Wailing of Sita | Yuddha-Kanda-Sarga-032 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணன் கொடுத்த தலையைக் கண்டு அழுது, புலம்பிய சீதை; திடீரென அசோக வனிகையை விட்டு வெளியேறிய ராவணன்...
அப்போது, அந்த சீதை அந்த சிரத்தையும் {ராமனின் தலையையும்}, அந்த உத்தம கார்முகத்தையும் {வில்லையும்} கண்டும், சுக்ரீவனுடன் உண்டான நட்பை {ஏற்கனவே} ஹனூமதன் புகழக் கேட்டும்,{1} நயனங்களும், முக வர்ணமும் பர்த்தாவைப் போன்றதாக இருப்பத்தையும், அந்த முகத்தையும், கேசத்தையும், கேசத்தின் முடிவில் உள்ள தேசத்தையும் {நெற்றியையும்}, அந்த சுபமான சூடாமணியையும் அடையாளங் கண்டுகொண்டாள்.{2} இந்த அடையாளங்கள் அனைத்தையும் கண்ட அந்த சீதை, குரரியை {அன்றில் பறவையைப்} போல் அழுது கொண்டே கைகேயியை {பின்வருமாறு} நிந்தித்தாள்:(1-3) "கைகேயி, உன் விருப்பம் ஈடேறியது. குலநந்தனரான {குலத்திற்கு ஆனந்தத்தை அளிப்பவரான} ராமர் கொல்லப்பட்டார். கலஹசீலையான உன்னால் மொத்த குலமும் அழிக்கப்பட்டது.(4) ஆரியரான ராமர், பிரியமற்ற எதைச் செய்தார் என்று மரவுரி கொடுத்து என்னுடன் வனத்திற்கு நீ அனுப்பினாய்?" என்று சொல்லி அழுதாள்.(5)
இதைச் சொல்லிவிட்டு, தபஸ்வினியும், பாலையுமான {சிறுமியுமான} வைதேஹி, வெட்டப்பட்ட கதலியைப் போல ஜகத்தில் {பூமியில்} விழுந்து துடித்தாள்.(6) நீள்விழியாளான அவள் {சீதை}, ஒரு முஹூர்த்தத்தில் நனவு மீண்டு ஆசுவாசமடைந்ததும், அந்த சிரத்தின் அருகே சென்று {பின்வருமாறு} அழுது புலம்பினாள்:(7) "மஹாபாஹுவே, வீர விரதத்தை பின்பற்றுபவரே, ஹா, நான் அழிந்தேன். உம்முடைய இந்த இறுதி அவஸ்தையைப் பார்த்துவிட்டேன். நான் விதவையாக்கப்பட்டேன்.(8) பர்த்தாவின் பிரதம மரணம் நாரியையின் வைகுணம் {கணவன் முதலில் மரணம் அடைவது, மனைவியின் புண்ணிய, பாக்கிய குறை} என்று சொல்லப்படுகிறது. நன்னடத்தை கொண்டவரான நீர், நன்றாக இருக்கும் எனக்கு முன்பு சென்றுவிட்டீர்.(9) மஹத்தான துக்கத்தை அடைந்து, சோக சாகரத்தில் மூழ்கியிருக்கும் என்னைக் காப்பாற்ற முயற்சித்தவர் எவரோ, அத்தகையவரான நீர் கொல்லப்பட்டிருக்கிறீர்.(10)
இராகவரே, என் மாமியாரான அந்தக் கௌசல்யை, கன்றிடம் இருந்து பசு எப்படியோ, அப்படியே வத்சலரான புத்திரரிடம் {அன்புக்குரிய மகனிடம்} இருந்து பிரிக்கப்பட்டாள்.(11) இராகவரே, சிந்தனைக்கு அப்பாற்பட்ட பராக்கிரமம் கொண்டவரே, உமக்கு தீர்க்க ஆயுசு என்று உறுதியளித்தவர்களின் வசனம், {உமக்கு} அல்ப ஆயுசானதால் பொய்த்துப் போனது.(12) அல்லது, பூதங்கள் {உயிரினங்கள்} எப்படி இந்தக் காலத்தால் பாதிக்கப்படுகின்றனவோ, அப்படியே சிறந்த விழிப்புணர்வுடன் கூடியவர்களும் பிரஜ்ஞையை {விழிப்புணர்வை} இழக்கிறார்கள்.(13) நயசாஸ்திரங்களை அறிந்தவரும், விசனங்களில் இருந்து குசலமாக வெளியேறவல்ல உபாயங்களை அறிந்தவருமான நீர், எப்படி புலப்படாத மிருத்யு எனும் ஆபத்தை அடைந்தீர்?(14) கமல லோசனரே {தாமரைக் கண்களைக் கொண்டவரே}, மிகக் கொடூரமானவளும், ரௌத்திரமானவளுமான காலராத்திரியே உம்மைச் சூழ்ந்து, என்னிடமிருந்து பிரித்து அபகரித்துச் சென்றுவிட்டாள்.(15)
மஹாபாஹுவே, புருஷரிஷபரே, தபஸ்வினியான {பரிதாப நிலையில் இருக்கும்} என்னை விட்டு, பிரியமானவளைப் போல பிருத்வியைத் தழுவிக் கொண்டு இங்கே கிடக்கிறீர்.(16) வீரரே, காஞ்சன பூஷிதம் கொண்டதும் {பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும்}, எனக்குப் பிரியமானதுமான உம்முடைய இந்த தனு {வில்}, கந்தங்களை {சிறந்த வாசனைப் பொருள்களைக்} கொண்டும், மாலைகளைக் கொண்டும் சதா யத்னத்துடன் உம்மால் அர்ச்சிக்கப்பட்டது.(17) அனகரே, என் மாமனாரும், உமது பிதாவுமான தசரதரும், சர்வ பித்ருக்கூட்டத்தினரும் எங்கிருக்கிறார்களோ, அந்த ஸ்வர்க்கத்தையே நிச்சயம் நீர் அடைந்திருப்பீர்.(18) உம்முடைய புண்ணிய ராஜரிஷி வம்சத்தைப் புறக்கணித்து, {உமது தந்தையின் ஆணையின் பேரில்} மஹத்தான கர்மத்தைச் செய்ததால், நீர் திவியில் நக்ஷத்திர பூதமாகிவிட்டீர் {வானத்தில் நக்ஷத்திரமாகிவிட்டீர்}.(19) இராஜரே, ஏன் என்னைப் பாராதிருக்கிறீர்? பாலனாகவும், பாலையாகவும் இருந்த போதே சஹசாரிணியும் {ஒன்றாகச் சேர்ந்து வாழ்பவளும்}, பாரியையுமான {மனைவியுமான} என்னிடம் ஏன் மறுமொழி கூறாதிருக்கிறீர்?(20)
காகுத்ஸ்தரே, பாணிகிருஹணத்தின் {திருமணத்தில் கைப்பற்றிய} போது, "உன்னுடனே இருப்பேன்" என்று எப்படி உறுதியளித்தீரோ, அப்படியே நினைவுகூர்ந்து, துக்கத்தில் பீடிக்கப்பட்டிருக்கும் என்னையும் உம்முடன் அழைத்துச் செல்வீராக.(21) உத்தம கதியுடையவர்களில் சிறந்தவரே, நீர் என்னைக் கைவிட்டுச் சென்றது எதற்காக? அதிலும், துக்கத்தில் இருக்கும் என்னைக் கைவிட்டுவிட்டு, இந்த லோகத்தில் இருந்து, அந்த லோகத்திற்கு {சென்றது எதற்காக?}(22) கல்யாண {புனிதப்} பொருள்களால் அலங்கரித்து, நான் மட்டுமே எந்த அழகிய காத்திரத்தை {உடலைத்} தழுவி வந்தேனோ, அந்த சரீத்தைக் கொடூர விலங்குகள் {அல்லவா} இழுத்துச் செல்லும்.(23) ஆப்த {குறைவில்லாத} தக்ஷிணைகளுடன் அக்னிஷ்டோமம் உள்ளிட்ட யஜ்ஞங்களைச் செய்து வழிபட்டும், அக்னிஹோத்ரத்துடன்[1] கூடிய சம்ஸ்காரத்தை ஏன் நீர் அடையவில்லை?(24)
[1] தர்மாலயப் பதிப்பில், "தேவரீரும் குறையின்றி தக்ஷிணைகள் கொடுக்கப்பெற்ற அக்னிஷ்டோமம் முதலான யாகங்களை செய்து முடித்தவராகி அக்னிஹோத்திர அக்னியினால் ஸம்ஸ்காரத்தை எக்காரணத்தால் பெறாதவராகிறீர்?" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "வனவாஸத்தைத் தாண்டின பின்பு ஸம்பூர்ணமான தக்ஷிணைகளுடன் அக்னிஷ்டோமாதி யாகங்களால் தேவபூஜனஞ் செய்து யஜ்ஞஸம்பந்தியான அக்னியினால் ஏன் ஸம்ஸ்காரம் பெறாமற் போயினையோ?" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "வனவாஸத்திற்கு முன்பு ராமனுக்கு அக்னி ஆதானமில்லை ஆகையால் இந்த வனவாஸந் தீர்ந்த பின்பு பட்டணஞ் சென்று அக்னிஷ்டோமாதி யாகங்களை அனுஷ்டித்துப் பின்பு கர்மத்தில் ஆயுள் முடியப்பெற்று யாகத்தில் வழங்கின அக்னியால் ஸம்ஸ்காரம் அடைய வேண்டிய நீ இடையிலேயே இங்ஙனம் ஏன் மரணம் அடைந்தாய்? என்று சீதை புலம்புகின்றனள். இதனால் ராமன் வனவஸத்திற்கு முன்பு யாகஞ்செய்யவில்லை யென்று தெரிய வருகிறது. இதுவே அயோத்யா காண்டத்தில் ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டது" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "தாங்கள் ஏராளமான தட்சிணை கொடுத்து அக்னிஷ்டோமம் முதலான வேள்விகளைச் செய்து முடித்திருக்கிறீர்கள். (இப்படிப்பட்டவர்களுக்கு, அவர்கள் பூசித்த அக்னியினால்தான் இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், தங்கள் விஷயத்தில் அப்படி நடக்கவில்லையே!) தங்கள் அக்னிஹோத்ர அக்னியினால், ஏன் தங்கள் இறுதிச் சடங்குகளைப் பெறாமல் போனீர்கள்?" என்றிருக்கிறது. ஆங்கிலப்பதிப்புக்ள அனைத்திலும், "அக்னிஷ்டோமம் மற்றும் பிற வேள்விகளை ஏராளமான தக்ஷினைகளுடன் செய்தும், ஏன் அக்னி ஹோத்ர நெருப்பின் மூலம் உமது ஈமச்சடங்குகள் நடைபெறவில்லை" என்று கேட்பதாகவே இருக்கிறது. தமிழில் கிட்டத்தட்ட அனைத்துப் பதிப்புகளும் இப்படியே இருந்தாலும், நரசிம்மாசாரியர் பதிப்பில் மட்டும் மேற்கண்டவாறு அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. இளவரசனாகக் கூடப் பொறுப்பேற்காத ராமன், வேள்விகளைச் செய்திருக்கும் வாய்ப்பு மிகக் குறைவே என்பதால் இவ்வாறு பொருள் கொண்டிருக்க வேண்டும். ஆனால் மன்னனாகவோ, இளவரசானகவோ இருந்தால்தான் எந்த வேள்வியையும் செய்ய முடியும் என்பதும் பொருத்தமற்றதாகவே தெரிகிறது.
நாடு கடத்தப்பட்ட மூவரில், லக்ஷ்மணர் மட்டுமே திரும்பி வருவதைக் கண்டு கௌசல்யை சோகத்தில் ஆழ்ந்துவிடுவாள்.(25) கேட்கப்படும்போது, உமது வதம் குறித்தும், நிசியில் உமது மித்ரர்களின் {இரவில் உமது நண்பர்களின்} படை ராக்ஷசர்களால் வதம் செய்யப்பட்டது குறித்தும் அவர் {லக்ஷ்மணர்} நிச்சயம் சொல்வார்.(26) இராகவரே, உறங்கும்போது நீர் கொல்லப்பட்டீர் என்பதையும், நான் ராக்ஷசகிருஹத்தை அடைந்தேன் என்பதையும் கேட்டால், அவள் {கௌசல்யை} ஹிருதயம் நொறுங்கி இல்லாமல் போவாள்.(27) அனகரும் {களங்கமற்றவரும்}, பார்த்திவாத்மஜரும் {இளவரசரும்}, வீரியவானுமான ராமர், அநாரியையான எனக்காக சாகரத்தைக் கடந்த பிறகு, கோஷ்பதத்தில் {பசுவின் குளம்படி நீருள்ள இடத்தில்} கொல்லப்பட்டார்.(28) குலபாம்சனீயான {குலத்தை பாழாக்குபவளான} என்னை தாசரதர் மோஹத்தால் {ராமர் அறியாமையால்} மணம்புரிந்து கொண்டார். ஆரியபுத்திரரான ராமருக்கு மிருத்யுவாக பாரியையே அறியப்படுகிறாள் {மனைவியே மரணமாக வாய்த்திருக்கிறாள்}.(29) சர்வாதிதியின் பாரியையாக {அனைவருக்கும் விருந்தோம்பல் செய்யும் ராமரின் மனைவியாக} இருந்தாலும், இங்கே இப்போது நான் துன்புறுகிறேன். நிச்சயம் பிற ஜாதிகளுக்கு {உயிரினங்களுக்கு} வழங்கப்படும் உத்தம தானத்தை {முற்பிறவியில்} நான் தடுத்திருக்க வேண்டும்[2].(30)
[2] தர்மாலயப் பதிப்பில், "பூர்வஜன்மத்தில் உத்தமமான தானமானது என்னால் தடுக்கப்பட்டது. அக்காரணத்தால் தான் இவ்வுலகில் எல்லோரையும் தனது அதிதியாய் கொண்டாடுபவருக்கு பார்யை எவளோ அந்த நான் இவ்வுலகில் இப்பொழுது தத்தளிக்கிறேன்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "நான் பூர்வ ஜன்மத்தில் எவரோ கன்யாதானஞ் செய்ய நினைத்திருக்கும் பொழுது அதற்கு விக்னஞ் செய்திருப்பேன்; ஆனது பற்றியே ஸர்வரக்ஷகனும் ஸர்வர்க்கும் அதிதி போல் பூஜிக்கத் தகுந்தவனும் ஸமஸ்த அதிதி பூஜகனுமாகிய இப்படிப்பட்ட ராமனுக்குப் பார்யையாயினும் இந்த ஜன்மத்தில் இத்தகைய போககாலத்திலேயே துக்கப்படுகின்றனன்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "நான், முந்தைய பிறவியில் யாருக்கோ தானம் செய்யப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறேன். (அந்தப் பாவம், இப்போது பலனைக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது). எல்லா விருந்தினரையும் உள்ளன்புடன் உபசரிக்கும் நல்லியல்புடையவருக்கு மனைவியாகி, இப்போது (இராமனுடைய மரணத்தினால்) நொந்து தவிக்கிறேன்" என்றிருக்கிறது.
இராவணா, ராமரின் மீது நன்றாக என்னையும் {கொன்று} சாய்த்து, பதியுடன் பத்தினியை சீக்கிரமே சேர்த்து வைத்து, உத்தம கல்யாணத்தை {புண்ணிய காரியத்தைச்} செய்விப்பாயாக.(31) இராவணா, என் சிரசை அவருடைய சிரத்துடனும், என்னுடலை அவருடலுடனும் சேர்ப்பாயாக. மஹாத்மாவான என் பர்த்தாவின் கதியையே நானும் பின்பற்றிச் செல்வேன்" {என்று அழுது புலம்பினாள் சீதை}.(32)
அந்த நீள்விழியாள் {சீதை}, அங்கே தன் பர்த்தாவின் சிரத்தையும், தனுசையும் மீண்டும் மீண்டும் பார்த்து, துக்க சந்தாபத்தில் இவ்வாறே அழுது புலம்பினாள்.(33) சீதை இவ்வாறு அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது, அங்கே வாயில் காக்கும் ராக்ஷசன் ஒருவன், கைக்கூப்பியபடியே தலைவனை {ராவணனை} அணுகினான்.(34) அவன், "ஆரியபுத்திரரே, ஜயமடைவீராக" என்று மதிப்புடன் வாழ்த்திவிட்டு, வாஹினிபதியான பிரஹஸ்தன் வந்திருப்பதை அறிவிக்கும் வகையில்,(35) "பிரபோ, சர்வ அமைச்சர்கள் சஹிதராக பிரஹஸ்தர் வந்திருக்கிறார். உம்மைக் காணும் விருப்பத்தில் என்னை அவர் அனுப்பினார்.(36) மஹாராஜாவே, ராஜபாவத்துடன் பொறுத்தருள்வீராக[3]. கொஞ்சம் அவசர காரியம் இருக்கிறது. நிச்சயம் அவர்களுக்கு உமது தரிசனம் வேண்டும்" {என்றான்}.(37)
[3] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராஜகுணம் கொண்ட ராவணன் இந்த அகால ஊடுருவலைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதையே இந்த இடையூறு உணர்த்துகிறது" என்றிருக்கிறது.
தசக்ரீவன் {பத்துக்கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, அந்த ராக்ஷசனால் சொல்லப்பட்ட அனைத்தையும் கேட்டு, அசோக வனத்தை விட்டு, மந்திரிகளைக் காணச் சென்றான்.(38) அவன் சபைக்குள் பிரவேசித்து, ராமனின் விக்கிரமத்தை தனக்குள்ளேயே ஆராய்ந்து, தன் மந்திரிகளுடன் அனைத்தையும் ஆலோசித்துவிட்டு, ஆக வேண்டிய காரியத்தைத் தீர்மானித்தான்.(39) இராவணன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற உடனேயே அந்த சிரசும், அந்த உத்தமக் கார்முகமும் {வில்லும்} மறைந்தன.(40) இராக்ஷசேந்திரன், பீம விக்கிரமர்களான அந்த மந்திரிகளுடன் சேர்ந்து, ராம காரியத்தில் நிச்சயித்திருக்கும் தீர்மானத்தைக் குறித்துக் கலந்தாலோசித்தான்.(41)
காலனுக்கு ஒப்பான ராக்ஷசாதிபன் ராவணன், படைத்தலைவர்களுடனும், அருகில் நின்றிருந்த நலம்விரும்பிகளிடமும் {பின்வருமாறு} கூறினான்:(42) "பேரிகைகளை குணில்களால் {கோல்களால்} அடித்து, உரக்க முழக்கி, சீக்கிரமே சைனியத்தைத் திரட்டுவீராக. காரணமேதும் சொல்ல வேண்டாம்" {என்றான்}.(43)
அப்போது தூதர்கள், "அப்படியே ஆகட்டும்" என்று அவனது சொற்களுக்கு மறுமொழி கூறிய உடனேயே, மஹத்தான படையைத் திரட்டி வந்து, யுத்தத்திற்காகக் காத்திருக்கும் தங்கள் தலைவனிடம் {படையின்} வரவை தெரிவித்தனர்.(44)
யுத்த காண்டம் சர்க்கம் – 032ல் உள்ள சுலோகங்கள்: 44
Previous | | Sanskrit | | English | | Next |