Thursday 3 October 2024

இராமனின் திட்டம் | யுத்த காண்டம் சர்க்கம் - 037 (38)

Plan of Rama | Yuddha-Kanda-Sarga-037 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலங்கையைப் பாதுகாக்க ராவணன் செய்யும் ஏற்பாடுகளை வெளிப்படுத்திய விபீஷணன்; இராமனும், சுக்ரீவனும் வெற்றி அடைவதற்கான திட்டங்களைக் குறித்து கலந்தாலோசித்தது...

Rama speaking to Vibheeshana


நர, வானர ராஜர்கள் இருவரும் {மனிதர்களின் மன்னனான ராமன், வானரர்களின் மன்னனான சுக்ரீவன் ஆகிய இருவரும்}, கபியான அந்த வாயுசுதனும் {வாயுவின் மைந்தனும், குரங்குமான ஹனுமானும்}, ரிக்ஷராஜன் ஜாம்பவானும், ராக்ஷசன் விபீஷணனும்,{1} வாலி புத்திரன் அங்கதனும், சௌமித்ரியும் {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணனும்}, கபியான சரபனும், தாயாதிகளுடன் கூடிய சுஷேணன், மைந்தன், துவிவிதனும்,{2} கஜனும், அதேபோல கவாக்ஷனும், குமுதனும், அதேபோல நளனும், பனசனும், அமித்ர விஷயத்தை அடைந்து {பகைவரின் நகரை அடைந்து} திரண்டு கூடி {பின்வருமாறு} ஆலோசித்தனர்:(1-3) "இராவணனால் பாலிதம் செய்யப்படுவதும், அமரர்களாலோ, அசுரர்களாலோ, உரக, கந்தர்வர்களாலோ வெல்லப்பட முடியாததுமான அந்த லங்காபுரியை இதோ பாருங்கள்.(4) காரியசித்திக்காக முன்கூட்டியே ஆலோசித்து {செய்ய வேண்டியனவற்றை} நிர்ணயம் செய்வோம். இராக்ஷசாதிபன் ராவணன் நித்யம் அங்கேயே இருப்பான்" {என்றனர்}.(5)

இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, ராவணாவரஜனான {ராவணனின் தம்பியான} விபீஷணன், அர்த்தம் பொதிந்த நயமான சொற்களுடன் கூடிய {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(6) "என் அமைச்சர்களான அனலன், சரபன், சம்பாதி, அதே போல பிரகசன் ஆகியோர் லங்காம்புரீக்குச் சென்று இங்கே திரும்பி வந்திருக்கின்றனர்.(7) அவர்கள் அனைவரும் பறவைகளாக மாறி, பகைவரின் படைக்குள் பிரவேசித்து, செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைக் கண்டு திரும்பியிருக்கின்றனர்.(8) இராமரே, துராத்மாவான ராவணர் செய்திருக்கும் ஏற்பாடுகள் குறித்து அவர்கள் கூறியவை அனைத்தையும் உள்ளது உள்ளபடியே நான் சொல்கிறேன் கேட்பீராக.(9)

பெரும்பலம் வாய்ந்த பிரஹஸ்தன், படைகளுடன் சேர்ந்து பூர்வ துவாரத்தை {கிழக்கு வாயிலை} அடைந்திருக்கிறான். மஹாவீரியர்களான மஹாபார்ஷ்வன், மஹோதரன் ஆகிய இருவரும் தக்ஷிணத்தில் {தெற்கு வாயிலில்} நிற்கிறார்கள்.(10) இராவணாத்மஜனான {ராவணனின் மைந்தனான} இந்திரஜித்[1], பட்டசங்கள், வாள்கள், தனுசுகள் {விற்கள்}, சூலங்கள், முத்கரங்கள் ஆகியவற்றைக் கைகளில் கொண்ட ஏராளமான ராக்ஷசர்களால் சூழப்பட்டவனாக, நானாவித ஆயுதங்களையும், சூரர்களையும் திரட்டிக் கொண்டு பஷ்சிம துவாரத்தில் {மேற்கு வாயிலில்} இருக்கிறான்.(11,12அ) சஸ்திரபாணிகளான {ஆயுதபாணிகளான} ஏராளமான ராக்ஷசர்கள் சூழ,{12ஆ} திறன்மிக்க ஆயிரக்கணக்கான ராக்ஷசர்களுடனும், பெரும் கலக்கத்துடனும்[2], நகரத்தின் உத்தர துவாரத்தை {வடக்கு வாயிலை} ராவணர் தானே அடைந்திருக்கிறார்.(12ஆ,13) விரூபாக்ஷன், சூலங்கள், கட்கங்கள் {வாள்கள்}, தனுசுகள் ஆகியவற்றுடன் கூடிய மஹத்தான ராக்ஷசப் படையின் துணையுடன் குல்மத்தின் {நகரக் கோட்டையின்} மத்தியில் இருக்கிறான்.(14) இவ்வாறே என் மந்திரிகள் அனைவரும் லங்கையின் குல்மத்தை {கோட்டையை} நன்றாகப் பார்த்துவிட்டு சீக்கிரமே இங்கே திரும்பி வந்தனர்.(15)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவன் மேகநாதனென்பவன்; இந்த்ரஜித்தென்னும் இப்பெயர் இந்த்ரனை ஜயித்தமையாலுண்டான கராணப்பெயர்" என்றிருக்கிறது.


[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு "பரம ஸம்விக்³னோ" என்பது மூலம். "பரம் அஸம் விக்னம்" என்று பதம் பிரித்து, "மனத்தில் சிறிதும் சலிக்காமல்" என்று வ்யாக்யானஞ் செய்திருக்கிறார். "பரமஸம்விக்³னோ" என்று ஒரே பதமாகக் கொண்டு, "மிகவும் மனக்கலக்கமுற்று" என்றும் சிலர் கூறுவர்" என்றிருக்கிறது.


ஆயிரம் கஜங்கள் {யானைகள் அடங்கிய யானைப்படை}, பத்தாயிரம் ரதங்கள் {தேர்கள் அடங்கிய தேர்ப்படை}, இருபதாயிரம் ஹயங்கள் {குதிரைகள் அடங்கிய குதிரைப்படை} ஆகியவையும், கோடிக்கும் அதிகமான ராக்ஷசர்களும் {அடங்கிய காலாட்படையினர் அங்கே} இருக்கின்றனர்.{16} யுத்தங்களில் விக்ராந்தர்களும், பலவான்களும், எவரையும் கொல்லக்கூடியவர்களுமான இந்த நிசாசரர்கள் {இரவுலாவிகள்} அனைவரும் நித்யம் ராக்ஷசராஜருக்கு {ராவணருக்கு} இஷ்டமானவர்களாக இருக்கிறார்கள்.(16,17) விஷாம்பதியே {மனிதர்களின் தலைவரே}, அங்கே ஒரேயொரு ராக்ஷசனுக்கும் யுத்தத்தில் துணை புரிய ஆயிரமாயிரம் பரிவாரங்கள் இருக்கின்றன {பத்து லக்ஷம் தொண்டர்கள் இருக்கின்றனர்}" {என்றான் விபீஷணன்}.(18)

மஹாபாஹுவான விபீஷணன், லங்கை குறித்து தன் மந்திரிகள் சொன்ன அனைத்துச் செய்திகளையும் இவ்வாறு சொல்லிவிட்டு, {தன் மந்திரிகளான அனலன், சரபன், சம்பாதி, பிரகசன் என்ற} அந்த ராக்ஷசர்களைக் காட்டினான்.(19) அமைச்சர்கள், லங்கையைக் குறித்த அனைத்தையும் ராமனிடம் அறிவித்ததும், ஸ்ரீமான் ராவணாவரஜன் {ராவணனின் தம்பியான விபீஷணன்}, ராமனுக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பி, கமலபத்ராக்ஷனான {தாமரைக் கண்ணனான} ராமனிடம் இந்த மறுமொழியைக் கூறினான்:(20,21அ) "இராமரே, ராவணர் எப்போது குபேரரை எதிர்த்துப் போரிட்டாரோ, அப்போது அறுபது லக்ஷம் ராக்ஷசர்கள் {ராவணரைப்} பின்தொடர்ந்தனர்.{21ஆ,22அ} அத்தகையவர்களான அவர்கள் பராக்கிரமத்திலும், வீரியத்திலும், தேஜஸ்ஸிலும், கௌரவத்திலும், செருக்கிலும் துராத்மாவான ராவணருக்குப் பொருத்தமானவர்களாக இருக்கின்றனர்.(21ஆ-23அ) இதில் கோபம் வேண்டாம். கோபத்தாலோ, வீரியத்தில் ஸுரர்களையும் நிக்ரஹம் செய்யக் கூடிய {அடக்கக்கூடிய} சமர்த்தரான உம்மைப் பீதியடையச் செய்வதற்காகவோ அல்லாமல் கடமையால் சொல்கிறேன்[3].(23ஆ,24அ)  இதோ இந்தப் பெரும் படையை வியூஹமாக வகுத்து, சதுரங்க பலத்துடன் கூடிய இந்த வானரப்படை சூழ, ராவணரை நீர் அழிக்கப் போகிறீர்" {என்றான் விபீஷணன்}.(24ஆ,25அ)

[3] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "அதாவது, நீர் என்னிடம் கோபமடைய வேண்டாம். ஏனெனில், நான் உம்மை அச்சுறுத்துவதற்காக அல்லாமல் ராவணருக்கு எதிரான உமது கோபத்தையே தூண்டுகிறேன் என்பது பொருள்" என்றிருக்கிறது.


இராவணாவரஜன் {ராவணனின் தம்பியான விபீஷணன்} இவ்வாறு இந்த வாக்கியத்தைச் சொன்னதும், ராகவன் சத்ருக்களை எதிர்க்கும் அர்த்தத்திற்கான ஏற்பாடாக இந்த வசனத்தைக் கூறினான்:(25ஆ,26அ) "வானரபுங்கவனான நீலன், ஏராளமான வானரர்கள் சூழ, லங்கையின் பூர்வ துவாரத்தில் {கிழக்கு வாயிலில்} பிரஹஸ்தனை எதிர்த்து யுத்தம் புரியட்டும்.(26ஆ,27அ) வாலிபுத்ரன் அங்கதன், மஹத்தான படையால் சூழப்பட்டவனாக தக்ஷிண துவாரத்தில் {தெற்கு வாயிலில்} மஹாபார்ஷ்வனையும், மஹோதரனையும் எதிர்க்கட்டும்.(27ஆ,28அ) அறிவதற்கரிய ஆற்றல் படைத்த பவனாத்மஜன் {வாயு மைந்தன்} ஹனுமான், ஏராளமான கபிக்கள் {குரங்குகள்} சூழ பஷ்சிம துவாரத்தை {மேற்கு வாயிலைத்} தாக்கிப் பிரவேசிக்கட்டும்.(28ஆ,29அ)

தைத்திய, தானவ சங்கத்தினரையும் {கூட்டத்தினரையும்}, மஹாத்மாக்களான ரிஷிகளையும் துன்புறுத்துவதை விரும்பும் க்ஷூத்ரனும் {இழிந்தவனும்}, வரத்தை தானமாகப் பெற்று பலமடைந்தவனும்,{29ஆ,30அ} பிரஜைகளைத் துன்புறுத்தியபடி சர்வலோகத்திலும் திரிபவனும் எவனோ, அந்த ராக்ஷசேந்திரனை நானே நேரடியாக வதைப்பதாகத் தீர்மானித்திருக்கிறேன்.{30ஆ,31அ} சௌமித்ரியுடனும் {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணனுடனும்}, படையுடனும் கூடியவனான நான், ராவணன் இருக்கும் உத்தர நகரத்வாரத்தை {நகரத்தின் வடக்கு வாயிலைப்} பீடித்துப் பிரவேசிக்கப் போகிறேன்.(29ஆ-32அ) பலவானான வானரேந்திரனும் {சுக்ரீவனும்}, வீரியவானும், ரிக்ஷ ராஜனுமான {கரடிகளின் மன்னனுமான} ஜாம்பவானும், ராக்ஷசேந்திரானுஜனும் மத்திம குல்மத்தில் {ராக்ஷச மன்னன் ராவணனின் தம்பியான விபீஷணனும் கோட்டையின் மத்தியில்} இருக்கட்டும்.(32ஆ,33அ)

போரில் ஹரிக்கள் {குரங்குகள்} மானுஷ ரூபம் தரிக்க வேண்டாம்[4]. நம்முடைய இந்த யுத்தத்தில், இதுவே வானரப் படையின் அடையாளமாக இருக்கட்டும்.(33ஆ,34அ) நம்முடைய சொந்த ஜனங்களை எளிதில் அறிந்து கொள்ளும் சின்னமாக வானரர்களே இருப்பார்கள் {வானர ரூபமே எளிதில் அடையாளம் காணும் சின்னமாக இருக்கும்}.{34ஆ,35அ} மஹா ஓஜசனும் {பேராற்றல் வாய்ந்தவனும்}, என்னுடன் பிறந்தவனுமான லக்ஷ்மணனும், நானும், {மந்திரிகள் நால்வரைத்} தன்னுடன் சேர்த்து ஐந்தாமவனாக இருக்கும் என் சகாவான இந்த விபீஷணனும் என எழுவர் மட்டுமே மானுஷ ரூபத்தில் பகைவரை எதிர்த்துப் போரிடுவோம்" {என்றான் ராமன்}.(34ஆ-36அ)

[4] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "'வானரர்கள் காமரூபிகளாகையால் தமக்கு இஷ்டமான உருவங்களை எடுத்து யுத்தஞ் செய்கையில் ராக்ஷஸர்களும் காமரூபிகளாகையால் நினைத்த உருவங்களை எடுத்து யுத்தஞ்செய்வார்கள். ஆகையால் அப்பொழுது நம்முடையவர் பிறர் என்று பிரித்தறிய முடியாதிருக்கும். வானரரூபம் அற்பமாகையால் அதை ராக்ஷஸர்கள் கைப்பற்றமாட்டார்களாகையால் வானரர்கள் எல்லோரும் தமது வானர உருவத்தோடேயே யுத்தஞ்செய்ய வேண்டும். வானரனாயிருத்தலே நம்முடையவ னென்பதற்கு அடையாளம்" என்று ராமன் ஸங்கேதஞ் செய்வதாகத் தெரிகின்றது. அப்பொழுது ராமன் மனுஷ்ய உருவத்தை எடுக்கலாகாதென்று நிஷேதிக்கையால் அதற்கு முன்பு வானரர்கள் மனுஷ்யரூபந் தரித்திருந்தார்களென்றுந் தெரிகிறது. விபீஷணாதிகள் மனுஷ்யரைப் போன்ற உருவமுடையவராகையால் மனுஷ்யராக எண்ணப்பட்டமை தோற்றுகிறது" என்றிருக்கிறது.


மதிமானும், பிரபுவுமான அந்த ராமன், காரியம் சித்தியடைவதற்காக விபீஷணனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, ரமணீயமான சுவேல கிரியின் தாழ்வரையைக் கண்டு, சுவேலத்தில் {சுவேல மலையில்} ஏறுவதில் தன் புத்தியை அமைத்துக் கொண்டான்.(36ஆ,37) பிறகு, மஹாத்மாவான ராமன், மஹத்தான படையால் சர்வ பிருத்வியையும் மறைத்தபடியே அரிவதத்தில் {பகைவரைக் கொல்வதில்} மதியை நிலைக்கச் செய்து, மகிழ்ச்சி ரூபத்துடன் லங்கைக்குப் புறப்பட்டான்.(38)

யுத்த காண்டம் சர்க்கம் – 037ல் உள்ள சுலோகங்கள்: 38

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை