Request of Bharata | Ayodhya-Kanda-Sarga-101 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தசரதன் இறந்ததை ராமனுக்குத் தெரிவித்து, ராஜ்ஜியத்தை ஏற்குமாறு ராமனிடம் வேண்டிய பரதன்...
இராமன் தன்னுடன் பிறந்த லக்ஷ்மணன் சகிதனாக, பெரியோரிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், தன்னுடன் பிறந்தவனுமான பரதனிடம் {பின்வருமாறு} கேட்கத் தொடங்கினான்:(1) "மரவுரியும், ஜடையும், மான்தோலும் தரித்து இந்த தேசத்திற்கு {இடத்திற்கு} ஏன் வந்தாய், எதற்காக வந்தாய் என்று நீ சொல்வதை உள்ளபடியே நான் கேட்க விரும்புகிறேன்.(2) இராஜ்ஜியத்தை விட்டு கரியமான்தோலும், ஜடையும் தரித்து இந்த தேசத்தில் நீ நுழைய வேண்டியதற்கான நிமித்தங்கள் என்னென்ன என்பவை அனைத்தையும் சொல்வாயாக" {என்று கேட்டான்}.(3)
மஹாத்மாவான அந்த காகுத்ஸ்தன் இவ்வாறு கேட்டதும், அவனை மீண்டும் மீண்டும் ஆரத்தழுவிக் கொண்ட பரதன், கூப்பிய கைகளுடன் {பின்வரும் வாக்கியங்களைச்} சொன்னான்:(4) "ஆரியரே, மஹாபாஹுவான நம் தாதை செயற்கரிய கர்மங்களைச் செய்து, {நம்மைக்} கைவிட்டுப் புத்திரசோகத்தால் பீடிக்கப்பட்டவராக ஸ்வர்க்கத்தை அடைந்தார்.(5) பரந்தபரே, தன் மனைவியும், என் மாதாவுமான கைகேயியால் தூண்டப்பட்டு தன் புகழை அபகரிக்கும் இந்த மஹத்தான பாபத்தைச் செய்தார்.(6) இராஜ்ஜிய பலனை அடையாமல் விதவையாகி துன்பத்தால் மெலிந்திருக்கும் என்னைப் பெற்றவள் {கைகேயி} மஹாகோரமான நரகத்தில் விழப்போகிறாள்.(7) உமக்கு உண்மையான தாசனான {அடியவனான} என்னிடம் கருணை காட்டி, மகவானை {இந்திரனைப்} போல இன்றே ராஜ்ஜியத்தில் அபிஷேகம் செய்து கொள்வீராக.(8)
உம்மை அடைந்திருக்கும் இந்த மக்களுக்கும், விதவைகளாக இருக்கும் மாதாக்களுக்கும் கருணை காட்டுவதே உமக்குத் தகும்.(9) மானதரே {பெருமைக்குரியவரே}, அதற்காகவே உமக்குப் பொருத்தமானதும், மூதாதையரை அனுசரித்து தர்மப்படி உமக்கு வழங்கப்பட்டதுமான ராஜ்ஜியத்தை ஏற்று, நல்லிதயம் படைத்தவர்களின் நல்லாசையை நிறைவேற்றுவீராக.(10) விமலனான சசியை {சந்திரனை} அடைந்த கூதிர்கால இரவைப் போல உம்மைப் பதியாக அடைந்து மொத்த பூமியும் தன் விதவைத் தன்மையை இழக்கட்டும்(11) உமது அமைச்சர்களுடன் சேர்ந்து உம் பாதத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழும் சிஷ்யனும், தாசனுமான {அடியவனுமான} உடன் பிறந்தானிடம் கருணை காட்டுவீராக.(12) புருஷவியாகரரே {மனிதர்களில் புலியே}, சாசுவதமானதும், பித்ரு வழி வந்ததும், பூஜிக்கத்தகுந்ததும், பிளவாததுமான இந்த மண்டலத்தை {நாட்டை} அலட்சியம் செய்வது உமக்குத் தகாது" {என்றான் பரதன்}.(13)
இவ்வாறு பேசிய மஹாபாஹுவான அந்தக் கைகேயிசுதன், மீண்டும் கண்ணீர் விட்டு முறையான பெரும் மதிப்புடன் ராமனின் பாதங்களைத் தன் சிரசால் தீண்டினான்.(14) இராமன், மதங்கொண்ட மாதங்கத்தை {யானையைப்} போல மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டிக் கொண்டிருந்த தன்னுடன் பிறந்தான் பரதனை ஆரத்தழுவிக் கொண்டு இதைச் சொன்னான்:(15) "சத்வம் {நல்லியல்பு} நிறைந்த குலத்தில் பிறந்தவனும், தேஜஸ்வியும், நல் விரதங்களை நோற்பவனுமான என்னைப் போன்ற ஒருவன், ராஜ்ஜியத்திற்காக எவ்வாறு பாபம் இழைக்கலாம்?(16)
அரிசூதனா {பகைவரை வெல்பவனே}, நான் உன்னிடம் சின்னஞ்சிறு தோஷத்தையும் காணவில்லை. குழந்தையின் செயற்பாட்டைப் போல நீ உன்னைப் பெற்றவளை நிந்திப்பது தகாது.(17) பேரறிவாளனே, குற்றங்குறையற்றவனே, பெரியோர் தங்கள் தாரங்களுக்காகவும், புத்திரர்களுக்காகவும் தன்னிச்சையாகச் செயல்படுவது விதியே {அவர்களின் கடமையே} ஆகும்.(18) சௌம்யா {மென்மையானவனே}, உலகத்தில் சாதுக்களால் சொல்லப்பட்டது போலவே பாரியைகளும், புத்திரர்களும், சிஷ்யர்களுமான நாம் அவருக்குரியவர்கள் {அவருக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்கள்} என்பதை அறிவாயாக.(19) என்னை மரவுரியும் கரியமான்தோலும் உடுத்தி வனத்தில் வசிக்கச் செய்வதோ, ராஜ்ஜியத்தில் அமரச் செய்வதோ ஈசுவரரான மஹாராஜாவே.(20) தர்மத்தைத் தாங்குபவர்களிலும், தர்மத்தை அறிந்தவர்களிலும் சிறந்தவனே, உலகத்தால் மதிக்கப்படும் நம் பிதாவுக்குரிய அதே கௌரவத்தை நம்மைப் பெற்றவளுக்கும் கொடுக்க வேண்டும்.(21)
தர்ம சீலர்களான மாதாவும், பிதாவும் "வனம் செல்வாயாக" என்று சொன்னதற்கு மாறாக என்னால் எவ்வாறு செயல்பட முடியும்?(22) உலகத்தால் மதிக்கப்படும் அயோத்தியா ராஜ்ஜியத்தை நீயும், நான் மரவுரி தரித்து தண்டகாரண்யத்தையும் அடையவேண்டும்.(23) மஹாதேஜஸ்வியான மஹாராஜா தசரதர் உலகத்தின் முன்னிலையில் இவ்வாறு பாகம் பிரித்து ஆணையிட்டே திவத்தை {சொர்க்கத்தை} அடைந்தார். (24) தர்மாத்மாவும், லோககுருவுமான அந்த ராஜாவே உனக்குப் பிரமாணமாவார். பிதா தத்தம் செய்த பாகம் எதுவோ அதை அனுபவிப்பதே உனக்குத் தகும்.(25) சௌம்யா, மஹாத்மாவான நம் பிதா என் பாகமாக தத்தம் செய்த சதுர்தச வருட {பதினான்காண்டுகள்} தண்டகாரண்ய வாசத்தை நான் அனுபவிப்பேன்" {என்றான் ராமன்}[1].(26)
[1] கேஎம்கே மூர்த்தி பதிப்பு, மன்மதநாததத்தர் பதிப்பு ஆகியவற்றைத் தவிர இந்த சர்க்கத்தில் உள்ள செய்திகள் முழுவதும் மற்ற பதிப்புகள் அனைத்திலும் 104ம் சர்க்கமாக இடம்பெறுகிறது. இப்பதிப்புகளில் அடுத்து வரும் 102ம் சர்க்கமே வேறு பதிப்புகளில் 101ம் சர்க்கமாக அமைந்திருக்கிறது.
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 101ல் உள்ள சுலோகங்கள்: 26
Previous | | Sanskrit | | English | | Next |