Ravana rebukes Vibheeshana harshly | Yuddha-Kanda-Sarga-016 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விபீஷணன் சொல்வதைக் கேட்க மறுத்துக் கடுஞ்சொற்கள் பேசிய ராவணன்; இராவணனிடம் விடைபெற்றுக் கொண்ட விபீஷணன்...
நல்விருப்பத்தால், ஹிதமான வாக்கியத்தைச் சொன்ன விபீஷணனிடம், காலனால் பீடிக்கப்பட்ட ராவணன், {பின்வரும்} கடும் வாக்கியத்தைப் பேசினான்[1]:(1) "அறிந்த பகைவனுடனும், குரோதங்கொண்ட விஷப்பாம்புடனும் வசிக்கலாம். ஆனால், மித்ரனைப் போலப் பேசிக் கொண்டே சத்ருவிடம் அர்ப்பணிப்புள்ளவனுடன் சேர்ந்து வசிக்க முடியாது.(2) இராக்ஷசா, சர்வ லோகங்களிலும் ஞாதிகளின் சீலத்தை {உற்றார் உறவினரின் நடத்தையை} நான் அறிவேன். இந்த ஞாதிகள், {தங்கள்} ஞாதிகளின் விசனத்தில் சதா மகிழ்ச்சியடைகிறார்கள்.(3) இராக்ஷசா, ஞாதிகள், தங்கள் பிரதானன் {தலைவன்} சாதகனாகவும் {சாதித்தவனாகவும்}, வைத்தியனாகவும் {கல்விமானாகவும்}, தர்மசீலனாகவும் {அறம் ஒழுகுபவனாகவும்}, சூரனாகவும் இருந்தாலும் அவனை அவமதித்து, பழிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.(4) கபட ஹிருதயத்துடனும், துரோக மனத்துடனும் கூடிய ஞாதிகள், நித்யம் அன்யோன்யம் {எப்போதும் ஒருவருக்கொருவர்} மகிழ்ச்சியடைபவர்களாக {காட்டிக் கொண்டு}, விசனங்களில் கோரமான பயத்தை உண்டாக்குவார்கள்[2].(5)
[1] யுத்தகாண்டத்தில் 10 முதல் 15ம் சர்க்கம் வரை என செம்பதிப்பில் இந்த 6 சர்க்கங்கள் கிடையாது. இங்குள்ள இந்த 16ம் சர்க்கம், அந்தச் செம்பதிப்பில் 11ம் சர்க்கமாக விவரிக்கப்படுகிறது.
[2] தர்மாலயப் பதிப்பில், "ஞாதிகள், எக்காலத்திலும் கூடிக்குலாவுபவர்களாய் ஆபத்துகளில் ஒழிக்க தீட்டிய கத்தியுடன் இருக்கின்றவர்களாய் கபடமனதுடையவர்களாய் கொடிய துரோகம் பண்ணுபவர்களே" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அவர்க்கு ஜ்ஞாதிகளின் வ்யஸனத்தில் ஸந்தோஷமும் அவரது மேன்மையில் அஸூயையும் உண்டாகப் பெற்றிருக்கை மாத்ரமேயன்றி மற்றொரு ஸ்வபாவம் இல்லை. அவர்கள் தமது அபிப்ராயங்களை வெளிக்காட்டாமல் மறைவாகவே வைத்துக் கொண்டு வெளியில் ஒருவருக்கொருவர் ஸ்நேஹமுள்ளவர்போலவே அபிநயித்துக் கொடிய கார்யங்களைச் செய்து கொண்டிருப்பார்களாகையால் வ்யஸனங்கள் உண்டாகும்போது த்ரோஹஞ் செய்வார்கள். ஆகையால் அவர்கள் மூலமாய்த் தப்பாமல் பயம் விளையும்" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "தாயாதிகள் எப்போதும் (வெளித்தோற்றத்திற்குத்) தோழமையுடன் குலாவுவார்கள். ஆனால் சமயம் கிடைக்கும்போது, நெருப்பு வைத்துக் கொளுத்தவும் தயங்கமாட்டார்கள். தங்கள் அந்தரங்க எண்ணங்களை மறைத்து வைத்துக் கொண்டிருப்பார்கள். ஆகவே, தாயாதிகள் பயங்கரமானவர்கள்" என்றிருக்கிறது.
பூர்வத்தில், பத்மவனத்தில், பாசஹஸ்தர்களான நரர்களைக் கண்டு ஹஸ்தங்கள் சில சுலோகங்களை கீதம் செய்தன. {தாமரைக் காட்டில், கையில் கயிறுகளுடன் கூடிய மனிதர்களைக் கண்டு, யானைகள் பின்வரும் இந்த சுலோகங்களைப் பாடின}. நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன், கேட்பாயாக.(6) "பாசங்கள் {கயிறுகள்} பயத்தை விளைவிப்பதில்லை; அக்னியும் இல்லை, வேறு சஸ்திரங்களும் {பயத்தை விளைவிப்பது} இல்லை. கோரர்களும், சுயநலவாதிகளுமான ஞாதிகளே {உற்ற உறவினர்களான மற்ற யானைகளே} நமக்கு பயத்தை விளைவிக்கின்றனர்.(7) அவர்களே, {நம்மைப்} பிடிப்பதற்கான உபாயங்களை {வழிமுறைகளைக்} கற்பிக்கின்றனர். இதில் ஐயமில்லை. ஞாதிகளால் விளையும் பெரும்பயமே நமக்கு மிகக் கஷ்டமானது. இது நன்கு அறியப்பட்டதே.(8) கோக்களிடம் சம்பத்து {பசுக்களிடம் பால் எனும் செல்வம்} உண்டாகும். ஸ்திரீகளிடம் சாபல்யம் {நிலையின்மை / சஞ்சலம் / கலக்கம்} உண்டாகும். பிராமணர்களிடம் தமம் {புலனடக்கம்} உண்டாகும். ஞாதிகளிடம் பயமே உண்டாகும்" {இதுவே யானைகள் பாடிய சுலோகமாகும்}.(9)
எனவே, சௌம்யா {மென்மையானவனே}, நான் உலகத்தால் நன்றாக நடத்தப்படுவது {மதிக்கப்படுவது}, ஐஷ்வர்யத்தை அடைந்தது, பகைவரின் தலைமேல் இருப்பது ஆகியவற்றில் உனக்கு இஷ்டமில்லை.(10) புஷ்கர {தாமரை} இலைகளில் விழுந்த நீர்த்துளிகள் எப்படியோ, அப்படியே எவ்வளவு {காலம்} ஆனாலும் அநாரியர்களிடம் நல்ல நட்பும் ஒட்டாது.(11) எப்படி சரத்கால {கூதிர்கால} மேகங்கள் கர்ஜனையுடன் பொழிந்தாலும் நீரால் {பூமி} நனைவதில்லையோ, அப்படியே உன்னைப் போன்ற அநாரியர்களிடம் நல்ல நட்பு பயன்படாது.(12) எப்படி {மலரில் இருந்து} ரசத்தை அடைந்தும் மதுகரங்கள் {தேனீக்கள்} திருப்தியாக {அங்கேயே} நிலைப்பதில்லையோ, அப்படியே உன்னைப் போன்ற அநாரியர்களால் நல்ல நட்பில் நிலைக்கமுடியாது.(13) எப்படி காஷபுஷ்பத்தில் {புல்லின் மலரில்} பருக முயற்சித்தும் மதுகரங்களால் {தேனீக்களால்) ரசத்தை அடையமுடியாதோ, அப்படியே அநாரியர்களால் நல்லநட்பைப் பெற முடியாது[3].(14) எப்படி கஜங்கள், பூர்வத்தில் தங்கள் துதிக்கையால் ஸ்நானம் செய்தும், தேகத்தில் புழுதியைப் பூசிக் கொள்ளுமோ, அப்படியே அநாரியர்களால் நல்ல நட்பும் தூஷிக்கப்படும்[4].(15) நிசாசரா {இரவுலாவியே}, அந்நியன் எவனும் இவ்விதமான இவ்வாக்கியங்களைச் சொல்லியிருந்தால், இந்த முஹூர்த்தத்தில் அவன் இருக்கமாட்டான். குலபாம்சனா {குலத்தை அழிக்க வந்தவனே}, உனக்கு ஐயோ" {என்றான் ராவணன்}.(16)
[3] தர்மாலயப் பதிப்பில், "வண்டு ஆசையால் புஷ்பரஸத்தைக் குடித்துவிட்டு அவ்விடத்தில் இருக்கிறதில்லை. அம்மாதிரிதான் நீயுமிருக்கின்றனை. அற்பர்களிடத்தில் அன்பென்பதும் அப்படித்தான்" என்ற ஒரு சுலோகம் மட்டுமே இருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "வண்டு, புஷ்பங்களிலுள்ள தேனை மிகுந்த ஆசையுடன் பருகிப் பிறகு அந்தப் புஷ்பங்களில் தேன் கொடுத்த உபகாரத்தை நினைத்துச் சிறிதும் நிற்கமாட்டாதல்லவா? அப்படியே துஷ்டர்களுக்குத் தம்மைப் போஷித்தவரிடத்திலும் நல்லமனம் உண்டாகாது. அவ்வண்ணமே நீயும் என்னால் ஸகல ஸுகங்களையும் அனுபவித்தும், என்னிடத்தில் ஸ்நேஹம் இல்லாமையால் என் மேன்மையை விரும்பாதிருக்கின்றனை" என்ற ஒரு சுலோகம் மட்டுமே இருக்கிறது. கோரக்பூர், கீதாபிரஸ் பதிப்பில், "தேன் உண்ணும் வண்டு, ஆசையுடன் மகரந்த ரஸத்தைப் பருகிவிட்டு, உடனே அவ்விடத்தைவிட்டுச் சென்றுவிடுகிறது. கீழ்மக்களிடம் அன்பு வைப்பது அப்படித்தான். (தனக்கு சுகம் கிடைக்கும் வரையில் தாயாதிகளுடன் இருந்துவிட்டு, அவர்களுக்குக் கஷ்டம் வந்தவுடன் ஓடிப்போய்விடுவார்கள்). அப்படித்தான் நீயும் இருக்கிறாய்" என்ற ஒரு சுலோகம் மட்டுமே இருக்கிறது. மேற்கண்டவை மூன்றும் தமிழ்ப்பதிப்புகள். ஆங்கிலப்பதிப்புகளில், தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "பூவில் இருந்து தேன் கிடைத்தாலும், அதீத ஆசையால் அந்தப் பூவில் ஒட்டாமல் போகும் தேனீயைப் போல, இழிந்தவர்களிடம் நட்பு ஒட்டாது என்பதால் நீயும் அவ்வகையைச் சேர்ந்தவனே.(13) புல்லில் உள்ள பூவில் இருந்து தேன் அருந்த முயன்றாலும், தேனீயால் அதை அடைய முடியாததைப் போல, இழிந்தவர்களிடம் இருந்து நட்பைப் பெற முடியாது(14)" என்ற இரு சுலோகங்கள் இருக்கின்றன. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "தேனீக்கள் (தேன்) தேன் பருகித் திருப்தியடைந்த பிறகும் நன்றியுணர்வு இல்லாததைப் போல உன்னைப் போன்ற இழிந்தவனுடன் நட்பு பாராட்டமுடியாது.(12) தேனால் திருப்தியடைந்த பிறகும் தேனீக்கள் பூவில் தங்காததைப் போலவே இழிந்தவர்களுடனான நட்பும் இருக்கும்.(15)" என்ற இரு சுலோகங்கள் இருக்கின்றன. மன்மதநாததத்தர் பதிப்பில், "தேனை உறிஞ்சிய பிறகு பறந்து விடும் வண்டைப் போலத்தான் இழிந்தவர்களுடனான நட்பும் இருக்கும். காஷமலர்களில் பருகியும் தேனை அடைய முடியாத வண்டைப் போலத்தான் இழிந்தவர்களுடனான நட்பும் இருக்கும்" என்ற தொடர்ச்சியான இரு சுலோகங்கள் இருக்கின்றன. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "தாங்கள் கண்டடைந்த தேனை உறிஞ்சியதும் பறந்துவிடும் வண்டுகளைப் போலவே, இழிந்தோரும் தங்கள் நோக்கம் தீர்ந்ததும் நட்பைக் கைவிடுவார்கள். தேனைக் களவாடும் பேராசையில் தேனைத் தராத குச மலர்களைப் பருகுவதைப் போல, இழிந்தவர்கள் நட்பை முழுமையாக ருசிப்பதில்லை" என்ற தொடர்ச்சியான இரு சுலோகங்கள் இருக்கின்றன. செம்பதிப்பான விவேக்தேவ்ராய் {பிபேக் திப்ராய்} பதிப்பில் 10ம் அத்தியாயமாக வரும் இந்த சர்க்கத்தில் இந்த சுலோகங்கள் இரண்டும் இல்லை. இன்னும் சில சுலோகங்களும் இல்லை.
[4] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவர்கள் பின்னர் தங்கள் முந்தைய நண்பர்களைக் கைவிடுவார்கள்" என்றிருக்கிறது.
இந்தக் கடும் வாக்கியம் சொல்லப்பட்டதும், நியாயவாதியான விபீஷணன், கதாபாணிகளான நான்கு ராக்ஷசர்களுடன் {வானத்தில்} எழுந்தான்.(17) பிறகு, ஸ்ரீமானான விபீஷணன், கோபமடைந்தவனாக அந்தரிக்ஷத்தை {விண்வெளியை} அடைந்து, உடன்பிறந்தவனான ராக்ஷசாதிபனிடம் {ராவணனிடம்பின்வருமாறு} பேசினான்:(18) "இராஜரே, நீர் என்னுடன் பிறந்தவர். அத்தகையவர் விரும்பும் எதையும் என்னிடம் பேசலாம். ஜியேஷ்டர் பிதாவுக்கு சமமானவர் {மூத்தவர் [அண்ணன்] தந்தைக்கு நிகரானவர்}. தர்மத்தின் பாதையில் இல்லையென்றாலும் மதிக்கப்பட வேண்டியவர்.{19} உம்முடைய இந்தக் கடும் வாக்கியங்களை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(19,20அ) தசானனரே {பத்து முகங்களைக் கொண்டவரே}, ஆகாதவற்றை மனத்தில் கொண்டவர்களும், காலத்தின் வசமடைந்தவர்களும் ஹிதம் விரும்பி சொல்லப்படும் நல்ல வாக்கியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.(20ஆ,21அ) இராஜரே, புருஷர்களில், சதா பிரியமாகப் பேசக்கூடியவர்கள் கிட்டுவது சுலபம் {எளிது}. பிரியமற்றவையாக இருப்பினும் பத்தியமானதை {நன்மை விளைவிப்பதைச்} சொல்பவனும், {அவற்றைக்} கேட்பவனும் கிட்டுவது துர்லபம் {அரிது}[5].(21ஆ,22அ)
[5] கம்பராமாயணத்தில் இங்கே விபீஷணன், இரணியன், பிரகலாதன் கதையை விரிவாகச் சொல்கிறான். அந்தக் கதையைச் சொல்லி முடித்ததும் விபீஷணன், ராவணனிடம் முடிவுரையாகச் சொன்னது பின்வரும் பாடல்:ஈதாகும் முன் நிகழ்ந்தது எம்பெருமான் என் மாற்றம்யாதானும் ஆக நினையாது இகழ்தியேல்தீது ஆய் விளைதல் நனி திண்ணம் எனச் செப்பினான்மேதாவிகட்கு எல்லாம் மேலான மேன்மையான்- கம்பராமாயணம், 6364ம் பாடல், யுத்த காண்டம், இரணியன் வதைப்படலம்பொருள்: "இதுவே முன்பு நடந்தது ஆகும். எம்பெருமானே, என்னுடைய பேச்சு எதுவாகினும், ஆக {உமது நன்மைக்காக என} நினையாமல் இகழ்வாயெனில், தீமை விளைதல் மிகத் திண்ணமாகும்" என்று சொன்னான் மேதாவிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான் {விபீஷணன்}.
சர்வ பூதங்களின் அழிவுக்கும் காரணமான காலனின் பாசத்தில் {கயிற்றில்} கட்டப்பட்ட உம்மை, எரிந்து கொண்டிருக்கும் சரண்யத்தை {புகலிடத்தை / வீட்டைப்} போல என்னால் புறக்கணிக்க முடியவில்லை.(22ஆ,23அ) கூரியவையும், காஞ்சனத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டவையும், எரியும் பாவகனுக்கு {எரியும் தீக்கு} ஒப்பானவையுமான ராமரின் சரங்களால் நீர் கொல்லப்படுவதைக் காண நான் விரும்பவில்லை.(23ஆ,24அ) போர்க்களத்தில் சூரர்களும், பலவான்களும், அஸ்திரங்களை அறிந்தவர்களுமான நரர்கள், காலனால் பீடிக்கப்பட்டால் {காலம் முந்தும்போது}, மணலாலான அணைகளைப் போல வடிவங்குலைந்து போவார்கள்.(24ஆ,25அ) எந்த ஹிதத்தை {நன்மையை} விரும்பி எதைச் சொன்னேனோ, அவற்றை குருவாக {பெரியவராக / அண்ணனாகப்} பொறுத்துக் கொள்வீராக.{25ஆ} உம்மையும், ராக்ஷசர்களுடன் கூடிய இந்தப் புரீயையும் {நகரத்தையும்} எல்லாவகைகளிலும் ரக்ஷித்துக் கொள்வீராக. உமக்கு ஸ்வஸ்தியாகட்டும் {நன்மை விளையட்டும்}. நான் செல்கிறேன். நான் இல்லாமல் சுகமாக இருப்பீராக.(25ஆ,26) நிசாசரரே {இரவுலாவியே, உமது} ஹிதம் வேண்டி என்னால் தடுக்கப்படும் உமக்கு, என் வசனம் ஏற்புடையதாக இல்லை. இறுதிக் காலத்தில் ஹிதம் சொல்லும் நண்பர்களை, ஆயுசு கழிந்த நரர்கள் {மனிதர்கள்} ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்" {என்றான் விபீஷணன்}.(27)
யுத்த காண்டம் சர்க்கம் – 016ல் உள்ள சுலோகங்கள்: 27
Previous | | Sanskrit | | English | | Next |