Good omens | Sundara-Kanda-Sarga-29 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: நற்சகுனங்களை உணர்ந்த சீதை உற்சாகமடைந்தது...
அத்தகைய சூழ்நிலையில் வருத்தத்துடன் இருந்தவளும், நிந்திக்கத்தகாதவளும், மகிழ்ச்சியற்றவளும், மனவேதனையில் இருந்தவளுமான சுபமானவளுக்கு {சீதைக்கு}, வளங்கொழிக்கும் நரனுக்கு உபஜீவனர்களை {செல்வந்தனுக்கு அருளப்படும் உதவியாளர்களைப்} போல, சுபமான நிமித்தங்கள் அருளப்பட்டன.(1)
நல்ல கேசமுள்ள அவளுடைய வளைந்த சுப இமைகளால் சூழப்பட்டதும், கரியதும், விசாலமானதும், ஓரத்தில் வெண்மையானதுமான வாமநயனம் {இடது கண்}, மீனால் அசைக்கப்படும் செந்தாமரையைப் போலத் துடித்தது.(2)
அழகாகத் திரண்டு, உருண்டு, பருத்ததும், சிறந்த காரகிலும், சந்தனமும் பூசத்தகுந்ததும், ஒப்பற்ற பிரியனால் {ராமனால்} நீண்டகாலம் தலையணையாகக் கொள்ளப்பட்டதுமான வாமபுஜம் {இடது கை} வேகமாகத் துடித்தது.(3)
சேர்ந்திருந்த தொடைகள் இரண்டில், நன்மை பிறப்பதைக் குறிப்பிடுவதும், பருத்ததும், கஜேந்திரனின் ஹஸ்தத்திற்கு {யானையின் துதிக்கைக்கு} ஒப்பானதுமான அவளது {இடது} தொடை, மீண்டும் மீண்டும் துடித்து ராமன் முன்னே இருப்பதை {வரப்போவதைச்} சொன்னது.(4)
மாசற்ற கண்களுடனும், அழகான அங்கங்களுடனும், மல்லிகை மொட்டுகளுக்கு ஒப்பான பற்களுடனும் நின்று கொண்டிருந்தவள் {சீதை} தரித்திருந்ததும், சற்றே புழுதி படிந்ததும், ஹேமத்திற்கு {பொன்னிற்கு} இணையான வர்ணத்துடன் கூடியதுமான சுப வஸ்திரம் சற்றே நழுவியது.(5)
நல்லது சித்திக்கும் என்பதை முன்பே விளக்கும் இந்த நிமித்தங்களாலும், இன்னும் சிலவற்றாலும் ஸுப்ரு {நல்ல புருவங்களைக் கொண்டவளான சீதை}, வாதத்தாலும் {காற்றாலும்}, வெயிலாலும் வாடியுலர்ந்த பீஜமானது {விதையானது}, மழையினால் எப்படியோ, அப்படிப்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.(6)
பிம்பப் பழத்தை {கோவைக்கனியைப்} போன்ற உதடுகளையும், அழகிய கண்களையும், வளைந்த இமைகளுடன் கூடிய புருவங்களையும், அழகிய வெண்பற்களையும் கொண்டவளின் {சீதையின்} முகம், ராகுவின் முகத்தில் {வாயில்} இருந்து விடுபட்ட சந்திரனைப் போல மீண்டும் ஒளிர்ந்தது.(7)
சோகத்திலிருந்து விடுபட்டு, மனக்கலக்கம் நீங்கி, ஜுவரம் சாந்தமடைந்து, மகிழ்ச்சியால் தூண்டப்பட்ட நனவைக் கொண்ட அந்த ஆரியையின் {சீதையின்} வதனம், சுக்லபக்ஷத்தில் {வளர்பிறையில்} தோன்றும் சீதாம்சுனனுடன் {சந்திரனுடன்} கூடிய ராத்திரியைப் போல சோபித்தது.(8)
சுந்தர காண்டம் சர்க்கம் – 29ல் உள்ள சுலோகங்கள்: 8
Previous | | Sanskrit | | English | | Next |