மனமும், வயிறும் மட்டுமே ஆத்மசந்தோஷத்தைத் தந்துவிடுமா? நான் இங்கே வருவது மூன்றாம் முறை. இதற்கு முன் வந்த இரண்டு முறைகளையும்விட இந்த யாத்திரை என்னளவில் சிறப்புமிக்கது. 2014ல் முதல் முறை வந்தபோது நண்பர்களுடன் வந்ததால் ஒரு நபருக்கு ரூ.7,000/- (பயணம், உணவு, உறைவிடம் முழுமையும் சேர்த்து) ஆனது. அதே 2019ல் அப்பாவின் அஸ்தியைக் கரைப்பதற்காக வந்தபோது, ஒரு நபருக்கு ரூ.10,000/- (சில சடங்குகளையும் சேர்த்து) ஆனது. இப்போதோ, இதுவரை என் பர்ஸையோ, கைபேசி மூலம் செய்யப்படும் வங்கிப் பரிவர்த்தனையையோ எடுக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. ஆத்ம சந்தோஷத்தைத் தருவது பணம் மட்டுந்தானா?
216 பேர். அவர்களில் ஒவ்வொருவரும் வெவ்வொரு நோக்கங்களுக்காக வருகின்றனர். அவர்களின் நோக்கங்கள் இன்னவென்று அரசுக்குத் தெரியுமா? இருப்பினும் இந்த அரசு நம் புனிதத்தலங்களைத் தரிசிப்பதற்கும், நம் மொழியின் பெருமைகளை உணர்வதற்கும், வடகோடாயிருந்தாலென்ன, தென்கோடாயிருந்தாலென்ன அனைத்தும் சிவமயமானது என்று விலையின்றி ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறதே! மொழி, சாதி, மதப் பாகுபாடுகளின்றி இங்கே வந்த ஒவ்வொருவரும் தன்னளவில் இஃது என்னரசு என்று சொல்லப் போகிறார்களா? "தமிழகத்தில் 3000 பேருக்கு ஆன்மதரிசனம் கிட்டுவது விதியென்றால், தர்மவசத்திலிருக்கும் ஓரரசு என்ன செய்யுமோ அதையே இந்த ஒன்றிய அரசும் செய்கிறது", இப்படியும் சில விமர்சனங்கள் வந்தன. இந்த விமர்சனங்களைச் சொல்வோர் எங்கேனும் ஓரிடத்திலாவது தன்னையறியாமலாவது இந்த அரசின் பெருமையை பறைசாற்றாமலா இருப்பார்கள்?
அடுத்த தலைமுறையைச் சார்ந்த ஆறுமுகம், செல்வா போன்றவர்களுக்கு என்னென்ன தோன்றும்? இவ்வளவு நெடுகிலுங்கூட செல்வாவைப் பற்றி ஓர் அறிமுகம் செய்தேனில்லை. ஐஐடியின் ஊழியர்; பரம சாது; டீ கொடுக்க வருபவரிடமும், அவர் கொடுக்கும் பேப்பர் கப்பை மறுத்து, தன்னிடம் உள்ள எவர்சில்வர் குவளையில் அந்தட் டீயைப் பெற்றுக் கொள்ளும் எச்சரிக்கையுடன் கூடிய விஞ்ஞானி. வஞ்சப் புகழ்ச்சி செய்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இந்த மனிதர், தன்னுடைய ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார். தன் சொல்லால் எவரேனும் ஒருவருக்காவது காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். நேர்மறை காரியங்களைத் தவிர்த்து, எதிர்மறை காரியங்களில் ஈடுபடுவதுமில்லை; பேசுவதுமில்லை. கங்கை நீராடலின் போது நான் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம். உண்மையில் அவர் நீருக்குள் இறங்கியதும் தெரியவில்லை, கரையேறியதும் புரியவில்லை. அவ்வளவு கட்டுப்பாடு. வயது 31 என்று சொன்னதாக நினைவு. இயற்கை மருத்துவம், வள்ளுவம், வள்ளலார் நெறிகளில் மிகுந்த ஈடுபாடு. சாமியார் என்று நினைத்துவிடாதீர்கள். கிருஹஸ்தர் தான். தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் என் நண்பர் ஜெயவேலை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். நானெல்லாம் இவரைப் போலிருந்தால் உலகத்தில் எந்தவொரு ஜீவனையும் வகைவைத்திருக்க மாட்டேன். எனக்கு அடுத்த தலைமுறையில் நான் சந்தித்தவர்களில், இந்தப் பயணத்தில் நான் கண்ட மருத்துவர் ஆறுமுகத்தையும், நாளைய விஞ்ஞானியான இந்த செல்வாவையும் என் வாழ்வின் நெடுகிலும் நான் மறக்க மாட்டேன். சொல்ல வந்ததைவிட்டு, எங்கோ வந்துவிட்டேன். இருப்பினும் பாதகமில்லை. நல்லவர்களையே அறிமுகம் செய்திருக்கிறேன். என்றோவொரு நாள் இவர்கள் இருவரும் உலகத்திற்கே வழிகாட்டும் பேருச்ச நிலைகளை அடைந்திருப்பார்கள். இதில் எள்ளவும் எனக்கு ஐயமில்லை. வயிறும், மனமும் நிறைந்தால் எண்ணெங்கள் எங்கெங்கோதான் பறக்கின்றன. வானத்தை வளைக்க முயல்கின்றன. நம் நம்பிக்கைக்குரியவர்களை எண்ணி எண்ணி வியக்க வைக்கின்றன.
முற்றான நிறைவுடன் ஆலயத்தைவிட்டு வெளியே வந்தோம். எண்ணத்தில் என்னென்னவோ நினைவுகளை ஞானவாபி தோற்றுவித்தாலும், இங்கே சொல்வதற்கென ஏதுமில்லை. ஒன்றிரண்டு சொல்லலாம், "ஞானம்" என்றால் அறிவு, "வாபி" என்றால் கிணறு, அல்லது தடாகம். ஞானவூற்றுப் பிரவாஹிக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்ற நினைவேகூட கழுத்தின் இருபுறமும் கூச்சத்தை ஏற்படுத்தியது. அந்தக் கூச்சம் உச்சந்தலையைப் பிளக்கும் அளவுக்கு வலிமைவாய்ந்தது என்பதை இங்கே வந்து என்னைப் போலவே நின்றிருப்பவர்கள் நிச்சயம் உணர்வார்கள். வாயிலின் வெளியே இருப்பது சிறிய சந்துதான். சாதாரணமாகவே போக்குவரத்து நெருக்கடி இருக்கக்கூடிய இடந்தான். அது ஒரு முச்சந்தி என்று நினைவு. ஆறுகள் இரண்டு சங்கமித்து ஒன்று சேர்ந்து செல்வதை உருவகிக்கும் ஒரு சந்தி. எங்களுக்காகவே அங்கே போக்குவரத்தை முற்றிலும் முடக்கியிருந்தனர்.
பெரும் நெருக்கடி. ஆனாலும் நாங்கள் சாவகாசமாகச் சென்றோம். உடலின் அமைதியை நிலைக்கச் செய்யும் இந்தக் காசிமாநகரையே காக்கும் காலபைரவரின் சந்நிதியே நாங்கள் அடுத்துச் செல்ல வேண்டிய இலக்கு. கழுத்தில் அடையாள அட்டை இருக்கிறதா? தலையில் தொப்பி இருக்கிறதா? என்று சரிபார்த்து எங்களை அனுப்பிவைத்தனர். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இந்த இடம் சவாலானதுதான். குறைந்தது அரை மணிநேரமாவது நடந்திருப்போம் என்று நினைக்கிறேன். வழிநெடுகிலும் போலீசார் எங்களைக் கண்காணித்து வந்தனர். அவர்களின் கவலை அவர்களுக்கு. காசியின் கடைவீதிகளைப் பார்த்தவாறே மெதுவாகத்தான் நடந்து சென்றோம். பேருந்து இருக்கும் இடத்தை அடைந்து, அங்கிருந்து ஒரு பத்து நிமிடத்திற்குள் காலபைரவர் கோவிலை அடைந்தோம்.
பேருந்திலிருந்து கோவிலை நடந்து அடையும் வரை வழியெங்கும் பான் துப்பிய குறுகிய வீதிகள், "முன்பு விசுவநாதர் ஆலயம் செல்லும்போதும், வீதிகள் இவ்வாறுதானே இருந்தன" என்பதை நினைவுப்படுத்தியது. நெடும் வரிசையில் நாங்கள் நின்றிருந்தபோது, நண்பர் க.சீனிவாசன் அவர்கள் வெற்றிலைப் பாக்கு வாங்கித் தந்தார். ஸ்வீட் பீடா என்று நினைத்து வாயிலிட்டு மென்றதும்தான் தெரிந்தது, அது வேறு வகையைச் சார்ந்தது. உமிழ்நீரை வாயில் வைத்துக் கொள்ளவும் முடியவில்லை. உமிழ்வதற்கும் மனம் ஒப்பவில்லை. வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது பாக்குத் துப்பிய கொழ, கொழ நீருடன் ஒரு சுவரின் ஓரம் தென்பட்டது. வேறு வழியே இல்லை. வாயில் இருப்பன முழுவதையும் உமிழ்ந்துவிட்டேன். தவறுதான். ஆனால் இங்கே அனைவரும் இவ்வாறுதான் செய்கிறார்கள். கோவிலின் குறுகிய வாயிலருகே சென்றதும், "இது வழியல்ல, வேறு வழியாகச் செல்ல வேண்டும்" என்று அங்கிருந்த காவல் அதிகாரி, அங்கிருந்த மக்களின் நெருக்குதலுக்குள்ளாகி அறிவுறித்தினார். வேறு வழியில்லை. அங்கிருந்து வேறொரு புதிய வரிசையில் நின்று காலபைரவரைத் தரிசிக்கக் காத்திருந்தோம்.
காலம் என்பது, "மரணம்", "விதி", "நேரம்" என்ற மூன்று பொருள்களைக் கொண்டதாகும். கால பைரவரைக் கண்டு மரணமே அஞ்சுமென்பது ஐதீகம். காசியில் வாழவேண்டுமென்றால் இந்த "கால பைரவரின்" அனுமதி நிச்சயம் வேண்டும். இவர் வஜ்ராயந பௌத்தர்களின் வழிபாட்டுக்குமுரியவர். சிவபுராணத்தில் பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் நடைபெறும் விவாதத்தில் வெளிப்படுபவர் இந்த காலபைரவர். பிரம்மனின் கர்வத்தை பங்கம் செய்ய சிவனில் தலைமயிரில் இருந்து உண்டானவரே இவர். இவரது கைகளில் இருக்கும் மண்டையோடு, பிரம்மனின் கபாலம் என்பது புராணச் செய்தி. இன்னுமோர் ஐதீகமும் இருக்கிறது. தாராசுரன் என்ற அசுரனைக் கொல்ல பார்வதிதேவியே காளியின் வடிவை ஏற்றாள். அந்த அசுரனைக் கொன்ற காளியின் கோபமே ஒரு குழந்தையாக உருவெடுத்தது. காளி அந்தக் குழந்தைக்குப் பாலூட்டி வளர்த்தாள். சிவன், காளியையும், அவளது பிள்ளையையும் தன் வடிவில் ஐக்கியமடையச் செய்தான். ஐக்கியப்படுத்திக் கொண்ட அந்த சிவனின் வடிவமே காலபைரவரின் வடிவமாகும். சைவத்தின் மற்றுமொரு பிரிவில், "நான் என்ற அகங்காரத்தின் சூக்ஷ்ம வடிவமாக" காலபைரவர் உணரப்படுகிறார். காலபைரவரையே முழுமுதற்கடவுளாக வழிபடும் இந்திய மரபுகள் பலவும் இருக்கின்றன. இதே காசியில் வைத்தே ஆதி சங்கரர், "ஸ்ரீ காலபைரவ அஷ்டகம்" என்ற துதியைப் பாடினார்.
வரிசையில் சிக்கி நின்று கொண்டிருந்த நெருக்கடிக்குள் இந்த எண்ணங்களெல்லாம் மனத்தில் தோன்றிக் கொண்டே இருந்தன. இந்நேரத்திற்கெல்லாம் மருத்தவர் ஆறுமுகம் என்னருகில் வந்துவிட்டார். "உள்ள போனமா கும்பிட்டமானு வந்திரு. அங்கங்க இழுப்பாங்க. தலையத் தட்டுவாங்க. போயிடாத. கூப்பிட்டு தலமேலயே தட்டிக் காசக் கறந்துடுவாங்க. ஜாக்கிரதை" என்றேன். "சரி அங்கிள்" என்றார். சரியாக காலபைரவருக்கு முன்னிலையில் மட்டும் பிடரியில் அடிவாங்கி, வேறு எவரும் அழைத்தாலும், எங்கும் நிற்காமல், ஆறுமுகத்தையும் சேர்த்து வெளியே அழைத்து வந்துவிட்டேன். "காசியையே காக்கும் காலபைரவர தரிசிக்க வர்றவங்கள அவரத் தவிர வேற எவரால காக்க முடியும்? கழுத்தாம்பட்டையில் ஒரே அடிதான் நம்ம பீடையெல்லாம் தெறிச்சிடும்" என்றார் வரிசையில் எங்களுடன் நின்றிருந்த ஒருவர். கடைவீதியில் தேவையான பொருள்களைத் தேவையுள்ளோர் வாங்கினர். அதற்கும் சிறிது நேரம் காக்க வேண்டியிருந்தது.
காசி விசுவநாதர், விசாலாக்ஷி, அன்னபூரணி, காலபைரவர் ஆகியோரைத் தரிசித்த நிறைவுடன் அனைவரும் பேருந்தில் ஏறினோம். அடுத்தது ராம்நகர் கோட்டைக்குச் செல்ல வேண்டுமென்பது ஏற்பாடு. ஏற்கனவே நேரம் ஆகியிருந்தது. பேருந்துகள் ஊர்ந்துதான் சென்றன. கடைசி இருக்கையில் அமர்ந்து வந்த நான், கால பைரவரின் அருளால் முன்னிருக்கையில் இருந்து மூன்றாம் வரிசையில் அமர்ந்திருந்தேன். ஒடுகலான சாலைகளின் வழியே 6 பேருந்துகளும் பயணிப்பது எவ்வளவு கடினம்?ஆறாம் எண் கொண்ட எங்கள் பேருந்துக்குள் திடீரென சலசலப்பு ஏற்பட்டது. எங்கள் கவிக்குயில் குழுவின் தலைவருக்கு இந்தப் பயணம் ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தது. உண்டனவனைத்தையும் கக்கி அரைமயக்கத்தில் இருந்தார். எங்கள் பேருந்துகள் அனைத்தையும் ஓரிடத்தில் நிறுத்திவிட்டனர். நாங்கள் இருந்த இடத்தின் அருகில் இருந்த ஒரு கிளினிக்கில் அவருக்குப் பரிசோதனை நடந்தது. "அறைக்குத் திரும்பி ஓய்வெடுங்கள்" என்று சொல்லியும், சுமார் எண்பது வயது மதிக்கத்தக்கவரான எங்கள் குழுவின் தலைவர், "நானும் உடன் வருகிறேன், எனக்கு உடல்நிலை சரியாகிவிட்டது" என்று சொல்லிவிட்டார். இருப்பினும் நேரங்கடந்துவிட்டது. ராம் நகர் கோட்டைக்குள்தான் மஹாபாரத ஆசான் வியாசரின் வசிப்பிடம் இருக்கிறது. அவ்விடத்தின் தரிசனம் எனக்கு இரண்டு முறை கிட்டியிருக்கிறது. ஆனால் எங்களுடன் வந்த யாத்ரீகர்கள் அதைக் காணமுடியாமல் போய்விட்டது. நேரமாகிவிட்டதால் ராம்நகரைத் தவிர்த்து நேரடியாக "கங்கா ஆரத்தி" செல்வது என்று ஏற்பாடானது. நேராக ரவிதாஸ் கட் சென்றோம். நினைவிருக்கிறதா? இன்று (24.12.2022, வியாழன்) காலை நாங்கள் சென்ற அதே இடம்தான்.
- தொடரும்...