Friday 20 September 2024

சரமை | யுத்த காண்டம் சர்க்கம் - 033 (39)

Sarama | Yuddha-Kanda-Sarga-033 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணன் காட்டிய ஆதாரம் போலியானது என்றும், ராமன் உயிருடன் இருக்கிறான் என்றும், தன் படைகளுடன் கடற்கரையில் முகாமிட்டிருக்கிறான் என்றும் சீதையிடம் சொன்ன சரமை...

Sarama and Sita speaking


அப்போது, சீதை திகைப்பதைக் கண்டவளும், அன்புக்குரிய சகீயும் {தோழியும்}, சரமை என்ற பெயரைக் கொண்டவளுமான ராக்ஷசி[1], தன் பிரியத்திற்குரிய வைதேஹியை விரைந்து அணுகினாள்.(1) பிறகு, மிருது பாஷிணியான சரமை, ராக்ஷசேந்திரனால் திகைப்படையச் செய்யப்பட்டுப் பரம துக்கத்தில் பீடிக்கப்பட்டவளான சீதையை ஆசுவாசப்படுத்தினாள்.(2) இராவணனின் ஆணையின் பேரில் {சீதையை} ரக்ஷித்து வந்தவளும்[2], இரக்கமிக்கவளும், திட விரதம் கொண்டவளுமான அவள் {சரமை}, அங்கே சீதையை ரக்ஷித்துக் கொண்டே மித்ரத்தை {நட்பை} ஏற்படுத்திக் கொண்டாள்.(3) சகீயான அந்த சரமை, நனவிழந்து, புழுதியில் புரண்டு எழுந்த பெண்குதிரையைப் போல தூசி படிந்தவளாக சீதையைக் கண்டாள்.(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ்-கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "சில உரையாசிரியர்கள் இந்த சரமை விபீஷணனின் மனைவி என்கின்றனர்" என்றிருக்கிறது. விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "தெளிவாக ஏதும் குறிப்பிடப்படவில்லை எனினும் சரமை, விபீஷணனின் மனைவி என்று நம்பப்படுகிறாள்" என்றிருக்கிறது.

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "விபீஷணனுடைய பார்யையை ராவணன் சீதையைப் பாதுகாத்து வரும்படி நியோகிப்பது எப்படி பொருந்தும்? நியோகித்திருப்பின், அப்பொழுது அவள் ராவணனுக்குப் பயந்து மறைந்திருப்பதேன்? என்னில் விபீஷணன் லங்கையிலிருக்கும்பொழுது சீதையின் யோக க்ஷேமங்களை விசாரிக்கும்பொருட்டு ஸரமை அந்தரங்கையாக நியோகிக்கப்பட்டனள். விபீஷணன் புறப்பட்டுப் போனபின்பு ராவணனுடைய அந்தரங்க வார்த்தைகளைக் கேட்க ஸரமை பயந்தமையால் மறைந்திருந்து செவியுற்றனள். ஸரமையை நியோகிக்கையாவது ஸரமை தன் தாசியை அனுப்பி ஸமாசாரந்தெரிந்து கொள்ளும்படி நியோக்கை யென்று உணர்க. தமையனுக்குத் தம்பியின் பார்யை மருமகள் போன்றவளாகையால் அவனெதிரில் நிற்கக்கூடாமையால் மறைவிலிருந்து செவியுற்றாளென்றுங் கண்டுகொள்ளலாம். இந்த ஸரமை மற்றொருத்தி யென்று சிலர் அபிப்ராயப்படுகின்றனர்" என்றிருக்கிறது.

சகீயும் {தோழியும்}, நல்விரதங்களைக் கொண்டவளுமான அவள் {சரமை}, சினேகத்துடன் வைதேஹியை {சீதையை} ஆசுவாசப்படுத்தும் வகையில், "ஆசுவாசமடைவாயாக. உன் மனத்தில் வருத்தம் வேண்டாம்.(5) எவை ராவணரால் உனக்குச் சொல்லப்பட்டனவோ, எவை உன்னால் தானாக மறுமொழியாகச் சொல்லப்பட்டனவோ, பீரு {பயந்தவளே}, அவை அனைத்தும், சகீ என்ற சினேகத்தினால் என்னால் ஒற்றுக்கேட்கப்பட்டன.{6} ராவணரிடம் கொண்ட பயத்தைக் கைவிட்டு, சூனியமான ககனத்தில் {வெற்றுவெளியில்} நான் மறைந்திருந்தேன். விசாலாக்ஷி {நீள்விழியாளே}, உனது நன்மைக்காக நான் என் ஜீவிதத்திலும் பிரியங் கொள்ள மாட்டேன்.(6,7) மைதிலி, அந்த ராக்ஷசாதிபர் {ராவணர்}, எதற்காக கலக்கத்துடன் சென்றார் என்பதற்கான அனைத்தையும் வெளியே சென்று நான் அறிந்து கொண்டேன்.(8) விதிதாத்மரான {தன்னை அறிந்தவரான} ராமர் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவரைத் தாக்குவது சாத்தியமில்லை. புருஷவியாகரரான அவரை {மனிதர்களில் புலியான ராமரை} வதம் செய்வதும் சாத்தியமில்லை.(9) மரங்களை ஆயுதமாகக் கொண்ட வானரர்களையும் இவ்வாறு கொல்வது சாத்தியமில்லை. ஸுரரிஷபனால் ஸுரர்களை {தேவர்களில் காளையான இந்திரனால் காக்கப்படும் தேவர்களைப்} போல ராமரால் அவர்கள் ரக்ஷிக்கப்படுகின்றனர்.(10)

தீர்க்கவிருத்தபுஜரும் {நீண்டும், உருண்டுமுள்ள கைகளைக் கொண்டவரும்}, ஸ்ரீமானும், அகன்ற மார்பைக் கொண்டவரும், பிரதாபவானும், தன்வியும் {வில்லாளியும்}, தசைப்பற்றுள்ளவரும், தர்மாத்மாவெனப் புவியில் புகழ்பெற்றவரும்,{11} விக்ராந்தரும், நித்தியம் தன்னையும், பிறரையும் ரக்ஷிப்பவரும், உடன்பிறந்த லக்ஷ்மணருடன் குசலமாக {நலமாக} இருப்பவரும், நயசாஸ்திரங்களை அறிந்தவரும்,{12} பகைவரின் படைகளை அழிப்பவரும், சிந்தனைக்கு அப்பாற்பட்ட பௌருஷம் {ஆற்றலும், ஆண்மையும்} கொண்ட ஸ்ரீமானும், சீதே, சத்ருக்களை அழிப்பவருமான ராகவர் கொல்லப்படவில்லை.(11-13) ரௌத்திரனும், சர்வபூதவிரோதியும் {அனைத்து உயிரினிங்களின் பகைவனும்}, அடாத புத்தியும், செயலும் கொண்டவனுமான மாயாவி {வித்யுஜ்ஜிஹ்வன்} உன் மீது இந்த மாயையைப் பிரயோகித்தான்.(14) உன் சோகம் அகலட்டும். சர்வ கல்யாணமும் {புண்ணியங்கள் அனைத்தும்} உனக்காக காத்திருக்கின்றன. நிச்சயம் {சௌபாக்கிய} லக்ஷ்மி உன்னை அடைவாள். உனக்குப் பிரியமானதை மகிழ்ச்சியுடன் கேட்பாயாக.(15)

இராமர், வானர சேனையுடன் கூடியவராக சாகரத்தைக் கடந்து, சமுத்திரத்தின் தக்ஷிண தீரத்தை {பெருங்கடலின் தென் கரையை} அடைந்து முகாமிட்டிருக்கிறார்.(16) காகுத்ஸ்தர் {ராமர்}, லக்ஷ்மணருடன் கூடியவராகவும், பரிபூர்ண அர்த்தராகவும் இருப்பதை நான் கண்டேன். அவர், சாகர அந்தத்தில் {கடல் எல்லையில்} நிற்கும் படையால் ரக்ஷிக்கப்படுகிறார்.(17) இலகுவிக்கிரமர்களான {விரைவில் எங்கும் செல்லவல்லவர்களான} எந்த ராக்ஷசர்கள் இவரால் {ராவணரால்} அனுப்பப்பட்டனரோ, அவர்களால் ராகவர் {கடலைக்} கடந்து வந்த செய்தி கொண்டுவரப்பட்டது.(18) விசாலாக்ஷி {நீள்விழியாளே}, அந்த செய்தியைக் கேட்டது முதலே ராக்ஷசாதிபர் ராவணர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்" {என்றாள் சரமை}.(19)

இவ்வாறு சீதையிடம் ராக்ஷசி சரமை பேசிக் கொண்டிருந்தபோதே, சைனியங்களின் அனைத்து வகை ஏற்பாடுகளாலும் உண்டாகும் பைரவ {பயங்கர} சப்தத்தைக் கேட்டாள்.(20) மதுரபாஷிணியான {இனிமையாகப் பேசுபவளான} சரமை, தண்டங்களால் அடிக்கப்பட்டு ஒலிக்கும் பேரிகைகளின் மஹாஸ்வனத்தைக் கேட்டு, சீதையிடம் இதைச் சொன்னாள்:(21) "பீரு {பயந்தவளே}, இந்த பைரவ பேரிகை போருக்கான ஏற்பாடுகளைக் குறிப்பதாகும். மழைமேக ஸ்வனத்திற்கு ஒப்பான கம்பீர பேரி நாதத்தைக் கேட்பாயாக.(22) மத்தமாதங்கங்கள் {மதங்கொண்ட யானைகள்} ஆயத்தப்படுத்தப்படுகின்றன. ரதவாஜிகள் {தேர்க்குதிரைகள்} பூட்டப்படுகின்றன. பிராசங்களைக் கையில் கொண்டவர்கள் மகிழ்ச்சியுடன் உரக்க சிரித்துக் கொண்டே ஆயிரக்கணக்கான  துரகங்களில் {குதிரைகளில்} ஏறுகின்றனர்.(23) 

கவசம் தரித்த ஆயிரக்கணக்கான காலாட்படைவீரர்கள் ஆங்காங்கே கூடுகின்றனர். நாதமும், வேகமும் கொண்ட அலைக்கூட்டங்களால் சாகரம் {கடல்} எப்படியோ, அப்படியே அற்புத தரிசனந்தரும் ராஜமார்க்கங்கள் சைனியத்தால் நிரம்புகின்றன.(24,25அ) பளபளவென விளங்கும் சஸ்திரங்கள் {ஆயுதங்கள்}, கேடயங்கள், கவசங்கள் ஆகியனவும், அதேபோல,{25ஆ} அலங்கரிக்கப்பட்ட ரதவாஜிகஜங்கள் {தேர்கள், குதிரைகள், யானைகள்}, ராக்ஷசேசரை {ராவணரை} மகிழ்ச்சியுடன் பின்தொடரும் சுறுசுறுப்புமிக்க ராக்ஷசர்களின்[3] தோற்றமும்{26} பலவர்ண பிரபையை {ஒளியைப்} பரப்பி, வெயிற்காலத்தில் வனத்தை {காட்டைப்} பற்றி எரிக்கின்ற நெருப்பின் ரூபத்தைப் போலிருப்பதைப் பார்ப்பாயாக.(25ஆ-27) கண்டங்களின் {மணிகளின்} கோஷத்தைக் கேட்பாயாக. இரதங்களின் சடசடப்பொலியைக் கேட்பாயாக. தூரிய வாத்தியங்களின் ஒலியைப் போல ஹயங்கள் {குதிரைகள்} கனைப்பதைக் கேட்பாயாக.{28} ஆயுதங்களைக் கையில் ஏந்தியவர்களும், ராக்ஷசேந்திரரைப் பின்தொடர்பவர்களுமான ராக்ஷசர்களின் இந்த ஆரவாரம் நெருக்கமாகவும், ரோமஹர்ஷணத்தை {மயிர்க்கூச்சத்தை} ஏற்படுத்துவதாக இருக்கிறது.(28,29) 

[3] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோக வரி, வாக்கியத்தின் மற்ற பகுதிகளுடன் பொருந்தாமல் அனைத்து வகையிலும் மீறுகிறது. இஃது இந்தப் பத்தியில் பெரும் இடைவெளியை உண்டாக்குகிறது" என்றிருக்கிறது.

உன் சோகாக்னி தணிந்து ஸ்ரீ {லக்ஷ்மி} உன்னை அடைகிறாள்.  ராக்ஷசர்கள் பயத்தை {ஆபத்தை} அடையப் போகிறார்கள். தாமரைக் கண்ணரும், கோபத்தை வென்றவரும், சிந்தனைக்கு அப்பாற்பட்ட பராக்கிரமம் உடையவரும், உன் பர்த்தாவுமான ராமர், போரில் வாசவன் தைத்தியர்களை {இந்திரன் அசுரர்களை} எப்படியோ, அப்படியே அந்த ராவணரைக் கொன்று உன்னை மீட்பார்.(30,31) சத்ருக்களை அழிப்பவனான வாசவன் {இந்திரன்} விஷ்ணுவுடன் சேர்ந்து சத்ருக்களிடம் எப்படியோ, அப்படியே உன் பர்த்தா {கணவரான ராமர்}, லக்ஷ்மணருடன் சேர்ந்து ராக்ஷசர்களிடம் விக்ரமத்தை {வல்லமையைக்} காட்டப் போகிறார்.(32) சத்ரு கொல்லப்பட்டு நோக்கம் நிறைவேறிய உன்னை ராமரின் மடியில் அமர்ந்திருப்பவளாக சிக்கிரமே நான் காணப் போகிறேன்.(33)

சோபனையே {அழகானவளே}, உன்னை அடைந்து தழுவிக் கொள்ளும் அவரது அகன்ற மார்பில் நீ ஆனந்தக் கண்ணீர் சிந்தப் போகிறாய்.(34) சீதே, தேவி, மஹாபலவானான ராமர், பல மாசங்கள் தரித்ததும், உன் இடை வரை இருப்பதுமான இந்த ஒற்றைப் பின்னலை சீக்கிரமே அவிழ்க்கப்போகிறார்.(35) தேவி, உதிக்கும் பூர்ணச்சந்திரனைப் போன்ற அவரது முகத்தைக் கண்டு, தோலை உரிக்கும் பன்னகீயை {பெண்பாம்பைப்} போல சோகக் கண்ணீரை நீ கைவிடப் போகிறாய்.(36) மைதிலி, சுகத்திற்குத் தகுந்தவரான அவர் {ராமர்}, போரில் ராவணரைக் கொன்ற உடனேயே, பிரியையான உன்னுடன் சேர்ந்து இன்புற்றிருக்கப் போகிறார்.(37) நல்ல மழையால் நனைக்கப்பட்டுப் பயிரால் நிறையும் மேதினியை {பூமியைப்} போலவே, நீ அந்த மஹாத்மாவின் வீரியத்தால் அடையப்பட்ட மகிழ்ச்சியால் நிறைவாய்.(38) தேவி, சிறந்த கிரியை {மேரு மலையை} நாற்புறமும் சூழ்ந்து ஹயம் {குதிரை} போலவே விரைவாக வலம் வருபவனும், பிரஜைகளுக்கு {உயிரினங்களுக்கு} எதையும் அளிப்பவனும் எவனோ, அந்த திவாகரனை {சூரியனை} இப்போதே நீ சரணடைவாயாக" {என்றாள் சரமை}.(39)

யுத்த காண்டம் சர்க்கம் – 033ல் உள்ள சுலோகங்கள்: 39

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை