Sugreeva comforts Rama | Yuddha-Kanda-Sarga-002 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சோகத்தில் ஆழ்ந்த ராமன். துணிவுடன் இருக்குமாறு ராமனுக்கு ஆறுதல் கூறிய சுக்ரீவன்...
ஸ்ரீமான் சுக்ரீவன், சோகத்தில் ஆழ்ந்திருந்தவனும், தசரதாத்மஜனுமான {தசரதனின் மகனுமான} அந்த ராமனின் சோகத்தைப் போக்கவல்ல {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(1) "வீரரே, மற்ற பிராகிருதன் {சாதாரணன்} எப்படியோ, அப்படி ஏன் நீர் துன்புறுகிறீர்? இப்படி இருக்காதீர். செய்நன்றிகொன்றவன் நட்பை {நட்பைக் கைவிடுவதைப்} போல, இந்த சந்தாபத்தைக் கைவிடுவீராக.(2) இராகவரே, பகைவனின் நிலயத்தை அறிந்த செய்தி கிடைத்துவிட்டதால், உமது சந்தாபத்திற்கான ஸ்தானம் {கவலைக்கான காரணம்} எதையும் நான் காணவில்லை.(3) இராகவரே, மதிமானும், சாஸ்திரவித்தும், பிராஜ்ஞரும், பண்டிதருமான நீர் {சாஸ்திரங்களை நன்கறிந்தவரும், அறிஞரும், கல்விமானுமான நீர்}, கிருதாத்மர்களின் அர்த்தத்தையும், புத்தியையும் தூஷிக்கும் {காரிய காரணங்களை நிறைவேற்றியவர்களின் நோக்கத்தையும், புரிதலையும் பழிக்கும் வகையிலான} இந்தப் பிராகிருத {சாதாரண} புத்தியைக் கைவிடுவீராக.(4)
மஹாநக்ரங்கள் {பெரும் முதலைகள்} நிறைந்த சமுத்திரத்தை லங்கனம் செய்து {கடந்து}, லங்கை மீதேறி, உமது பகைவரை நாம் அழிப்போம்.(5) உற்சாகமற்றவனும், சோகத்தால் மனம் கலங்கியவனுமான ஒருவனின் நோக்கங்கள் பாழாகும். அவனும் விசனத்தையே {துன்பத்தையே} அடைவான்.(6) அனைத்துவகையிலும் சூரர்களும், சமர்த்தர்களுமான இந்த ஹரியூதபர்கள் {குரங்குக் கூட்டக் குழுத்தலைவர்கள்}, உமது அர்த்தத்திற்காக பாவகனுக்குள்ளும் {நெருப்புக்குள்ளும்} உற்சாகத்துடன் பிரவேசிப்பார்கள். இதை அவர்களின் மகிழ்ச்சியில் இருந்தே அறிகிறேன். என் தர்க்கம் திடமானதே.(7,8அ) பாப கர்மங்களைச் செய்பவனும், பகைவனுமான ராவணனை விக்ரமத்தால் அழித்து, சீதையை மீட்பது எப்படியோ, அப்படிச் செயல்படுவதே உமக்குத் தகும்.(8ஆ,9அ) இராகவரே, அந்த ராக்ஷச ராஜனின் அந்தப் புரீயை {ராவணனின் லங்கா நகரை} நாம் பார்க்கும் வகையில், அங்கே சேது பந்தனம் செய்வது {அணை / பாலம் கட்டுவது} எப்படியோ, அப்படிச் செயல்படுவதே உமக்குத் தகும்.(9ஆ,10அ)
திரிகூடத்தின் சிகரத்தில் நிலைத்திருக்கும் அந்த லங்காம்புரியை நாம் கண்டு, யுத்தத்தில் ராவணனும் காணப்பட்டதும் அவன் கொல்லப்பட்டான் என்றே கருதுவீராக.(10ஆ,11அ) கோர வருணாலயமான சாகரத்தில் சேதுவைக் கட்டாமல், இந்திரன் உள்ளிட்ட ஸுராஸுரர்களாலும்கூட {தேவர்களாலும், அசுரர்களாலும்கூட} லங்கையை நொறுக்க {வீழ்த்த} முடியாது.(11ஆ,12அ) இலங்கையின் சமீபம் வரை சமுத்திரத்தில் சேது கட்டப்பட்டு,{12ஆ} அதை எப்போது என் சர்வ சைனியமும் கடக்கிறதோ, அப்போதே வெற்றியை அடைந்துவிட்டதாகக் கருதுவீராக. காமரூபிகளான இந்த ஹரயர்கள் {விரும்பிய வடிவங்களை எடுக்க வல்லவர்களான இந்தக் குரங்குகள்} போரில் உண்மையில் வீரமிக்கவர்களாவர்.(12ஆ,13)
எனவே, இராஜரே, சர்வ அர்த்தங்களையும் நாசம் செய்யும் இந்தக் குழப்ப புத்தி போதும். இவ்வுலகில் சோகமே புருஷர்களின் சௌர்யத்தை {சூரத்தனத்தை} கரைத்துவிடுகிறது.(14) மனுஷ்யன் என்ன காரியம் செய்தாலும், அவன் சௌண்டீர்யத்தைக் {தைரியத்தையும், பராக்கிரமத்தையும்} கைக்கொள்ள வேண்டும். அவ்வாறு செயல்பட்டால், அதுவே விரைவில் அவனை அலங்கரிக்கும்.(15) மஹாப்ராஜ்ஞரே {அனைத்தையும் அறிந்தவரே}, இந்தக் காலத்தில் தேஜஸ்ஸுடன் கூடிய வலிமையைக் கைக்கொள்வீராக. இழப்பினாலும், அழிவினாலும் உண்டாகும் சோகமானது, சூரர்களும், மஹாத்மாக்களுமான உம் விதமான மனுஷ்யர்களின் சர்வ அர்த்தங்களையும் நாசம் செய்துவிடும் {நோக்கங்கள் அனைத்தையும் அழித்துவிடும்}.(16,17அ)
நீர் புத்திமான்களில் சிறந்தவராகவும், சர்வ சாஸ்திர கோவிதராகவும் {சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவராகவும்} இருக்கிறீர். எனவே, என் விதமாகச் செயல்படுபவர்களைக் கொண்டு, பகைவரை வெல்வதே உமக்குத் தகும்.(17ஆ,18அ) இராகவரே, கையில் தனுசுடன் கூடிய உம்முடன் போர்க்களத்தில் முகம் முகமாக {கையில் வில்லுடன் கூடிய உம்மைப் போர்க்களத்தில் எதிர்த்து} நிற்கக் கூடிய எவன் ஒருவனையும் மூன்று உலகங்களிலும் நான் காணவில்லை.(18ஆ,19அ) வானரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உமது காரியம் கெட்டுப்போகாது. அக்ஷயமான சாகரத்தை {வற்றாத கடலைக்} கடந்த உடனேயே சீதையை நீர் தரிசிப்பீர்.(19ஆ,20அ)
எனவே, பூபதியே {உலகின் தலைவரே}, சோகத்தைக் கைக்கொண்டது போதும். {இனி} குரோதத்தைக் கைக்கொள்வீராக. முயற்சியற்ற க்ஷத்திரியர்கள் மந்தர்களாவர். சண்டர்களுக்கே {கோபம் நிறைந்தவர்களுக்கே} அனைவரும் பயப்படுவார்கள்.(20ஆ,21அ) ஸூக்ஷ்மபுத்தி உடையவரே {நுண்ணறிவுமிக்கவரே}, நதீபதியான கோரமான சமுத்திரத்தை லங்கனம் செய்யும் அர்த்தத்திற்கான உபாயங்களை {ஆறுகளின் தலைவனான பயங்கரப் பெருங்கடலைக் கடப்பதற்கான வழிமுறைகளைக்} குறித்து எங்களுடன் சேர்ந்து இப்போதே ஆலோசிப்பீராக.(21ஆ,22அ) இந்த சைனியம் அதை {கடலைக்} கடந்துவிட்டால், வெற்றியடைவது நிச்சயம். என் சர்வ சைனியமும் கடந்துவிட்டால் வெற்றி அடையப்பட்டது என்றே கருதுவீராக.(22ஆ,23அ)
சமரில் சூரர்களும், காமரூபிகளுமான இந்த ஹரயர்கள் {விரும்பிய வடிவை ஏற்க வல்லவர்களுமான இந்தக் குரங்குகள்}, பாறைகளையும், மரங்களையும் பொழிந்து, உண்மையில் அந்தப் பகைவரை ஊதித் தள்ளிவிடுவார்கள்.(23ஆ,24அ) எப்படியோ வருணாலயத்தைக் கடப்பதையே நான் பார்க்கிறேன். பகைவரை அழிப்பவரே. யுத்தத்தில் அவன் {ராவணன்} கொல்லப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.(24ஆ,25அ) ஏராளம் சொல்லி என்ன? எல்லா வகையிலும் நீர் விஜயராக இருப்பீர் {முற்றான வெற்றியை அடைவீர்}. அதற்கான நிமித்தங்களை {நல்ல சகுனங்களை} நான் பார்க்கிறேன். என் மனம் சிலிர்ப்பை அடைகிறது" {என்றான் சுக்ரீவன்}.(25ஆ,26)
யுத்த காண்டம் சர்க்கம் – 002ல் உள்ள சுலோகங்கள்: 26
Previous | | Sanskrit | | English | | Next |