Wednesday, 14 December 2022

காசி தமிழ் சங்கமம் - நினைவுகள் 6 - கங்கா ஆரத்தி

On the way from Kala Bhairava temple to Ravidas Ghat

வழியில் நடந்த உரையாடல் ஒன்றைச் சொல்லத் தவறிவிட்டேன். முன்னிருக்கையில் இருந்து 3ம் வரிசையில் அமர்ந்திருந்தேன் என்று சொன்னேனல்லவா? இடப்புறச் சாளரமருகில் க.சீனிவாசன் அவர்களும், அவருக்கு அருகில் நானும் அமர்ந்திருந்தோம். இடையில் உள்ள நடைபாதைக்கு அடுத்த இருக்கையில் ஆணும், பெண்ணுமாக இருவர் அமர்ந்திருந்தனர். இலக்கியம் குறித்து அவர்கள் பேசி வந்தனவனைத்தும் என் காதுகளில் விழுந்து கொண்டே இருந்தன. "பைபிளை நாம் மதப்புத்தகமாகப் பாக்கக்கூடாது. தத்துவச்செறிவு அதிகமுள்ளது அது" என்றார் சாளரமருகில் இருந்த ஆடவர். "அப்படியா?" என்றார் பெண்மணி. சில விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். கேட்பவரும் கேட்டுக் கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் உண்மை இலக்கியங்களையும் பேசத் தொடங்கினர். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் என்று எனக்குப் பிடித்த தலைப்புகளிலேயே பேசி வந்தனர். அவர்கள் கவனிக்காவிட்டாலும் நானும் கேட்டுக் கொண்டே வந்தேன். பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்தும், பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் கல்கி குறித்தும் பேச்சு எழுந்தது. "அவர் ஓர் அஜண்டாவோடத்தான் எழுதினார். படத்துல அதெல்லாம் தவிர்த்துட்டாங்க. அதனாலதான் படம் நல்லா இருந்துச்சு" என்றார். "கல்கிதான் பெரிய ஆள்ன்னு அவங்க ஆளுங்கள வச்சே நிறுவப் பாத்தானுங்க. வேள்பாரி அதெல்லாத்தையும் தூக்கி சாப்பிடுடுச்சு. ஏற்கனவே சாண்டில்யன், கல்கியத் தூக்கி சாப்பிட்டார், அதெல்லாம் விட உசத்தியா இப்போ சு.வெ. கலக்கிட்டார்" என்றார்.

"யாரை யாருடன் ஒப்பிடுவது?" என்னால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. "உண்மையிலேயே நீங்க பொன்னியின் செல்வன் படிச்சிருக்கீங்களா?" என்று கேட்டேன். "அது மட்டுமில்லீங்க. கல்கியோட அத்தன நாவலயும், சாண்டில்யனோட அத்தன நாவலயும் படிச்சிருக்கேன்" என்றார். "இல்ல சு.வெங்கடேசனப் பத்தி சொன்னீங்களே. உண்மையிலயே நீங்க அப்படித்தான் நினைக்கிறீங்களா?" என்று கேட்டேன். "100%" என்றார். ஒன்றும் சொல்வதற்கில்லை. அதற்கு மேலும் அவர்கள் பேச்சில் கவனம் செலுத்தாமல், என் நண்பர் க.சீனிவாசன் அவர்களுடன் தொழில் நிமித்தமாகவும், எங்கள் இருவருக்கும் மட்டும் பரிச்சயமான சில குடும்ப நிகழ்வுகளைக் குறித்தும் பேசிச் சென்றேன்.
From Kala Bhairava temple to Ravidas Ghat


இரவிதாஸ் கட்டை {படித்துறையை} அடையும் போது மாலை நேரம் மணி 5.30 இருக்கலாம், அதற்குள் இருட்டியிருந்தது. மிகப் பிற்காலத்தில் வந்த படித்துறை அது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  அங்கே ஒரு பூங்கா இருக்கிறது. அதில் குரு ரவிதாஸ் அவர்களின் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டிப் படித்துறைக்குச் சென்று வடக்கு நோக்கி நகர்ந்தால், படகுத்துறையில் பெரும்படகுகள் நின்று கொண்டிருந்தன. படகுகள் என்று சொல்லமுடியாது சிறிய கப்பல்கள் என்றே சொல்லலாம். 2014ல் முதன்முறையாக காசிக்கு வந்த போது இப்படிப்பட்ட க்ரூஸ்கள் கங்கையில் கிடையாது. 2019 செப்டம்பரில் இரண்டாம் முறையாக வந்தபோதும் கங்கையில் பெருவெள்ளம் ஓடியதால் இந்தப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறேன். நாங்கள் சென்றபோது மூன்று க்ரூஸ்கள் நின்று கொண்டிருந்தன. ஒன்று அதிநவீன வகையைச் சார்ந்தது. மற்ற இரண்டும் நடுத்தரமானவை. அவற்றில் ஒன்றுதான் எங்கள் 216 பேருக்காகவும் காத்திருந்தது.

அளக்நந்தா க்ரூஸ் 9 என்பது அந்தச் சிறிய கப்பலின் பெயர். ஆற்றங்கரையைக் கண்டு களித்தவாறும், ஒருவரோடொருவர் அளவளாவியவாறும் மெதுவாகத்தான் சென்றோம். எங்கள் குழுவினர் அனைவரும் ஏறியதும் வாயில் அடைக்கப்பட்டது. அந்தக் கலமும் மெல்ல நகர்ந்தது. கலத்தின் வரவேற்புப் பகுதியில் தேனீர், பிஸ்கட்டுகள் வைத்திருந்தனர். களைத்து வந்து கலத்தில் ஏறியவர்கள் களைப்பாற நல்ல ஏற்பாடுதான். நவம்பர் மாத மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில் நல்ல குளிரில் நல்ல தேனீர் அருந்துவது புத்துணர்ச்சியை அளித்தது. கலத்தில் இருந்து படித்துறைகளையும், ஆற்றின் விஸ்தீரனத்தையும் பார்வையிட மேல்தளத்தில் இரண்டு அடுக்குகள் இருந்தன. கீழ்த்தளத்தில் அனைவரும் அமர்ந்து பார்வையிடும்படியான ஒரு கண்ணாடி அறை இருந்தது. மிகச் சிலர் மட்டுமே அந்த அறையில் அமர்ந்திருந்தனர். நான் சுற்றிலும் இருந்த கூட்டத்தை மறந்து, வரவேற்பு வெளியின் குளுமையுடன் சேர்த்து இரவு நேர கங்கை தரிசனத்தையும், நீரில் பட்டு மேனிமுழுவதும் பரவும் காற்றின் ஸ்பரிசத்தையும் முற்று முழுதாக அனுபவித்தேன். காசியில் குளிர் மிகக் கடுமையானது என்று எச்சரிக்கப்பட்டதால் எடுத்து வந்த சால்வையையும், காதை மறைக்கும் குரங்குத் தொப்பியையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.

கலம் புறப்பட்டு அஸி கட், கங்கா மஹால் கட் தாண்டியதும், "இன்று அதிகாலையில் இருளும் விடியலும் சந்திக்கும் வேளையில் நீராடிய அதே துளசி கட்டில், மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில் கலத்தில் பயணிக்கிறோம்" என்ற நினைப்பு ஏற்கனவே களித்திருந்த மனத்திற்கு அதி உற்சாகத்தை அளித்தது. கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து படிகளில் ஏறி கலத்தின் இரண்டாம் தளத்திற்குச் சென்றேன். கூட்டம் அதிகமிருந்தாலும் தளத்தின் வடமேற்கு மூலை  எனக்காகக் காத்திருந்தது. இனி இந்தக் கலப் பயணம் முழுவதும் இங்கேதான் நிற்கப் போகிறேன் என்று அப்போது உணர்ந்தேனில்லை. ஏன் அவ்விடம் ஆளரவமின்றி இருக்க வேண்டும்?  கலத்தின் முகப்பிற்கு அடுத்து காற்றை எதிர்த்து முன்னே நிற்பது இந்த விளிம்புதான். மிகச் சில்லென வீசியக் குளிர்க்காற்று அங்கே யாரையும் நிற்கவிடவில்லை. அஃது எனக்கான வசதியானது. அவ்விடத்தில் இருந்து படித்துறைகள் அனைத்தும் தெள்ளெனத் துலங்கின. ஜானகி கட், ஜெயின் கட், நிஷத் கட், ஹனுமான் கட், ஹரிச்சந்திரா கட் என்று அடுத்தடுத்த படித்துறைகளை இரவின் இருட்டில் அமர்ந்து காண்பதுதான் என்னவொரு மயக்கத்தைத் தருகிறது? ஹரிச்சந்திரா கட்டில் அப்போதும் சடலங்கள் எரிந்து கொண்டிருந்தன. கேதார் கட், மானசரோவர் கட், நாரதர் கட், ராஜ கட்,  பாண்டே கட், ரானா மஹால் கட் என்று அடுத்தடுத்துப் பார்த்துச் சென்றோம். கண்ணால் காட்சிகளைக் கண்டாலும், அவ்விருட்டில் படித்துறைகளை அடையாளங்காண கூகிள் உதவியது.

இதோ தசாசுவமேத கட். இங்கேதான் கங்கா ஆரத்தி நடைபெறும். ஒவ்வொருநாளும் ஓர் ஆற்றை வழிபடும் நாகரிகமேதும் இந்தப் பூமிப் பந்தில் தென்படுமா? ஆற்றையும், நிலத்தையும் தாயாக பாவிக்கும் பண்பாடு வேறெந்த நிலத்திலும் காணவுங்கூடுமா? இந்த ஜம்புத்வீபத்தைத் தவிர வேறெங்கும் இதுபோன்ற வழிபாடுகளைப் பார்க்க முடியுமா? கங்கை வழிபாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தசாசுவமேத கட்டில் நடைபெறுவதைக் காண முடிந்தது. அடுத்தடுத்து திரிபுர பைரவி கட், மீர் கட், நேபாளி கட், லலிதா கட், மணிகர்ணிகா கட், சிந்தியா கட், கங்கா மஹால் கட் என்று பார்த்துக் கொண்டே வரும்போது மாளவியா பாலம் அருகில் வந்துவிட்டது. நாங்கள் செல்லும் அதே நேரத்திற்குச் சரியாக அந்த இரண்டடுக்குப் பாலத்தின் கீழ்த்தளத்தில் ஒரு குட்ஸ் ரயில் சென்று கொண்டிருந்தது, அதற்கு மேலுள்ள தளத்தில் கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. மயக்கம் தரும் அவ்வொளியில் அந்தப் பாலத்தைக் காண்பது இந்திரஜாலத்தைக் காண்பதைப் போலத்தான் இருந்தது. சரியாக அந்தப் பாலத்தின் அடியில் எங்கள் கலம் சென்று கொண்டிருக்கும்போதே மேலே சரக்குத் தொடருந்தும் சென்று கொண்டிருந்தது. மேலே தலையையுயர்த்தி, உடனே நூற்றெண்பது டிகிரி திரும்பி அந்தத் தொடருந்தின் மறுபுறத்தைக் கண்டதில் பெற்ற வெற்றியுணர்வு நீல் ஆம்ஸ்டிராங்குக்கும், ஆல்டிரினுக்கும் ஏற்பட்டிருக்குமா தெரியாது.

நாங்கள் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதே கோணத்தில் எங்கள் கலமும் திரும்பியது. தொடருந்து போய்விட்டது, மீண்டும் அந்தப் பாலத்தை எங்கள் கலம் கடக்கிறது. ரயிலில்லாத முதல்தளத்தைக் கூர்ந்து நோக்கியபடியே பலரும் நின்று கொண்டிருந்தனர். இன்னும் பலர் ஒளிப்படமெடுத்துக் கொண்டனர். நமக்கு அந்த நிமிடத்தை அனுபவிப்பதில் இருக்கும் ஆர்வம் ஒவ்வொரு விநாடியையும் நினைவில் தொகுத்து வைத்துக் கொள்ளப்பயன்படும் நிழற்படங்களில் இருந்ததில்லை. ஊருக்குத் திரும்பும் போது இதற்காக மனம் வருந்தும் என்று அப்போது தெரியவுமில்லை. முற்றாக அந்நொடி கொண்டாட்டத்தில் கறைந்திருந்தேன். கலம் திரும்பியதும் மறுகரையின் இருள் புலப்பட்டது. இந்தக் கரையில் மணல் அதிகமாகத் தேங்கியிருக்கிறது. இருளுக்குள் கண்கள் துளாவிக் கொண்டிருந்தன. ஒன்றும் புலப்படவும் இல்லை, மனத்துக்குள் எந்தச் செய்தியும் இறங்கவும் இல்லை. வியாசரின் நிமித்தமாக இது சபிக்கப்பட்ட இடம் என்பது மட்டும் நினைவில் இருந்தது.

மீண்டும் தசாசுவமேத கட்டை அணுகினோம். சரியாக கங்கை வழிபாடு ஆரம்பித்திருந்தது. விளக்குகளைக் கொண்டு மனிதர்கள் செய்யும் வழிபாடு விளையாட்டுத் துறையில் நிகழ்த்தப்படும் சாகசம் போலவே தென்பட்டது. 2014ல் சிறு படகில் படித்துறையின் அருகில் இருந்து கங்கா ஆரத்தியைக் கண்டிருக்கிறேன். 2019ல் தசாசுவமேத கட்டின் அருகில் உள்ள ஒரு சந்தில் இருந்து கங்கா ஆரத்தியைக் கண்டிருக்கிறேன். இப்போது 2022ல் ஒரு பெருங்கலத்தில் இருந்து காண்பது முற்றிலும் வேறு பரிமாணத்தை உணர்த்தியது. கங்கையில் விளக்குகள் மிதந்து கொண்டிருந்தன. சிறு படகுகளில் அந்நிகழ்வைக் காணக் குழுமும் குடும்பங்களையும், நண்பர்கள் குழுக்களையும் இந்தத் தொலைவில் இருந்தே காண முடிந்தது. அங்கே இருந்த ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு உற்சாகம்? இயற்கை வழிபாட்டின் உச்சம் இதுதான். முன்னோர் வழிபாடு எனும் பித்ருக்கடனும் இங்குதான் முழுமைபெறுகிறது. 

- தொடரும்...

காசி தமிழ் சங்கமம் - நினைவுகள் - 7

Labels

அக்னி அசுவபதி அம்சுமான் அம்பரீசன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இலக்ஷ்மணன் உமை கங்கை கசியபர் கபிலர் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதாமன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூளி தசரதன் தாடகை திதி திரிசங்கு திரிஜடர் திலீபன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஸு வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விஷ்ணு விஷ்வாமித்ரர் ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்