Rama's lamentation | Yuddha-Kanda-Sarga-005 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையை நினைவுகூர்ந்த ராமன், அவளது பிரிவைக் குறித்து லக்ஷ்மணனிடம் புலம்பியதும், சூரியன் அஸ்தமனம் ஆனதும்...
நீலனால் விதிப்படி நன்கு ரக்ஷிக்கப்பட்டு அங்கே திரண்டிருந்த சேனையானது, சாகரத்தின் உத்தரதீரத்தில் {பெருங்கடலின் வடகரையில்} நன்றாக நிலைநிறுத்தப்பட்டது.(1) வானரபுங்கவர்களான மைந்தன், துவிவிதன் ஆகியோர் இருவரும் பாதுகாக்கும் அர்த்தத்தில் அந்த சேனையின் சர்வதிசைகளிலும் திரிந்து கொண்டிருந்தனர்.(2)
நதநதீபதியின் தீரத்தில் {நதங்கள், நதிகள் ஆகியவற்றின் தலைவனான கடலின் கரையில்} சேனை முகாமிட்ட பிறகு, தன் அருகில் நின்ற லக்ஷ்மணனைக் கண்டு ராமன் {பின்வரும்} வசனத்தைக் கூறினான்:(3) "சோகமானது, காலப்போக்கில் மறையும் என்று சொல்லப்படுகிறது. காந்தையைக் காணாத என்னுடையதோ {என் காதலியான சீதையைக் காணாத என் சோகமோ} நாளுக்கு நாள் வளர்கிறது.(4) பிரியை {காதலி} தூரத்தில் இருக்கிறாள் என்பதில் எனக்கு துக்கமில்லை. அவள் அபகரிக்கப்பட்டாள் என்பதிலும் எனக்கு துக்கம் இல்லை. அவளது வயது[1] கடந்துபோவதற்காக மட்டுமே நான் கவலைப்படுகிறேன்.(5)
[1] ஆங்கிலத்தில் தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி, வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி, விவேக் தேவ்ராய் {பிபேக்திப்ராய்}, ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோரின் பதிப்புகளில் மேற்கண்டவாறு இருந்தாலும், மன்மதநாததத்தர் பதிப்பில், "இராக்ஷசனால் அபகரிக்கப்பட்டாள் என்பதில் எனக்கு துக்கமில்லை. அவளது முடிவு நெருங்குகிறதே என்பதால்தான் வருந்துகிறேன்" என்றிருக்கிறது. தமிழில் தர்மாலயப்பதிப்பில், "இவளது (உயிரோடிருப்பதாய் பிரதிக்ஞை செய்யப்பட்ட) ஜீவிதகாலம் கடந்து வருகிறது. இது ஒன்றைக்குறித்துத்தான் இடைவிடாது மனம் நொந்து வருகின்றேன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "சுந்தர காண்டம் 40ஆம் ஸர்க்கம் 11, 12 சுலோகங்களில் {நம் பதிப்பில் 10ம் சுலோகத்தில்} "ஒரு மாதமே உம்பொருட்டு உயிருளேன்; அதன் மேல் நின்னைப் பிரிந்து உயிர்வாழேன்" என்று சீதாப்பிராட்டியார் ஹனுமாரிடத்தில் ஸ்ரீராமபிரானுக்கு சொல்லிவிடுத்த உறுதிமொழியிது" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "அவள் (வயது, அதாவது, "ஒரு மாதம் மட்டும் உயிரைக் காப்பாற்றி வைத்திருப்பேன்" என்று) குறித்தக் கெடு கடந்து கொண்டிருப்பதை நினைத்தே வருந்துகிறேன். (சுந்தரகாண்டம், நாற்பதாவது ஸர்க்கத்தில், "ஒரு மாதம் மட்டும் உயிரைக் காப்பாற்றி வைத்திருப்பேன்" என்று, அனுமானிடம் பிராட்டி கூறியிருக்கிறார்" என்றிருக்கிறது.
வாதமே {காற்றே}, எந்தப் பக்கத்தில் காந்தை {என் காதலி} இருக்கிறாளோ அங்கே பாய்ந்து, அவளை ஸ்பரிசித்து, என்னையும் ஸ்பரிசிப்பாயாக. உன் மூலம் நான் அவளது அங்கங்களின் தீண்டலைப் பெறுகிறேன். சந்திரனின் மூலம் எங்கள் கண்கள் சந்திக்கின்றன.(6) அந்தப் பிரியை கடத்தப்பட்ட போது, "ஹா நாதா" என்றுதான் அழைத்திருப்பாள். விஷத்தைப் பருகியதைப் போல, அது {அந்த எண்ணம்} நெஞ்சில் இருந்து என் அங்கங்களை எரிக்கிறது.(7) அவளது பிரிவையே விறகாகவும், அவளைக் குறித்த எண்ணங்களையே தழல்களாகவும் கொண்ட மதனாக்னியில் {மன்மத அக்னியில்} ராத்திரியும் பகலும் என் தேகம் எரிகிறது.(8)
சௌமித்ரே {சுமித்ரையின் மகனே, லக்ஷ்மணா}, நீ இல்லாமல் அர்ணவத்திற்குள் {கடலுக்குள்} மூழ்கி உறங்கப் போகிறேன். சுடர்விட்டெரியும் காமனால் எப்படியும் ஜலத்தில் உறங்கும் என்னை எரிக்க முடியாது.(9) அழகிய தொடைகளைக் கொண்ட அவளும் {சீதையும்}, நானும் ஒரே தரணியையே ஆசரித்திருக்கிறோம் என்ற இந்த அதிக காமமே {ஆசையே} ஜீவிதத்தை சாத்தியமாக்குகிறது.(10) நீரில்லாத கேதாரம் {விளைநிலம் / கழனி}, நீருள்ள கேதாரத்தால் {நீர் பெற்று} நனைவதைப் போல, அவள் ஜீவித்திருக்கிறாள் என்பதைக் கேட்டே நான் ஜீவித்திருக்கிறேன்.(11)
சத்ருக்களை வென்று, வளம் கொழிக்கும் ஸ்ரீயை {லட்சுமியைப்} போன்றவளும், அழகிய இடையையும், தாமரை போன்ற நீள்விழிகளையும் கொண்டவளுமான சீதையை எப்போது தரிசிக்கப் போகிறேனோ?(12) பத்மத்தைப் போன்ற முகத்தை மெல்ல நிமிர்த்தி, ஆதுரன் ரசாயனத்தைப் போல {நோயாளி கனிச்சாற்றை / மருந்தைப் பருகுவதைப் போல}, கோவைக்கனி போன்ற அவளது அழகிய உதடுகளை எப்போது பருகப் போகிறேனோ?(13) காண்பதற்கு இனிமையானவையும், நெருக்கமாக உள்ளவையும், பருத்தவையும், தாலம்பழங்களுக்கு {பனம்பழங்களுக்கு} ஒப்பானவையுமான அந்த ஸ்தனங்கள் இரண்டும் துடித்தபடியே எப்போது என்னை தழுவப் போகின்றனவோ?(14) கரிய கடைக்கண்களைக் கொண்டவளும், சதீயுமான அவள் {கற்புடையவளுமான சீதை}, என்னை நாதனாகக் கொண்டிருந்தும், நாதன் இல்லாதவளைப் போல், காப்பவர் எவருமின்றி ராக்ஷசிகளின் மத்தியில் இருக்கிறாள்.(15) ஜனகராஜரின் மகளும், தசரதரின் மருமகளுமான என் பிரியை {காதலி சீதை} எவ்வாறு ராக்ஷசிகளின் மத்தியில் கிடக்கிறாளோ?(16)
சரத் காலத்தில் நீல மேகங்களை {கூதிர்க்கால கருமேகங்களை} விலக்கி வெளிப்படும் சசிலேகையைப் போல {சந்திரனின் ஒளிக்கீற்றைப் போல}, அசைக்க முடியாத ராக்ஷசிகளை விலக்கி எப்போது அவள் வெளிப்படுவாளோ?(17) ஸ்வபாவத்திலேயே {இயல்பிலேயே} மென்மையான சீதை, தேச, கால மாறுபாடுகளாலும், சோகத்தால் அன்னம் உண்ணாததாலும் நிச்சயம் இன்னும் மெலிந்திருப்பாள்.(18) இந்த மானஸ சோகத்தை {மனத்தில் பிறக்கும் இந்த சோகத்தைக்} கைவிட்டு, ராக்ஷசேந்திரனின் மார்பை சாயகங்களால் {கணைகளால்} துளைத்து, எப்போது சீதையை மீட்கப் போகிறேனோ?(19) தேவர்களின் மகளுக்கு ஒப்பானவளும், சாத்வியுமான சீதை, ஏக்கத்துடன் என் கழுத்தைத் தழுவி அணைத்துக் கொண்டு, எப்போது ஆனந்த ஜலம் {ஆனந்தத்தில் பிறக்கும் கண்ணீரைச்} சிந்தப்போகிறாளோ?(20) மைதிலியின் பிரிவால் உண்டான இந்த கோரமான சோகத்தை, புழுதியடைந்த வஸ்திரத்தைப் போல, எப்போது நான் கைவிடப் போகிறேனோ?" {என்றான் ராமன்}.(21)
மதிமிக்கவனான அந்த ராமன், இவ்வாறு அங்கே புலம்பிக் கொண்டிருந்தபோது, அன்றைய தினம் கழிந்ததால் {பகல்வேளை முடிந்ததால்} மந்தவபுவான பாஸ்கரன் அஸ்த கதியை அடைந்தான் {ஒளி குன்றிய சூரியன் மறைந்தான்}.(22) இலக்ஷ்மணனால் ஆசுவாசப்படுத்தப்பட்ட ராமன், கமலங்களின் இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட சீதையை நினைத்து, சோகத்தில் மூழ்கியவனாகவே சந்தியா வேளையை வழிபட்டான் {சந்தியாவந்தனம் செய்தான்}.(23)
யுத்த காண்டம் சர்க்கம் – 005ல் உள்ள சுலோகங்கள்: 23
Previous | | Sanskrit | | English | | Next |