிலை} முற்றுகையிட்டு நின்றான்.(23ஆ,24அ) பிரகசன்[2] என்ற ஹரியும் {குரங்கானவனும்}, மஹாபாஹுவான பனசனும், பல வானரர்களால் சூழப்பட்டவர்களாக அவனுக்கு {குமுதனுக்கு} உதவியாக நின்றனர்.(24ஆ,25அ) பலவானும், வீரனுமான சதபலி என்ற கபி {குரங்கானவன்}, இருபது கோடிபேரால் சூழப்பட்டவனாக தக்ஷிண துவாரத்தை {தெற்கு வாயிலை} அடைந்து முற்றுகையிட்டான்.(25ஆ,26அ) பலமிக்கவனும், தாரையின் பிதாவுமான சுஷேணன், அறுபது கோடிபேர் சூழ, பஷ்சிம துவாரத்தை {மேற்கு வாயிலை} முற்றுகையிட்டான்.(26ஆ,27அ) 
 
[2] தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில் மட்டும் இந்தப் பெயர், "பிரஸபன்" என்றிருக்கிறது.

இராமன், சௌமித்ரி சகிதனாக உத்தர துவாரத்தை {வடக்கு வாயிலை} அடைந்து, பலவானும், ஹரீஷ்வரனுமான {குரங்குகளின் தலைவனுமான} சுக்ரீவனுடன் சேர்ந்து முற்றுகையிட்டான்.(27ஆ,28அ) சத்ருக்களை அழிப்பவனும், {ஜாம்பவானின் தமையனும்}, மஹாவீரியனுமான தூம்ரன், பீம வேகம் கொண்ட கோடிக்கணக்கான ரிக்ஷங்களுடன் {கரடிகளுடன்} கூடியவனாக ராமனின் அருகில் நின்றிருந்தான்.(28ஆ,29அ) மஹாகாயனும், பீமதரிசனனுமான {பேருடல் படைத்தவனும், பயங்கரத் தோற்றமுடையவனுமான} கவாக்ஷன், மஹா வீரியஸ்தர்களான கோடிக்கணக்கான கோலாங்கூலர்கள் சூழ ராமனின் அருகில் நின்றான்[3].(29ஆ,30அ) மஹாவீரியனான விபீஷணன், கதாபாணியாக {கையில் கதாயுதத்துடன்}, கவசம் தரித்தவனாக, மஹாபலம் கொண்ட அமைச்சர்களுடன் ராமன் இருந்த இடத்தில் நின்றிருந்தான்.(30ஆ,31அ) கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதனன் ஆகியோர் எங்கும் திரிந்தபடியே அந்த ஹரிவாஹினியை {குரங்குப் படையை} ரக்ஷித்துக் கொண்டிருந்தனர்.(31ஆ,32அ)

[3] தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில் இந்த சுலோகம் விடுபட்டிருக்கிறது. இந்தப் பதிப்பைத் தவிர, செம்பதிப்பான விவேக் தேவ்ராய் உள்ளிட்ட அனைத்துப் பதிப்புகளிலும் இந்த சுலோகம் இருக்கிறது. இங்கே ராமனின் அருகில் நிற்பவனாகக் குறிப்பிடப்படும் கவாக்ஷன், மீண்டும் 31ம் சுலோகத்தில் எங்கும் திரிபவனாகக் குறிப்பிடப்படுகிறான். 

அப்போது, ராக்ஷசேஷ்வரன் ராவணன் கோபத்தால் நிறைந்தான். பிறகு, "புறப்பட்டுச் செல்வீராக" என்று தன் சர்வ சைனியங்களுக்கும் அவன் ஆணையிட்டான்.(32ஆ,33அ) இராவணனின் முகத்தில் {வாயில் இருந்து} வெளிப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்ட உடனேயே, ரஜனீசரர்கள் {இரவுலாவிகள்} பயங்கர கோஷமிட்டனர்.(33ஆ,34அ) பிறகு, பயங்கர ராக்ஷசர்கள், சந்திரன் போன்ற வெண்மையான பேரிகைகளை ஹேமகோணங்களால் {பொற்கோல்களால்} அடித்தனர்.(34ஆ,35அ) நூறாயிரம் கோர ராக்ஷசர்களின் முகமாருதத்தால் {வாய்காற்றால்} நிரப்பப்பட்ட மஹாகோஷத்துடன் சங்குகள் முழங்கின.(35ஆ,36அ) அழகிய நீல அங்கம் {கறுத்த மேனியைக்} கொண்டவர்களும், சங்குகளுடன் கூடியவர்களுமான ரஜனீசரர்கள் {இரவுலாவிகள்}, மின்னற்கீற்றுகளுடனும், கொக்குகளுடனும் கூடிய மேகங்களைப் போலப் பிரகாசித்தனர்.(36ஆ,37அ) இராவணனால் தூண்டப்பட்டபோது, மகிழ்ச்சியடைந்த சைனியம், {பிரளய காலத்தில் / மேகத்தின் தூண்டுதலால்} பொங்கும் மஹோததியை {பெருங்கடலைப்} போல வேகமாக விரைந்தது.(37ஆ,38அ)

அப்போது, வானர சைனியத்தில் இருந்து எங்கும் வெளிப்பட்ட நாதம், குகைகள், தாழ்வரைகள், வனங்கள் ஆகியவற்றுடன் கூடிய மலயத்தை {மலய மலையை}[4] நிறைத்தது.(38ஆ,39அ) சங்கு, துந்துபிகளின் கோஷமும், அந்த {ராக்ஷச, வானர} வீரர்களின் சிம்மநாதமும், பிருத்வியிலும், அந்தரிக்ஷத்திலும், சாகரத்திலும் {பூமியிலும், வானத்திலும், கடலிலும்} எதிரொலித்தன.(39ஆ,40அ) கஜங்களின் {யானைகளின்} பிளிறலும்,  ஹயங்களின் {குதிரைகளின்} கனைப்பொலியும், ரதங்களின் சக்கர சடசடப்பொலியும், ராக்ஷசர்களின் பாதஸ்வனமும் {காலடி ஓசையும்} அங்கே எதிரொலித்தன.(40ஆ,41அ)

[4] தர்மாலயப் பதிப்பிலும், நரசிம்மாசாரியர் பதிப்பில், இங்கே "திரிகூட பர்வதம்" என்றிருக்கிறது. தமிழில் கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பிலும், ஆங்கிலப் பதிப்புகள் அனைத்திலும், "மலயம்" என்றே இஃது இருக்கிறது.

அதேவேளையில் பூர்வத்தில் தேவாஸுரர்களுக்கு இடையில் எப்படியோ, அப்படியே ராக்ஷசர்களுக்கும், வானரர்களுக்கும் இடையில் எங்கும் கோரமான போர் நடந்தது.(41ஆ,42அ) அவர்கள் {ராக்ஷசர்கள்} தங்கள் விக்கிரமத்தைப் புகழ்ந்து கொண்டே, கதைகள், சுடர்மிக்க சக்தி, சூலம், பரசுகள் ஆகியவற்றைக் கொண்டு சர்வ வானரர்களையும் தாக்கினர்.(42ஆ,43அ) அதேபோல பேருடல் படைத்த வானரர்களும், அந்த ராக்ஷசர்களை விருக்ஷங்கள், பர்வத உச்சிகள் ஆகியவற்றைக் கொண்டும், நகங்களாலும், பற்களாலும் வேகமாகத் தாக்கியபடியே, "இராஜா சுக்ரீவருக்கு ஜயம் உண்டாகட்டும்" என்று மஹா சப்தத்தை எழுப்பினர்.(43ஆ,44) 

அப்போது, வேறு சில ராக்ஷசர்கள், "ராஜருக்கு ஜயம், ஜயம்" என்று பிராகாரத்தில் {மதில்மேல்} நின்று, தங்கள் தங்களுக்குரிய பெயர்களைச் சொல்லிக் கொண்டு, தரையில் நிற்கும் வானரர்களை பிண்டிபாலங்களையும், சூலங்களையும் கொண்டு தாக்கினர்.(45,46அ), மஹீயில் நின்ற வானரர்களும் குரோதமடைந்து, வானத்தில் குதித்து, பிராகாரத்தில் நிற்கும் ராக்ஷசர்களைத் தங்கள் கைகளைக் கொண்டு கீழே இழுத்துப் போட்டனர்.(46ஆ,47அ) இராக்ஷசர்களுக்கும், வானரர்களுக்கும் இடையில் நடந்த அந்த ஆரவாரமிக்க போரானது, எங்கும் மாமிசம், சோணிதம் கலந்த சேற்றுடன் கூடியதாக ஒப்பற்ற வகையில் அற்புதமாக நடந்தது.(47ஆ,48)

யுத்த காண்டம் சர்க்கம் – 042ல் உள்ள சுலோகங்கள்: 48

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை