The second escape of Mareecha | Aranya-Kanda-Sarga-39 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இரண்டாம் முறை தண்டக வனத்தில் தப்பியதை விவரித்த மாரீசன்; இராமனுடன் மோதும் கருத்துக்கு எதிராக ஆலோசனை கூறியது...
{மாரீசன் ராவணனிடம்}, "அப்போது அந்தப் போரில் எப்படியோ நான் அவனால் {ராமனால்} விடுவிக்கப்பட்டேன். அதன்பிறகு சமீபத்தில் என்ன நடந்தது என்பதை பதிலுக்கு ஏதும் சொல்லாமல் கேட்பாயாக.(1) இவ்வாறு நடந்த பிறகும், வெட்கமில்லாமல் மிருக ரூபம் {மானின் வடிவம்} ஏற்று இரு ராக்ஷசர்களுடன் சேர்ந்து தண்டகவனத்திற்குள் நான் பிரவேசித்தேன்.(2)
எரிக்கும் நாவுடனும், பெரும்பற்களுடனும், கூரிய சிருங்கங்களுடனும் {கொம்புகளுடனும்}, மஹா பலத்துடனும், மாமிசம் பக்ஷிக்கும் மஹா மிருகமாகி {பெரும் மானாகி} தண்டகாரண்யத்திற்குள் திரிந்து கொண்டிருந்தேன்.(3) இராவணா, அக்னி ஹோத்ரங்களிலும், தீர்த்தங்களிலும், சரணாலயங்களிலும், விருக்ஷங்களின் அடியிலும் தபஸ்விகளை மிக மோசமாக, மிக கோரமாகத் தாக்கிக் கொண்டும்,(4) தண்டகாரண்யத்தில் தர்மசாரிகளான {தர்மவழியில் நடக்கும்} தபஸ்விகளைக் கொன்றும், அவர்களின் உதிரத்தைப் பருகியும், அவர்களின் மாமிசங்களை பக்ஷித்துக் கொண்டும்[1],(5) ரிஷி மாமிசம் உண்டு வந்த குரூரனான நான், வனகோசரர்களை {காட்டுவாசிகளை} அச்சுறுத்தியபடியே இவ்வாறான உதிரமத்தத்துடன் {ரத்தவெறியுடன்} தண்டக வனத்தில் திரிந்து கொண்டிருந்தேன்.(6)
[1] மான் எவ்வாறு மாமிசத்தை உண்ணும்? ராக்ஷச மான் என்பதால் உண்கிறது என்பது சமாதானமாக இருக்கலாம். மூலத்தில் மிருகம் என்று இருப்பதே, அனைத்து மொழிபெயர்ப்புகளிலும் மான் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. சம்ஸ்கிருதத்தில் மானைக் குறிப்பிடுவதற்கு "மிருகம்" என்ற சொல்லே பெரும்பாலும் கையாளப்படுகிறது. அவ்வாறு அமைந்ததுதான் மஹாபாரதம், வன பர்வம், 256ம் அத்தியாயத்தில் வரும் "மிருகஸ்வப்னம் {கனவில் கண்ட மான்}" என்ற உபபர்வமாகும். ஒருவேளை மாரீசன் மானின் வடிவில் இருந்து கொண்டு, முனிவர்களைக் கண்டதும் ராக்ஷசனாக சுய வடிவை அடைந்து அவர்களைக் கொன்று மாமிசம் உண்டு, பின்பு மீண்டும் மானாவதே கூட மேற்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கலாம். இதுவும் ஒரு சமாதானம் தான். இந்த சர்க்கத்தின் மேலுள்ள ஓவியம் டிசம்பர் 1962ல் சந்தமாமா இதழில் 54ம் பக்கத்தில் வெளிவந்ததாகும். அதிலும் மான்களே இருப்பதைக் காணலாம்.
தர்ம தூஷகனான {தர்மத்தை நிந்திப்பவனான} நான், அவ்வாறு தண்டகாரண்யத்தில் திரிந்து வந்த போது, தர்மத்தைப் பின்பற்றி தபம் செய்து கொண்டிருந்த ராமனையும், மஹாபாக்கியவதியான வைதேஹியையும், மஹாரதனான லக்ஷ்மணனையும் அடைந்தேன்.(7,8அ) தபஸ்விகளுக்குரிய ஆஹாரக் கட்டுப்பாட்டுடன் கூடியவனும், சர்வ பூத ஹித ரதத்துடன் {அனைத்து உயிரினங்களுக்கான நன்மையில் விருப்பத்துடன்} வனத்திற்கு வந்தவனும்,{8ஆ} மஹாபலம் பொருந்தியவனுமான ராமனை, "இவன் தபஸ்வி" என்று கருதியதால், பழைய தாக்குதலை நினைவுகூர்ந்தாலும் அலட்சியம் செய்தேன்.{9} கூரிய சிருங்கங்களுடன் கூடிய மிருக வடிவில் இருந்த நான், பூர்வ வைரத்தை {பழைய பகையை} நினைவுகூர்ந்து, கொல்லும் நோக்குடன் மிகக் கடுங் குரோதத்துடன் பாகுபாடு ஏதும் பாராமல் {கண்மூடித்தனமாக} அவனை நோக்கி விரைந்தேன்.(8ஆ-10)
அவன் {ராமன்}, தன் மஹத்தான வில்லில் நாணேற்றி, சத்ருக்களை அழிக்கவல்லவையும், கூர்மையானவையும், வேகத்தில் சுபர்ணனுக்கும் {கருடன்}, அநிலனுக்கும் {வாயுவுக்கும்} இணையானவையுமான மூன்று பாணங்களை ஏவினான்.(11) வஜ்ரத்திற்கு ஒப்பானவையும், ரத்தத்தையே போஜனமாக {உணவாகக்} கொண்டவையும், வளைந்த கணுக்களைக் கொண்டவையும, மிக கோரமானவையுமான அந்த மூன்று பாணங்களும் ஒன்று சேர்ந்து {எங்களை நோக்கி} வந்து கொண்டிருந்தன.(12) {இராமனின் கணைகளைப்} பூர்வத்தில் கண்ட பயத்தாலும், ராமனின் பராக்கிரமத்தை அறிந்ததாலும் இறுதியில் வஞ்சிக்கவல்லவனாக {அந்த சரத்திடம் இருந்து} தப்பி வந்தேன். அந்த ராக்ஷசர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்[2].(13) இராமனின் சரத்தில் இருந்து எப்படியோ தப்பித்து ஜீவனை மீட்டுக் கொண்ட நான், இங்கே வந்து மனத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டு, தபஸ்வியாகத் துறவு வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.(14)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமனின் கணை பகைவரின் முதுகைத் தைக்காது. வாலியைக் கொல்லும்போதும் கூட, ராமன் மறைந்திருந்து தாக்கினாலும் வாலியின் மார்பையே தாக்கினான். இங்கே மாரீசன் திரும்பி ஓடியதால் ராமனின் மூன்றாவது கணை மாரீசனைக் கொல்லவில்லை. இராமனின் கணை மகிமையை அறியாத ராக்ஷசர்கள் இருவரும் அவற்றை எதிர்த்து மாண்டனர். இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் "சட" என்ற சொல்லுக்கு "வஞ்சிக்கவல்ல" என்ற பொருள் உண்டு, சில பதிப்புகளில் இந்த சொல் "சர" என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறெனில் இங்கே, "அந்த சரத்திடம் இருந்து தப்பி வந்தேன்" என்று பொருள் கொள்ள வேண்டும்" என்றும் இன்னும் அதிகமும் இருக்கிறது.
மரவுரிகளும், கருப்பு மான்தோலும் உடுத்தியவனும், பாசஹஸ்தனான அந்தகனைப் போலக் கையில் தனுசை ஏந்தியவனுமான ராமனையே இந்த விருக்ஷத்திலும், அந்த விருக்ஷத்திலும் {மரத்திலும், அதுமுதல்} கண்டுவருகிறேன்.(15) இராவணா, இவ்வாறு பீடிக்கப்பட்டவனான நான் {அதுமுதல்} ஆயிரம் ராமர்களைக் கண்டு வருகிறேன். மொத்த அரண்யமும் ராம பூதமாகவே {ராமனெனும் ஒரே உயிரினமாகவே / ராமனால் நிறைந்திருப்பதாக} எனக்குத் தெரிகிறது.(16) இராக்ஷசேசுவரா, யாரும் இல்லாத இடத்திலும் ராமனை மட்டுமே கண்டு வருகிறேன். ஸ்வப்னத்திலும் ராமன் வருவதைக் கண்டு உணர்விழந்து குழம்புகிறேன்.(17) இராவணா, ராமனிடம் அச்சங்கொண்ட எனக்கு ரத்தினங்கள், ரதங்கள் முதலிய ரகாரத்தை ஆதியாகக் கொண்ட பெயர்களே கூட பேரச்சத்தைத் தருகின்றன.(18) அவனது பிரபாவத்தை {ஆற்றலை} அறிந்தவன் நான். அவனுடன் யுத்தம் செய்வது உனக்குத் தகாது. அந்த ரகுநந்தனன், பலியையும்[3], நமுசியையும் கூடக் கொன்றுவிடுவான்.(19)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பலி சக்கரவர்த்தி, ராவணனை விட பலமும், வலிமையுனும் மிக்கவனாவான். ஆனந்த ராமாயணத்தில், "ராவண பரஜயம் {ராவணனின் தோல்விகள்}" என்ற அத்தியாயத்தில், பின்வருமாறு சொல்லப்படுகிறது. ராவணன் பாதாள லோகத்தைக் கைப்பற்ற நுழைந்தான். அங்கே பலி, திரிவிக்கிரமனின் {விஷ்ணுவின்} கைதியாக இருந்தான். அவன் நுழைந்த நேரத்தில் பலியும், அவனது ராணியும் பகடை விளையாடிக் கொண்டிருந்தனர். இராவணன் நுழைந்தபோது, பலியின் கைகளில் இருந்த பகடை நழுவி தரையில் விழுந்தது. பாதாளத்தைக் கைப்பற்றுவதற்கு முன் அதை எடுத்துத் தன்னிடம் கொடுக்குமாறு ராவணனிடம் பலி கேட்கிறான். கைலாச மலையையே உயர்த்திய ராவணனால், இவ்வளவு நேரம் பலி விளையாட்டாகக் கையாண்ட அந்த இரண்டு அங்குலப் பகடையைத் தூக்க முடியவில்லை. அத்தகைய வலிமைமிக்கவன் பலி" என்றிருக்கிறது.
இராவணா, நீ ரணத்தில் {போரில்} ராமனுடன் யுத்தம் செய்தாலும் {போரிட்டாலும்}, {அனைத்தையும்} மறந்து பொறுமையுடனும் இருந்தாலும் ராம கதையில் நீ செய்யப் போகும் காரியத்தை நான் காண விரும்புகிறேன்.(20) உலகத்தில் யுக்தமானவர்களும் {நீதிமான்களும்}, தர்மத்தை அனுஷ்டிப்பவர்களுமான சாதுக்கள் {நல்லவர்கள்} பலர், பிறரின் அபராதங்களால் {செய்யும் தவறுகளால்} உற்றார் உறவினர்கள் அனைவரையும் இழக்கிறார்கள்.(21) நிசாசரா {இரவுலாவியே}, அத்தகையவனான நானும், பிறரின் அபராதத்தால் நாசமடையக்கூடும். {எனவே} உனக்குத் தகுந்ததென நீ கருதுவதைச் செய்வாயாக. நான் உன்னைப் பின்தொடர மாட்டேன்.(22)
மஹாதேஜஸ்வியும், மஹாசத்வனும் {துணிவுமிக்கவனும்}, மஹாபலவானுமான ராமன், நிச்சயம் ராக்ஷச லோகத்திற்கு முடிவுகட்டப் போகிறான்.(23) ஜனஸ்தானத்திலிருந்த கரன், சூர்ப்பணகைக்கு ஹேதுவாக, பூர்வத்தில் {முதலில்} வரம்பைக் கடந்து, குழப்பமற்ற {குற்றமற்ற} கர்மகளைச் செய்யும் ராமனால் கொல்லப்பட்டதில், ராமன் மீறிய வரம்பு எது என்பதை உள்ளபடியே சொல்வாயாக(24) பந்துக்களின் நலத்தை விரும்பும் நான் சொல்லும் இந்த சொற்களை உள்ளபடியே நீ ஏற்காமல் போனால், கோணலற்று {குறி தப்பாமல் நேராகச்} செல்லும் ராமனின் சரங்களால் பந்துக்களுடன் சேர்ந்து இப்போதே கொல்லப்பட்டவனாக, ரணத்தில் {போரில்} ஜீவிதத்தைக் கைவிடுவாய் {என் சொல்லை ஏற்காமல் போனால் இப்போதே உறவினர்களுடன் சேர்ந்து கொல்லப்பட்டவனாகிவிடுவாய். பிறகு போரில் உயிரை விடுவாய்}.(25)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 39ல் உள்ள சுலோகங்கள்: 25
Previous | | Sanskrit | | English | | Next |