Born before in clan as your uncle | Aranya-Kanda-Sarga-38 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் பலம் குறித்த தன் அனுபவத்தைச் சொன்ன மாரீசன்; இராமனுடன் போரிடுவதன் விளைவுகளை ராவணனுக்கு விளக்கிச் சொன்னது...
{மாரீசன் இராவணனிடம்}, "ஒரு காலத்தில், பர்வதத்திற்கு ஒப்பானவனான நானும், ஆயிரம் நாகங்களின் {யானைகளின்} பலத்துடனும், வீரியத்துடனும், பரிகாயுதத்தால் உலகத்தாரை அச்சுறுத்திக் கொண்டும் இந்தப் பிருத்வியில் பயணித்துக் கொண்டிருந்தேன். புடம்போட்ட காஞ்சனக் குண்டலங்களுடனும் {தங்கக் காதணிகளுடனும்}, கிரீடங்களுடனும் கூடிய நான், நீல மேகத்தைப் போல ஒளிர்ந்தபடியே, தண்டகாரண்யத்தில் ரிஷிகளின் மாமிசங்களை பக்ஷித்துத் திரிந்து வந்தேன்.(1-3அ)
அப்போது, தர்மாத்மாவான விசுவாமித்ரர், என்னிடம் பேரச்சம் கொண்டார். அந்த மஹாமுனிவர், நரேந்திரனான தசரதனிடம் தானே நேரடியாக சென்று இதைச் சொன்னார்:(3ஆ,4அ) "நரேசுவரா, இந்த மாரீசனிடமிருந்து எனக்கு கோர பயம் உண்டாகிறது. இனி, பர்வகாலத்தில் {அமாவாசை, பௌர்ணமிகளில் வேள்விகளைச் செய்யும்போது}, விழிப்புடன் கூடிய ராமன் என்னை ரக்ஷிக்கட்டும்" {என்றார் விசுவாமித்ரர்}.(4ஆ,5அ)
இவ்வாறு சொல்லப்பட்ட பிறகு, தர்மாத்மாவான ராஜா தசரதன், மஹாபாக்கியவானும், மஹாமுனியுமான விசுவாமித்ரரிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(5ஆ,6அ) "இந்த ராகவன், பனிரெண்டு வருஷங்களுக்கும் {வயதுக்கும்} குறைந்தவனாகவும்[1], அஸ்திரப் பயிற்சி இல்லாதவனாகவும் இருக்கிறான். நீர் விரும்பினால் என்னிடமுள்ள சைனியத்தை உடன் அனுப்புகிறேன்.(6ஆ,7அ) முனிசிரேஷ்டரே, சதுரங்க பலத்துடன் {நால்வகை படையுடன்} நானே நேரடியாக வந்து, நீர் குறிப்பிடும் உமது சத்ருக்களான நிசாசரர்களை வதம் செய்கிறேன்" {என்றான் தசரதன்}.(7ஆ,8அ)
[1] பாலகாண்டம் 20ம் சர்க்கம், 2ம் சுலோகத்தில், "ராமனுக்கு இன்னும் பதினாறு ஆண்டுகளாகவில்லை" என்று விசுவாமித்ரரிடம் தசரதன் சொல்கிறான். மேலதிக தகவலுக்கு பாலகாண்டத்தில் அந்தக் குறிப்பிட்ட சர்க்கத்தில் உள்ள [1] அடிக்குறிப்பையும், அயோத்தியா காண்டம் 20ம் சர்க்கம், 45ம் சுலோகத்தையும், அங்கே உள்ள [4]ம் அடிக்குறிப்பையும் பார்க்கவும்.
இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த முனிவர் {விசுவாமித்ரர்}, அந்த ராஜனிடம் இதைச் சொன்னார், "இராமனைத் தவிர உலகில் வேறு எந்த பலமும் {படையும்}, அந்த ராக்ஷசர்களுக்குப் போதுமானதாக இருக்காது.(8ஆ,9அ) நிருபா {மன்னா}, சமரில் {போரில்} நீ தேவர்களின் அபிபாலகனாக {அரணாக, காவலனாக} இருந்தாய். நீ செய்த கர்மங்கள் மூன்று உலகங்களிலும் நன்கு அறியப்பட்டனவே.(9ஆ,10அ) பரந்தபா {பகைவரை எரிப்பவனே}, உன் சைனியம் மகத்தானதாகவே இருந்தாலும், அஃது அப்படியே இங்கேயே இருக்கட்டும். இந்த மஹாதேஜஸ்வி {ராமன்} பாலனாகவே இருப்பினும், அவனை நிக்ரகம் செய்வதில் {மாரீசனை தண்டிப்பதில்} சமர்த்தனாகவே இருப்பான். பரந்தபா, ராமனையே நான் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நீ நலமாக இருப்பாயாக" {என்றார் விசுவாமித்ரர்}.(10ஆ,11)
அந்த விசுவாமித்ர முனிவர், இவ்வாறு சொல்லிவிட்டு, நிருபாத்மஜனான அவனை {தசரத மன்னனின் மகனான ராமனை} அழைத்துக் கொண்டு, பரமபிரீதியுடன் தன் ஆசிரமத்திற்குச் சென்றார்.(12) பிறகு ராமன் தண்டகாரண்யத்தில் யஜ்ஞம் செய்யும் நோக்கத்திற்கான தீக்ஷையை பெற்று, சித்திர தனுசில் நாணொலி எழுப்பிக் கொண்டு அவர் அருகில் அங்கேயே இருந்தான்[2].(13) அந்த நேரத்தில் இளமைக்கான அறிகுறிகள் தோன்றாதவனும், ஸ்ரீமானும், நீல நிறத்தவனும், அழகிய தோற்றம் கொண்டவனும், ஏக வஸ்திரம் தரித்தவனும் {ஒரே துணியை உடுத்தியவனும்}, தன்வியும் {வில் தரித்தவனும்}, சிகியும் {கொண்டை அணிந்திருந்தவனும்}, கனக மாலை பூண்டவனும், தன்னொளியால் ஒளிர்ந்தபடியே தண்டகாரண்யத்தைப் பிரகாசிக்கச் செய்தவனுமான அந்த ராமபாலன், உதிக்கும் பாலசந்திரனைப் போல அங்கே காணப்பட்டான்.(14,15)
[2] மாரீசன் இந்த சர்க்கத்தில் ராமனின் வயதை மட்டும் தவறாகச் சொல்லவில்லை. விசுவாமித்ரர் வேள்வி செய்த சித்தாசிரமத்தையே தண்டகவனம் என்று சொல்கிறான். சித்தாசிரமம் {வட} கிழக்கில் உள்ளது. தண்டகாரண்யமோ தெற்கில் உள்ளது.
அப்போது, மேகத்திற்கு ஒப்பானவனும், புடம்போட்ட காஞ்சனக் குண்டலங்களுடனும், தத்தம் செய்யப்பட்ட வரத்தின் பலத்துடனும் கூடிய நான், செருக்குடன் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தேன்.(16) உயர்த்திய ஆயுதத்துடன் பிரவேசிக்கும் என்னை உடனே அவன் கண்டுவிட்டான். அவன் என்னைக் கண்டதும், கலக்கமடையாமல் தனுவில் நாண் பூட்டி ஒலி எழுப்பினான்.(17) நான் அவன் பாலன் என்ற மோஹத்தால் ராகவனைக் குறித்து ஆராயாமல் துரிதமாக விசுவாமித்ரரின் வேதியை நோக்கி விரைந்தேன்.(18) அப்போது அவன், சத்ருவை அழிக்கும் கூரிய பாணத்தை விடுத்தான். அதனால் தாக்கப்பட்ட நான் நூறு யோஜனைகளுக்கு {909 மைல் / 1463 கி.மீ.க்கு} அப்பால் சென்று சமுத்திரத்தில் மூழ்கினேன்.(19) தாதா {ஐயா}, அப்போது என்னைக் கொல்ல விரும்பாத அந்த வீரனால் ரக்ஷிக்கப்பட்டேன். இராம சர வேகத்தால் சித்தம் கலங்கி அடியற்றவனானேன்.(20) தாதா, இவ்வாறே நான் அடியாழமற்ற சாகரத்தின் நீரில் அவனால் வீசப்பட்டு, நீண்ட காலத்திற்குப் பிறகு நினைவு மீண்டு லங்காபுரிக்கு வந்து சேர்ந்தேன்.(21)
அப்போது, அஸ்திரப் பயிற்சி இல்லாமலேயே, குழப்பமில்லாத கர்மங்களைச் செய்த பாலனான ராமனால் இவ்வாறே நான் விடுவிக்கப்பட்டேன். ஆனால் சகாயர்கள் {சுபாஹுவும், உடன் வந்த பலரும்} கொல்லப்பட்டனர்.(22) எனவே, நான் தடை செய்தும், நீ ராமனுடன் விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தால், கோரமான ஆபத்தை அடைந்து, சீக்கிரமே நீ நாசமடைவாய்.(23) கிரீடா ரதி {கலவி விளையாட்டின்} விதிகளை அறிந்தவர்களும், சமாஜ உத்ஸவங்களை {சமூக விழாக்களைக்} கொண்டாடுபவர்களுமான ராக்ஷசர்களுக்கு அர்த்தமற்ற துன்பத்தையே நீ விளைவிக்கப் போகிறாய்.(24) மாடிவீடுகளாலும், அரண்மணைகளாலும் அடர்ந்ததும், நானாவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான லங்காபுரி, மைதிலியின் நிமித்தமாக முற்றிலும் நாசமடைவதை நீ பார்க்கப் போகிறாய்.(25)
பாபங்களைச் செய்யாத நல்லவர்களும், நாக மடுவில் உள்ள மத்ஸ்யத்தை {மீனைப்} போல பாபிகளுடன் கூடிய தொடர்பால் பிறர் செய்யும் பாபத்திற்காக நாசத்தை அடைவார்கள்.(26) திவ்ய சந்தனத்தால் பூசப்பட்ட அங்கங்களைக் கொண்டவர்களும், திவ்ய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ராக்ஷசர்கள், உன் தோஷத்தின் காரணமாக பூமியில் வீழ்த்தப்படுவதை நீ காணப்போகிறாய்.(27) அழிவின் பிறகு எஞ்சும் நிசாசரர்கள், சிலர் தங்கள் தாரங்களைக் கைவிட்டும், சிலர் தங்கள் தாரங்களுடனும் பாதுகாவலன் இல்லாமல் பத்து திசைகளுக்கு ஓடப்போவதை நீ பார்ப்பாய்.(28) சர ஜாலங்களால் சூழப்பட்டதும், அக்னி ஜுவாலைகளால் மறைக்கப்பட்டதும், முற்றிலும் எரிந்த பவனங்களுடன் கூடியதுமான லங்கையை சந்தேகத்திற்கு இடமின்றி நீ பார்ப்பாய்.(29) இராஜாவே, ஆயிரக்கணக்கான பிரமதைகளை {பெண்களை, மனைவியராக} நீ கொண்டிருக்கிறாய். பரதார அபிமானத்தைவிட {மாற்றான் மனைவி மீது மயக்கம் கொள்வதைவிட} மஹத்தான பாபம் வேறேதும் கிடையாது[3].(30)
[3] வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய்தீது உரைசெய்தாய் இனைய செய்கை சிதைவு அன்றோமாதுலனும் ஆய் மரபின் முந்தை உற வந்தேன்ஈது உரை செய்தேன் அதனை எந்தை தவிர்க என்றான்.- கம்பராமாயணம் 3262ம் பாடல், மாரீசன் வதைப்படலம்பொருள்: "வேதனை தரும் காமம் எனும் விஷம் மேலிட சோர்வுற்றாய். கொடுஞ்சொற்களையும் கூறினாய். இவ்வாறு செய்தல் அழிவைத் தருமன்றோ? உனக்கு மாமனாகவும், உன் குலத்தில் முந்திப் பிறந்தவனாகவும் இந்த உரையை நான் உனக்குச் செய்தேன். என் ஐயா, இத்தீய கருத்தை விட்டு விடுவாயாக" என்றான் {மாரீசன்}. இதுவரை கம்பன் மூலமாகத் தான் மாரீசன் ராவணனின் மாமன் என்று தெரிகிறதேயொழிய வால்மீகியில் இந்த சர்க்கம் வரையில் அதற்கான எந்தக் குறிப்பும் அகப்படவில்லை.
இராக்ஷசா, உன் சொந்த தாரங்களுடன் மகிழ்ந்திருப்பாயாக. உன் குலத்தை ரக்ஷிப்பாயாக. மானம், செல்வம், ராஜ்ஜியம் ஆகியவற்றையும் உனக்கு இஷ்டமான ஜீவனையும் ரக்ஷித்துக் கொள்வாயாக.(31) சௌம்யமான களத்திராணிகளுடனும் {மென்மையான அழகிய மனைவிகளுடனும்}, மித்திர வர்க்கத்துடனும் {நட்புக்குழாமுடனும்} நீண்ட காலம் இன்புற்றிருக்க விரும்பினால் ராமனுக்குப் பிரியமற்றதை நீ செய்யாதிருப்பாயாக.(32) நல்ல ஹிருதயத்துடன் கூடிய என்னால் இவ்வளவு தடுக்கப்பட்டும் சீதையை வலுக்கட்டாயமாக நீ அணுகினால் ராமனின் சரங்களால் பலம் ஒழிந்து, ஜீவனை இழந்து, பந்துக்களுடன் சேர்ந்து யமலோகத்தையே நீ அடைவாய்" {என்றான் மாரீசன்}.(33)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 38ல் உள்ள சுலோகங்கள்: 33
Previous | | Sanskrit | | English | | Next |