Advice of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-009 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராக்ஷசர்களுக்கும், ராவணனுக்கும் அறிவுரை வழங்கிய விபீஷணன்...
பிறகு நிகும்பன், ரபசன், மஹாபலன், சூரியசத்ரு, சுப்தக்னன், யஜ்ஞகோபன், மஹாபார்ஷ்வன், மஹோதரன்,{1} வெல்வதற்கரிய ராக்ஷசர்களான அக்னிகேது, ரஷ்மிகேது, மஹாதேஜஸ்வியும், பலவானும், ராவணாத்மஜனுமான {ராவணனின் மகனுமான} இந்திரஜித்,{2} மஹாபலவானான பிரஹஸ்தன், விரூபாக்ஷன், மஹாபலவானான வஜ்ரதம்ஷ்டிரன், தூம்ராக்ஷன், அதிகாயன், துர்முகன் என்ற ராக்ஷசன் ஆகியோர்,{3} பரிகங்கள், பட்டசங்கள், பராசங்கள் {முள்ளாயுதங்கள்}, சக்திகள் {வேல்கள்}, சூலங்கள், பரசுகள் {கோடரிகள்}, சாபங்கள் {விற்கள்}, பாணங்கள் {கணைகள்}, கூர்மையான பெருங்கட்கங்கள் {கத்திகள்} ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர்.{4} தேஜஸ்ஸால் ஒளிர்ந்த சர்வ ராக்ஷசர்களும், பரமகுரோதத்துடன் துள்ளிக் குதித்து, ராவணனிடம் {பின்வருமாறு} சொன்னார்கள்:(1-5) "ராமனையும், சுக்ரீவனையும், லக்ஷ்மணனையும், லங்கைக்குத் தீங்கிழைத்தவனும், கிருபைக்குரியவனுமான ஹனூமதனையும் கொல்வோம்" {என்றனர்}.(6)
விபீஷணன், ஆயுதங்களைப் பிடித்திருந்த அவர்கள் அனைவரையும் நிறுத்தி, அமரச் செய்து, கூப்பிய கைகளுடன் இந்த வாக்கியத்தைக் கூறினான்:(7) "தாதா {ஐயா, ராவணரே}, எப்போது {சாம, தான, பேதம் எனும்} மூன்று உபாயங்களால் அர்த்தத்தை {நோக்கத்தை} அடைய முடியவில்லையோ, அதுவே தகுந்த விக்கிரம காலமாகும் என்று மநீஷிணர்கள் சொல்கின்றனர் {அதுவே ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு / தண்டத்திற்குப் பொருத்தமான காலமாகும் என்று நீதிநூல் வல்லுனர்கள் / கல்விமான்கள் சொல்கின்றனர்}.(8) தாதா, அலட்சியமாக இருப்பவர்கள், {பகைவரின்} தாக்குதலுக்கு உள்ளானவர்கள், தெய்வத்தால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோரை விதிப்படி பரீக்ஷித்து செய்யப்படும் விக்கிரமமே சித்திக்கும்.(9) அலட்சியமற்றவரும் {விழிப்புள்ளவரும்}, வெற்றியில் விருப்பங் கொண்டவரும், உறுதிமிக்க பலத்தை {படையைக்} கொண்டவரும், கோபத்தை வென்றவரும், வெல்வதற்கரியவருமான அவரை {ராமரை} நீங்கள் தாக்க விரும்புவது எப்படி?(10) நதநதீபதியான {நதங்கள், நதிகளின் தலைவனான} கோரமான சமுத்திரத்தைக் கடந்த ஹனுமதனின் கதியை {வேகத்தை} உலகில் எவனால் நினைத்துப் பார்க்கவோ, அறிந்து கொள்ளவோ முடியும்?(11)
நிசாசரர்களே {இரவுலாவிகளே}, பகைவரின் பலமும், படையும் அளவிடற்கரியனவாக இருக்கின்றன. எவ்வகையிலேனும் அவசரப்பட்டு {அவர்களை} அவமதித்துவிடக் கூடாது.(12) புகழ்மிக்க எவருடைய பாரியை {மனைவி சீதை} ஜனஸ்தானத்திலிருந்து கொண்டுவரப்பட்டாளோ, அந்த ராமர், பூர்வத்தில் ராக்ஷசராஜருக்கு {ராவணருக்குச்} செய்த அபக்ருதம் {கூடாத செயல் / தவறு} என்ன?(13) வரம்புமீறிய கரன், போரில் ராமரால் கொல்லப்பட்டான். பிராணிகளின் பலம் எப்படியோ, அப்படியே அவசியம் தங்கள் பிராணன்களை ரக்ஷித்துக் கொள்ள வேண்டும் {உயிரினங்கள் தங்கள் வலிமைக்கு ஏற்பத் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். [இராமர், தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவே கரனைக் கொன்றார்]}[1][2].(14) இதன் நிமித்தம், வைதேகியிடமிருந்து நமக்கு மகத்தான பயம் உண்டாகும். கொண்டு வரப்பட்ட அவள் {சீதை}, கொடுக்கப்பட வேண்டும். கலகத்தின் அர்த்தத்தில் {கலகம் செய்வதன் பொருட்டு} செயல்படுவதால் என்ன {பயன்}?(15) தர்மத்தைப் பின்பற்றும் அந்த வீரியவானிடம் {ராமரிடம்}, அர்த்தமில்லாமல் வைரம் பாராட்டுவது, நம்மால் தாங்கிக் கொள்ளக்கூடியதல்ல. மைதிலி அவரிடம் {ராமரிடம்} கொடுக்கப்பட வேண்டும்.(16)
[1] நரசிம்மாசாரியர், தர்மாலய, கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்புகளில் இதன் பிறகு மற்றுமொரு சுலோகம் வருகிறது. அதன் பொருள், "பிறர் மனைவியை கண்ணெடுத்துப் பார்ப்பது புகழுக்குக் களங்கம் விளைவிப்பது; ஆயுளைக் குறைப்பது; {நால்வகை} புருஷார்த்தங்களையும் அழிக்கக்கூடியது. பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது; பாவம் செய்வதை மேன்மேலும் தூண்டிவிடுவது" என்பதாகும். ஆங்கிலப் பதிப்புகள் எதனிலும் இது சொல்லப்படவில்லை.
[2] இங்கே சூர்ப்பணகையின் அங்கபங்கம் குறித்து விபீஷணன் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
கஜங்கள், அஷ்வங்கள் {யானைகள், குதிரைகள்} ஆகியவற்றுடன் கூடியதும், ஏராளமான ரத்தினங்களால் நிறைந்ததுமான புரீ {நம் லங்கா நகரம்} சிதறிப் போவதற்கு முன், மைதிலி அவரிடம் கொடுக்கப்பட வேண்டும்.(17) கோரமானதும், வெல்வதற்கரியதுமான மஹத்தான ஹரிவாஹினி {குரங்குப்படை}, நமது லங்கையைத் தாக்கும் வரை காத்திராமல் சீதை கொடுக்கப்பட வேண்டும்.(18) இராமரிடம், அவரது அன்பு பாரியை {மனைவி சீதை} கொடுக்கப்படவில்லையெனில், இந்த லங்காபுரீக்கும், சர்வ ராக்ஷசர்களுக்கும் நாசமே விளையும்.(19) பந்துத்வத்தால் {உறவுமுறையால்} உம்மை வேண்டுகிறேன். என் வசனத்தின்படி செயல்படுவீராக. நான் உமது ஹிதத்திற்காகவே சொல்கிறேன். மைதிலியை அவரிடம் {ராமரிடம்} கொடுத்துவிடுவீராக.(20)
நிருபாத்மஜர் {மன்னர் தசரதரின் மகனான ராமர்}, சரத் {கூதிர்} கால சூரியனைப் போல் ஒளிர்பவையும், நவ புங்கங்களுடன் {புதிய இறகுகளுடன்} கூடியவையும், திடமானவையும், அமோகமானவையுமான {தவறாதவையுமான} கணைகளை, உம்மை வதைப்பதற்காக ஏவும் முன், மைதிலியை தாசரதியிடம் {தசரதரின் மகனான ராமரிடம்} கொடுத்துவிடுவீராக.(21) சுகத்தையும், தர்மத்தையும் நாசம் செய்யக்கூடிய அந்தக் கோபத்தைக் கைவிடுவீராக. கீர்த்தியையும், தர்மத்தையும் வளர்க்கும் இன்பத்தை நாடி அமைதியடைவீராக. புத்திரர்களுடனும், பந்துக்களுடனும் {உறவினர்களுடனும்} நாம் ஜீவித்திருப்போம். மைதிலியை தாசரதியிடம் கொடுத்துவிடுவீராக" {என்றான் விபீஷணன்}.(22)
இராக்ஷசேஷ்வரன் ராவணன், விபீஷணனின் சொற்களைக் கேட்டு, அவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, தானும் கிருஹத்திற்குள் பிரவேசித்தான்.(23)
யுத்த காண்டம் சர்க்கம் – 009ல் உள்ள சுலோகங்கள்: 23
Previous | | Sanskrit | | English | | Next |