Presented the Jewel for head | Sundara-Kanda-Sarga-64 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராக்ஷசிகள் சூழ, சிறைபட்டிருக்கும் சீதையைக் குறித்து ராமனிடம் புகழ்ந்து சொன்ன ஹனுமான்; இராமனிடம் சூடாமணியைக் கொடுத்து சீதை சொல்லி அனுப்பிய செய்தியைச் சொன்னது...
பிறகு, சித்திரக் கானனங்களுடன் {அழகிய காடுகளுடன்} கூடிய பிரஸ்ரவண சைலத்தில் {மலையில்} ராமனையும், மஹாபலவானான லக்ஷ்மணனையும் சிரத்தால் வணங்கியவர்களும்,{1} யுவராஜனை {அங்கதனை} முன்னிட்டுக் கொண்டு, சுக்ரீவனை மதிப்புடன் வணங்கியவர்களுமான அவர்கள் {வானரர்கள்}, சீதை குறித்த செய்தியைச் சொல்லத் தொடங்கினர்.(1,2) இராவண அந்தப்புரத்தில் {சீதை} சிறை வைக்கப்பட்டது, ராக்ஷசிகளால் மிரட்டப்படுவது, ராமனிடம் கொண்ட அனுராகம் {முற்று முழுதான பாசம்}, அவனால் கொடுக்கப்பட்ட சமயம் {ராவணன் கொடுத்த கெடு} ஆகியவற்றை அந்த ஹரயர்கள் {குரங்குகள்} அனைவரும் ராமனின் சன்னிதானத்தில் {முன்னிலையில்} கூறினர்.(3,4அ)
வைதேஹி தீங்கின்றி இருப்பதைக் கேட்ட ராமனும், பதிலுக்கு,{4ஆ} "தேவி சீதை எங்கிருக்கிறாள்? என்னிடம் எப்படி இருக்கிறாள் {என்னைக் குறித்து என்ன நினைக்கிறாள்}? வானரர்களே, வைதேஹியைக் குறித்த இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்றான் {ராமன்}.(4ஆ,5)
இராமனின் சொற்களைக் கேட்ட ஹரயர்கள் {குரங்குகள்}, ராமனின் சந்நிதானத்தில் {முன்னிலையில்}, சீதா விருத்தாந்தம் குறித்து அறிந்தவற்றைச் சொல்ல ஹனூமந்தனைத் தூண்டினர்.(6) மாருதாத்மஜனும், வாக்கியஜ்ஞனுமான {வாயு மைந்தனும், வாக்கியங்களை அமைப்பதில் திறம்பெற்றவனுமான} ஹனுமான், அவர்களின் வசனத்தைக் கேட்டு, சீதா தேவி இருந்த திசையை நோக்கி சிரசால் வணங்கிவிட்டு, சீதையின் தரிசனத்தைப் பற்றி {பின்வரும்} வாக்கியத்தில் சொன்னான்:(7,8அ) "நான், ஜானகியான {ஜனகனின் மகளான} சீதையைக் காணும் விருப்பத்துடன் தேடியபடியே நூறு யோஜனைகள் நீளம் கொண்ட சமுத்திரத்தைக் கடந்து சென்றேன்.(8ஆ,9அ) அங்கே தக்ஷிண சமுத்திரத்தின், தக்ஷிண தீரத்தில் {தென்கடலின் தென்கரையில்}, துராத்மாவான ராவணனுக்கு லங்கை என்ற நகரீ {நகரம்} இருக்கிறது.(9ஆ,10அ) இராமரே, சதீயும் {கற்புடையவளும்}, ராமையும் {அழகியும்}, மனோரதத்தை உம்மில் வைத்து ஜீவிப்பவளுமான சீதையை அங்கே {லங்கையில்} ராவணனின் அந்தப்புரத்தில் கண்டேன்.(10ஆ,11அ) பிரமதாவனத்தில், ராக்ஷசிகளின் மத்தியில் {சீதை} ரக்ஷிக்கப்படுவதையும், விரூப ராக்ஷசிகளால் மீண்டும் மீண்டும் மிரட்டப்படுவதையும் நான் கண்டேன்.(11ஆ,12அ)
உம்முடன் சுகமாக வாழ வேண்டிய சதீயான தேவி {கற்புடைய சீதா தேவி}, துக்கமடைந்தவளாக இருக்கிறாள்.{12ஆ} இராவணனின் அந்தப்புரத்தில் அடைக்கப்பட்டு, ராக்ஷசிகளால் ரக்ஷிக்கப்படுபவளும், ஒற்றைப் பின்னல் கொண்டவளும், தீனமானவளும், உம்மைக் குறித்த சிந்தனையில் ஆழ்ந்தவளும்,{13} தரையில் சயனிப்பவளும், பனிக்காலத்து பத்மினியை {தாமரையோடையைப்} போல வர்ணமிழந்த அங்கங்களைக் கொண்டவளும், ராவணனின் அர்த்தத்தைவிட்டு விலகி மரித்துப் போக நிச்சயித்தவளும்,{14} காகுத்ஸ்தரே, மனத்தில் உம்மையே நினைத்துக் கொண்டிருப்பவளுமான தேவியை {சீதையை} நான் எப்படியோ கண்டடைந்தேன்.(12ஆ-15அ)
அனகரே {களங்கமற்றவரே}, நரசார்தூலரே {மனிதர்களில் புலியே}, இக்ஷ்வாகு குலத்தின் புகழை மெதுவாகக் கீர்த்தனம் செய்து, அவளிடம் நான் விசுவாசத்தை {நம்பிக்கையை} விதைத்தேன்[1].(15ஆ,16அ) பிறகு, தேவி பேசினாள். சர்வ அர்த்தங்களையும் விளக்கிச் சொன்னேன்.{16ஆ} இராமசுக்ரீவ நட்பைக் கேட்டுப் பிரீதியடைந்தாள். நன்னடத்தையும், உம் மீதான பக்தியும் அவளிடம் நிலைத்துநிற்கிறது.(16ஆ,17) புருஷரிஷபரே, உக்கிர தபஸ்ஸுடன் கூடியவளும், உம் மீது பக்தி கொண்டவளும், மஹாபாக்யவதியுமான ஜனகநந்தினியை இவ்வாறே நான் கண்டேன்.(18) இராகவரே, மஹாபிராஜ்ஞரே {பெரும் ஞானியே}, சித்திரகூடத்தில் உம்மிடம் நெருங்கிய வாயஸம் {காக்கை} குறித்த விருத்தம் எதுவோ, அதையும், அறிந்துகொள்ளத்தக்க ஓர் அடையாளத்தையும் {சூடாமணியையும்} எனக்கு வழங்கினாள்.(19)
[1] விவேக் தேவ்ராய் {பிபேக்திப்ராய்} பதிப்பின் அடிக்குறிப்பில், "என்ன காரணத்தாலோ, சீதையின் நம்பிக்கையைப் பெறுவதற்காகத் தான் எடுத்துச் சென்ற ராமனின் மோதிரத்தைக் குறித்து ஹனுமதன் இங்கே குறிப்பிடவில்லை" என்றிருக்கிறது.
ஜானகி என்னிடம் இவ்வாறு சொன்னாள், "வாயுசுதனே {வாயுமைந்தனே}, நரவியாகரரான {மனிதர்களில் புலியான} ராமரிடம், இங்கே நீ கண்டவை எவையோ, அவை அனைத்தையும் அறிவிப்பாயாக.(20) இவ்வாறான வசனங்களை நீ சொல்லிக் கொண்டும், சுக்ரீவன் கேட்டுக் கொண்டும் இருக்கையில், யத்னத்துடன் ரக்ஷிக்கப்பட்ட இதையும் அவரிடம் {ராமரிடம்} கொடுப்பாயாக.(21) "ஸ்ரீமானான {அழகும், மதிப்பும் மிக்க} இந்தச் சூடாமணியை நான் கவனமாக ரக்ஷித்துவந்தேன்.{22அ} திலகம் அழிந்தபோது, மனச்சிலையைக் குழைத்து என் நெற்றியில் நீர் திலகம் சூட்டினீர்" என்று {நான் சொன்னதாக ராமருக்கு} நினைவூட்டுவதே உனக்குத் தகும்.(22,23அ) "வாரி சம்பவனான இந்த ஸ்ரீமானை {நீரில் பிறந்ததும், அழகும், மதிப்பும் மிக்க இந்த சூடாமணியை} உமக்கு அனுப்பியிருக்கிறேன். விசனத்திலும் இதைக் கண்டு, உம்மையே கண்டதுபோல் மகிழ்ந்திருப்பேன்.(23ஆ,24அ) தசரதாத்மஜரே {தசரதனின் மகனான ராமரே}, ஒரு மாசமே ஜீவிதம் தரித்திருப்பேன். இராக்ஷசர்களின் வசமடைந்து ஒரு மாசத்திற்கு மேலும் ஜீவிக்கமாட்டேன்" {என்றாள் சீதை}".(24ஆ,25அ)
மெலிந்த அங்கங்களைக் கொண்டவளும், தர்மசாரிணியும், ராவணனின் அந்தப்புரத்தில் அடைக்கப்பட்டவளும், மான் போன்ற நீள்விழிகளுடன் கூடியவளுமான சீதை, இப்படியே என்னிடம் சொன்னாள்.(25ஆ,26அ) இராகவரே, இவ்வாறு உள்ளது உள்ளபடியே அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன். எவ்விதத்திலாவது சாகர ஜலத்தைக் கடப்பதற்குரிய வழிமுறையை ஏற்பாடு செய்ய வேண்டும் {ஓர் அணை கட்டப்பட வேண்டும்}"[2] {என்றான் ஹனுமான்}.(26ஆ,27அ)
[2] தர்மாலயப்பதிப்பில், "எவ்விதத்திலும், ஸமுத்திரஜலத்தில் ஓர் அணை விதிக்க வேண்டியதே" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "எப்படியாயினும் ஸமுத்ரந் தாண்டுவதற்கு அணை கட்டியே ஆகவேண்டும்; அக்கார்யத்தை நிறைவேற்றுவாயாக" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "சமுத்திர ஜலத்தைக் கடந்து செல்வதற்கான எல்லா உபாயங்களும் இனி ஆராயப்பட வேண்டியதுதான்" என்றிருக்கிறது. ஆங்கிலப்பதிப்புகளான தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில், "சாகரஜலத்தில் எல்லாவகையிலும் ஒரு பாலம் கட்டப்பட வேண்டும்" என்றும், வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "எப்படியேனும் சாகரஜலத்தைக் கடப்பதற்குரிய வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்றும், மன்மதநாததத்தர் பதிப்பில், "பெருங்கடலின் மேல் கடந்து செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்" என்றும், பிபேக்திப்ராய் பதிப்பில், "பெருங்கடல் மேல் கடந்து செல்வதை சாத்தியப்படுத்தும் எல்லா வழிமுறைகளும் பயன்படுத்தப்பட வேண்டும்" என்றும், ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "இனி பெருங்கடலில் பாலம் கட்டுவதற்கு ஆலோசிப்பீராக" என்றுமிருக்கிறது.
அந்த ராஜபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும், ஆசுவாசம் அடைந்ததை அறிந்து, ராகவனிடம் அந்த அடையாளத்தை {சூடாமணியைக்} கொடுத்த ஹனுமான், தேவி சொன்ன அனைத்தையும், அடுத்தடுத்து என, சம்பூர்ண வார்த்தைகளால் சொல்லி போற்றினான்.(27ஆ,இ,ஈ,உ)
சுந்தர காண்டம் சர்க்கம் – 65ல் உள்ள சுலோகங்கள்: 27
Previous | | Sanskrit | | English | | Next |