Sons of ministers killed | Sundara-Kanda-Sarga-45 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனின் அமைச்சர்களுடைய ஏழு மகன்களைக் கொன்ற ஹனுமான்...
பிறகு, ஏழு தழல்களைக் கொண்டவனின் {அக்னியின்} ஒளியுடன் கூடியவர்களும், ராக்ஷசேந்திரனின் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனின்} ஆணையின் பேரில் அனுப்பப்பட்டவர்களும், மந்திரிமார் மகன்களுமான அந்த எழுவரும் {ஏழு பேரும்}, அந்த பவனத்தில் இருந்து வெளியே வந்தனர்.{1} மஹாபலவான்களும், பெரும்படையால் சூழப்பட்டவர்களும், தனுக்களை {விற்களைத்} தரித்தவர்களும், அஸ்திரங்களில் பயிற்சி பெற்றவர்களும், அஸ்திரவித்தையை அறிந்தவர்களில் சிரேஷ்டர்களுமான {சிறந்தவர்களுமான} அவர்கள், பரஸ்பரம் ஜயம்பெறும் விருப்பத்துடன் கூடியவர்களாக,{2} ஹேமஜால {பொன்வலை} கவசத்துடனும், துவஜங்களுடனும், பதாகைகளுடனும் கூடியவையும், மின்னல்களுடன் கூடிய அம்புதங்களை {மேகங்களைப்} போன்ற ஒலி கொண்டவையும், வாஜிகள் பூட்டப்பட்டவையுமான மஹாரதங்களில்,{3} அமித விக்ரமத்துடன் {அளவில்லா ஆற்றலுடன்} கூடியவர்களாக, தப்தகாஞ்சனத்தாலானவையும் {புடம்போட்ட பொன்னாலானவையும்}, சித்திரமானவையுமான சாபங்களை {விற்களை}, கூதிர் கால மேகத்திற்கு ஒப்பான ஒலியுடன் வளைத்தபடியே பேராரவாரம் செய்தனர்.(1-4)
கிங்கரர்கள் கொல்லப்பட்டதை அறிய வந்த அவர்களின் ஜனனிகள் {அந்த மந்திரிமார் மகன்களின் தாய்மார்கள்}, தங்கள் பந்துக்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து சோகத்தில் மூழ்கினர்.(5) தப்த காஞ்சனத்தாலான பூஷணங்களுடன் கூடிய அவர்கள் {புடம்போட்ட பொன்னாலான ஆபரணங்களுடன் கூடிய அந்த மந்திரி குமாரர்கள்}, பரஸ்பரம் மோதிக் கொள்ளும் விருப்பத்துடன் தோரணத்தில் {நுழைவாயிலில்} இருக்கும் ஹனூமந்தனைத் தாக்கினர்.(6) மேகங்களைப் போல் தெரிந்த அந்த நைருத ரிஷபர்கள் {ராக்ஷசர்களில் சிறந்தவர்கள்}, இடிபோன்று கர்ஜிக்கும் ரதங்களில் சென்று, மழைமேகங்களுக்கு ஒப்பான பாண மழையை உண்டாக்கியபடியே எங்கும் திரிந்து கொண்டிருந்தனர்.(7) அப்போது அந்தச் சர மழையால் மறைக்கப்பட்ட ஹனுமான், மழையில் நனைந்த சைலராஜனை {மழையில் மறைந்த மாமலையைப்} போலத் தெரிந்தான்.(8)
விமலமான அம்பரத்தில் {தெளிந்த வானில்}, வேகமான கதியுடன் திரிந்து கொண்டிருந்த கபியானவன் {குரங்கான ஹனுமான்}, அந்த வீரர்களின் ரத வேகத்தையும், சரங்களையும் வஞ்சித்தான் {வீணாகச் செய்தான்}.(9) தனுசுகளைத் தரித்திருந்த அவர்கள் ஒவ்வொருவருடனும் வானில் விளையாடிய அந்த வீரன், மேகங்களில் உள்ள வானவில்லுடன் கூடிய {வானவில்லுடன் விளையாடும்} பிரபு மாருதனை {வாயு தேவனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(10) கோரமான நாதம் செய்து, அந்த மஹாசம்முவை {பெரும்படையை} அச்சுறுத்திய அந்த வீரியவான் {ஹனுமான்}, அந்த ராக்ஷசர்களை நோக்கி வேகமாக விரைந்து சென்றான்.(11)
அந்தப் பரந்தபன் {பகைவரை அழிப்பவனான ஹனுமான்}, சிலரை உள்ளங்கைகளாலும், சிலரை பாதங்களாலும், சிலரை முஷ்டிகளாலும், வேறு சிலரைத் தன் நகங்களால் கிழித்தும் தாக்கினான்.(12) சிலரை மார்பினாலும், வேறு சிலரைத் தன் தொடைகளாலும் நசுக்கினான். சிலரோ அவனது நாதத்தினாலேயே {கர்ஜனையாலேயே} அங்கேயே புவியில் விழுந்தனர்.(13) அவர்கள் சாவதையும், பூமியில் விழுவதையும் கண்ட அந்த சைனியத்தினர் அனைவரும், பயத்தால் பீடிக்கப்பட்டவர்களாகப் பத்து திசைகளிலும் பறந்தோடினர்.(14)
நாகங்கள் {யானைகள்} விகாரமாகப் பிளிறின; வாஜிகள் {குதிரைகள்}, புவியில் விழுந்தன. உட்புறங்கள், துவஜங்கள், குடைகள் ஆகியன பங்கமடைந்த {முறிந்த} ரதங்களால் பூமியும் நிறைந்திருந்தது.(15) உதிரம் வழிந்தோடும் ஓடைகள் பாதையில் காணப்பட்டபோது, விதவிதமான விகார ஸ்வரங்கள் லங்கையில் எதிரொலித்தன.(16) வீரனும், மஹாபலவானும், சண்ட பராக்கிரமனுமான அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, பேருடல் படைத்த அந்த ராக்ஷசர்களையும், யுத்தத்தில் விருப்பமுள்ள வேறு ராக்ஷசர்களையும் கொன்று, அந்தத் தோரணத்தையே மீண்டும் அடைந்தான்.(17)
சுந்தர காண்டம் சர்க்கம் – 45ல் உள்ள சுலோகங்கள்: 17
Previous | | Sanskrit | | English | | Next |