Indefatigability | Sundara-Kanda-Sarga-12 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையைக் குறித்த எண்ணங்களால் மனந்தளர்ந்து, ராவணனின் அரண்மனை முழுவதையும் தேடிய ஹனுமான்...
அந்த மாருதி {ஹனுமான்}, லதைகளால் {கொடிகளால்} அமைக்கப்பட்ட கிருஹங்கள், சித்திர கிருஹங்கள், நிசாகிருஹங்கள் {இரவில் தூங்குவதற்குரிய வீடுகள் / படுக்கையறைகள்} ஆகியவற்றுடன் கூடிய அந்த பவனத்தின் மத்தியில் சீதையைப் பார்க்க விரும்பினாலும், எழில்மிகு தோற்றம் கொண்டவளை {சீதையைக்} கண்டானில்லை.(1)
அந்த மஹாகபி, ரகுநந்தனனுக்குப் பிரியமானவளைக் காணாதபோது {பின்வருமாறு} சிந்தித்தான், “தேடிக் கொண்டிருக்கும் எனக்கு எவ்வாறு மைதிலியின் தரிசனம் கிட்டாமல் போகிறது? சீதை நிச்சயம் மரித்திருப்பாள்.(2) சீலத்தை {ஒழுக்கத்தை} ரக்ஷிக்கும் பொருட்டு உயர்ந்த ஆரிய பாதையில் சதீயாக {கற்புடையவளாக} நிலைத்திருக்கும் அந்த ஜானகி, அடுத்தடுத்து துஷ்ட கர்மங்களையே செய்யும் இந்த ராக்ஷசர்களில் முதன்மையானவனால் {ராவணனால்} நிச்சயம் கொல்லப்பட்டிருப்பாள்[1].(3) அந்த ஜனகேஷ்வரனின் மகள் {சீதை}, ரூபம் சிதைந்தவர்களும், விகாரர்களும், ஒளியற்றவர்களும், கோணலாக நீண்டிருக்கும் கண்களுடன் பருத்த முகங்களைக் கொண்டவர்களுமான ராக்ஷச ராஜயோசிதைகளை {அரசமகளிரைக்} கண்டு பயத்தாலேயே அழிந்திருப்பாள்.(4)
[1] கொன்றானோ கற்பழியாக் குலமகளைக் கொடுந்தொழிலால்தின்றானோ எப்புறத்தே செறித்தானோ சிறை சிறியேன்ஒன்றானும் உணர்கிலேன் மீண்டு இனிபோய் என்னுரைக்கேன்பொன்றாதபொழுது எனக்கு இக்கொடுந்துயரம் போகாதால்- கம்பராமாயாணம் 5060ம் பாடல், ஊர் தேடு படலம்பொருள்: கற்பு அழியாத குலமகளைக் கொன்றானோ, (புலால் உண்ணும்) கொடுஞ்செயலால் தின்றானோ, எவ்வுலகில் சிறை வைத்தானோ சிறியவனான நான் ஒன்றேனும் அறியாதவனாக இருக்கிறேன். இனி திரும்பிச் சென்று என்ன உரைப்பேன். இந்தக் கொடுந்துயரம் இறந்தாலன்றி எனக்குப் போகாது.
சீதையைக் காணாமல், {பகைவன் மேல் பராக்கிரமத்தைக் காட்டும்} பௌருஷத்தை அடையாமல், வானரர்களுடன் நீண்ட காலம் திரிந்து வரும் நான், கொடுந்தண்டனை அளிக்கும் பலம் நிறைந்த வானரரான சுக்ரீவரின் சமீபத்தை அடையும் கதியற்றவனாக இருக்கிறேன்.(5) சர்வ அந்தப்புரமும் காணப்பட்டது; ராஜயோசிதைகள் {அரசமகளிர்} காணப்பட்டனர்; சாத்வியான {கற்புடைய} சீதை காணப்படவில்லை. எனக்கு உண்டான சிரமம் வீணே.(6) திரும்பிச்செல்லும் என்னைச் சந்திக்கப் போகும் சர்வ வானரர்களும் என்ன சொல்வார்கள்? “வீரா, நீ அங்கே சென்று என்ன செய்தாய்? அதை எங்களுக்குச் சொல்வாயாக” {என்று கேட்பார்கள்}.(7) அந்த ஜனகாத்மஜையை {ஜனகனின் மகளான சீதையைக்} காணாமல் என்ன சொல்வேன்? காலம் கடந்துவிட்டதால் நிச்சயம் அவர்கள் பிராயத்தை அணுகுவார்கள் {பட்டினி கிடந்து மரணத்தை அடைய முயல்வார்கள்}.(8) சமுத்திரத்தின் அக்கரையை அடைந்ததும், சந்திக்கப் போகும் வானரர்களும், அந்த அங்கதனும், முதிர்ந்தவரான ஜாம்பவானும் என்ன சொல்வார்கள்?(9)
மனந்தளராமையே[2] செழிப்பின் {வளர்ச்சியின்} மூலமாகும். மனந்தளராமையே பரமசுகமாகும். மனந்தளராமையே சதா சர்வ அர்த்தங்களுக்கும் {எப்போதும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிக்கு} வழிவகுக்கும்.(10) மானிடன் செய்யும் எந்தக் கர்மத்தின் பலனையும் அதுவே {மனந்தளராமையே} விளைவிக்கும் என்பதால், மனத்தளர்வின்றி உத்தம பிரயத்னத்தைச் செய்து, ராவணனால் பாலிதம் செய்யப்படும் தேசங்களில் {இடங்களில் இதுவரை} காணப்படாதவற்றில் நான் தேடப்போகிறேன்.(11,12அ) பானசாலைகள் தேடப்பட்டன; அதேபோல புஷ்பகிருஹங்கள் {மலர்மாளிகைகள்}, சித்திரசாலைகள் {ஓவியச்சாலைகள்}, கிரீடா கிருஹங்கள் {இன்பவீடுகள்}, தோட்டங்களின் மத்தியிலுள்ள பாதைகள், விமானங்கள் என எல்லாம் தேடப்பட்டன” {என்று நினைத்தான் ஹனுமான்}.(12ஆ,13)
[2] பிபேக்திப்ராய் பதிப்பில் “அக்கறையின்மை” என்று மொழிபெயர்க்கட்டிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், “இன்பதுன்பத்தில் அக்கறையின்றி இருந்தால், சோர்வின் வசப்படாமல் இருக்க முடியும்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் விடாமுயற்சியே நற்பேற்றின் மூலமாகும்” என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பிலும் விடாமுயற்சி என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கோரக்பூர் ஆங்கிலப் பதிப்பில், “சோர்வின்மை” என்றும், தமிழ்ப்பதிப்பில், “மனந்தளராமை” என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு சிந்தித்து, பூமிகிருஹங்களிலும் {நிலவறைகளிலும்}, சைத்திய கிருஹங்களிலும் {நினைவில்லங்களிலும்}, கிருஹாதிகிருஹங்களிலும் {அரண்மனையைச் சார்ந்த புறவீடுகளிலும்} மீண்டும் தேடத் தொடங்கினான்.(14) அடிக்கடி பாய்ந்தும், குதித்தும், நின்றும், நடந்தும், துவாரங்களை {கதவுகளைத்} திறந்தும், கவாடங்களை {வாயிற்படிகளின் மறைவுகளைத்} தள்ளியும்,{15} பிரவேசித்தும் {உள்ளே நுழைந்தும்}, வெளியேறியும், மேலேறியும், கீழிறங்கியும் என அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்} தன் அவகாசத்திற்கேற்ப {வாய்ப்பிற்கேற்ப} எங்கும் திரிந்து கொண்டிருந்தான்.(15,16) அந்த ராவண அந்தப்புரத்தில், அந்தக் கபியானவன் {குரங்கான ஹனுமான்} ஒருபோதும் செல்லாத பகுதி என்று நான்கு அங்குலமளவு {இடம்} கூட இல்லை.(17) பிராகாரங்களின் {மதில்களின்} இடைவீதிகள், நினைவுச்சின்னங்களுடன் கூடிய வேதிகைகள் {மேடைகள்}, கிணறுகள், புஷ்கரிணிகள் {செயற்கைத் தடாகங்கள்} என அனைத்தையும் அவன் கண்டான்.(18)
விரூபிகள், கொடூரத் தோற்றம் கொண்டவர்கள் என விதவிதமான வடிவங்களிலான ராக்ஷசிகளை அங்கே ஹனுமதன் கண்டாலும், அந்த ஜனகாத்மஜையை {சீதையைக்} கண்டானில்லை.(19) உலகத்தில் ஒப்பற்ற ரூபங்கொண்ட சிறந்த வித்யாதர ஸ்திரீகளை அங்கே ஹனுமதன் கண்டாலும், ராகவநந்தினியை {ராமனுக்கு ஆனந்தமளிப்பவளான சீதையைக்} கண்டானில்லை.(20) சிறந்த இடைகளையும், பூர்ணச்சந்திரனுக்கு ஒப்பான முகங்களையும் கொண்ட நாகக்கன்னிகைகளை அங்கே ஹனுமதன் கண்டாலும், மெல்லிடையாளான சீதையைக் கண்டானில்லை.(21) வெற்றிகொள்ளப்பட்டு, ராக்ஷசேந்திரனால் {ராவணனால்} அபகரிக்கப்பட்ட நாகக்கன்னிகைகளை அங்கே ஹனுமதன் கண்டாலும், அந்த ஜனகநந்தினியை {ஜனகனுக்கு ஆனந்தத்தை அளிப்பவளான சீதையைக்} கண்டானில்லை .(22)
மஹாபாஹுவும், மதிமிக்கவனும், மாருதாத்மஜனுமான {வாயு மைந்தனுமான} அந்த ஹனுமான், வேறு சிறந்த ஸ்திரீகளைக் கண்டாலும், அவளை {சீதையைக்} காணாததால் மீண்டும் மீண்டும் கவலையடைந்தான்.(23) அனிலசுதன் {வாயு மைந்தனான ஹனுமான்}, வானரேந்திரர்களின் உத்யோகமும் {வானரர்களின் தலைவர்களுடைய தொழிலும் / முயற்சிகளும்}, சாகரத்தைத் தாண்டியதும் அர்த்தமற்றுப் போனதைக் கண்டு மீண்டும் மீண்டும் சிந்தித்தான்.(24) பிறகு, மாருதாத்மஜனான {வாயு மைந்தனான} ஹனுமான், விமானத்தில் இருந்து இறங்கி, சோகத்தில் ஆழ்ந்த நனவுடன் கூடிய சிந்தனையை அடைந்தான்.(25)
சுந்தர காண்டம் சர்க்கம் – 12ல் உள்ள சுலோகங்கள்: 25
Previous | | Sanskrit | | English | | Next |