Rama swooned away | Aranya-Kanda-Sarga-61 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையைக் கண்டுபிடிக்கமுடியாமல் பதற்றமடைந்த ராமன்; ஆறுதல் கூறிய லக்ஷ்மணன். மயங்கி விழுந்த ராமன்...
தசரதாத்மஜனான {தசரதனின் மகனான} ராமன், சூனியமான ஆசிரமபதத்தையும், யாருமில்லாத பர்ணசாலையையும், முற்றிலும் சிதறிக்கிடந்த ஆசனங்களையும் கண்டான். எங்கும் தன் பார்வையைக் கவனமாகச் செலுத்தியும், அங்கே வைதேஹியைக் காணாத ராமன், உரக்கக் கதறி, {லக்ஷ்மணனின்} புஜங்களைப் பற்றிக் கொண்டு {பின்வருமாறு} சொன்னான்:(1,2) "இலக்ஷ்மணா, வைதேஹி எங்கே? இங்கிருந்து எந்த தேசத்திற்குதான் {இடத்திற்குத்தான்} சென்றிருப்பாள்? சௌமித்ரியே, எவன் அவளை அபகரித்திருப்பான்? என் பிரியை {அன்புக்குரிய காதலி} யாரால் பக்ஷிக்கப்பட்டாள்?{உண்ணப்பட்டாள்}.(3) சீதே, என்னைப் பரிகாசம் செய்ய விரும்பி விருக்ஷங்களில் மறைந்திருந்தால், உன் வேடிக்கை போதும். இப்போது பெருந்துக்கத்தில் இருக்கும் என்னை அணுகுவாயாக.(4) சௌம்யமான சீதே, விசுவாசத்துடன் {நம்பிக்கையுடன்} எந்த மிருகங்களுடனும் {மான்களுடனும்}, போதகங்களுடனும் {மான் குட்டிகளுடனும்} நீ விளையாடிக் கொண்டிருந்தாயோ, அவை நீ இல்லாமல் கண்ணீர் சிந்தும் விழிகளுடன் உருகுகின்றன.(5)
இலக்ஷ்மணா, சீதை இல்லாமல் உண்மையில் என்னால் ஜீவிக்க இயலாது. சீதை அபகரிக்கப்பட்டதால் உண்டான மஹா சோகத்தில் மூழ்கியிருக்கிறேன். மஹாராஜாவான என் பிதா {தசரதர்}, நிச்சயம் பரலோகத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்.(6,7அ) "என்னால் {காட்டுக்கு} அனுப்பப்பட்ட நீ, பிரதிஜ்ஞை ஏற்றும், அந்தக் காலத்தைப் பூர்த்தி செய்யாமல், இங்கே என் முன் எவ்வாறு வந்தாய்? விரும்பியபடி செயல்படுபவனும், பொய் பேசுபவனுமான அநாரியனான உனக்கு ஐயோ" என்று பரலோகத்தில் என்னிடம் பிதா {தசரதர்} வெளிப்படையாகச் சொல்வார்.(7ஆ-9அ) அழகிய இடையைக் கொண்டவளே, சோகத்தால் பீடிக்கப்பட்டு, வசமில்லாமல் தீனமடைந்து, மனோரதம் நொறுங்கிய என்னை, உண்மையற்ற நரனைக் {கைவிடும்} கீர்த்தியை {புகழைப்} போல, இங்கே பரிதாப நிலையில் விட்டு எங்கே சென்றுவிட்டாய்? நல்லிடை கொண்டவளே, என்னைவிட்டுச் செல்லாதே. உன்னைவிட்டுப் பிரிந்தால், நான் என் ஜீவிதத்தைக் கைவிடுவேன்" {என்றான் ராமன்}.(9ஆ-11அ)
சீதையைக் காணும் ஆவலில் பெருந்துக்கத்தை அடைந்த ராகவ ராமன், இவ்வாறே ஜனகாத்மஜையைக் காணாமல் அழுது புலம்பினான்.(11ஆ,12அ) சீதையை அடைய முடியாமல் அவன் சோகத்தில் மூழ்கினான். இலக்ஷ்மணன், ஆழமான சேற்றை அடைந்து மூழ்கும் குஞ்சரத்தை {யானையைப்} போன்ற அந்த ராமனின் நலனை விரும்பி அவனிடம் {பின்வருமாறு} பேசினான்:(12ஆ,13) "மஹாபுத்திமானே, மனச் சோர்வடையாதீர். என்னுடன் சேர்ந்து முயற்சி செய்வீராக. வீரரே, இந்தச் சிறந்த கிரி {மலை} பல குகைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.(14) கானகங்களில் சஞ்சரிப்பதில் பிரியங்கொண்ட அந்த மைதிலி, நீருக்கான உன்மத்தம் கொண்டு வனத்திலோ, புஷ்பித்திருக்கும் நளினியிலோ {தாமரைத் தடாகத்திலோ} பிரவேசித்திருக்கலாம். அல்லது மீனங்களும் {மீன்களும்}, வஞ்சுலங்களும் {நீர்நொச்சிகளும்} சேவிக்கும் சரிதத்தை {நதியை} அடைந்திருக்கலாம்.(15,16அ) புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, அல்லது உம்மையும், என்னையும் அச்சுறுத்த விரும்பியோ, நம்மை அறிந்து கொள்ளவோ {நாம் என்ன செய்வோம் என்பதை அறிய விரும்பியோ} கானகத்தில் எங்காவது அவள் மறைந்திருக்கலாம். ஸ்ரீமானே, அவளைத் தேடுவதில் சீக்கிரம் முயற்சி செய்வோம்.(16ஆ,17) காகுத்ஸ்தரே, அந்த ஜனகாத்மஜை எங்கே இருக்கிறாள் என்பதை அறிய வனம் முழுவதும் தேடுவோம். சோகத்தில் மனத்தைச் செலுத்த வேண்டாம்" {என்றான் லக்ஷ்மணன்}.(18)
நல்ல இதயத்துடன் லக்ஷ்மணன் இவ்வாறு சொன்னதும், ராமன் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டு, சௌமித்ரியுடன் சேர்ந்து தேடப் புறப்பட்டான்.(19) அந்த தசரதாத்மஜர்கள் இருவரும், வனங்களிலும், கிரிகளிலும் {மலைகளிலும்}, சரிதங்களிலும் {ஆறுகளிலும்}, சரஸ்களிலும் {தடாகங்களிலும்} முற்றுமுழுதாகத் தேடினர்.(20) சைலத்தில் {மலையில்}, சாரல்கள் {தாழ்வரைகள்}, பாறைகள் {குகைள்}, சிகரங்கள் என முற்று முழுதாகத் தேடியும், அவர்களால் அவளை நோக்கி செல்லமுடியவில்லை {அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை}.(21) அந்த சைலமெங்கும் தேடிய ராமன், லக்ஷ்மணனிடம் சொன்னான், "சௌமித்ரியே, இந்தப் பர்வதத்தில் மங்கலமான வைதேஹியைக் காணவில்லையே" {என்றான்}.(22)
பிறகு துக்கத்தில் மூழ்கிய லக்ஷ்மணன், தண்டகாரண்யத்தில் அலைந்து திரிகையில், பெருந் தேஜஸ் கொண்ட தன்னுடன் பிறந்தானிடம் {ராமனிடம், இந்த} வாக்கியத்தைச் சொன்னான்:(23) "மஹாபிராஜ்ஞரே {அனைத்தையும் அறிந்தவரே}, மஹாபாஹுவான விஷ்ணு, பலியைக் கட்டிப்போட்டு, இந்த மஹீயை {பூமியை அடைந்ததைப்} போல, நீரும் ஜனகாத்மஜையான மைதிலியை அடைவீர்" {என்றான் லக்ஷ்மணன்}.(24)
வீரனான லக்ஷ்மணன் இவ்வாறு சொன்னாலும் அந்த ராகவன், துக்கத்தால் பீடிக்கப்பட்ட மனத்துடன், பரிதாபமான குரலில் {பின்வருமாறு} சொன்னான்:(25) "மஹாபிராஜ்ஞனே {அனைத்தையும் அறிந்தவனே}, வனம் முழுவதும் தேடிவிட்டோம். மலர்ந்த பங்கஜங்களுடன் கூடிய பத்மினிகளிலும் {தாமரை ஓடைகளிலும்}, பல குகைகளிலும், அருவிகளிலும், இந்த கிரியிலும் {தேடிவிட்டாலும்} என் பிராணனை விட உயர்ந்தவளான வைதேகியைக் காண முடியவில்லையே" {என்றான் ராமன்}.(26)
சீதை கடத்தப்பட்டதில் சோர்வடைந்த அந்த ராமன், இவ்வாறு தீனமாகப் புலம்பி, சோகத்தால் பீடிக்கப்பட்டு ஒரு முஹூர்த்தம் திகைத்திருந்தான்.(27) சர்வ அங்கங்களும் நடுங்கி, புத்தி அகன்று, உணர்விழந்து, கவலையுடன் பரிதாபமான நீண்ட வெப்பப் பெருமூச்சுகளை விட்டபடியே அவன் மயங்கிச் சாய்ந்தான்[1].(28) இராஜீவலோசனனான அந்த ராமன், அடிக்கடி பெருமூச்சுவிட்டபடியே, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், "ஹா, பிரியே {ஐயோ, அன்பே}" என்று சொல்லி மீண்டும் மீண்டும் அழுதான்.(29) அப்போது பிரிய பந்துவும் {அன்புக்குரிய உறவினனும்}, சோகத்தால் பீடிக்கப்பட்டவனும், பணிவுள்ளவனுமான லக்ஷ்மணன், தன் கைகளைக் குவித்துக் கொண்டு, பணிவுடன் பல்வேறு வழிகளில் அவனுக்கு ஆறுதல் கூறினான்.(30) அவனோ {ராமனோ}, லக்ஷ்மணனின் உதடுகளில் இருந்து வெளிப்பட்ட அந்த வாக்கியங்களை ஆதரிக்காமல், தன் பிரியையான சீதையைக் காணாது மீண்டும் மீண்டும் கதறினான்.(31)
[1] மண் சுழன்றது மால்வரை சுழன்றது மதியோர்எண் சுழன்றது சுழன்ற அவ்வறி கடல் ஏழும்விண் சுழன்றது வேதமும் சுழன்றது விரிஞ்சன்கண் சுழன்றது சுழன்றது கதிரொடு மதியும்- கம்பராமாயணம் 3475ம் பாடல், ஜடாயு உயிர் நீத்த படலம்பொருள்: மண் சுழன்றது; பெரிய மலைகள் சுழன்றன; ஞானிகளின் எண்ணமும் திரிந்து சுழன்றது; அலைகளை எறியும் கடல்கள் ஏழும் சுழன்றன; விண் சுழன்றது; வேதமும் சுழன்றது, பிரம்மனின் கண்களுன் சுழன்றன; சூரியனோடு சந்திரனும் சுழன்றனர்.
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 61ல் உள்ள சுலோகங்கள்: 31
Previous | | Sanskrit | | English | | Next |