Generals killed | Sundara-Kanda-Sarga-46 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: போரில் ராவணனின் சேனாதிபதிகள் ஐவரைக் கொன்ற ஹனுமான்...
மஹாத்மாவான வானரனால் {ஹனுமனால்} மந்திரிமகன்கள் கொல்லப்பட்டதை அறிந்த ராவணன், தன் மனவேதனையை மறைத்துக் கொண்டு, உத்தம மதியை அமைத்துக் கொண்டான் {நல்ல தீர்மானத்திற்கு வந்தான்}.(1) சேனையின் ஐந்து முன்னணி நாயகர்களான விரூபாக்ஷன், யூபாக்ஷன், ராக்ஷசன் துர்த்தரன், பிரகஸன், பாஸகர்ணன்{2} என்ற நயவிசாரதர்களும் {உத்திகளைக் கையாள்வதில் திறம்பெற்றவர்களும்}, ஹனூமனைக் கைப்பற்றும் ஆவலுள்ளவர்களும், யுத்தத்தில் வாயுவுக்கு சமமான வேகம் கொண்டவர்களுமான அந்த வீரர்களுக்கு அந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன், பின்வருமாறு} ஆணையிட்டான்:(2,3) "சேனாக்ரகர்களே {படையின் முன்னணியில் உள்ள தலைவர்களே}, நீங்கள் அனைவரும் வாஜிகள், ரதங்கள், மாதங்கங்களுடன் கூடிய மஹாபலத்தை {குதிரைகள், தேர்கள், யானைகளுடன் கூடிய பெரும்படையை} அழைத்துச் சென்று அந்த கபியை {குரங்கை} தண்டிப்பீராக" என்றான் {ராவணன்}.(4)
{மேலும் ராவணன்}, "அந்த வனாலயனை அணுகி, ஏமாற்றமடையாத யத்னத்துடன் கூடியவர்களாக, தேசகாலங்களுக்கு விரோதமில்லாத கர்மங்களைச் செய்வீராக.(5) கர்மங்களைக் கொண்டு முன்பின் ஆலோசிக்கும்போது, அவனைக் கபியாகவே {குரங்காகவே} என்னால் கருதமுடியவில்லை. எல்லாவகையிலும் இஃது அளவிலா மஹாபலம் பொருந்திய மஹத்தான பூதமாகவே இருக்க வேண்டும்.(6) இந்திரனின் தபோபலத்தால் நமக்காகவே உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும். தேவர்கள், அசுரர்கள், மஹரிஷிகள், நாகர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகியோரை{7} உங்கள் அனைவருடன் சேர்ந்து நான் வென்றிருக்கிறேன். அவர்கள் நமக்கு எந்தத் தீங்கையேனும் அவசியம் செய்வார்கள்.{8} சந்தேகமற இஃது அப்படியே தெரிகிறது. தீரமும், பராக்கிரமும் கொண்ட அந்த கபியை நீங்கள் பலவந்தமாகக் கைப்பற்றுவீராக; அவமானப்படுத்த வேண்டாம்.(7-9)
வேகத்துடன் கூடிய விபுல விக்கிரமர்களான ஹரயர்களை {பேராற்றல் படைத்தவர்களான குரங்குகளை} நான் பூர்வத்தில் கண்டிருக்கிறேன். சுக்ரீவனுடன் கூடிய வாலி, மஹாபலவானான ஜாம்பவான்,{10} சேனாபதிகளான நீலன், துவிவிதன் உள்ளிட்ட பிறரின் கதி இவ்வளவு பயங்கரமானதில்லை; அவர்களிடம் இதைப் போன்ற தேஜஸில்லை; பராக்கிரமம் இல்லை;{11} மதி இல்லை; விரும்பிய ரூபத்தையும், சக்தியையும் கொள்ளவல்ல பலமும், உற்சாகமும் அவர்களிடம் இல்லை.(10-12அ) கபிரூபத்தில் நிற்கும் மஹாசத்வம் {குரங்கின் வடிவில் இருக்கும் பெரும்பூதம்} என்று இதை அறிந்து கொண்டு, மஹத்தான பிரயத்னத்தைச் செய்து அதைக் கைப்பற்றுவீராக.(12ஆ,13அ) ஸுரேந்திரன், ஸுராஸுரமானவர்கள் {இந்திரன், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள்} உள்ளிட்ட மூவுலகத்தார் போர்க்களத்தில் உங்கள் முன் நின்றாலும் அவர்களின் விருப்பம் ஈடேறாது.(13ஆ,14அ) இருப்பினும், நயத்தை அறிந்தவனும், ஜயத்தை விரும்புகிறவனுமான ஒருவன், போரில் பிரயத்னத்துடன் தன்னை ரக்ஷித்துக் கொள்ள வேண்டும். யுத்தசித்தி சஞ்சலமானது {போரில் வெற்றி நிலையற்றது}" {என்றான் ராவணன்}.(14ஆ,15அ)
மஹாஓஜஸர்களும் {பெரும்வலிமைமிக்கவர்களும்}, ஹுதாசனனுக்கு {அக்னிக்கு} சமமான தேஜஸ் கொண்டவர்களுமான அவர்கள் அனைவரும்,{15} தங்கள் ஸ்வாமியின் {தலைவனான ராவணனின்} வசனத்தை ஏற்றுக் கொண்டு, ரதங்கள், மத்தமாதங்கங்கள் {தேர்கள், மதங்கொண்ட யானைகள்}, பெரும் வேகம் கொண்ட வாஜிகள் {குதிரைகள்},{16} கூர்மையுடன் கூடிய விதவிதமான சஸ்திரங்கள் ஆகியவை திரட்டப்பட்ட படையுடன், பெரும் வேகத்தில் புறப்பட்டுச் சென்றனர்.(15ஆ-17அ)
பிறகு அந்த வீரர்கள், உதயமாகும் ரஷ்மிமந்தனை {கதிரவனைப்} போலத் தன்னொளிக் கதிர்களை மாலையாகப் பூண்டு ஒளிர்ந்தபடியே, மஹா உற்சாகத்துடனும், மஹாசத்வத்துடனும் {பெரும் மனோவலிமையுடனும்}, மஹாபலத்துடனும் தோரணத்தில் நின்று கொண்டிருக்கும் அந்த மஹாகபியை {பெருங்குரங்கான ஹனுமானைக்} கண்டனர்[1].(17ஆ,18) மஹாமதியும், மஹாவேகமும், மஹாகாயமும் {பேருடலும்} கொண்ட அவனை {ஹனுமானைக்} கண்ட அவர்கள் அனைவரும், சர்வ திக்குகளில் ஆங்காங்கே நின்றபடியே, தங்கள் தங்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் தொடுத்தனர்.(19,20அ)
[1] ஆயிடை அனுமனும் அமரர்கோன் நகர்வாயில் நின்று அவ்வழிக் கொணர்ந்து வைத்த மாச்சேயொளித் தோரணத்து உம்பர் சேண் நெடுமீ உயர்விசும்பையும் கடக்க வீங்கினான்- கம்பராமாயணம் 5629ம் பாடல், பஞ்ச சேனாபதிகள் வதைப்படலம்பொருள்: அப்போது தேவர்களின் தலைவனது {இந்திரனின்} தலைநகரின் {அமராவதியின்} வாசலில் இருந்து அங்கே {அசோகவனத்தில்} கொண்டு வந்து வைக்கப்பட்டதும், செக்கச்சிவந்ததுமான தோரணத்தின் மேலே மிக நெடுந்தூரமாக மேலே உயர்ந்த ஆகாயத்தையும் கடந்து செல்லும் அளவு பெரிதானான் {ஹனுமான்}.
துர்த்தரன், உத்பல {கருநெய்தல்} இதழ்களுக்கு ஒப்பான மஞ்சள் முகங்களுடன் கூடியவையும், திடமானவையும், கூர்மையானவையும், இரும்பாலானவையுமான சரங்கள் {கணைகள்} ஐந்தை, அவனது சிரஸில் {ஹனுமானின் தலையில்} ஏவினான்.(20ஆ,21அ) அந்த ஐந்து சரங்களால் சிரசில் தாக்கப்பட்ட வானரன் {ஹனுமான்}, பத்து திசைகளிலும் எதிரொலிக்கும்படியான நாதம் செய்தபடியே வானத்தில் குதித்தான்.(21ஆ,22அ) அப்போது, மஹாபலவானும், வீரனுமான துர்த்தரன், தன் ரதத்தில் இருந்தபடியே, கார்முகத்தை வளைத்து நூறு கூரிய சரங்களை ஏவித் தாக்கினான்.(22ஆ,23அ) கார்காலத்தின் அந்தத்தில் மழைபொழியும் மேகத்தை மாருதன் {வாயு விலக்குவதைப்} போல, அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, வானத்தில் இருந்தபடியே சரமழை பொழிவதைத் தடுத்தான்.(23ஆ,24அ) இவ்வாறு அந்த துர்த்தரனால் அநிலாத்மஜன் {வாயுமைந்தனான ஹனுமான்} பீடிக்கப்பட்ட போது, மீண்டும் நாதம் செய்படியே வேகமாகத் தன் உடலைப் பெருக்கிக் கொண்டான்.(24ஆ,25அ) கிரியில் {விழும்} மின்னல் திரளைப் போலத் திடீரெனப் பாய்ந்த அந்த ஹரி {குரங்கான ஹனுமான்}, பெரும் வேகத்துடன் துர்த்தரனின் ரதத்தில் குதித்தான்.(25ஆ,26அ) எட்டு அஷ்வங்களும் {குதிரைகளும்} கொல்லப்பட்டு, அச்சும், ஏர்க்கால்களும் பங்கமடைந்த ரதத்தையும் இழந்த பிறகு, அந்த துர்த்தரன், பூமியில் விழுந்து, ஜீவிதத்தைக் கைவிட்டான்.(26ஆ,27அ)
வெல்வதற்கரியவர்களும், அரிந்தமர்களுமான விரூபாக்ஷன், யூபாக்ஷன் ஆகிய இருவரும், அவன் {துர்த்தரன்} புவியில் விழுந்ததைக் கண்டு கோபமடைந்தவர்களாக விரைந்து சென்றனர்.(27ஆ,28அ) விரைவாகச் சென்ற அவர்கள், விமலமான அம்பரத்தில் {தெளிந்த வானில்} நின்று கொண்டிருந்தவனும், மஹாபாஹுவுமான அந்தக் கபியின் {குரங்கான ஹனுமானின்} மார்பில் முத்கரங்களால் {சம்மட்டிகளால்} தாக்கினர்.(28ஆ,29அ) மஹாபலவானும், சுவர்ணனுக்கு {கருடனுக்கு} சமமான விக்கிரமம் கொண்டவனுமான அவன் {ஹனுமான்}, வேகத்துடன் கூடிய அவ்விருவரின் ஊக்கத்தை ஒடுக்கியபடியே மீண்டும் பூமியில் இறங்கி நின்றான்.(29ஆ,30அ) வானரனான அந்தப் பவனாத்மஜன் {வாயு மைந்தன் ஹனுமான்}, ஒரு சால விருக்ஷத்தை அடைந்து, அதை வேருடன் பிடுங்கி, அந்த ராக்ஷச வீரர்கள் இருவரையும் கொன்றான்.(30ஆ,31அ)
அந்த வலிமைமிக்க மூவரும் வானரனால் கொல்லப்பட்டதை அறிந்தபோது, பிரகஸன், மஹாவேகத்துடனும், வலிமையுடனும் தாக்குதல் தொடுத்தான். வீரியவானான பாஸகர்ணனும், கோபமடைந்தவனாக சூலத்தை எடுத்துக் கொண்டான்.(31ஆ,32) {அவ்விருவரும்} புகழ்பெற்ற கபிசார்தூலனுக்கு {குரங்குகளில் புலியான ஹனுமானுக்கு} ஒருபக்கமாக நின்றனர். பிரகஸன், கூர்முனையுடன் கூடிய பட்டிஸத்தாலும், ராக்ஷசன் பாஸகர்ணன் சூலத்தாலும் அந்த கபிசத்தமனைத் துளைத்தனர்.(33,34அ) அவர்களால் தன் அங்கங்களில் காயமடைந்தவனான அந்த வானரன் {ஹனுமான்}, ரத்தத்தால் நனைந்த உடல் மயிருடனும், பாலசூரியனுக்கு சமமான பிரபையுடனும் கூடியவனாகக் குரோதமடைந்தான்.(34ஆ,35அ) கபிகுஞ்சரனான {குரங்குகளில் யானையான} வீர ஹனுமான், மிருகங்கள், பாம்புகள், மரங்களுடன் கூடிய கிரி சிருங்கத்தை {மலைச்சிகரம் ஒன்றைப்} பிடுங்கி, அந்த ராக்ஷசர்கள் இருவரையும் கொன்றான்.(35ஆ,36அ)
அந்த சேனாபதிகள் ஐவரும் கொல்லப்பட்டதும், அந்த வானரன், எஞ்சியிருந்த பலத்தையும் {படையையும்} நாசமடையச் செய்தான்.(36ஆ,37அ) அசுரர்களை சஹஸ்ராக்ஷன் {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரன் கொன்றதைப்} போல, அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, அஷ்வங்களால் அஷ்வங்களையும், கஜங்களால் நாகங்களையும், யோதர்களால் யோதர்களையும், ரதங்களால் ரதங்களையும் {குதிரைகளால் குதிரைகளையும், யானைகளால் யானைகளையும், போர்வீரர்களால் போர்வீரர்களையும், தேர்களால் தேர்களையும்} நாசம் செய்தான்.(37ஆ,38அ) கொல்லப்பட்ட நாகங்களாலும், துரகங்களாலும் {யானைகளாலும், குதிரைகளாலும்}, கொல்லப்பட்ட ராக்ஷசர்களாலும், அச்சுகள் பங்கமடைந்த மஹாரதங்களாலும் பூமி எங்கிலும் இருந்த மார்க்கங்கள் {வழிகள்} அடைபட்டிருந்தன.(38ஆ,39அ) வீரக் கபியானவன் {குரங்கான ஹனுமான்}, போரில் வாகனங்களுடனும், பலத்துடனும் {படையுடனும்} கூடிய வீரர்களான அந்த துவஜனீபதிகளைக் கொன்றுவிட்டு, பிரஜைகளை அழிப்பதற்காக ஒருக்ஷணம் காத்திருக்கும் காலனை {யமனைப்} போலவே {மீண்டும்} தோரணத்தை {நுழைவாயிலை} அடைந்தான்.(39ஆ,இ,உ,ஊ)
சுந்தர காண்டம் சர்க்கம் – 46ல் உள்ள சுலோகங்கள்: 39
Previous | | Sanskrit | | English | | Next |