Preach of Vibheeshana for wellbeing | Yuddha-Kanda-Sarga-010 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இரவாணனிடம் மீண்டும் சென்று, தீய சகுனங்களை எடுத்துக்காட்டி வேண்டிய விபீஷணன்...
பயங்கர கர்மங்களைச் செய்பவனான விபீஷணன், விடியற்காலையில் எழுந்த பின்னர், வாய்த்திருக்கும் தர்ம, அர்த்தங்களை நிச்சயித்துக் கொண்டு, ராக்ஷசாதிபதியின் வேஷ்மத்திற்கு {இல்லத்திற்குச்} சென்றான்[1].(1) உயர்ந்த சைலத்திற்கு ஒப்பானதும், சைல சிருங்கத்தைப் போன்றதும், உன்னதமானதும், பெரும் அறைகளுடன் நன்றாக வகுக்கப்பட்டதும், மஹாஜனங்கள் நாடுவதும்,(2) மதிமிக்கவர்களும், அன்புமிக்கவர்களுமான மஹாமந்திரிகளால் விளங்கப்பெற்றதும், ஆப்தர்களும், பரியாப்தர்களுமான {விருப்பத்திற்குரியவர்களும், சமர்த்தர்களுமான} ராக்ஷசர்களால் அனைத்துப் பக்கங்களிலும் ரக்ஷிக்கப்பட்டதும்,(3) மத்த மாதங்கங்களின் பெருமூச்சுகள் கலந்த மாருதத்துடன் கூடியதும் {மதங்கொண்ட யானைகளின் பெருமூச்சுகள் கலந்த காற்றைக் கொண்டதும்}, சங்கு கோஷங்களின் மஹாகோஷத்தையுடையதும், தூர்ய வாத்தியங்களின் ஒலிகளால் ஒலிக்கப்பெற்றதும்,(4) பிரமதாஜனங்களால் {பெண்களால்} நிறைந்ததும், முணுமுணுப்பொலிகள் நிறைந்த மஹாபாதையைக் கொண்டதும், புடம்போட்ட காஞ்சனத்தாலான சார்மணைகளை {சுவரோடு ஒட்டித் திண்ணையில் கட்டியவையும், தங்கத்தாலானவையுமான சாய்மானத் திண்டுகளைக்} கொண்டதும், உத்தம பூஷணங்களால் {சிறந்த அணிகளால்} அலங்கரிக்கப்பெற்றதும்,(5) கந்தர்வர்களின் வாசஸ்தலம் போன்றதும், ரத்தினங்கள் நிறைந்த மாருதனின் ஆலயத்தைப் போன்றதும், போகிகளின் {இன்புற்றிருக்கும் நாகர்களின்} பவனத்தைப் போன்றதும்,(6) தன் அண்ணனுக்குரியதுமான {ராவணனின்} அந்த ஆலயத்திற்குள், எங்கும் ஒளி பரப்பும் கதிர்களைக் கொண்ட ஆதித்யன் பெரும் மேகத்திற்குள் {நுழைவதைப்} போல, பேரொளியுடன் கூடிய வீரன் {விபீஷணன்} பிரவேசித்தான்.(7)
[1] செம்பதிப்பான விவேக் தேவ்ராய் {பிபேக்திப்ராய்} பதிப்பில் இந்த பத்தாம் சர்க்கத்தில் இருந்து, பதினைந்தாம் சர்க்கம் வரையான 6 சர்க்கங்களிலுள்ள செய்திகள் ஏதும் இல்லை.
உடன்பிறந்தவனின் விஜயத்தை {ராவணனின் வெற்றியை} விரும்பி வேதவித்களால் ஜபிக்கப்பட்ட புண்ணியமான புண்யாஹ கோஷங்களை மஹாதேஜஸ்வி {விபீஷணன்} கேட்டான்.(8) மஹாபலவானான அவன் {விபீஷணன்}, தயிர் பாத்திரங்கள், நெய், புஷ்பங்கள், அக்ஷதைகளால் பூஜிக்கும் மந்திர வேதவித்களையும் {வேத மந்திரங்களை அறிந்தவர்களையும்}, விப்ரர்களையும் {பிராமணர்களையும்} கண்டான்.(9) இராக்ஷசர்களால் பூஜிக்கப்படுபவனும், சொந்த தேஜஸ்ஸால் ஒளிர்பவனும், மஹாபாஹுவுமான அவன் {விபீஷணன்}, ஆசனத்தில் அமர்ந்திருந்த தனதானுஜனுக்கு வந்தனம் செய்தான் {குபேரனின் தம்பியான ராவணனை வணங்கினான்}.(10) வழக்கில் உள்ள ஆசாரங்களை {பழக்கவழக்கங்களைக்} கடைப்பிடிப்பவனும், ஆசாரக்கோவிதனுமான அவன் {பழக்கவழக்கங்களை நன்கறிந்தவனுமான விபீஷணன்}, ராஜ திருஷ்டியால் {மன்னனின் கண்ஜாடையால்} கிடைக்கப்பெற்றதும், ஹேமத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான ஆசனத்தை அடைந்தான்.(11) அவன் {விபீஷணன்}, மந்திரிகளின் முன்னிலையில், யாரும் இல்லாதபோது, மஹாத்மாவான ராவணனுக்கு ஹேதுவானதை நிச்சயித்து, அர்த்தம் பொதிந்த {பின்வரும்} ஹிதமான வசனத்தைச் சொன்னான்.(12)
உலக நன்மை தீமைகளை அறிந்தவனும், தேச, காலங்களுக்கு இணக்கமாகப் பேசக்கூடியவனுமான அவன் {விபீஷணன்}, முறைப்படியான மரபுகளைப் பின்பற்றி உடன்பிறந்தவர்களில் மூத்தவனை {ராவணனை} சாந்தப்படுத்தும் வகையில்,(13) "பரந்தபரே {பகைவரை அழிப்பவரே}, வைதேஹி இங்கே எப்போது வந்தாளோ, அப்போதிலிருந்து நமக்கு அசுப நிமித்தங்களே {தீய சகுனங்களே} தென்படுகின்றன.(14) மந்திரங்களால் வளர வேண்டிய ஹுத அக்னி {வேள்வித்தீ}, தீப்பொரிகளுடனும், புகை மண்டிய ஜுவாலைகளுடனும் கூடியதாகவும், புகையோடு மங்கலாக வெளிப்படுவதுமாக நன்றாக வளர்வதில்லை.(15) அடுப்புகள், அக்னி சாலைகள், பிரம்ம ஸ்தலங்கள் {புனிதக் கல்வி கற்பிக்கும் இடங்கள்} ஆகியவற்றில் பாம்புகளும், ஹவ்யங்களில் {ஆகுதிகளில்} எறும்புகளும் காணப்படுகின்றன.(16) பசுக்களில் பால் வற்றிவிட்டது. சிறந்த குஞ்சரங்கள் {யானைகள்} மதமற்றவையாக இருக்கின்றன. அஷ்வங்கள் {குதிரைகள்}, புல்லில் இன்புறாமல் தீனமாகக் கனைக்கின்றன.(17)
இராஜரே, கழுதைகள், ஒட்டகங்கள், அஸ்வதரங்களும் {கோவேறு கழுதைகளும்}, ரோமம் {முடி} உதிர்ந்து கண்ணீர் சிந்துகின்றன. சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவற்றின் இயல்பு திரும்பவில்லை.(18) விமான உச்சிகளில் ஒன்றுகூடியவையாகத் தென்படும் வாயஸங்கள் {காக்கைகள்}, கூட்டங்கூட்டமாக அனைத்துப் பக்கங்களிலும் குரூரமாகக் கரைகின்றன.(19) கிருத்ரங்கள், புரீயின் {கழுகுகள், நகரத்தின்} மீது அங்குமிங்கும் வட்டமிடுகின்றன. நரிகள், சந்தியா வேளைகள் இரண்டிலும் {அதிகாலையிலும், அந்தி மாலையிலும்} அமங்கலமாக ஊளையிடுகின்றன.(20) புரீதுவாரங்களில் {நகர் வாயில்களில்} கூட்டமாகக் கூடும் ஊனுண்ணும் மிருகங்களின், பெரும் கோஷங்களும், கர்ஜனைகளும் கேட்கப்படுகின்றன.(21)
எனவே, காரியங்கள் இவ்வாறு நடக்கும் வேளையில், எனக்குப் பிடித்தமான இந்தப் பிராயச்சித்தமே பொருத்தமானது. வீரரே, வைதேஹியை ராமரிடம் கொடுப்பீராக.(22) மஹாராஜாவே, மோஹத்தாலோ {அறியாமையினாலோ}, லோபத்தாலோ {பேராசையினாலோ} நான் இதைப் பேசியிருந்தாலும், இதில் தோஷம் காண்பது உமக்குத் தகாது[2].(23) இந்த தோஷங்கள் {அபசகுனங்கள்}, புரத்திலுள்ள {நகரத்திலுள்ள} ராக்ஷசர்களாலும், அந்தப்புரங்களில் உள்ள ராக்ஷசிகளாலும், இந்த ஜனங்கள் அனைவராலும் காணப்படுகின்றன.(24) சர்வ மந்திரிகளும் இந்த மந்திரத்தை {ஆலோசனையை உமக்குச்} சொல்வதைத் தவிர்க்கின்றனர். எது காணப்படுகிறதோ, எது கேட்கப்படுகிறதோ அதை அவசியம் நான் சொல்வேன். நியாயம் எப்படியோ, அப்படி நிச்சயித்துச் செயல்படுவதே உமக்குத் தகும்" {என்றான் விபீஷணன்}.(25,26அ)
[2] தர்மாலயப் பதிப்பில், "மஹாராஜரே, (அங்கே என்றாலும்) அங்கேயும் இதுவும் என்னால் கலவரத்தாலோ அல்லது பேராசையாலோ சொல்லப்பட்டதாக தீங்கை விளைவிப்பதாய் கொள்ளக்கூடாது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "மஹாராஜனே, நான் கார்யதத்வங்கள் தெரியாமையாலோ, பிழைப்பில் பேராசையாலோ இதை மொழிந்தேனாயினும் என்மேல் இதை அபராதமாகக் கொள்ளலாகாது" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "மாமன்னரே, செய்ய வேண்டிய காரியம் பற்றி அறியாததாலோ, (எப்படியேனும் அரக்கர் குலம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற) பேராசையாலோ கூறப்பட்டிருந்தாலும், தாங்கள் அதைக் குற்றமாக எடுத்துக் கொள்ளக் கூடாது" என்றிருக்கிறது.
உடன் பிறந்தவனான விபீஷணன், தன்னுடன் பிறந்தவனும், ராக்ஷசர்களில் சிறந்தவனுமான ராவணனிடம், மந்திரிகளின் முன்னிலையில், பத்தியமான இவற்றை {நன்மை பயக்கும் இந்த வார்த்தைகளைச்} சொன்னான்.(26ஆ,27அ) ஹிதமானதும், மஹா அர்த்தம் பொதிந்ததும், மிருதுவானதும், நியாயமானதும், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர் காலங்களுக்குப் பொருத்தமானதுமான அந்த வாக்கியத்தைக் கேட்டு, சினம் தூண்டப்பட்ட பிரசங்கவான் {சினம் தூண்டப்பட்டவனாகப் பேசிய ராவணன்} இந்த மறுமொழியைக் கூறினான்:(27ஆ,இ) எனக்கு எவனிடத்திலிருந்தும் பயம் {ஆபத்து} புலப்படவில்லை. இராமனால் மைதிலியை எவ்வகையிலும் அடையமுடியாது. இலக்ஷ்மணாக்ரஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்}, ஸுரர்களுடன் கூடிய இந்திரன் சகிதனாக வந்தாலும், போரில் எனக்கெதிரில் எப்படி நிற்பான்?" {என்றான் ராவணன்}.(28)
ஸுர சைனியத்தை {தேவர்களின் படையை} அழிப்பவனும், மஹாபலவானும், சண்டவிக்ரமனுமான தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்}, இவ்வாறு சொல்லிவிட்டு, ஆப்தவாதியான {விருப்பத்திற்குரிய பேச்சைக் கொண்ட} விபீஷணனுக்கு விடைகொடுத்தனுப்பினான்.(29)
யுத்த காண்டம் சர்க்கம் – 010ல் உள்ள சுலோகங்கள்: 29
Previous | | Sanskrit | | English | | Next |