The lamentation of Rama | Sundara-Kanda-Sarga-66 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அடையாளமாகத் தரப்பட்ட சூடாமணியைக் கண்டு பரிதாபகரமாக அழுது புலம்பிய ராமன்...
ஹனுமதன் இவ்வாறு சொன்னதும், லக்ஷ்மணனுடன் கூடிய தசரதாத்மஜன் {ராமன்}, அந்த மணியைத் தன் ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு அழுதான்.(1) அந்தச் சிறந்த மணியைக் கண்டு சோகத்தில் ஆழ்ந்த ராகவன், கண்ணீர் நிறைந்த நேத்திரங்களுடன் {கண்களுடன்}, சுக்ரீவனிடம் இதைச் சொன்னான்:(2) "கன்றிடம் சினேகமுள்ள பசு, கன்றைக் கண்டதும் எப்படியோ, அப்படியே மணிரத்னத்தைக் கண்டதும் என் ஹிருதயம் உருகுகிறது.(3)
என் மாமனார் வைதேஹிக்கு தத்தம் செய்த இந்த மணிரத்னம், வதூகாலத்தில் {அவள் மணமகளான காலத்தில் / எங்கள் திருமணத்தின் போது} தலையில் முடிந்ததும், அதிகம் சோபித்தது.(4) ஜலத்தில் பிறந்ததும், நல்ல ஜனங்களால் பூஜிக்கப்படுவதுமான இந்த மணி, யஜ்ஞத்தில் பரம மகிழ்சியடைந்த, மதிமிக்க சக்ரனால் {இந்திரனால் ஜனகருக்கு} தத்தம் செய்யப்பட்டது. (5) சௌம்யா {மென்மையானவனே, சுக்ரீவா}, என் தாதா, விபுவான வைதேஹர் {என் தந்தையான தசரதர், விதேஹ மன்னர் ஜனகர்} ஆகியோரின் தரிசனம் எப்படியோ, அப்படியே இந்தச் சிறந்த மணியையும் {மணியைக் கண்டதையும்} நான் கருதுகிறேன் {இந்த மணியைக் காண்பதை, என் தந்தையையும், என் மாமனாரையும் கண்டதைப் போலக் கருதுகிறேன்}.(6)
என் பிரியையின் {என் காதல் மனைவி சீதையின்} தலையில் இந்த மணி சோபித்துக் கொண்டிருந்தது. இதை இப்போது கண்டதும், அவளையே அடைந்துவிட்டதைப் போலச் சிந்திக்கிறேன் {எண்ணுகிறேன்}.(7) சௌம்யா {மென்மையானவனே, ஹனுமானே}, வைதேஹியான சீதை, தாகமுள்ளவனுக்கு நீரைப் போல வாக்கியமெனும் நீரால் {என்னை} நனைப்பவளாகி என்ன சொன்னாள்? அதை மீண்டும் மீண்டும் சொல்வாயாக.(8) சௌமித்ரே {சுமித்ரையின் மகனே, லக்ஷ்மணா}, வைதேஹியை விட்டுப் பிரிந்ததும், நீரில் பிறந்ததுமான இந்த மணியைப் பார்ப்பதைவிட அதிக துக்கம் வேறென்ன இருக்க முடியும்?(9)
சௌம்யா {மென்மையானவனே, ஹனுமானே}, ஒரு மாசம் வைதேஹி இருப்பாளென்றால் சிரஞ்சீவியாகிறாள். அந்தக் கருவிழியாள் இல்லாமல் க்ஷணமும் ஜீவித்திருக்க முடியாது.(10) எங்கே என் பிரியை காணப்பட்டாளோ அந்த தேசத்திற்கு {இடத்திற்கு} என்னையும் அழைத்துச் செல்வாயாக. செய்தியை அறிந்த பிறகு, க்ஷணமும் தாமதிக்க முடியாது.(11) அழகிய இடையுடையவளும், பயந்தவளுமான என் சதீ {என் மனைவி சீதை}, சதா பயத்தைத் தரும் கோரர்களான ராக்ஷசர்களின் மத்தியில் எப்படி இருக்கிறாளோ?(12)
இருள்விலக்கினாலும், மேகங்களால் மறைக்கப்படும் சரத்கால {இலையுதிர்காலச்} சந்திரனைப் போலத் தற்போது ராக்ஷசர்களால் சூழப்பட்டிருக்கும் அவளது வதனம் ஒளிராது.(13) ஹனுமானே, சீதை என்ன சொன்னாள்? இப்போது உண்மையை எனக்குச் சொல். மருந்தால் ஆதுரன் {நோயாளி ஜீவித்திருப்பது} எப்படியோ, அப்படியே இதனால் {நீ சொல்வதைக் கொண்டு} நான் ஜீவித்திருப்பேன்.(14) மதுரமானவளும் {இனிமையானவளும்}, மதுரமான சொற்களைச் சொல்பவளும் {தேன்மொழியாளும்}, அழகிய இடையைக் கொண்டவளும், என்னைவிட்டுப் பிரிந்தவளுமான என் பாமினி {என் அழகிய மனைவி சீதை} என்ன சொன்னாள் என்பதை எனக்குச் சொல்வாயாக.(15)
சுந்தர காண்டம் சர்க்கம் – 66ல் உள்ள சுலோகங்கள்: 15
Previous | | Sanskrit | | English | | Next |