One more identity | Sundara-Kanda-Sarga-40 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனிடம் தன் அவலநிலையை நினைவூட்டுமாறு ஹனுமானிடம் சொல்லிவிட்டு, அவனுக்கு விடைகொடுத்து அனுப்பிய சீதை...
மஹாத்மாவான வாயுமைந்தனின் {ஹனுமனின்} அந்த வசனத்தைக் கேட்டதும், ஸுரஸுதைக்கு {தேவர்களின் மகளுக்கு} ஒப்பான சீதை, ஆத்மஹிதந்தரும் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னாள்:(1) “வானரா, பிரியமான சொற்களைப் பேசும் உன்னைக் கண்டதும், மழையைப் பெற்றதால் {செழிப்படையும்} பாதி வளர்ந்த பயிரைக் கொண்ட வசுந்தரையை {பூமியைப்} போல, நான் பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன்.(2) சோகத்தால் மெலிந்த அங்கங்களுடன் கூடிய நான், புருஷவியாகரரை {மனித்ரகளில் புலியான ராமரை} எப்படி ஸ்பரிசிக்க முடியுமோ, அப்படி {அப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்து} என்னிடம் தயை கொள்வாயாக.(3) ஹரிகணோத்தமா {குரங்குக் கூட்டத்தில் உத்தமனே}, கோபத்தால் காகத்தின் ஒரு கண்ணை அழிக்க ஏவிய துரும்பை {புல்லை} ராமரிடம் அடையாளமாகச் சொல்வாயாக[1].(4)
[1] 2 முதல் 4ம் சுலோகம் வரை சீதை நேரடியாக ஹனுமானிடம் பேசுகிறாள். 5 முதல் 11ம் சுலோகம் வரை மானசீகமாக ராமனிடம் பேசுகிறாள். மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், “ஹனுமான், ராமனிடம் தன் மொழியைப் பயன்படுத்த சீதை விரும்புகிறாள்” என்றிருக்கிறது.
“என் நெற்றியில் திலகம் குலைந்தபோது, அருகில் இருந்த மனசிலையை {குண்டுக்கல்லின் காவிப்பொடியைத்} திலகமாக நீர் சூட்டியதை நினைவில் வைத்திருப்பீர்.(5) மஹேந்திரனுக்கும், வருணனுக்கு ஒப்பான வீரியவானான நீர், அபகரிக்கப்பட்டவளான சீதை, ராக்ஷசர்கள் மத்தியில் வசிக்க எப்படி சம்மதிக்கிறீர்?(6) அனகரே {களங்கமற்ற ராமரே}, இந்த திவ்ய சூடாமணியை நான் நன்கு பாதுகாத்தேன். விசனத்திலும் உம்மையே {கண்டதைப்} போல, இதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்திருந்தேன்.(7) வாரிஸம்பவஸ்ரீமானான இதை {நீரில் பிறந்ததும், செழிப்புக்குரியதுமான இந்த சூடாமணியை} உமக்கு அனுப்புகிறேன். சோகத்தில் மூழ்கியிருக்கும் எனக்கு, இதற்குப் பிறகும் ஜீவித்திருக்கும் சக்தியில்லை.(8)
சகித்துக்கொள்ளமுடியாத துக்கங்களையும், கோரமானவர்களான ராக்ஷசிகள் ஹிருதயத்தைப் பிளக்கும் வகையில் சொல்லும் சொற்களையும், உமக்காக நான் பொறுத்துக் கொள்கிறேன்.(9) சத்ருசூதனரே, நிருபாத்மஜரே, ஒரு மாசம் மட்டுமே ஜீவிதத்தைத் தரித்திருக்க இயலும். நீர் இல்லாமல் ஒரு மாசத்திற்கு மேல் என்னால் ஜீவிக்க முடியாது.(10) இந்த ராக்ஷசராஜன் கோரமானவன்; என்னிடத்தில் அவனது பார்வை சுகமானதாக இல்லை. நீர் தாமதிப்பதைக் கேட்டால் ஒரு க்ஷணமும் நான் ஜீவிக்கமாட்டேன்” {என்று ராமரிடம் சொல்வாயாக” என்றாள் சீதை}.(11)
மாருதாத்மஜனும், மஹாதேஜஸ்வியுமான ஹனுமான், கருணைக்குரியவளாகக் கண்ணீருடன் வைதேஹி சொன்ன சொற்களைக் கேட்ட பிறகு, {பின்வருமாறு} பேசினான்:(12) “தேவி, உன்னிடம் சத்தியத்தின் மீது சபதம் செய்கிறேன். இராமர், உன் சோகத்தால் எதையும் வெறுக்கிறார். இராமரும், லக்ஷ்மணரும் துக்கத்தில் பரிதபிக்கிறார்கள்.{13} பாமினி, எப்படியோ நீ காணப்பட்டாய். இது வருந்துவதற்கான காலமல்ல. இந்த முஹூர்த்தத்திற்குள் உன் துன்பங்களுக்கான அந்தத்தை {முடிவைக்} காண்பாய்.{14} உன்னை தரிசிப்பதில் ஆவல் கொண்ட அரிந்தமர்களும், புருஷவியாகரர்களுமான அந்த ராஜபுத்திரர்கள் இருவரும் {பகைவரை அழிப்பவர்களும், மனிதர்களில் புலிகளும், இளவரசர்களுமான ராமலக்ஷ்மணர்கள் இருவரும்}, லங்கையை பஸ்மமாக்க {சாம்பலாக்கப்} போகிறார்கள்.{15} விசாலாக்ஷி, அந்த ராகவர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும், குரூரனான ராவணனை, பந்துக்களுடன் {உறவினர்களுடன்} சேர்த்து ஸமரில் ஹதம் செய்து {போரில் கொன்றுவிட்டு}, உன்னை தங்கள் புரீக்கு {நகருக்குக்} கொண்டு செல்வார்கள்.(13-16) அநிந்திதே {நிந்திக்கத்தகாதவளே}, அவருக்கு பிரீதியை உண்டாக்குவதும், {எளிதாக அவர்} தெரிந்து கொள்ளக் கூடியதுமான இன்னும் ஏதேனுமோர் அடையாளத்தை தத்தம் செய்வதே உனக்குத் தகும்” {என்றான் ஹனுமான்}.(17)
அவள் {சீதை} இவ்வாறு சொன்னாள், “உத்தம அடையாளத்தை நான் கொடுத்துவிட்டேன். என்னுடைய இந்த கேசபூஷணத்தை {தலைமுடியில் சூடும் ஆபரணத்தை} ராமர் கண்டதும்,{18} வீரா, ஹனுமானே, நீ சொல்லும் வாக்கியத்தை நம்புவார்” {என்றாள் சீதை}.(18,19அ)
பிலவகசத்தமனான அந்த ஸ்ரீமான் {தாவிச் செல்பவர்களில் வலிமைமிக்கவனும், சிறப்புவாய்ந்தவனுமான அந்த ஹனுமான்}, அந்தச் சிறந்த மணியை எடுத்துக் கொண்டு, சிரம் தாழ்த்தி தேவியை வணங்கிவிட்டுப் புறப்பட்டான்.(19ஆ,20அ) உயரம் செல்லும் உற்சாகத்துடன் கூடிய அந்த ஹரிபுங்கவனை {குரங்குகளில் சிறந்த ஹனுமானைக்} கண்டு,{20ஆ} பெருகி வளரும் அந்த மஹாவேகவானிடம், ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை}, கண்ணீர் நிறைந்த முகத்துடனும், கண்ணீரால் தடைப்பட்ட குரலுடனும் {பின்வருமாறு} சொன்னாள்:(20ஆ,21) “ஹனூமனே, சிங்கங்களுக்கு ஒப்பான பிராதாக்களான {உடன்பிறந்தவர்களான} ராமலக்ஷ்மணர்கள் இருவரிடமும், சர்வ அமைச்சர்களுடன் கூடிய சுக்ரீவனிடமும் அநாமயத்தை {நான் நோயின்றி நலமாக இருப்பதைச்} சொல்வாயாக.(22)
மஹாபாஹுக்களான அந்த ராகவர்கள், இந்த துக்கக்கடலில் இருந்து என்னை எப்படிக் கரையேற்றுவார்களோ அப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வதே உனக்குத் தகும்.(23) ஹரிபிரவீரா, ராமரின் சமீபத்திற்குச் சென்று என்னுடைய இந்த தீவிர சோக வேகத்தையும், இந்த ராக்ஷசிகளால் நான் மிரட்டப்படுவதையும் சொல்வாயாக. உன் வழி சிவமாகட்டும் {உன் பயணம் மகிழ்ச்சியாக அமையட்டும்” {என்றாள் சீதை}.(24)
இராஜபுத்திரி {சீதை} தெரிவித்த அர்த்தத்தை அறிந்த கபி {குரங்கான ஹனுமான்} கிருதார்த்தனாகவும் {வந்த நோக்கம் நிறைவேறியவனாகவும்}, நனவு நிறைந்த மகிழ்ச்சியுடனும், எஞ்சியிருக்கும் அல்பகாரியங்களை மனத்தில் பரிசீலித்தவாறும் உதீசீ {வடக்குத்} திசையை நோக்கிச் சென்றான்.(25)
சுந்தர காண்டம் சர்க்கம் – 40ல் உள்ள சுலோகங்கள்: 25
Previous | | Sanskrit | | English | | Next |