Thursday 4 January 2024

பானபூமி | சுந்தர காண்டம் சர்க்கம் - 11 (48)

Bar | Sundara-Kanda-Sarga-11 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தான் கண்டது சீதையல்ல என்று தன் தவறை உணர்ந்த ஹனுமான்; பானபூமியில் தேடியது; அந்தப்புரத்தில் கிடந்த பெண்களைக் கண்டது; சீதையைக் காண முடியாதது...

Ravana's Bar

அப்போது அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான், மந்தோதரியை சீதையென்று நினைத்த} அந்தப் புத்தியைவிட்டு, இயல்பான மனத்தை அடைந்து, {பின்வருமாறு} சீதையைக் குறித்த மற்றொரு சிந்தனையை அடைந்தான்:(1) “இராமனிடம் இருந்து பிரிந்தவளான அந்த பாமினி உறங்கமாட்டாள்; உண்ண மாட்டாள்; அலங்கரித்துக் கொள்ள மாட்டாள்; பானம் {மது} பருகவும் மாட்டாள்[1].{2} திரிதச ஈஷ்வரர்களில் {தேவர்களில்}, ராமனுக்கு சமமான எவனும் இல்லையென்பதால், ஸுரர்களின் ஈஷ்வரனாக {இந்திரனாகவே} இருப்பினும், {சீதை} அந்நிய நரனை அணுகமாட்டாள். இவள் வேறொருத்தியாகவே இருக்க வேண்டும்”{3} என்று அவன் {ஹனுமான்} நிச்சயித்துக் கொண்டு, பானபூமிக்கு {மது பருகும் இடத்திற்குச்} சென்றான்.(2-4அ) 

[1] இங்கே மந்தோதரி பானம் பருகியிருந்தாள் என்ற பொருள் தொனிக்கிறது.

அங்கே {அந்த பானபூமியில்} வேறு சிலர் கிரீடையினால் களைத்திருந்தனர், இன்னும் சிலர் கீதத்தினாலும், நர்த்தனத்தினாலும், பானம் பருகிய மயக்கத்தாலும் களைத்திருந்தனர்.(4ஆ,5அ) சில ஸ்திரீகள், முரசுகள், மிருதங்கங்கள், பீடங்கள் ஆகியவற்றின் மீது கிடந்தனர். வேறு சிலர், முக்கிய மெத்தைகளில் கிடந்தனர்.(5ஆ,6அ) ஆயிரக்கணக்கான அங்கனைகள் {பெண்கள்} ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.{6ஆ} ரூபசல்லாபசீலர்களும் {அழகை வர்ணிப்பதில் சிறந்தவர்களும்}, கீதங்களின் சரியான பொருள் குறித்து உரையாடுபவர்களும், தேச காலங்களுக்குப் பொருத்தமாக நடந்து கொள்பவர்களும், தகுந்த வார்த்தைகளைப் பேசுபவர்களுமான அவர்கள்,{7} கலவிக்குப் பிறகு உறங்கிக் கொண்டிருப்பதை அந்த ஹரியூதபன் கண்டான்.(6ஆ-8அ) 

மஹத்தான கொட்டகையில் கோக்களின் மத்தியில் இருக்கும் ரிஷபத்தைப் போல, அவர்களின் மத்தியில் மஹாபாஹுவான ராக்ஷசேஸ்வரன் {ராவணன்} ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(8ஆ,9அ) மஹாரண்யத்தில் கரேணுக்களால் {பெண் யானைகளால்} சூழப்பட்ட மஹத்தான துவீபத்தை {ஆண் யானையைப்} போல, அவர்களால் சூழப்பட்டிருந்த அந்த ராக்ஷசேந்திரன் தன்னொளியால் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(9ஆ,10அ) மஹாத்மாவான அந்த ராக்ஷசபதியின் கிருஹத்திலும், பானபூமியிலும் விருப்பத்திற்குரிய அனைத்தும் இருப்பதை அந்த ஹரிசார்தூலன் {குரங்குகளில் புலியான ஹனுமான்} கண்டான்.(10ஆ,11அ) 

அங்கே பானபூமியில், மிருகங்கள் {மான்கள்}, மஹிஷங்கள் {எருமைகள்}, வராஹங்கள் {பன்றிகள்} ஆகியவற்றின் மாமிசங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன.(11ஆ,12அ) பாதியளவே பக்ஷிக்கப்பட்ட மயூரங்களையும் {மயில்களையும்}, குகுடங்களையும் {கோழிகளையும்} ருக்மத்தாலான {பொன்னாலான} விசாலாமான பாத்திரங்களில் அந்த ஹரிசார்தூலன் {குரங்குகளில் புலியான ஹனுமான்} கண்டான்.(12ஆ,13அ) தயிர், சௌவர்சலமெனும் உப்பு ஆகியவற்றில் பதம் செய்து வைக்கப்பட்ட வராஹங்கள் {பன்றிகள்}, ஆர்தராணங்கள் {செம்மறிக்கடாக்கள்}, சல்லியங்கள் {முள்ளம்பன்றிகள்}, மிருகங்கள் {மான்கள்}, மயூரங்கள் {மயில்கள்} ஆகியவற்றையும் ஹனுமான் கண்டான்.(13ஆ,14அ) விதவிதமாக சித்தம் செய்யப்பட்ட {சமைக்கப்பட்ட} கிரகரப்பறவைகள், பாதி அளவே உண்ணப்பட்ட சகோரப் பறவைகள்,{14ஆ} மஹிஷங்கள் {எருமைகள்}, ஏகசல்யங்கள் {ஒருவகை மீன்கள்}, ஆடுகள் ஆகியவற்றின் இறைச்சிகள், பல்வேறு வகைகளிலான {நக்கி உண்ணும் வகையிலான} லேகியங்கள், {உறிஞ்சிப் பருகும் வகையிலான} பேயங்கள், விதவிதமான போஜனங்கள் {தின்பண்டங்கள்},(14ஆ,15) அதேபோல, புளிப்பேறிய, உப்பேறிய ராகஷாடபங்கள்[2], சுற்றிலும் வீசப்பட்ட ஹாரங்கள், நூபுரங்கள், கேயூரங்கள் உள்ளிட்ட மஹாதனங்கள், புஷ்பங்களால் தூவப்பெற்ற பான பாத்திரங்களில் உள்ள விதவிதமான பழங்கள் ஆகியவற்றுடன் அந்த பூமி அதிக செழிப்புடன் விளங்கிக் கொண்டிருந்தது[3].(16,17) ஆங்காங்கே நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த சயனங்கள் {படுக்கைகள்}, ஆசனங்களுடன் கூடிய அந்த பானபூமி நெருப்பில்லாமல் ஒளிர்வதாகக் காணப்பட்டது.(18) நன்கு பக்குவமாகச் சமைக்கப்பட்டவையும், ஏராளமாக இருந்தவையுமான விதவிதமான  மாமிசங்கள், தனித்தனியாக வகுக்கப்பட்டு பானபூமியை அடைந்திருந்தன.(19)

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “திராட்சை, மாதுளை, கருப்பு உளுந்து ஆகியவற்றின் சாறுகளில் இருந்து குறிப்பிட்டவகையில் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பண்டமே இந்த ராகஷாடபம்” என்றிருக்கிறது.

[3] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "அவ்வண்ணமே புளிப்பேறி, உப்பேறிகளாலும் பலவித பணியார விசேஷங்களாலும், கழற்றி வைக்கப்பட்டிருந்த வெகு விலையுயர்ந்த மாலைகள், சிலம்புகள், தோள்வளைகளாலும், பானபாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்த பலவகை பழங்களாலும், மலர்பலி இடப்பட்ட பூமி அதிக அழகாய் விளங்கிற்று” என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், “உப்பும், புளிப்பும் மிகுந்திருக்கவும், வெள்ளைக்கடுகு மணஞ் சேர்க்கவும் பெற்று ஷட்ரஸங்களுங் கலந்து செய்யப்பட்ட பலவகைப் பக்ஷ்ய விசேஷங்களையும், கழற்றி வைக்கப்பட்ட மிகுந்த விலையுள்ள ஹாரங்களையும், தண்டைகளையும், தோள்வளைகளையும் மத்யபானஞ்செய்யும் பாத்ரங்களினின்று அப்புறம் எடுத்து வைக்கப்பட்ட பலவகைப் பழங்களையும் உடையதாகிப் புஷ்பங்கள் இறைக்கப்பெற்ற அந்த பான பூமியானது மிகுதியும் சோபையுடன் ப்ரகாசித்துக் கொண்டிருந்தது” என்றிருக்கிறது.

திவ்யமானவையும், இனியவையும், விதவிதமானவையுமான ஸுரா[4], சர்கரா {சர்க்கரையில் செய்யப்பட்ட மது}, மாத்வீகம் {தேனில் செய்யப்பட்ட மது}, புஷ்பம் {மலர்கள்}, பழங்கள் ஆகியவற்றாலும், செயற்கையாகவும் செய்யப்பட்ட ஸுரா ஆகியவை விதவிதமான அதனதன் வாசனைகளுடன் தனித்தனியாகப் பக்குவப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன.(20,21அ) பல்வேறு வடிவங்களிலான மாலைகள், ஸ்படிகங்களாலானவையும், ஹிரண்யமயமானவையுமான  விதவிதமான பாஜனங்கள் {பாத்திரங்கள்} ஆகியவற்றால் நிறைந்தும், ஜாம்புநதமயமான வேறு சிறு பாத்திரங்களால் நிறைந்தும் அந்த பூமி ஒளிர்ந்து கொண்டிருந்தது.(21ஆ,22) வெள்ளியாலானவையும், ஜாம்பூநதமயமானவையுமான கும்பங்களில் மிகச்சிறந்த தரத்திலான பானங்களை அந்தக் கபி {குரங்கான ஹனுமான்} அங்கே கண்டான்.(23) வெள்ளியாலானவையும், மணிமயமானவையும், பொன்வண்ணத்தில் இருந்தவையும், ஷீதத்தால் {மதுவால்} நிறைந்தவையுமான பாத்திரங்களை அந்த மஹாகபி பார்த்தான்.(24)

[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “ஸுரா என்பது மதுவுக்குண்டான பொதுவான சொல்லாகும்” என்றிருக்கிறது.

சில இடங்களில் பாதி எஞ்சியிருப்பவையும், சில இடங்களில் முழுதும் பருகப்பட்டவையும், சில இடங்களில் கொஞ்சங்கூடப் பருகப்படாதவையுமான பானங்களை அவன் கண்டான்.(25) சில இடங்களில் விதவிதமான தின்பண்டங்களையும், சில இடங்களில் விதவிதமான பானங்களையும், சில இடங்களில் உண்டு எஞ்சிய அன்னங்களையும் கண்டவாறே திரிந்தான்.{26} சில இடங்களில் நொறுங்கிய கூஜாக்களிலும், உருண்டு கிடந்த குடங்களிலும் இருந்து ஜலம் சிந்தியிருந்தது. சில இடங்களில் பழங்களும், அழகாகக் கோர்க்கப்பட்ட மாலைகளும் இருந்தன.(26,27)

அங்கு நாரீகளின் தூய்மையான சயனங்கள் {படுக்கைகள்} விதவிதமான வகைகளில் இருந்தன; மேலும் வராங்கனைகள் {அழகான பெண்கள்} சிலர் பரஸ்பரம் தழுவியபடியே தூங்கிக் கொண்டிருந்தனர்.(28) நித்திரையின் பலத்தால் வெல்லப்பட்ட சில அபலைகள், உறங்கிக் கொண்டிருக்கும் மற்றொருத்தியின் வஸ்திரத்தைக் கொண்டு இழுத்துப் போர்த்திக் கொண்டனர்.(29) அவர்களின் கண்டங்களில் {தொண்டைகளில் / கழுத்துகளில்} இருந்த வஸ்திரங்களும், மாலைகளும், இளங்காற்றை அடைந்தது {காற்றினால் அசைவது} போல, மூச்சுக்காற்றினால் சித்திரமாக மெல்ல அசைந்தன.(30) 

குளிர்ந்த சந்தனம், மதுரமான ஷீதங்கள் {இன்சுவையுள்ள மதுபானங்கள்}, விதவிதமான மாலைகள், விதவிதமான தூபங்கள் ஆகியவற்றின் விதவிதமான கந்தங்களை {வாசனைகளைச்} சுமந்து கொண்டு மாருதம் {காற்று} அங்கே வீசிற்று.(31,32அ) அப்போது சந்தன ஸ்நானத்தினாலும், தூபங்களினாலும் உண்டான சுரபி கந்தம் {மணத்தின் மலர்ச்சி} புஷ்பக விமானத்தைச் சுற்றிலும் வீசிக் கொண்டிருந்தது.(32ஆ,இ)

அந்த ராக்ஷச சாலையில் {ராவணனின் மாளிகையில்} அழகிய வெண் வர்ணமுடைய சிலரும், கறுப்பு வர்ணமுடைய சில வராங்கனைகளும் {சிறந்த பெண்களும்}, பொன்னிறமமைந்த சில பிரமதைகளும் {பெண்களும்} இருந்தனர்.(33,34அ) மதனனால் {காம தேவனால்} உண்டான நித்திரையின் வசப்பட்டுக் களைத்து உறங்கிக் கொண்டிருக்கும் அவர்களின் ரூபம், உறங்கிக் கொண்டிருக்கும் பத்மினிகளை {தாமரைகளைப்} போல இருந்தன.(34ஆ,35அ) மஹாதேஜஸ்வியான அந்தக் கபி {குரங்கான ஹனுமான்} இவ்வாறு ராவணனின் அந்தப்புரம் முழுமையும் ஓரிடமும் விடமால் தேடினாலும் ஜானகியைக் கண்டானில்லை.(35ஆ,36அ)

அப்போது அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, அந்த ஸ்திரீகளைப் பார்த்ததில் தர்மம் குறித்த பயத்தால் உண்டான சந்தேகத்தில் மஹத்தான கவலையை அடைந்து {பின்வருமாறு} சிந்தித்தான்.(36ஆ,37அ) “வீட்டில் உறங்கும் பரதாரங்களை {மாற்றான் மனைவியரை} இப்படி நான் பார்ப்பது, நிச்சயம் தர்மத்தின் அழிவுக்கே வழிவகுக்கும்.(37ஆ,38அ) உண்மையில் இங்கே பரதாரங்களின் விஷயங்களில் என் பார்வை செல்லவில்லை. பரதாரங்கள் மட்டுமே என்னால் பார்க்கப்பட்டனர்” {என்று நினைத்தான்}.(38ஆ,39அ) 

சிறந்த மனத்துடனும், நிச்சயமடைந்த குவிந்த சித்தத்துடனும் கூடியவனான அவனுக்குள், காரியங்களின் நிச்சயத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் மீண்டும் {பின்வரும்} மற்றொரு சிந்தனை பிறந்தது:(39ஆ,40அ)  “விசுவாசத்துடன் கூடிய சர்வ ராவண ஸ்திரீகளும், காமமற்ற எதிர்பார்ப்பில் என்னால் பார்க்கப்பட்டனர். ஆனால், என் மனத்தில் கொஞ்சமேனும் மாற்றமுண்டாகவில்லை.(40ஆ,41அ) சுப, அசுப அவஸ்தைகளில் சர்வ இந்திரியங்களிலும் மனமே ஹேதுவானது. அது {என் மனம்} சிதறாமல் என்னிடம் திடமாக இருக்கிறது.(41ஆ,42அ) வேறிடத்தில் வைதேஹியைத் தேடுவது எனக்கு சாத்தியமில்லை. ஸ்தீரிகளை எப்போது தேடினாலும், அவர்கள் {வேறு} ஸ்திரீகளின் மத்தியிலேயே காணப்படுவார்கள். (42ஆ,43அ) எந்த சத்வத்திற்கு {உயிரினத்திற்கு} எது யோனியோ {பிறப்பிடமோ}, அங்கேயே அதைத் தேட வேண்டும். தொலைந்து போன பிரமதையை {மானிடப் பெண்ணை}, மிருகீகளின் {பெண்மான்களின்} மத்தியில் கண்டடைவது சாத்தியமில்லை.(43ஆ,44அ) எனவே, சுத்த மனத்துடன் கூடிய என்னால், இந்த ராவண அந்தப்புரம் முழுமையாகத் தேடப்பட்டது. எனினும் ஜானகியைக் காண முடியவில்லை” {என்று நினைத்தான்}.(44ஆ,45அ)

வீரியவானான ஹனுமான், தேவ, கந்தர்வ கன்னிகைகளையும், நாக கன்னிகைகளையும் கண்டானேயன்றி ஜானகியைக் கண்டானில்லை.(45ஆ,46அ) அந்த வீரக் கபி {குரங்கான ஹனுமான்}, அங்கே வேறு சிறந்த ஸ்திரீகளைப் பார்த்தும், அவளை {சீதையைக்} காணாத பிறகு, {அங்கிருந்து} வெளியில் தாவி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினான்.(46ஆ,47அ) ஸ்ரீமானான அந்த மாருதி, மீண்டும் பரம யத்னங்களை {பெரும் முயற்சிகளைச்} செய்துவிட்டு, அந்த பானபூமியை விட்டு நீங்கி அங்கே அவளைத் தேடத் தொடங்கினான்.(47ஆ,48)

சுந்தர காண்டம் சர்க்கம் – 11ல் உள்ள சுலோகங்கள்: 48


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை