Forts of Lanka | Yuddha-Kanda-Sarga-003 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன் விசாரித்ததால், லங்கையைக் குறித்து விரிவாக விளக்கிய ஹனுமான்...
காகுத்ஸ்தன் {ராமன்}, பரம அர்த்தம் பொதிந்தவையும், நியாயமானவையுமான சுக்ரீவனின் சொற்களைக் கேட்டு, ஏற்றுக் கொண்ட பிறகு, ஹனூமந்தனிடம் {பின்வருமாறு} கூறினான்:(1) "தபஸ்ஸாலோ, சேதுபந்தனத்தாலோ, சாகரத்தை வற்றச் செய்வதாலோ எவ்விதத்திலேனும் அந்த சாகரத்தைக் கடப்பதற்கு நான் முற்றிலும் சமர்த்தனாக இருக்கிறேன்.(2) அடைவதற்கரியதான லங்கையில் துர்க்கங்கள் {கோட்டைகள்} எத்தனை இருக்கின்றன? எனக்குச் சொல்வாயாக. வானரா, கண்களால் உணர்வதைப் போல அவற்றை அறியவிரும்புகிறேன்.(3) பலத்தின் பரிமாணம் {படையின் அளவு}, கோட்டை வாயில் நடவடிக்கைகள், {மதில், அகழி முதலிய ஏற்பாடுகளுடன்} லங்கை காக்கப்படும் விதம், ராக்ஷசர்களின் சதனங்கள் {வீடுகள்} உள்ளிட்ட அனைத்தையும், {4} லங்கையை எப்படி சுகமாக பார்த்தாயோ {கண்ணாரக் கண்டாயோ}, அப்படி உள்ளபடியே எனக்குச் சொல்வாயாக. நீ அனைத்து வகையிலும் குசலமானவனாக {திறன்மிக்கவனாக} இருக்கிறாய்" {என்றான் ராமன்}.(4,5)
மாருதாத்மஜனும், வாக்கியங்களை அமைப்பதில் சிறந்தவனுமான ஹனுமான், ராமனின் வசனத்தைக் கேட்டு, மீண்டும் {பின்வருமாறு} ராமனிடம் பேசினான்:(6) "எப்படி லங்காபுரீ காக்கப்படுகிறது? கோட்டைக் காவல் நடைமுறை விதங்கள் என்னென்ன? படையால் எப்படி அவை {கோட்டைகள்} ரக்ஷிக்கப்படுகின்றன? என அனைத்தையும் உமக்குச் சொல்கிறேன். கேட்பீராக.(7) இராக்ஷசர்களின் பற்று, ராவணனின் தேஜஸ் ஆகியவற்றால் உண்டான லங்கையின் உயர்ந்த செழிப்பு, சாகரத்தின் பயங்கரத்தன்மை,{8} படைப்பிரிவுகளின் பாகங்கள், வாகனங்கள் ஆகியவற்றையும் விவரிக்கிறேன்" என்று சொன்ன கபிசிரேஷ்டன் {குரங்குகளில் சிறந்த ஹனுமான்}, உள்ளபடியே இவ்வாறு {பின்வருமாறு} சொன்னான்:(8,9) "மத்த துவீபங்கள் {மதம் கொண்ட யானைகள்} நிறைந்ததும், ரதங்களால் நிறைந்ததும், ரக்ஷோகணங்களால் {ராக்ஷசக் கூட்டத்தால்} சேவிக்கப்படுவதுமான மஹத்தான லங்கை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது.(10)
மஹத்தானவையும், விபுலமானவையுமான அதன் நான்கு துவாரங்கள் {லங்கையின் நான்கு வாயில்கள்}, மஹாபரிகங்களுடன் கூடிய திடமான கதவுகளைக் கொண்டிருக்கின்றன.(11) அங்கே பலமானவையும், மகத்தானவையுமான இஷூப யந்திரங்கள் {கணைகளையும், கற்களையும் வீசுவதற்குரிய கவண் பொறிகள்} இருக்கின்றன. அங்கே வரும் பகைவரின் சைனியங்களை அவை விரட்டக்கூடியவையாக இருக்கின்றன.(12) பயங்கரமானவையும், கூர் முனை கொண்டவையும், ராக்ஷசகணங்களால் வடிக்கப்பட்டவையுமான இரும்பாலான சதக்னிகள்[1] நூற்றுக்கணக்கானவை அந்த துவாரங்களில் ஸம்ஸ்க்ருதமாக {வாயில்களில் நன்றாகச் செய்யப்பட்டு} வைக்கப்பட்டிருக்கின்றன.(13) சுவர்ணத்தாலானதும், தாக்குவதற்குக் கடினமானதும், மணி, வைடூரியம், முத்து ஆகியவற்றால் இடையிடையே சித்திரமாக அலங்கரிக்கப்பட்டதுமான மஹாபிராகாரம் அங்கே இருக்கிறது {பெரும் மதிற்சுவர் இலங்கையைச் சூழ்ந்துள்ளது}.(14) அதைச் சுற்றிலும் மஹாபயங்கரமானவையும், குளிர்ந்த நீருடன் கூடியவையும், அடியற்றவையும், கிராஹவத்யங்களுடன் {முதலைகளுடன்} கூடியவையும், மீனங்களால் {மீன்களால்} சேவிக்கப்படுபவையுமான அகழிகள் இருக்கின்றன.(15)
[1] தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "சதக்னிகள் நான்கு முழம் அளவு நீளம் கொண்டவை; இரும்பு முட்களுடன் கூடியவை. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோரைக் கொல்லக்கூடியவை என்பதால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன" என்றிருக்கிறது.
துவாரங்களின் {நுழைவாயில்களின்} முன் சுற்றிலும் மிக அகலமானவையும், பல யந்திரங்களுடன் கூடியவையும், பெரும் கிருஹங்களின் வரிசையோடு கூடியவையுமான நான்கு பாலங்கள் இருக்கின்றன.(16) அந்தப் பாலங்கள் நன்றாகப் பாதுகாக்கப்படுகின்றன. பகைவரின் சைனியம் வரும்போது அந்த யந்திரங்கள் அவற்றை நாற்புறமும் அகழிகளில் தள்ளிவிடும்.(17) ஒருபாலம் மட்டுமே மிக உறுதியானதாக, அசைக்க முடியாத பலமிக்கதாக, காஞ்சன ஸ்தம்பங்கள், வேதிகைகள் {திண்ணைகள்} பலவற்றாலும் சோபிப்பதாக விளங்குகிறது.(18) இராமரே, தன் இயல்பிலேயே போரை விரும்புகிறவனான ராவணன், தானே ஊக்கத்துடன் பலங்களை {படைகளை}[2] மேற்பார்வையிடுவதில் விழிப்புடன் இருக்கிறான்.(19) மேலும், பிடிப்பொன்றும் இல்லாமல் உச்சியில் இருக்கும் லங்கை, தேவர்களாலும் நுழையமுடியாததாகவும், அச்சத்தை ஊட்டக்கூடியதாகவும், நீர், பர்வதங்கள், வனங்கள், {மதில், அகழி உள்ளிட்ட} செயற்கை அரணங்கள் ஆகிய நான்குவித அரண்களைக் கொண்டதாகவும் இருக்கிறது[3].(20)
[2] தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "நாட்டின் ஏழு பலங்களாவன: மன்னன், மந்திரி, கூட்டாளி, பொக்கிஷம், படை, எல்லை, கோட்டைகள்" என்றிருக்கிறது.
[3] தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "நான்கு அரண்களாவன, நீரரண், மலையரண், காட்டரண், செயற்கை அரண்கள்" என்றிருக்கிறது.
இராகவரே, அஃது {லங்கை} அடைதற்கரிய சமுத்திரத்தின் மறுகரையில் அமைந்திருக்கிறது. அங்கே எந்தப் பக்கத்திலும் படகு அடைவதற்கான, தொடர்பேற்படுத்திக் கொள்வதற்கான இடமேதும் இல்லை.(21) தேவபுரத்திற்கு {தேவர்களின் நகரான அமராவதிக்கு} ஒப்பான அந்த புரீ {லங்காநகரம்}, அடைவதற்கரிதான வகையில், சைலத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கிறது. வெல்வதற்கரிதான அந்த லங்கையில், வாஜி, வாரணங்கள் {குதிரைகளும், யானைகளும்} நிறைந்திருக்கின்றன.(22) துராத்மாவான ராவணனின் லங்காம்புரீ, ஆழமான அகழிகள், சதக்னிகள், விதவிதமான யந்திரங்கள் ஆகியவற்றுடன் சோபிக்கிறது.(23)
பூர்வ துவாரத்தில் {கிழக்குக் கோட்டை வாயிலில்} அயுதம் {பத்தாயிரம்} ராக்ஷசர்கள் இருக்கின்றனர். வெல்லப்பட முடியாதவர்களான அவர்கள் அனைவரும், அங்கே கையில் சூலங்களையும், கட்கங்களையும் கொண்ட போர்வீரர்களாக இருக்கின்றனர். (24)
அங்கே தக்ஷிண துவாரத்தில் {தெற்குக் கோட்டை வாயிலில்} நியுதம் {ஒரு லக்ஷம்} ராக்ஷசர்கள் இருக்கின்றனர். அங்கேயும் ஒப்பற்ற போர்வீரர்களுடன் கூடிய சதுரங்க சைனியம் {நான்கு பிரிவுகளைக் கொண்ட படை} இருக்கிறது.(25)
பஷ்சிம துவாரத்தில் {மேற்குக் கோட்டை வாயிலில்} பிரயுதம் {பத்து லக்ஷம்} ராக்ஷசர்கள் இருக்கின்றனர். அங்கே இருக்கும் அவர்கள் அனைவரும், கேடயமும், வாளும் தரித்தவர்களாகவும், சர்வ அஸ்திர கோவிதர்களாகவும் இருக்கின்றனர்.(26)
உத்தர துவாரத்தில் {வடக்குக் கோட்டை வாயிலில்} நியர்புதம் {ஆயிரம் லக்ஷம் / பத்து கோடி} ராக்ஷசர்கள் இருக்கின்றனர். பெரிதும் பூஜிக்கப்படும் குலபுத்திரர்கள், அங்கே ரதவீரர்களாகவும், குதிரை வீரர்களாகவும் இருக்கின்றனர்.(27)
மேலும் வெல்வதற்கரியவர்களான நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான யாதுதானர்களும்[4], ஸாக்ர கோடி {ஒன்றேகால் கோடி} ராக்ஷசர்களும் மத்திய பகுதியில் இருக்கின்றனர்.(28)
[4] கசியபருக்கும், சுரஸைக்கும் பிறந்த மகன்களில் ஒருவன் யாதுதானன். அவன் வழியில் பிறந்த ராக்ஷசர்கள் அனைவரும் யாதுதானர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
நான் அந்தப் பாலங்களை பங்கம் செய்து {நொறுக்கி}, அகழிகளை நிரப்பினேன். இலங்காநகரீயை எரித்து, பிராகாரங்களையும் வீழ்த்தினேன்.{29} மஹாத்மாக்களான ராக்ஷசர்களின் ஒரு பகுதி படையையும் அழித்தேன்.(29,30அ) ஏதோவொரு மார்க்கத்தில் வருணாலயத்தை நாம் கடப்போம். அப்போதே வானரங்களால் அந்த லங்காநகரீ அழிக்கப்பட்டதாகக் கருதலாம்.(30ஆ,31அ)
இராகவரே, அங்கதன், துவிவிதன், மைந்தன், ஜாம்பவான், பனஸன், நளன்,{31ஆ} சேனாபதியான நீலன் ஆகியோர் இருக்கும்போது, எஞ்சியுள்ள படைகளைப் பற்றி உமக்கு என்ன சொல்வது? அவர்கள் மட்டுமே தாவிச் சென்று, ராவணனின் அந்த மஹாபுரீயை அடைந்து,{32} பர்வதங்கள், வனங்கள், அகழிகள், தோரணங்கள், பிராகாரங்கள் {மதில்கள்}, பவனங்கள் {வீடுகள்} ஆகியவற்றுடன் கூடிய அதைப் பீடித்து விடுவார்கள்?(31ஆ-33)
படைகள் அனைத்தையும் திரட்ட சீக்கிரமே ஆணையிடுவீராக. பிரஸ்தானத்திற்கு {பயணத்திற்குப்} பொருத்தமான நேரத்தை முடிவு செய்வீராக" {என்றான் ஹனுமான்}.(34)
யுத்த காண்டம் சர்க்கம் – 003ல் உள்ள சுலோகங்கள்: 34
Previous | | Sanskrit | | English | | Next |