விசுவநாதனை தரிசித்த பெரும் நிறைவுடனும், மெய்ச்சிலிர்ப்புடனும் நாங்கள் அனைவரும் பார்வையாளர்கள் அமரும் வளாகத்தில் ஒன்றுகூடினோம். ஒருங்கிணைப்பாளர்களின் திட்டமிடலுக்கிணங்க பார்வையாளர்கள் அமர்வதற்காக வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகளில் அமர்ந்தோம். கோவிலின் அமைப்பு பிரமாண்டமாகத் தெரிந்தது. விசுவநாதனின் தரிசனங்கிட்டி புனிதமடைந்த காசி தமிழ் சங்கம யாத்ரீகர்கள் அனைவரும் "நமசிவாய", "ஹர ஹர மஹாதேவா" என்று முழக்கமிட்டபடியே இருந்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு ருத்திராட்ச மாலையும், திரசூலம் பொறிக்கப்பட்ட ஒரு புனிதத்துண்டும் அணிவிக்கப்பட்டன.
காசி கோவில் அறங்காவலர்களில் ஒருவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட வெங்கட ரமண கனபாடிகள், காசி விசுவநாதர் கோவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட வரலாற்றை உணர்ச்சி மேலீட்டுடன் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் என்றாலும் ஐந்து தலைமுறைகளாக காசியில் வசிப்பதால் அவரது தமிழ் உச்சரிப்பு வித்தியாசமாக இருந்தது. இருப்பினும் சிறு தடங்கலுமின்றி கோர்வையாக அனைத்தையும் எடுத்துரைத்தார். கோவிலின் தலைமை அதிகாரி சுனில்குமார் அவர்கள் கோவில் நிர்மாணப் பணிகளைக் குறித்து ஆங்கிலத்தில் எங்களுக்கு எடுத்துரைத்தார். பலருக்கு இது புரியாமல் போகக்கூடும் என்ற நல்லெண்ணத்தில் கோலாஹலாஸ் டிவி சீனிவாசன் அவர்கள் தன்னார்வத்துடன் முன்வந்து தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னார்.
இந்தக் கோவிலை புனர்நிர்மாணம் செய்ய 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை விலை கொடுத்து வாங்கி, அனைத்தையும் தரைமட்டமாக்கி ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பேர் வந்தாலும் தங்குதடையின்றி தரிசிக்கும் வகையில் பெரும் பரப்பளவில் கட்டப்பட்ட கோவில் கட்டுமான வரலாற்றை அனைவரும் உணர்ந்து கொண்டோம். நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்திற்குக் கிடைக்கும் கௌரவத்தை அறிந்து கொண்டோம். ஒரு காலத்தில் அந்நியப் படையெடுப்பாளர்களால் சிதிலமான இந்தப் பெருங்கோவில் பழைய கம்பீரத்துடன் எழுந்து நிற்க வரலாற்றின் நெடுகிலும் பாடுபட்டவர்கள் எத்தனை பேர்? எஸ்.எல்.பைரப்பாவின் "ஆவரண" நாவலைப் படித்தவர்கள் இதைக் கண்டால் நிச்சயம் ஆனந்தக் கூத்தாடுவார்கள்.
பிறகு, அங்கிருந்து மணிகர்ணிகா கட்டுக்கு {படித்துறைக்கு} மிக அருகில் உள்ள காசிவிசுவநாதர் கோவில் படித்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இங்கிருந்து சற்றே தெற்கில்தான் மாலை வேளைகளில் கங்கை வழிபாடு எனும் கங்கா ஆரத்தி நிகழ்வு நடைபெறும் தசாசுவமேத கட் இருக்கிறது. கோவிலில் இருந்து நேரடியாகப் படித்துறையை அடையும்வண்ணம் வாயிலும், பாதையும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 1780ல் காசி கோவிலை மறுநிர்மாணம் செய்த மராட்டியப் பேரரசின் இந்தூர் ராணி அஹில்யாபாய் ஹோல்கருக்கும், ஆதிசங்கரருக்கும், பாரத மாதாவுக்கும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எங்கள் குழுவைச் சேர்ந்த பலர் அந்தச் சிலைகளின் முன்பு பணிந்து விழுந்து வணங்கினர். மனத்தில் இந்தப் பெரியோர்களையும், இன்னும் சிலரையும் நினைத்தவாறே படித்துறையை அடைந்தேன்.
இவ்வளவு நேரமும் என் நண்பர்கள் எங்கே சென்றுவிட்டனர் என்பதை மறந்தே இருந்தேன். கா என்பது "காரணம்", ச என்பது "அமைதி", இ என்பது "உடல்", இம்மூன்றையும் இணைத்தே இந்நகருக்கு காசி என்ற பெயர் ஏற்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மோக்ஷபுரியில் கால் வைத்ததில் இருந்தே சித்தம்போக்கு சிவம்போக்கு என்றே திரிந்து கொண்டிருக்கிறேன். நான் செல்லும் முன்பே படித்துறையில் எங்கள் குழுவினர் அனைவரும் திரண்டு அமர்ந்திருந்தனர். யாருக்கும் இடையூறு அளிக்காவண்ணம் இறுதி வரிசையில் நான் நின்று கொண்டேன்.
"சரி. எல்லாரும் சிவபுராணம் ஓதலாமா?" என்று ஒரு குரல் கேட்டது. கீழே குனிந்து பார்த்தால், மருத்துவர் ஆறுமுகத்திடம் திடீரென மாணிக்கவாசகர் ஆவேசித்துவிட்டதைப் போலத் தெரிந்தது. அவர் யாருக்கும் காத்திராமல், "நமசிவாய வாழ்க, நாதன் தாள்வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!" என்று முழங்கத்தொடங்கினார். பலருக்கும் சிவபுராணப் பாடல் மனப்பாடமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆறுமுகமோ, தெள்ளத்தெளிவான உச்சரிப்பில் கனீர் குரலில் சன்னதம் வந்த சன்னதக்காரரைப் போல உருக்கமுடன் சொற்களைப் பொழிந்து கொண்டிருந்தார். நான்கைந்து குரல்கள் மட்டுமே ஆறுமுகத்துடன் இணைந்து ஓதின. யாரென்று பார்த்தால் அவர்கள் அனைவரும் சிவாச்சாரியர்கள். "தில்லையுள் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே, அல்லல் பிறவி அறுப்பானே, ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து" என்று ஆறுமுகம் முடிப்பதற்குள் அனைவரும் பரவமடைந்திருந்தனர். எங்கள் குழுவினரல்லாத அந்நகரத்து மக்களும், பிற மாநில மக்களும் வியப்புடன் இந்த சிவபுராணம் ஓதலை நின்று கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரே மூச்சில் சிறு தடங்கலுமின்றி முழு சிவபுராணத்தை ஓத எவ்வளவு பயிற்சியும், பக்தியும் வேண்டும்? ஆறுமுகத்தை நினைக்க நினைக்க எனக்குப் பெருமையாக இருந்தது. அனைவரும் ஒருவாறு சுதாரித்து எழுவதற்குள் சிறிது நேரமாகிவிட்டது.
படத்தைச் சொடுக்கிப் பெரிதாகவும் பார்க்கலாம். |
அடுத்ததாக, ஆதிசக்தி பீடங்கள் ஐம்பத்தொன்றில் ஒன்றெனக் கருதப்படும் விசாலாக்ஷி கோவிலை அடைந்தோம். விசுவநாதர் கோவில் வளாகத்திற்கு மிக அருகிலேயே இருக்கிறது இந்தக் கோவில். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என்பது தமிழகத்தில் அடிக்கடி வரிசையாகச் சொல்லப்படும் தேவியின் நாமங்கள். அவ்வளவு ஆழமாக தமிழகத்து மக்களின் மனங்களில் நிலைத்துவிட்ட காசி விசாலாட்சியை தரிசிக்கப் போகிறோம். தேவியின் நீள்விழிகளில் அண்டமே அகப்பட்டிருக்கையில் நமக்கும் அவளது அருள்பார்வையின் ஒரு கணம் கிட்டாதா என்ற ஏக்கத்துடன் வரிசையில் காத்திருந்தோம். நல்ல தரிசனம். தமிழர்களால் நிர்வகிக்கப்படும் கோவில்; ஆங்காங்கே தமிழ் எழுத்துகள் தென்பட்டாலும் அனைவரும் நின்று கவனிக்கும் அளவுக்கு நேரமில்லை. மீண்டும் விசுவநாதர் கோவில் வளாகத்தினூடாகவே மேற்கு நோக்கிச் சென்றால் அருகிலேயே இருக்கும் அன்னபூரணி கோவிலை அடைந்தோம். அவளருள் வேண்டி நின்றபோது ஏற்பட்ட சிலிர்ப்பை சொல்லில் அடக்கிவிட முடியாது. முழு திருப்தியுடன் அன்னபூரணி தேவியைத் தரிசித்த பின்னர் மதிய உணவுக்கான வேளை வாய்த்தது. சிவனுக்கே அமுது படைத்த அன்னபூரணி எங்களுக்கும் அமுது செய்து வைத்துக் காத்திருந்தாள். அக்கோவிலின் வளாகத்திற்குள்ளேயே அனைவருக்கும் அன்னம் பரிமாறப்பட்டது. உண்ணத் தொடங்கும் முன்னர் வேதபாரகர்கள் மந்திரங்கள் ஓதினர். அன்னபூரணியை மனதார வணங்கிவிட்டு அன்னத்தில் கைவைத்தோம். அந்த அமுதத்தை உண்டு மனமும், வயிறும் குளிரப்பெற்றோம்.
- தொடரும்...