Ravana's counsel | Yuddha-Kanda-Sarga-006 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனை வெல்வது குறித்து ராக்ஷசர்களுடன் லங்கையில் ஆலோசித்த ராவணன்...
சக்ரனை {இந்திரனைப்} போலவே பயத்தை உண்டாக்கும் வகையில், மஹாத்மாவான ஹனுமதனால் லங்கையில் செய்யப்பட்ட கோரமான கர்மத்தைக் கண்ட ராக்ஷசேந்திரன் {ராவணன்},[1]{1} சற்றே வெட்கி முகத்தைத் தாழ்த்திக் கொண்டு, சர்வ ராக்ஷசர்களிடமும் {பின்வருமாறு} பேசினான்:(1,2அ) "வானரன் மாத்திரமே ஆன அவன் {ஹனுமான்}, எதிர்க்கவொண்ணா லங்காபுரீக்குள் பிரவேசித்துத் தாக்கியிருக்கிறான்[2]. ஜானகியான சீதையையும் கண்டுவிட்டான்.(2ஆ,3அ) சைத்ய பிராசாதத்தை {வேள்விச் சாலையை} ஹனுமதன் தாக்கியிருக்கிறான். மிகச்சிறந்த ராக்ஷசர்களைக் கொன்றிருக்கிறான். சர்வ லங்காபுரீயையும் கலங்கச் செய்திருக்கிறான்.(3ஆ,4அ) இனி பத்ரமாக {மங்கலமாக} இருக்க என்ன செய்வது? அடுத்து எது நமக்குப் பொருத்தமானதோ, செய்வதற்கு சமர்த்தமானதோ, நன்மையைப் பயப்பதோ, அதைச் சொல்வீராக.(4ஆ,5அ)
[1] வரம்பு அறு சுற்றமும் மந்திரத் தொழில்நிரம்பிய முதியரும், சேனை நீர் கடல்தரம் பெறு தலைவரும் தழுவத் தோன்றினான்அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான்- கம்பராமாயணம் 6076ம் பாடல், யுத்த காண்டம், இராவணன் மந்திரப் படலம்பொருள்: வரம்பில்லா சுற்றத்தாரும், ஆலோசனையில் வல்ல முதியோரும் {முதிய அமைச்சர்களும்}, சேனை என்ற பெருங்கடலையே வழிநடத்தும் தகுதிமிக்க தானைத்தலைவர்களும் சூழ இருந்தான், அரம்பையர் வீசும் விருந்தோம்பலோடு, ஆடும் மாலையை அணிந்தவன் {ராவணன்}.
[2] தாழ்ச்சி இங்கு இதனின்மேல் தருவது ஏன் இனிமாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மாநகர்ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று எனாசூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான்- கம்பராமாயணம் 6081ம் பாடல், யுத்த காண்டம், இராவணன் மந்திரப்படலம்பொருள்: "இங்கு எனக்கு இதையும்விடத் தாழ்வைத் தருவது வேறு என்ன இருக்கிறது? பெருமையும், பெரும் நகரும் ஒரு குரங்கால் அழிந்தது. {என்} ஆட்சியும், தகுதியும், அரசும் நன்றாயிருக்கிறது" என்று தன் அமைச்சர்களை நோக்கிச் சொன்னான் {ராவணன்}.
மஹாபலவான்களே, விஜயம் மந்திரமூலம் என்று மனஸ்வினிகள் சொல்கின்றனர் {வெற்றியானது, ஆலோசனைகளின் மூலமே விளையும் என்று விவேகிகள் சொல்கின்றனர்}. எனவே ராமனைக் குறித்து ஆலோசனை செய்ய நான் விரும்புகிறேன்.(5ஆ,6அ) உலகில், உத்தமர்கள், அதமர்கள், மத்யமர்கள் என்று மூன்றுவித புருஷர்கள் {மனிதர்கள்} இருக்கின்றனர். அவர்களுக்குரிய குணதோஷங்களை {நிறைகுறைகளை} நான் சொல்கிறேன்.(6ஆ,7அ) ஹிதம் விரும்புகிறவர்களும், மந்திர நிர்ணயம் செய்வதில் சமர்த்தர்களுமான மந்திரிகள் {ஆலோசனைகளுடன் நிர்ணயம் செய்வதில் திறன்மிக்க அமைச்சர்கள்},{7ஆ} அல்லது சம அர்த்தங்களுடைய மித்ரர்கள் {பொது நோக்கங்களுடைய நண்பர்கள்}, அல்லது அதற்கும் அதிகமாகத் தன் பந்துக்கள் {உறவினர்கள்} சஹிதனாக ஆலோசனை செய்துவிட்டு, கர்மத்தை ஆரம்பிக்கையில்,{8} தைவேசத்துடன் யத்னத்தைச் செய்பவன் எவனோ, அவனே புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறான் {தெய்வத்தின் மீது பாரத்தை இட்டு முயற்சியில் ஈடுபடுபவனே உத்தம புருஷன் / மனிதர்களில் சிறந்தவன்}.(7ஆ-9அ) ஒருவனாகவே அர்த்தத்தை ஆராய்ந்து, ஒருவனாகவே தர்மத்தில் தன் மனத்தைச் செலுத்தி, ஒருவனாகவே காரியங்களைச் செய்யும் அந்த நரன் மத்யமன் {மனிதர்களில் நடுத்தரமானவன்} என்று அழைக்கப்படுகிறான்.(9ஆ,10அ) "காரியத்தை நான் செய்கிறேன்" என்று சொல்லி, குணதோஷங்களை {நன்மை தீமைகளைத்} தெளிவாக நிச்சயிக்காமல், தைவத்தை {தெய்வத்தைக்} கருதாமல் புறக்கணிப்பவன் எவனோ, அவனே நராதமன் {மனிதர்களில் இழிந்தவன்} ஆவான்.(10ஆ,11அ)
நித்தியம் இந்தப் புருஷர்கள் {மனிதர்கள்} உத்தமர்கள், அதமர்கள், மத்யமர்கள் என்றாவது எப்படியோ, அப்படியே மந்திரமும் {ஆலோசனையும்} உத்தமம், அதமம், மத்யமம் என்று அறியப்படுகிறது.(11ஆ,12அ) சாஸ்திரங்களின் பார்வையில் நோக்கி, ஐக்கியத்துடன் மந்திரர்கள் {கருத்தொற்றுமையுடன் ஆலோசகர்கள்} நிறைவடையும் அந்த மந்திரமே {ஆலோசனையே} உத்தமம் என்று சொல்லப்படுகிறது.(12ஆ,13அ) எதில் அர்த்தத்தை நிர்ணயிப்பதில் மந்திரிகளின் மதி {கருத்துகள்} பலவிதமாக இருந்து, மீண்டும் {முடிவில்} ஒற்றுமை வாய்க்கிறதோ, அந்த மந்திரம் {ஆலோசனை} மத்யமம் என்று அழைக்கப்படுகிறது.(13ஆ,14அ) எதில் அன்யோன்ய மதியை {ஒருவருக்கொருவர் கருத்துகளை} தங்களுக்குப் பிடித்த வகையில் பிடிவாதத்துடன் சொல்லி, நல்ல முறையில் ஐக்கியம் {கருத்தொற்றுமை} ஏற்படவில்லையோ, அந்த மந்திரம் அதமம் என்று சொல்லப்படுகிறது.(14ஆ,15அ) எனவே, மதிசத்தமர்களான {புத்திசாலிகளில் சிறந்தவர்களான} நீங்கள், நன்கு ஆலோசித்து, செய்ய வேண்டிய நல்ல காரியத்தைச் செய்வீராக. செய்யத்தகுந்தது இதுவே என்பது என் கருத்தாகும்.(15ஆ,16அ)
தீரர்களான ஆயிரக்கணக்கான வானரர்களால் சூழப்பட்டவனாக ராமன், நம்மை முற்றுகையிட லங்காம்புரீயை நெருங்குகிறான்.(16ஆ,17அ) இராகவன் {ராமன்}, தன் தம்பியுடனும், படைகளுடனும், தனக்குத் தகுந்த வல்லமையுடன் சுகமாக சாகரத்தைக் கடப்பான் என்பது வெளிப்படையானது.(17ஆ,18அ) சமுத்திரத்தை வற்றச் செய்வான். {அல்லது}, தன் வீரியத்தால் வேறேதேனும் செய்வான்[3]. வானரர்களுடன் விரோதம் ஏற்பட்ட இந்தக் காரியம் இவ்விதமாகி இருக்கிறது. என் நகரத்திற்கும், சைனியத்திற்கும், ஹிதமானவை {நன்மையைச் செய்யக்கூடிய} அனைத்தையும் எனக்கு ஆலோசனைகளாகச் சொல்வீராக" {என்றான் ராவணன்}.(18ஆ,19)
[3] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "அதாவது, கடலைக் கடப்பதற்கான பாலம் {பாலத்தைக் கட்டுவான்} என்பது பொருள்" என்றிருக்கிறது.
யுத்த காண்டம் சர்க்கம் – 006ல் உள்ள சுலோகங்கள்: 19
Previous | | Sanskrit | | English | | Next |