Sarama secretly hears | Yuddha-Kanda-Sarga-034 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையின் வேண்டுகோளுக்கு இணங்க சென்று, ராவணன், தன் அமைச்சர்களுடன் ஆலோசிப்பதை ரகசியமாகக் கேட்டறிந்து, திரும்பி வந்து சீதையிடம் அறிவித்த சரமை...
அப்போது சந்தாபத்தில் மூழ்கியிருந்த அவள் {சீதை}, தஹிக்கும் மஹீயை {பூமியைக்} குளிர்விக்கும் மழைநீரைப் போன்ற சரமையின் அந்த வாக்கியத்தால் மகிழ்ச்சியடைந்தாள்.(1) பிறகு, காலஜ்ஞையும் {காலத்தை அறிந்தவளும்}, புன்னகைத்தவாறே பேசுபவளுமான சகி {தோழி சரமை}, தன் அன்புக்குரியவளின் {சீதையின்} ஹிதத்தை விரும்பி, காலத்திற்குத் தகுந்த {பின்வரும்} சொற்களைச் சொன்னாள்:(2) "கருவிழியாளே, நான் மறைவாகச் சென்று உன் வாக்கியத்தையும், குசலத்தையும் {நலத்தையும்} ராமரிடம் சொல்லிவிட்டுத் திரும்பிவர ஆவலாக உள்ளேன்.(3) ஆதரவின்றி ஆகாயத்தில் செல்லும் என் கதியைப் பின்பற்ற பவனனோ {வாயுதேவனோ}, கருடனோ கூட சமர்த்தர்களில்லை" {என்றாள் சரமை}.(4)
இவ்வாறு சொன்ன சரமையிடம் சீதை, பூர்வத்தில் நிறைந்த சோகக் கண்ணீருடன், மென்மையாக, {பின்வரும்} மதுரமான சொற்களை மீண்டும் சொன்னாள்:(5) "நீ ககனத்திலும் {வானத்திலும்}, ரஸாதலத்திலும் செல்லும் சாமர்த்தியம் கொண்டவள் என்பதையும், செய்வதற்கரியவற்றையும் எனக்காக செய்யக்கூடியவள் என்பதையும் நான் அறிவேன்.(6) என்னிடம் பிரியமாக இருப்பதே உன் ஸ்திரமான புத்தியாக இருந்தால், இப்போதே ராவணனிடம் சென்று, அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை நீ அறிந்துவர விரும்புகிறேன்.(7) மாயா பலம் கொண்டவனும், சத்ருக்களை ராவணஞ் செய்ய வைப்பவனும் {பகைவரைக் கதற வைப்பவனும்}, குரூரனும், துஷ்டாத்மாவுமான அந்த ராவணன், குடித்த மாத்திரத்தில் {மயக்கமடையச் செய்யும்} வாருணியை {வாருணி என்ற மதுவைப்} போல, என்னை மோஹமடைய {மாயையில் மயக்கமடையச்} செய்திருக்கிறான்.(8) அவன், என்னை நித்யம் கோரமான ராக்ஷசிகளைக் கொண்டு காவல் காத்தும், அவர்களைக் கொண்டே அச்சுறுத்தியும், நிந்தித்தும் வருகிறான்.(9) நான் கவலையும், சந்தேகமும் உற்ற நிலையில் இருக்கிறேன். என் மனம் ஸ்வஸ்தமாக {நல்லபடியாக} இல்லை. அசோக வனத்தில் நான் பயத்தால் கலங்கிய நிலையில் இருக்கிறேன்.(10) அவன் {ராவணன்} பேசுவது எதுவானாலும், {அவன்} நிச்சயம் செய்வது எதுவானாலும், அவை அனைத்தையும் அறிவித்தால், அது நீ எனக்குச் செய்த பரம அனுக்கிரகமாக இருக்கும்" {என்றாள் சீதை}.(11)
மிருதுபாஷிணியான {மென்மையாகப் பேசக்கூடியவளான} சரமையும், கண்ணீரால் நனைந்த அவளது வதனத்தை ஸ்பரிசித்து, இவ்வாறு பேசிய சீதையிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(12) "இதுவே உன்னுடைய அபிப்ராயம் {எண்ணம்} என்றால், ஜானகி, அதற்காகவே நான் செல்வேன். மைதிலி, சத்ருக்களின் அபிப்ராயத்தை கிரஹித்துக் கொண்டு நான் திரும்பி வருகிறேன்" {என்றாள் சரமை}.(13)
இவ்வாறு சொல்லிவிட்டு, அந்த ராக்ஷசனின் {ராவணனின்} சமீபத்தில் சென்றவள் {சரமை}, அந்த ராவணன், தன் மந்திரிகளுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டாள்.(14) நிச்சயஜ்ஞையான அவள் {தீர்மானிக்கத் தெரிந்தவளான சரமை}, அந்த துராத்மாவின் நிச்சயத்தைக் கேட்ட பிறகு, சீக்கிரமே சுபமான அசோக வனிகைக்குத் திரும்பினாள்.(15) அங்கே பிரவேசித்தவள் {அசோக வனிகைக்குள் நுழைந்த சரமை}, பத்மம் இல்லாத ஸ்ரீயை {லக்ஷ்மியைப்} போல, தன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜனகாத்மஜையை {ஜனகனின் மகளான சீதையைக்} கண்டாள்.(16) சீதை, அங்கே திரும்பி வந்த பிரியபாஷிணியான {அன்புமொழி பேசுபவளான} சரமையை சினேகத்துடன் தழுவிக் கொண்டு, தானே ஆசனத்தை {அமர்வதற்கான இடத்தை} அளித்து,(17) "இங்கே சுகமாக அமர்ந்து கொண்டு, குரூரனும், துராத்மாவுமான அந்த ராவணன் நிச்சயித்திருக்கும் அனைத்தையும் உள்ளது உள்ளபடியே எனக்குச் சொல்வாயாக" என்றாள் {சீதை}.(18)
நடுக்கத்துடன் கூடிய சீதையால் இவ்வாறு கேட்கப்பட்ட சரமை, ராவணன் தன் மந்திரிகளுடன் பேசிக்கொண்டிருந்த அனைத்தையும் {பின்வருமாறு} சொன்னாள்:(19) "வைதேஹி, ராக்ஷசேந்திரரின் ஜனனியும் {ராவணனைப் பெற்றவளான கைகசியும்}, முதிர்ந்த மந்திரியான அவித்தரும், உன்னை விடுவிக்கும் அர்த்தத்திலான சிறந்த சொற்களை அவரிடம் {ராவணரிடம்} சொன்னார்கள்.(20) மைதிலி, "மனுஜேந்திரனிடம் {சீதையை மனிதர்களின் தலைவனான ராமனிடம்} மதிப்புடன் கொடுப்பாயாக. எது ஜனஸ்தானத்தில் நிகழ்ந்ததோ, அந்த அற்புதமே உனக்குப் போதுமான நிதர்சனம்.(21) ஹனூமதன் சமுத்திரத்தை லங்கனம் செய்து, {சீதையை} தரிசித்திருக்கிறான். புவியில் உள்ள எந்த மானுஷனால் யுத்தத்தில் ராக்ஷசர்களை வதம் செய்ய முடியும்?" {என்று ராவணனிடம் அவர்கள் கேட்டனர்}.(22)
முதிர்ந்த மந்திரியாலும் {அவித்தராலும்}, மாதாவினாலும் {ராவணனின் அன்னையான கைகசியினாலும்} இவ்வாறும், பலவாறும் போதிக்கப்பட்டும், அர்த்தம் தொலைந்தவரான அவர் {ராவணர்}, அர்த்தம் கண்டவரை {பொருளில் விருப்பமுடைய பேராசைக்காரரைப்} போல, உன்னை விடுவிப்பதில் உற்சாகம் கொள்ளவில்லை.(23) மைதிலி, போரில் சாகாத வரை உன்னை விடுவிக்க விரும்பாத அந்தக் கொடூரர் {ராவணர்}, தம் அமைச்சர்களுடன் சேர்ந்து சந்தேகமில்லாமல் இதை நிச்சயித்துக் கொண்டார்.(24) அவருக்கு இவ்வாறான ஸ்திரமான புத்தி மிருத்யு லோபத்தால் {மரணம் அடைய வேண்டும் எனும் பேராசையால்} ஏற்பட்டிருக்கிறது. போரில் சர்வ ராக்ஷசர்களும், தாமும் யுத்தத்தில் வதைக்கப்படாமல் பயத்தால் மட்டும் உன்னை விடுவிக்கமாட்டார்.(25,26அ) கருவிழியாளே, ராமர் போரில் கூரிய சரங்களால் ராவணரைக் கொன்று, எல்லா வகையிலும் உன்னை அயோத்யைக்கு அழைத்துச் செல்வார்" {என்றாள் சரமை}.(26ஆ,27அ)
அதே நேரத்தில், வானர சைனியத்திற்குள் பேரி, சங்கு ஆகியவை மாறி மாறி ஒலித்ததில் தரணியை நடுங்கச் செய்யும் பேரொலி கேட்கப்பட்டது.(27ஆ,28அ) அந்த வானர சைனியத்தின் சப்தத்தைக் கேட்டு, லங்கையில் இருந்த ராக்ஷச ராஜனின் {ராவணனின்} பணியாட்கள், ஓஜஸ் இழந்து {களையிழந்து}, மன ஏக்கத்துடன் கூடியவர்களாக, நிருபனின் தோஷத்தால் {மன்னன் ராவணனின் குற்றத்தால்} விளையும் நன்மை ஒன்றையும் காணாதிருந்தனர்.(28ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 034ல் உள்ள சுலோகங்கள்: 28
Previous | | Sanskrit | | English | | Next |