The message by Seetha | Sundara-Kanda-Sarga-67 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையின் நிலையை மீண்டும் சொல்லி, அவள் அனுப்பிய செய்தியையும் ராமனிடம் சொன்ன ஹனுமான்...
மஹாத்மாவான ராகவன் {ராமன்} இவ்வாறு சொன்னதும், ஹனுமான், சீதையின் சொற்கள் அனைத்தையும் ராகவனிடம் {பின்வருமாறு} அறிவித்தான்:(1) "புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, ஜானகி தேவி, பூர்வத்தில் சித்திரகூடத்தில் நடந்த நிகழ்வு எதுவோ, அதை அடையாளமாகக் கூறினார்.(2) ஜானகி, உமது அருகில் சுகமாக உறங்கி, {உமக்கு} முன்பே எழுந்திருக்கிறாள். திடீரெனப் பாய்ந்து வந்த வாயஸம் {காக்கை} ஒன்று ஸ்தனாந்தரத்தில் குத்தியிருக்கிறது.(3)
பரதாக்ரஜரே {பரதரின் தமையரே}, பின்பு, நீர் தேவியின் அங்கத்தில் {மடியில்} உறங்கிக் கொண்டிருந்த போது, மீண்டும் அந்த பக்ஷி தேவிக்கு வேதனையை உண்டாக்கியதாம்.(4) மீண்டும், மீண்டும் அருகில் வந்து கடுமையாகக் குத்தியதாம். அப்போது, நீர் அவளது சோணிதத்தில் {குருதியில்} நனைந்ததால் விழித்தெழுந்திருக்கிறீர்.(5) பரந்தபரே, அந்த வாயஸத்தால் {காக்கையால்} சதா துன்புறுத்தப்பட்ட தேவியால், சுகமாக உறங்கிக் கொண்டிருந்த நீர் விழித்தெழச் செய்யப்பட்டீராம்.(6)
மஹாபாஹுவே, ஸ்தனாந்தரத்தில் புண்பட்டிருக்கும் அவளைக் கண்டு, குரோதமடைந்து, விஷமிக்க பாம்பைப் போல பெருமூச்சுவிட்டுக் கொண்டு {பின்வருமாறு} கூறியிருக்கிறீர்:(7) "பீரு {பயந்தவளே}, நகத்தின் நுனிகளால் உன் ஸ்தனாந்தரத்தைப் புண்படுத்தியவன் எவன்? கோபத்துடன் கூடிய ஐந்துமுக பாம்பிடம் விளையாடுபவன் எவன்?" {என்று கேட்டிருக்கிறீர்}.(8)
சுற்றிலும் நோக்கி, உதிரத்தால் நனைந்த கூரிய நகங்களுடன் கூடிய வாயஸம் {காக்கை} அவளின் முன்பு நிற்பதைச் சட்டெனப் பார்த்துவிட்டீர்.(9) பறவைகளில் சிறந்தவனும், மலைகளுக்கு மத்தியில் திரிபவனும், பவனனுக்கு சமமான சீக்கிர வேகம் கொண்டவனுமான அந்த வாயஸமானவன் {காக்கையானவன்}, சக்ரனின் {இந்திரனின்} புத்திரனாம்.(10) மஹாபாஹுவே, மதிமிக்கவர்களில் சிறந்தவரே, கோபத்தால் சுழலும் கண்களுடன் கூடிய நீர், அந்த வாயஸத்திடம் குரூரமான எண்ணத்தை விதித்தீர்.(11)
படுக்கையில் இருந்து ஒரு தர்ப்பையை {புல்லை} எடுத்து, அதில் பிரம்மாஸ்திரத்தைச் செலுத்தினீர். காலாக்னியைப் போல ஜுவாலையுடன் எரிந்து கொண்டிருந்த அதன்` முகம் காகத்தை நோக்கி இருந்தது.(12) எரிந்து கொண்டிருந்த அந்த தர்ப்பையை வாயஸத்தின் {காக்கையின்} மீது நீர் ஏவினீர். பிறகு, எரிந்து கொண்டிருந்த அந்த தர்ப்பை வாயஸத்தைப் பின்தொடர்ந்து சென்றது.(13) ஸுரர்களாலும், பிதாவாலும் {தேவர்களாலும், தன் தந்தையான இந்திரனாலும்}, மஹரிஷிகளாலும் கைவிடப்பட்ட அவன் {அந்தக் காக்கையானவன்}, மூவுலகங்களைச் சுற்றி வந்த போதும் காப்பவன் எவனையும் காணவில்லை.(14)
அரிந்தமரே {பகைவரை அழிப்பவரே}, திகிலுடன் திரும்பி வந்த அவன், பூமியில் விழுந்து, உம்மிடம் சரணாகதியடைந்தான் {அடைக்கலம் புகுந்தான்}.{15} காகுத்ஸ்தரே, வதம்செய்யப்படத் தகுந்தவனாக இருப்பினும், சரண்யரான உமது கிருபையினால் காக்கப்பட்டான்.(15,16அ) இராகவரே, அஸ்திரத்தைப் பயனற்றதாக்க இயலாது என்பதால், நீர் அந்தக் காகத்தின் வலது கண்ணை அழித்துவிட்டீர்.(16ஆ,17அ) பிறகு, இராமரே, கொல்லாமல் விடப்பட்ட அந்தக் காகமானவன், உம்மையும், தசரதராஜாவையும் நமஸ்கரித்துவிட்டு, தன் ஆலயத்திற்குத் திரும்பிச் சென்றான்.(17ஆ,18அ) {என்று தன் மொழியில் சொன்னான் ஹனுமான்}.
{பிறகு, ஹனுமான், சீதையின் மொழியில், பின்வருமாறு சொன்னான்}, "இராகவர், சீலவானாகவும், அஸ்திரவித்களில் சிரேஷ்டராகவும் {ஒழுக்கம் நிறைந்தவராகவும், அஸ்திர வித்தை அறிந்தவர்களில் சிறந்தவராகவும்} இருந்தும், ராக்ஷசர்களின் மீது அத்தகைய அஸ்திரத்தை ஏவாமல் இருப்பதன் அர்த்தமென்ன?(18ஆ,19அ) நாகர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, மருத்கணங்களோ, ஒன்றுசேர்ந்த அவர்கள் அனைவருமோ ரணத்தில் {போரில்} ராகவரை எதிர்த்து நிற்கக்கூடிய சக்தர்களல்லர்.(19ஆ,20அ) அந்த வீரியவானுக்கு என்னிடம் ஆர்வமுண்டானால், மிகக் கூரிய பாணங்களால் சீக்கிரமே யுத்தத்தில் ராவணனைக் கொல்ல வேண்டும்.(20ஆ,21அ) பரந்தபரும், நரவரரும், ராகவருமான {பகைவரை அழிப்பவரும், மனிதர்களில் சிறந்தவரும், ரகு குலத்தில் பிறந்தவருமான} அந்த லக்ஷ்மணரும், உடன்பிறந்தவரின் {ராமரின்} ஆணையை அனுமதியாகக் கொண்டு என்னை ரக்ஷிக்காமல் இருப்பதன் அர்த்தமென்ன?(21ஆ,22அ) புருஷவியாகரர்களும், வாயு, அக்னி ஆகியோருக்கு சமமான தேஜஸ்ஸைக் கொண்டவர்களுமான அந்த சக்தர்கள் இருவரும், ஸுரர்களாலும் {தேவர்களாலும்} வெல்லப்பட முடியாதவர்களாக இருந்தும், என்னைப் புறக்கணிப்பதன் அர்த்தமென்ன?(22ஆ,23அ) நான் ஏதோ மஹத்தான தீச்செயலைச் செய்திருக்க வேண்டும். இதில் ஐயமில்லை. எனவேதான், பரந்தபர்களான அவ்விருவரும் {பகைவர்களை அழிப்பவர்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரும்}, சமர்த்தர்களாக இருப்பினும், என்னை கவனியாதிருக்கின்றனர்" {என்றாள் சீதை}.(23ஆ,24அ)
கண்ணீருடன் பேசிய வைதேஹியின் கருணைக்குரிய வசனத்தைக் கேட்ட நான், மீண்டும், அந்த ஆரியையிடம் இந்த வசனத்தைச் சொன்னேன்:(24ஆ,25அ) "தேவி, ராமர் உன்னைப் பிரிந்த சோகத்தில் இருக்கிறார். சத்தியத்துடன் உன்னிடம் சபதம் செய்கிறேன். இராமர் துக்கத்தில் மூழ்கியிருக்கிறார். இலக்ஷ்மணரும் பரிதபித்துக் கொண்டிருக்கிறார்.(25ஆ,26அ) பாமினி {மதிப்புக்குரிய அழகிய பெண்ணே}, எப்படியோ உன்னைக் கண்டுவிட்டேன். இஃது அழுது புலம்பவேண்டிய காலமல்ல. இந்த முஹூர்த்தத்திலேயே உன் துக்கங்களுக்கான அந்தத்தை தரிசிப்பாய் {முடிவைக் காண்பாய்}.(26ஆ,27அ) அரிந்தமர்களும், நரசார்தூலர்களுமான {பகைவரை அழிப்பவர்களும், மனிதர்களில் புலிகளுமான} அந்த ராஜபுத்திரர்கள் இருவரும், உன்னை தரிசிப்பதில் உற்சாகம் கொண்டவர்களாக, {வந்து} லங்கையை பஸ்மமாக்க {சாம்பலாக்கப்} போகிறார்கள்.(27ஆ,28அ) அழகிய இடையைக் கொண்டவளே, சமரில் பந்துக்களுடன் {உற்றார் உறவினருடன்} சேர்த்து ரௌத்திரனான ராவணனைக் கொன்று, இராகவர், நிச்சயம் உன்னைத் தன் புரீக்கு {தன் நகரான அயோத்திக்கு} அழைத்துச் செல்வார்.(28ஆ,29அ) அநிந்திதே {நிந்திக்கத்தகாதவளே}, ராமர் அறிந்துகொள்ளக்கூடியதும், அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதுமான ஓர் அடையாளத்தை இப்போது {எனக்கு} தத்தம் செய்வதே உனக்குத் தகும்" {என்றேன்}.(29ஆ,30அ)
மஹாபலவானே, அவள் {சீதை}, திசைகள் அனைத்தையும் நோக்கிவிட்டு, தலைப்பின்னலில் தரிக்கக்கூடிய இந்த உத்தம மணியை {சூடாமணியை} வஸ்திர நுனியில் இருந்து அவிழ்த்து என்னிடம் கொடுத்தாள்.(30ஆ,31அ) இரகுக்களில் முதன்மையானவரே, உமக்கு ஹேதுவாக திவ்ய மணியைப் பெற்றுக் கொண்ட நான், அந்த ஆரியையை {மதிப்புக்குரிய சீதையை} சிரஸால் வணங்கிவிட்டுத் துரிதமாகத் திரும்பிவந்தேன்.(31ஆ,32அ)
வரவர்ணினியான ஜனகாத்மஜை {சிறந்த நிறம் கொண்டவளும், ஜனகரின் மகளுமான சீதை}, திரும்பி வருவதில் உற்சாகம் அடைந்து, உடலைப் பெருக்கிக் கொண்டிருந்த என்னைக் கண்டு, {பின்வருமாறு} சொன்னாள்.(32ஆ,33அ) கண்ணீர் நிறைந்த முகத்துடன் கூடியவளாக, தீனமானவளாக, நான் திரும்பிச் செல்வதில் பரபரப்படைந்து, சோக வேகத்தால் பீடிக்கப்பட்டவளாகக் கண்ணீருடன் தட்டுத்தடுமாறி {பின்வருமாறு} பேசினாள்:(33ஆ,34அ) "ஹனுமானே, சிம்ஹங்களுக்கு ஒப்பான அந்த ராமலக்ஷ்மணர்கள் இருவரிடமும், அமைச்சர்களுடன் கூடிய சுக்ரீவனிடமும், மற்ற அனைவரிடமும் நலம் விசாரிப்பாயாக[1].(34ஆ,35அ)
[1] கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், இங்கே 34ம் சுலோகத்திற்குப் பிறகு, இன்னும் ஏழு அதிக சுலோகங்கள் இருக்கின்றன. அவற்றின் பொருள் பின்வருமாறு, "மற்ற எல்லோரையும் க்ஷேமலாபம் விசாரித்தேன் என்று கூறு". மீண்டும் அவர் என்னைப் பார்த்து, "பெருவானரமே! பெருந்தோளரும், தாமரைக்கண்ணருமான இராமனையும், பெருந்தோளரும், புகழ்பெற்றவரும் என் மைத்துனருமான லட்சுமணனையும் பார்த்துக் கொண்டிருக்கும் நீ பாக்கியசாலி" என்றார். சீதை இவ்வாறு சொன்னதும், நான் அவரிடம் கூறினேன் - "ஜனககுமாரியே, தேவி, என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள். நற்பேறுடையவரே, இப்போதே, சுக்ரீவ-லட்சுமணர்களையும், தங்கள் பர்த்தா இராமனையும் காட்டுகிறேன்". (அவர்கள் இருக்கும் இடத்திற்குத் தூக்கிச் சென்றுவிடுகிறேன்). அதற்கு தேவி பதிலிறுத்தார் - "பெருவானரமே! இப்போது என் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் (சுதந்திரமாகச் சிந்தித்து ஒரு முடிவு எடுக்கக்கூடிய நிலையில் உள்ள) நான், உன் முதுகில் ஏறிச் செல்வது தருமம் அல்ல. வீரனே, முன்பு, ராட்சசன் என்னைத் தொட்டுத் தூக்கி வந்தானே? என்றால், அப்போது, நான் வேறு என்ன செய்திருக்க முடியும்? கெட்ட காலம் என்னை ஆட்டிக் கொண்டிருந்தது. வானரப்புலியே! (நீ மட்டும்) அவ்விரு ராஜகுமாரர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக" இவ்வாறு சொல்லிவிட்டு, மறுபடியும் எனக்குச் செய்தி கூறினார்(35-41)" என்றிருக்கிறது. அதன்பின் இங்கே தொடர்வதைப் போலவே தொடர்கிறது. அப்பதிப்பில் இந்த சர்க்கம் 44 சுலோகங்களைக் கொண்டதாக இருக்கிறது. கோரக்பூர், கீதாபிரஸ் பதிப்பு, மன்மதநாததத்தர் பதிப்பு, ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பு, ஆகிய பதிப்புகளில் இந்த அடிக்குறிப்பில் காணப்படும் பகுதி இருக்கிறது. இங்கே ஒப்பிடப்படும் ஏனைய பதிப்புகளில் இந்தப் பகுதி இல்லை.
மஹாபாஹுவே, அந்த ராகவர், இந்த துக்கக்கடலில் இருந்து எப்படி என்னை விடுவிப்பாரோ, அத்தகைய ஏற்பாடுகளைச் செய்வதே உனக்குத் தகும். {35ஆ,இ} ஹரிப்ரவீரா {வீரக் குரங்குகளில் முதன்மையானவனே}, ராமரின் சமீபத்தில் சென்று, என்னுடைய இந்தத் தீவிர சோக வேகத்தையும், இந்த ராக்ஷசிகளால் {நான்} மிரட்டப்படுவதையும் சொல்வாயாக. உன் பயணம் சுபமாக அமையட்டும்" {என்றாள் சீதை}.{36}
இராஜசிம்ஹரே, ஆரியையான {மன்னர்களில் சிங்கமே, மதிப்புக்குரிய} சீதை, சோகம் நிறைந்த இந்தச் சொற்கள் யாவற்றையும் உம்மை அறியச்செய்யுமாறு சொன்னாள். சீதை அனைத்து வகையிலும் குசலமாகவும், சிரத்தையுடனும் {நலமாகவும், நம்பிக்கையுடனும்} இருக்கிறாள்" {என்றான் ஹனுமான்}.(35ஆ-37)
சுந்தர காண்டம் சர்க்கம் – 67ல் உள்ள சுலோகங்கள்: 37
Previous | | Sanskrit | | English | | Next |